முருகபூபதி
இலக்கியமடல்
—
‘அறிந்ததைப்;பகிர்தல், அறியாததை அறிந்துகொள்ள முயல்தல்’- என்ற சிந்தனையுடன்தான் 2001 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் விழா இயக்கத்தை ஆரம்பித்தோம்.
முதலாவது விழா மெல்பனில் அடுத்தடுத்து இரண்டுநாட்கள் நடந்தன.
எழுத்துத்துறையுடன் ஈடுபாடுள்ள பலர் கலந்துகொண்ட இம்முதலாவது விழாவில்தான்
‘மல்லிகை’ அவுஸ்திரேலிய சிறப்புமலரும் வெளியிடப்பட்டது. தொடர்ந்தும் இவ்விழா ஆண்டுதோறும் நடைபெறவேண்டும் என்று விழாவில் கலந்துகொண்ட இலக்கிய ஆர்வலர்கள் ஏகமனதாக விரும்பினார்கள்.
அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் மாத்திரம் இந்த
எழுத்தாளர்விழா நடைபெறாமல், இந்த இலக்கிய இயக்கம் ஏனைய மாநிலங்களுக்கும் விஸ்தரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் ஆர்வலர்களினால் முன்வைக்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டு பண்டூரா என்னுமிடத்தில் அமைந்த பூங்காவில் நிகழ்ந்த இரண்டாம் நாள் விழா நிகழ்ச்சியின்போதே இக்கோரிக்கை எழுந்தது.
அன்றைய தினம் பூங்காவில் எம்மைத்தழுவிச்சென்ற இதமான தென்றல் காற்றோடு கலந்து மறைந்துபோன கோரிக்கையல்ல என்பதை இலக்கிய ஆர்வலர்கள், கடந்த எட்டு ஆண்டுகளில் தொடர்ச்சியாக நிரூபித்து வருகின்றனர்.
மெல்பனில் தொடங்கி, சிட்னி, கன்பரா என இதுவரையில் இம்மூன்று மாநில நகரங்களிலும் எட்டுவிழாக்கள் இலக்கிய ஆர்வலர்களின் கருத்துக்களை சங்கமிக்கச்செய்துவிட்டன.
இந்த இயக்கத்தின் தொடர்பயணத்தை அவதானித்துவந்த மல்லிகை ஜீவா அவர்களும்,
நான் இலங்கை வந்திருந்த சந்தர்ப்பத்தில் மல்லிகை காரியாலயத்தில் எனக்கொரு தேநீர்விருந்துபசாரம் வழங்கியபொழுது, எங்கள் அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் விழாவை சிலாகித்துக்குறிப்பிட்டு பேசியதுடன் நின்றுவிடாமல், இலங்கையிலும் ஒரு எழுத்தாளர்விழாவை நடத்தவேண்டும், உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து எழுத்தாளர்களில் சிலரையாவது அதற்கு அழைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
ஜீவாவின் வேண்டுகோள் கொழும்பு பத்திரிகைகளிலும் பிரசுரமானது.
எனினும், இந்த வேண்டுகோள் இன்னமும் நடைமுறைக்கு வராதமைக்குக் காரணம் இலங்கையின் அரசியல் சூழ்நிலைகள்தான்.
பல வருடங்களுக்கு முன்னர் மெல்பனில் நடந்த ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சிதான் இச்சந்தர்ப்பத்தில் எனது நினைவகத்தின் கதவைத்தட்டுகிறது.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பரதம் முறையாகப்பயின்ற தமிழகத்தைச்சேர்ந்த மாணவர்களுக்கு கண் பார்வையில்லை.
மிகவும் சிறப்பாக ரஸிகர்களை அக்கலைஞர்கள் கவர்ந்தார்கள். அனைவரும் சிலிர்த்துப்போனோம்.
இம்மாணவர்களின் ஆசிரியர், இறுதியில் பேசும்போது ஒருவிடயத்தை குறிப்பிட்டார்.
வாழ்க்கையில் எதனையும் சாதிக்கவேண்டுமாயின், மூன்று விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.
1. ஒரு இலட்சியத்தை கனவு காண வேண்டும்.
2. அந்தக்கனவு நனவாகுவதற்காக கடினமாக உழைக்கவேண்டும்.
3. இறுதியில் வெற்றி நிச்சயம்.
ஆங்கிலத்தில், னுசநநஅ – ளுவசரபபடந – ஏ¨உவழசல.
எழுத்தாளர் விழா இயக்கத்தை தொடங்கியபொழுது, ஒரு தெளிவான தீர்மானம் எடுக்கப்பட்டது.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அவுஸ்திரேலியாவில் வதியும் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் வருடாந்தம் ஒன்றுகூடச்செய்வது.
இதுவே அந்தத் தீர்மானம்.
தங்குதடையின்றி தொடர்ச்சியாக எட்டு ஆண்டுகாலமாக எழுத்தாளர்விழா நடைபெறுவதற்கு, நான் மேலே குறிப்பிட்ட கண்பார்வையற்ற நடனக்கலைஞர்களின் குரு தெரிவித்த கருத்துத்தான் அடிப்படைக்காரணம் என நினைக்கின்றேன்.
எழுத்தாளர்களிடம் மாற்றுக்கருத்துக்கள் இருப்பதனால், இயக்கமாக செயற்படும்பொழுது முரண்பாடுகள் தோன்றி அதுவே பகைமையாகிவிடும் சந்தர்ப்பங்கள் அதிகம்.
தன்முனைப்பு ஆணவத்தினால் பல அமைப்புகள் சீர்குலைந்துவிடும் அபாயமும் ஏற்படும். இச்சிந்தனையை மனதில் இருத்தியே ‘தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், வேற்றுமையில் ஒற்றுமை காணும்’ – நோக்கத்தை முதனிலைப்படுத்தினோம்.
அதில் முழுமையான பலன் கிடைக்காமல்போனாலும் ஆரோக்கியமான திசையில் எழுத்தாளர் விழா இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது.
கருத்தரங்கு, விமர்சன அரங்கு, கவியரங்கு, கலையரங்கு என நிகழ்ச்சிகள் திட்டமிடப்படுவதனால் இந்தத்துறைகளில் ஆர்வமுள்ளவர்களும் பங்கெடுக்கின்றனர்.
நூல் வெளியீடு
எழுத்தாளர் விழாக்களில் நூல்விமர்சன அரங்கும் முக்கிய நிகழ்வாக இடம்பெறுவதனால் இங்கு வதியும் படைப்பாளிகளிடம் தமது படைப்புகளை நூலாக்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளது. வெளியான நூல்கள் விமர்சன அரங்கில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
விழாவை நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும், இதுவரையில் ஐந்து நூல்களை வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் சிறுகதைத்துறையில் ஈடுபடும் சிலரது கதைகளைத்தொகுத்து உயிர்ப்பு என்ற தொகுப்பை 2006 ஆம் ஆண்டு விழாவிலும் 31 கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து வானவில் என்ற நூலை 2007 ஆம் ஆண்டு விழாவிலும் வரவாக்கினோம்.
இந்த ஆண்டு (2008) சிட்னியில் நடந்த எட்டாவது எழுத்தாளர்விழாவில் சங்கத்தின் உறுப்பினர்கள் மூவரின் படைப்புகளை வெளியிட்டோம்.
1. கே.எஸ். சுதாகரின் எங்கேபோகிறோம் (சிறுகதை)
2. ஆவூரானின் ஆத்மாவைத்தொலைத்தவர்கள் (சிறுகதை)
3. சிசு. நாகேந்திரனின் பிறந்த மண்ணும் புகலிடமும் (கட்டுரை)
இவ்விதம் நூல்வெளியீட்டு முயற்சிகளில் ஈடுபடும் அதேவேளை கலை,இலக்கிய,கல்விப் பணிகளில் சிறந்த சேவையாற்றிய மூத்ததலைமுறையினரையும் வருடாந்த விழாக்களில் பாராட்டி கெளரவித்து விருது வழங்குகிறோம்.
பவளவிழா கண்டுள்ள கவிஞர் அம்பி, எஸ்.பொ.,காவலூர் ராஜதுரை, கலைவளன். சிசு. நாகேந்திரன், ஓவியர் ஞானம், பேராசிரியர் பொன். பூலோகசிங்கம், கட்டிடக்கலைஞர் வி.எஸ். துரைராஜா, அண்ணாவியார் இளைய பத்மநாதன், தையல் கலையில் புதுமை படைத்த திருமதி நவரட்ணம் ஆகியோர் பாராட்டப்பட்டோர் வரிசையில் இடம்பெற்றுள்ளனர்.
எழுத்தாளர்விழாவை வருடாந்தம் நடத்திக்கொண்டே காலத்துக்குக்காலம் இலக்கியச்சந்திப்புகளையும் சங்கம் ஒழுங்குசெய்கிறது.
இலங்கையிலிருந்து வருகைதந்த ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன், திருமதி ஞானம் ஞானசேகரன், உடுவை. தில்லை நடராஜா, கோகிலாமகேந்திரன், யோகேஸ்வரி கணேசலிங்கம், தேவகெளரி, ரத்னசபாபதி ஐயர், ஆகியோர் எழுத்தாளர்விழாக்களிலும் இலக்கியச்சந்திப்புகளிலும் பங்கேற்றுள்ளனர்.
ஜேர்மனியிலிருந்து சந்திரவதனா செல்வகுமாரன், இங்கிலாந்திலிருந்து நூலகர் என்.செல்வராஜா, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், இளவாலை அமுது, அமெரிக்காவிலிருந்து திருக்குறள் ஆய்வாளர் பேரம்பலம் தமிழ் நாட்டிலிருந்து நாட்டாரிலக்கிய பேராசிரியை விஜயலக்ஷ்மி இராமசாமி ஆகியோரும் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளையும் சங்கம் ஒழுங்குசெய்துள்ளது.
விமர்சன அரங்கு
ஒரு எழுத்தாளர் இயக்கத்தை கட்டுக்கோப்புக்குலையாமல் வளர்த்தெடுப்பதானது சிரமசாத்தியமானதுதான். கருத்தை கருத்தால் மோதி தெளிவு பெறாமல் தனிநபர் விமர்சனங்களிலும் அவதூறுகளிலும் ஈடுபடும் சமுதாயத்தில்தான் நாம் வாழவேண்டியது விதியாகியிருப்பதனால், இந்த இலக்கிய இயக்கத்தை ஒரு குடும்பமாகப்பாருங்கள், இதன் பணிகளை அவரவர் இருப்பை வெளிப்படுத்தும் செயற்பாடாக பாராமல் பயிற்சிப்பட்டறையாக அவதானியுங்கள், பயன்படுத்துங்கள் என்றே தொடர்ச்சி;யாக சொல்லிவருகின்றோம்.
கலை,இலக்கியத்தின் கூறுகளான சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், நாட்டியம், நாட்டுக்கூத்து, ஓவியம், சிறுவர்இலக்கியம், சிறுவர் நாடகம், முதலான துறைகளில் இங்கு ஈடுபடுபவர்களின் ஆக்கஇலக்கிய மற்றும் கலைத்துறை முயற்சிகளை விமர்சிக்கும் மாதாந்த சந்திப்புகளையும் எமது சங்கம் ஒழுங்கு செய்யவிருக்கிறது.
தமிழ்நூலகம்
விக்ரோரியா மாநிலத்தை தலைமையகமாகக்கொண்டியங்கும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஒரு தமிழ் நூல்நிலையத்தையும் தமிழர் தகவல் நிலையத்தையும் விரைவில் மெல்பனில் அமைப்பதற்கான பணியிலும் ஈடுபடவுள்ளது.
சிட்னியில் இந்த ஆண்டு (2008) நடைபெற்ற எட்டாவது எழுத்தாளர்விழாவில் இளம்தலைமுறையினரான தமிழ் மாணவர்களும் கணிசமாகக்கலந்துகொண்டமை குறிப்பிடத்தகுந்தது. சில மாணவமாணவியர் கருத்தரங்குகளிலும் கவியரங்குகளிலும் பங்கேற்று மூத்ததலைமுறையினரை பெரிதும் கவர்ந்தனர்.
தமிழர் புலம்பெயர்ந்த வெளிநாடுகளில் நான்காவது தலைமுறையின் நாவில் தமிழ் இருக்காது என்ற அச்சுறுதல் பரவலாக ஒலித்துக்கொண்டுதானிருக்கிறது. எனினும் இதனையும் புகலிடச்சூழலில் ஒரு சவாலாக ஏற்றுள்ளனர் இங்கு வாழும் எம்மவர்கள்.
கலையும் இலக்கியமும்தான் ஒரு இனத்தின் கண்களாக இருக்கமுடியும்
என்பதனால் புகலிடத்தில் தமிழினத்தவரின் செயற்பாடுகளுக்கான பணிகளில் எமது சங்கத்தின் பங்களிப்பு சிறு துளிதான் என்று அவையடக்கத்துடன் சொல்லிக்கொள்கின்றோம்.
மல்லிகை-(இலங்கை) – ஜ_லை 2008 இதழில் வெளியான கட்டுரை.
மின்னஞ்சல்:- letchumananm@ gmail.com
- அண்ணாவின் வாழ்க்கையில் 1962
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஒன்று,ரெண்டு
- வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்
- இருப்பை வெளிப்படுத்தாத பயிற்சிப்பட்டறை
- நத்தை!
- ஆகஸ்டு 9
- தமிழர்கள் நாங்கள்! கவிதை சித்திரம
- செவ்வாய்த் தளத்தில் பனிநீர் இருப்பது உறுதியானது. (ஆகஸ்டு 1, 2008)
- அலெக்ஸாண்டர் சோல்ஜெனிட்ஸின் – ஒரு கலை அஞ்சலி
- ‘மண்ணில் துலாவும் மனது’ – வஸீம் அக்ரம்
- கருணை வேண்டிக் காத்திருத்தல்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்- 31 பேராசிரியர் கல்கி
- க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி – ஒரு கலாச்சார நிகழ்வு
- ‘சித்திர எழுத்து’ என்னும் அமைப்பு தொடங்கப்படுகிறது
- ‘மின்தமிழ்’ உலகில் முதல் தமிழ்சொற்பிழைச்சுட்டி மென்பொருள்
- தமிழ்ச் சான்றோர் மூவர் -நூற்றாண்டு விழா!
- ஞாநி நடத்தும் பயிற்சிப் பட்டறை
- தாகூரின் கீதங்கள் – 43 உன்னுடன் மீள் இணைப்பு !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 31 காத்திருக்கிறாள் பிரபுவுக்கு !
- நம்பினோர்…..
- பறவை
- ஜிகாதின் சொற்கள்
- வியாபாரிகளாகும் நடிகர்கள்!
- அமர் நாத்: ஜம்மு ஹிந்துக்களின் பிரச்சினை மட்டுமா?
- அடுத்த பக்கம் பார்க்க
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 3 (சுருக்கப் பட்டது)
- வனாந்தரத்தைத் தொலைத்தவள் !
- பிப்ருவரி 14
- குஸ்தி
- பிஜு
- தூவல்..