இரவுகள் யாருடையவை ?

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

க்ருஷாங்கினி


என் வீட்டின் வலது புறம் ஒரு குடும்பம் வசிக்கிறது. அதில் திருமணத்தை எதிர் நோக்கியிருக்கும் ஒரு ஆண். அவருக்கு ஏற்ற பெண் தேடும் படலம் நடைபெறுகிறது. மேல் வகுப்பைச் சார்ந்தவர்கள். பையனுக்கு நல்ல வேலை. மாதத்திற்கு 40000 சம்பளம். அழைப்பு மையத்தில் வேலை. குழுவுக்கு மேளாளர். எப்போதும் இரவுப் பணிதான். அது எல்லோரும் அறிந்தது தானே. சொந்த வீடு, மற்ற வசதிகள் என எல்லாமும் நிறைந்த வரனாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

திருமணச் சந்தையில் அழகாவும், அடக்கமானவளாகவும் உள்ள பெண்ணைத் தேடும் வேட்டையில் அவரது சுற்றத்தார்கள் ஈடுபட்டுள்ளனர். பையனின் சம்பளத்தை கணக்கில் கொண்டு ஏகப்பட பெண்களின் பெற்றோர்கள் அவ்வரனை அணுகுகின்றனர். எனவே மணப் பையனுக்கு நிராகரிப்புக்கு நிறைய வாய்ப்பு. மிகவும் நிதானமாக அலசி ஆராய்ந்து தனக்கான மனைவியைத் தேர்ந்தெடுக்க நிறைய நேரமும் தேடுதலும் மேற் கொள்கிறார்கள். இதில் ஒன்றை அடிக்கோடிட்டு கவனியுங்கள். இந்த ஆணுக்கு நிரந்தர இரவுப் பணி.

என் வீட்டின் மற்றொரு புறம் ஒரு குடும்பம் வசிக்கிறது. அவர்களுக்குத் திருமண வயதில் ஒரு பெண். அவள் முதுகலைப் பட்டங்கள் மற்றும் பட்டயங்கள் கை நிறைய அடுக்கி வைத்துள்ளாள். நல்ல உயரமும், சிவப்பும், அழகான உருவமும் கொண்ட பெண். அவளும் மேல் சாதி சார்ந்தவள்தான். அவளுக்கு சம்பளம் முப்பதாயிரத்திற்கும் மேல். அவள் தனியார் விமான கம்பெனியில் விமானம் வான் ஏறும் மற்றும் தரை இறங்கும் பொழுது பயணிகளையும், சுமைகளையும் சரிபார்த்து ஏற்றி அல்லது இறக்கி அனைவரையும் சரி பார்த்துப் பின் திரும்பும் பணி புரிகிறாள். விமானம், எப்போதும் பகல்களில் மட்டும் வான் ஏறியும், தரை இறங்கியும் செல்ல இயலாது. இரவுகளிலும் அதன் போக்குவரத்து உண்டு அல்லவா ? எனவே பணி முறையில் வாரம் இரண்டு அல்லது ஒரு நாள் இரவுப் பணி ஏற்க வேண்டும். இது அவளுக்குத் திருமணம் என்ற உறவுக்கு ஆண் தேடும் படலத்தின் முன்பு வரை இயல்பான ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால் பையனின் பெற்றோர்கள், ‘பையன் ஆசை ஆசையாய் வீடு தேடி நாடி வரும் பொழுது, அவள் நைட் டூட்டி என்று வேலைக்குப் போய்விட்டால் எப்படி சரிப்பட்டு வரும் ?

இரவு அவன் ஏமாற மாட்டானா ? தேதி பார்த்து, கணக்குப் பார்த்தா ஆசை வரும் ? வரும்பொழுது மனைவி வீட்டில் இருக்க வேண்டாமா ? எனவே, இரவுப்பணியிலிருந்து விடுதலை பெறச்சொல்லுங்கள். திருமணத்திற்கு நாள் பார்க்கலாம். எவ்வளவோ வரன்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது. என்னவோ என் பையன் உங்கள் பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று சொல்லி விட்டான். உங்களிடம் இவ்வளவும் சொல்லவேண்டியிருக்கிறது. பெண்ணுக்கு எது நல்லது என்று உங்களுக்கும் தெரியும். நாளைக்கு வயிற்றில் பிள்ளை கையில் குழந்தை என்று ஆகிவிட்டால் ? எல்லாவற்றையும் யோசியுங்கள். இரவுப் பணி இல்லாமல் ஆக்கிக் கொண்டு வாருங்கள் திருமணம் பற்றிப் பேசுவோம். ‘

இரு தனித்தனி நிலை இது. குடும்பங்களில் நிலை இது. ஆணின் நிரந்த இரவுப் பணி கூட அவனின் வருவாயை மனதில் பணத்தின் அடிப்படையில் பெண்ணைப் பெற்றவர்களால் நல்ல வரன் என்று சிலாகிக்கப்பட்டு எளிதாக ஒப்புக்கொள்ளப்பட்டு தன் பெண்ணுக்குக் கிடைக்காதா என்று ஏங்க வைக்கிறது. ஆனால் பெண் ஒரிரு நாட்கள் கூட இரவுப் பணி செய்வது கணவனின் சுகத்திற்கு ஒரு தடையாய் மறுக்க வைக்கிறது.

பணி என்று வந்துவிட்டால் ஆணும் பெண்ணும் சமமதான். எனவே எந்த விதமான இடர்பாடும் இன்றி பணி புரிகிறார்கள். திறமையை நிரூபிக்கிறார்கள். உயர்வு பெருகிறார்கள். ஆண்களுக்கான இரவுப் பணி எல்லா தளத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. பெண்ணின் இரவுப் பணி செவிலியர் மருத்துவர் போன்ற சில குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்கி விட்டிருக்கிறது. ஒரு ஆண் இரவு நேரம் பணி முடிந்து வீட்டிற்கு வந்து உணவு அருந்திவிட்டு உடன் உறங்க குடும்ப அமைப்பு அனுமதிக்கும். பெண் இரவுப் பணி முடிந்து வீடு திரும்பியவுடன் அவளுக்கான மற்ற இதர பொறுப்புக்களை நிறைவேற்றிய பிறகே ஓய்வு எடுக்க முடிகிறது.

திருமணம் என்ற உறவு ஏற்பட, வாரம் ஒரு நாள் மட்டும் இரவு தங்கும் மகனையும் ஏற்றுக் கொண்டு பெண் கொடுக்க ஓடி ஓடி வரும் சமுதாயம் அப்பெண்ணின் குடும்ப உறவுகள் மற்றும் ஆசைகள் பற்றி கேள்வி கெட்க என்றில்லை, மனத்தளவில் கூட இடம் தர மறுக்கிறது. ஆனால், பெண் ஒரு நாள் கூட கட்டியவனுக்கு உபயோகம் ஆகாமல் இரவுப் பணிக்கு செல்வதை ஏற்க மறுக்கிறது.

எப்போதும் இரவுப் பணியில் இருக்கும் அழைப்பு மையத்தில் பணி புரியும் பெண்களின் திருமணம் இச்சமுதாயத்தில் எப்படி எதிர் கொள்ளப் படப் போகிறது என்பது இன்னமும் சில ஆண்டுகளில் புகைய ஆரம்பிக்கும். பெண் கை நிறைய சம்பாதித்தாலும் கூட அதற்கும் மேலாக ஒரு ரூபாயாவது அதிகம் சம்பாதிப்பதுதானே ஆணுக்கு அழகு ? இரவு உபயோகம் தானே பெண்ணுக்கு அழகு ?

நமது உறவுகளையும், இரவுகளையும் தீர்மானிப்பது இன்று யார் கையில் உள்ளது ? நம்மிடத்திலா அல்லது பன்னாட்டுக் கம்பனிகளிடமா ?

க்ரு ?ாங்கினி

—-

nagarajan63@yahoo.com

Series Navigation

க்ருஷாங்கினி

க்ருஷாங்கினி