கோகுலகண்ணன்
இந்த இரவைக் கடப்பதற்கான
வழி எங்கிருக்கிறது
அடர்ந்த மரங்களை
கிழித்துப் போகும்
சாலைப் பாம்பின்
விளிம்பில் சப்திக்கும்
தவளை ஓலம் மட்டுமே துளைக்கும்
காற்றின் தனிமையாய்
அலையலானேன்
விளக்குகளின் மினுமினுப்பு
அடிக்கோடிடும்
தொகுத்த இருளில்
பொதிந்திருக்கும்
பாதையின் சிக்கலை
அவிழ்க்கும் சூத்திரம்
யாரிடமிருக்கு ?
காடா விளக்கின் நிழலசைவில்
கனிந்த கனி மொய்க்கும்
பூச்சி மத்தியில் அமர்ந்திருக்கும்
ஒற்றைக் கிழவியின்
சிலைத்த முகம்போல
ராத்திரியின் முகம்
இறுகிக் கிடக்கிறது
இந்த இருட்டின் பிடியில்
சிக்கிக் கொண்ட
என்னை அகன்று
அந்தப் பக்க வெளிச்சத்தில்
ஊசலாடும்
என் அந்தரங்கத்தின்
ஒரு பக்கத்தை
ஒரு கணம் பார்க்கக் கிடைத்தது
வழியும் குருதியும்
உயிரறுக்கும் ஆயுதமும்
மனம் பிறண்ட வக்கிரங்களும்
கொஞ்சம் நெகிழ்ச்சியின்
தடயங்களும்
விலகிக் கிடக்கு
வெளிச்சத்தில்
இந்த இரவின் மடியில்
கிடக்கிறேன் சலனம் குறைந்து
தொலைந்த பயத்தின் அழுத்தம்
என்னை துப்புரவாக்கியதில்
இனிமையாய் சோர்வுற்று
இன்றைய இரவு
முடியாதிருக்க
நான் என்ன செய்ய முடியும்
தவிர்க்கமுடியாத
நாளை வெளிச்சம்
வெடிக்கும் போது
தடுமாற்றத்துடன்
பற்றிக் கொள்ள
உன் விரல்களைக் கொடு
குருடனுக்குக் கைத்தடியாய்.