தமிழ்மகன்
“என்ன அண்ணாச்சி படிப்புல மூழ்கிட்டாப்ல இருக்கு. பரீட்சையா எழுதப் போறீரோ?”
அண்ணாச்சி படித்துக் கொண்டிருந்த பக்கத்தின் முனையை ராக்கெட் செய்வது மாதிரி மடித்துவிட்டு “எல்லா உன்னாலதான். நேத்தே சப்ளை பண்றேன்னு சொல்லிப்புட்டு இன்னமும் ரெடி பண்ணித்தராம இருக்கே. எந்தா நேரம் உம்மூஞ்சை பாத்துக்கிட்டு ஒக்காந்திருக்கறது? ஏதாவது பேப்பர் வாங்கியாந்து படிக்கலாம்னு போனா ஒருத்தன் ரோட்டோரத்தில பழைய பொஸ்தகமா போட்டு ஒக்காந்திருந்தான். பத்து ரூபானு ஒண்ணு புடிச்சாந்தே”
“என்ன பொஸ்தகம் அது?”
இப்படிக் கேட்டதும்தான் படிக்கும் புத்தகத்தின் பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் ஏற்பட்டு, புத்தகத்தை அப்படியே கவுத்துப் போட்டு
”ம்… பாற்கடலாமில்ல?… லா.ச.ரா.. என்று புத்தகத்தை எழுதியவரின் பெயரையும் சேர்த்தே படித்தார். எழுதினவம்பேரா இருக்கும். சீக்கிரம் கட்டுய்யா.. பத்து லென்த் ஆறங்குலம் பைப்பு, இம்ப்ளேர் நெட்டு 15, ஸிக்ஸ்டீன் எம்.எம். போல்டு- நெட்டு…”
“அண்ணாச்சி எத்தனை வாட்டி சொல்லுவே.. எல்லாம் பை நிமிட்ல ரெடியாய்டும். நீ அப்பிடி படிச்சுகிட்டே இரு.. டீ சொல்றேன்”
“ஆமா… செந்நீரா ஆறு டீ யாச்சு” அலுத்தபடி புத்தகத்தில் ஊன்ற ஆரம்பித்தார். கதை என்னமோ அவரை ஆர்வமாகத்தான் ஈர்த்தது. ஒரு பக்கம் படிப்பதற்குள் டீயும் மசால் வடையும் வரவே, அதைச் சாப்பிட்டுவிட்டு எண்ணெய் கையை எங்கே துடைப்பது என்று உத்தேசிப்பதற்குள் “அண்ணாச்சி ரெடி” என்றான் கடைக்காரப் பையன். வண்டிக்காரனைப் பிடித்து பூக்கடையில் இருந்து தம் முகப்பேர் கடைக்கு பேரம் பேசி சாமான் “செட்’டையெல்லாம் ஏற்றிவிட்டு, இவரும் ஒரு பஸ்ûஸப் பிடித்து அவனுக்கு முன்னால் முகப்பேர் போய் முன்கூட்டியே செய்ய வேண்டிய ஏற்பாடுகளை செய்ய ஓடிக் கொண்டிருந்தபோதுதான் புத்தகத்தைக் கடையிலேயே வைத்து விட்டு வந்துவிட்டதை உணர்ந்தார். அவருக்கு ஒரு நடை ஓடிப் போய் புத்தகத்தை எடுத்துவந்து விடலாமா என்ற எண்ணமும் அட அடுத்த வாரம் வரும்போது எடுத்துக்கலாம் என்ற எண்ணமும் குழப்பிக் கொண்டிருக்கையில் பஸ் வந்து விட்டது.
கடைக்குப் போன கையோடு “ஏந் தம்பி என்னோட பொஸ்தகத்தை அங்கயே வெச்சுட்டு வந்துட்டேன். எடுத்து வெய்யி. அடுத்தவாரம் வர்றப்ப வாங்கிக்கிறேன்” என்றார்.
“அண்ணாச்சி புக் எதுவும் இங்க இல்லையே… நான்கூட நீங்க படிச்சுட்டா நான் கொஞ்சம் படிக்கலாமே நினைச்சேன். கோட்டைவுட்டீங்களா? எவன் அடிச்சுட்டுப் போயிட்டான்னு தெர்லயே”
“நல்லா இருந்ததே கதைனு பார்த்தேன். முடிக்கிற நேரத்தில… அந்த பொஸ்தகம் பேரு ஞாபகம் இருக்கா உனக்கு?”
“ம்ம்.. ஞாபகம் இல்லையே அண்ணாச்சி”
“எழுதின ஆளு பேரு?”
“நீதானே வெச்சிருந்தே. நா கையாலும் தொடலையே.. பேர் மாதிரி இல்லையே. ஏதோ இன்சில் மாதிரியில்ல படிச்ச… ரா’னு முடிஞ்சது மாதிரி ஞாபகம்.”
“ஆமாமாம்.. கண்டுபிடிச்சுடலாம்விடு.. பொஸ்தக கடைல கேட்டுப் பாக்றேன்… எல்லாம் ஒழுங்கா வந்து எரக்கிட்டுப் போய்ட்டான்.. லெதர் வாஸர் வாங்காம வந்துட்டேன். சரி அடுத்த வாரம் வர்றேன்.”
அண்ணாச்சிக்கு கதையைப் படித்துக் கொண்டிருக்கும்போதுகூட அதை அப்படி நேசித்துப் படிக்கவில்லை. இனி அது நம்மிடம் இல்லை என்றதும் கூட்டுக் குடும்பத்தில் மாட்டிக் கொண்டு ஒரு பெண் படும் வேதனையை நினைத்து கொஞ்சம் வருந்தவும் செய்தார். “இன்னும் சாந்தி முகூர்த்தம்கூட முடியலையே… சும்மா தெரிஞ்சோ தெரியாமலோ இப்படியும் அப்படியும் இடிச்சுக்கிட்டதுதான் புருஷங்கிட்ட அவ கண்ட சுகம். ஆபிஸ் விஷயமா புருஷன் வெளியூர் போய்ட்றான். தலைதீபாவளிக்குக் கூட வீட்ல இருக்க முடியல அவனால. மாமியார்காரி என்னடான்னா கிணத்துத் தண்ணிய சமுத்திரமா அடிச்சுக்கிட்டுப் போய்டப் போகுதுங்கிறா. ஐயருவூட்டுக் கதை.’ கடைசியில் அந்தக் கதை என்னாச்சு என்ற முடிவை யாராவது சொல்லிவிட்டால்கூட போதும் என்று இருந்தது. அவருக்கிருந்த நட்பு வட்டாரத்தில் இதைப் பற்றி பேசவும் முடியாது. எல்லாம் இரும்பு வியாபாரி, சிமெண்ட் வியாபாரி.
மறுநாள் திருமங்கலம் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருக்கும்போது `என்.சி.பி.எச். புத்தகத் திருவிழா’ என்று புத்தகக் கடையைப் பார்த்தார். ரொம்ப நாளாக அது அங்கு இருந்த தடயம் அவருக்குப் பதிவாகியிருந்தாலும் ஆச்சர்யமாகப் பார்த்தார். புல்லட்டை நிறுத்திவிட்டு உள்ளே போய் பார்த்தார். அவர் படித்த புத்தகத்தின் அங்க அடையாளங்களோடு ஒரு புத்தகமும் அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அதே மாதிரி சாயலில் நிறைய புத்தகங்கள் இருந்தன. அதை எதையும் வாங்கிவிட்டு புரியுமோ, புரியாதோ என்று பயந்தார்.
“என்ன ஸôர் வேணும்?” என்றார் கடைச் சிப்பந்தி.
“எனக்கு ஒரு புக் வேணும். அதுதான் இங்க இருக்கான்னு பாக்கேன்”
“என்ன புக்கு பேர் சொல்லுங்க”
“அதைத்தானே மறந்துட்டு முழிக்கேன்”
“தமிழ் புக்குதானே?”
“நா வேறென்னத்த கண்டேன்?”
“எழுதினவர் யார்னு…?”
“ஏதோ.. ரா’னு முடிஞ்சாப்ல ஞாவகம் அவர் பேரு”
“ஓ… அவர்தா?.. இருக்கு.. இருக்கு” என்று அவர் இரண்டு அடுக்குத் தள்ளி ஒரு புத்தகத்தை எடுத்துவந்தார்.
“சேகுவேரா கடிதங்கள்… இதில்லையே தம்பி. அந்த புக்கும் லெட்டர் மாதிரிதான் எளுதியிருந்தது… ஆனா”
“கடிதம்னா இதுதான். ரா’ல முடியுதுன்னா இது தவிர கி.ரா. கடிதங்கள்னு ஒரு புக் இருக்கு பாக்றீங்களா?”
“இல்ல வேணாம். இதையே பில் போடுங்க. கேட்டதுக்கு ஆசையா கொண்டாந்து காம்பிச்சீங்க..”
“சேகுவேரா பத்தி நிறைய பப்ளீஷர் போட்டிருக்காங்க. அதனால நீங்க இவரோட வேற ஏதாவது புக்கை பார்த்திருப்பீங்க. இதுவும் பிரமாதமான புக். நெஞ்சை உருக்கிடும்.”
“அதேதான். நெஞ்சை உருக்கிறாப்லதான் இருந்துச்சு அதுவும். அதான் தேடி வந்தேன். சரி குடுங்க. இதுவும் அவர் எழுதினதா இருந்தா சந்தோஷம்தான்”
பில் போட்டு புத்தகத்தை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார். வெளியே வந்ததும் செüந்திரபாண்டி புல்லட்டில் பறந்து கொண்டிருப்பதைப் பார்த்து முகத்தை மூடிக் கொண்டார். “தலைவரு புக்கெல்லாம் வாங்கி படிக்கிறார்ப்பா’ என்று பரிகாசம் செய்வான்.
இரவு சாப்பிட்டு முடித்து வெத்தலை பாக்கும் சார்மினார் சிகரெட்டுமாக மாடிக்கு வந்து புத்தகத்தைப் பிரித்தார். படிக்கப் படிக்க இது வேறு ஏதோ சங்கதி என்று புரிந்தது. இது ஏதோ வெளிநாட்டில் நடந்த போர்கள், புரட்சிகள் என்று போனது. பொண்டாட்டி புள்ளை குட்டியைப் பார்க்காம காட்டிலும் மேட்டிலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தன் தம் குழந்தைகளுக்குக் கடிதம் எழுதறாப்லலாம் இருந்தது. குளிர்ல காட்டிலும் மழையிலும் துப்பாக்கியைத் தூக்கிகிட்டுப் போறானுங்க. யார்கிட்ட சண்டைக்குப் போறாங்க. சண்டை போட்டுட்டு என்ன பண்ணப் போறாங்க ஒண்ணும் புரியல. ஆனா லட்சிய வெறி. குதிரை கறி சாப்பிட்டது பத்தியெல்லாம் எழுதியிருந்தான். விவசாயிங்களுக்கு அதுதான் எல்லாம். அதை அடிச்சு சாப்பிடணும்னா முடியுமா? சில பேர் சாப்பிட மாட்றாங்க. அந்த ரா வேற இந்த ரா வேற. அவரு மோர்ஞ்சாதம். இது குதிரைக் கறி. அது வேற லெட்டரு… இது வேற லெட்டரு.
சிமெணட் தட்டுப் பாடுபற்றியும் டி.எம்.டி. கம்பிகளின் விலையேற்றம் குறித்தும் தினமானி நாளிதழ் அவ்வப்போது கட்டுரை வெளியிடுவதால் அண்ணாச்சி அந்த நாளிதழை வாங்க ஆரம்பித்திருந்தார். அதில் இந்தக் கட்டிடம் சம்பந்தமான சமாசாரங்கள் தவிர வேறு சில துறைகளையும் தொட்டுச் சென்றனர். அதைப் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு எழுத்தாளர் தம் பேட்டியில் சு.ரா., கு.ப.ரா., லா.ச.ரா., கி.ரா. போன்ற எழுத்தாளர்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார். தாம் படித்த பொஸ்தகத்தின் எழுத்தாளர் இரண்டு எழுத்துக்களுக்கு மேல் உள்ளவராக நன்றாக ஞாபகம் இருந்ததால், சு.ரா., கி.ரா இருவரையும் நீக்கிவிட்டு கு.ப.ரா., லா.ச.ரா. இருவர் மீதும் கவனத்தைக் குவித்தார். கடையில் வேறு யாரும் இல்லை. துணிச்சலாக தினமானிக்கு போன் போட்டார்.
போனை எடுத்தவரிடம் “கு.ப.ரா., லா.ச.ரா. போன் நம்பர் கிடைக்குமா ஸôர்” என்றார்.
மறுமுனையில் ரிஸீவரை சரியாக மூடாமலேயே “கழுத்தறுப்புங்க” என்பது கேட்டது. “எதுக்கு ஸôர் அவங்க நம்பரு?”
“அவங்ககிட்ட ஒரு டவுட் கேக்கணும்”
“அவங்க ரெண்டு பேருமே செத்துப் போய்ட்டாங்க ஸôர்”
கடையில் அடிபம்பு வாஸர் இருக்கா என்று கேட்டு ஒரு பெண்மணி வந்து நின்றாள். “இருங்கம்மா… தர்றேன்… இல்ல ஸôர் இங்க. இந்த ரெண்டு பேர்ல ஐயர் வூட்டு கதை எளுதர்து யாரு ஸôர். அதான் என் டவுட்டு.”
“ரெண்டு பேருமே ஐயர் கதை எழுதறவங்கதான்” சொன்ன வேகத்தில் ரிஸீவரை வைத்துவிட்டார்கள்.
அண்ணாச்சியும் ரிஸிவரை வைத்துவிட்டு “சொல்லுமா” என்றார் பெண்மணியிடம்.
“ஐயர் கதை எழுதறவர்னு சொன்னீங்களே என்னது? சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன் எல்லாமே ஐயர் கதை எழுதியிருக்கா. என்ன விஷயம்? சொல்லுங்களேன், தெரிஞ்சா சொல்றேன்”
அண்ணாச்சி தயங்கி அந்தப் பெண்ணைப் பார்த்தார். ஐயமாரு வூட்டுப் பொண்ணு போலதான் இருந்தது.
“ஒரு பொண்ணு தம் புருஷனுக்கு லெட்டர் எழுதறா. அது ஒரு கூட்டுக் குடும்பம். புருஷனும் பொஞ்சாதியும் இப்பத்தான் கல்யாணமானவங்க. இன்னும் சரியா பேசக்கூட இல்ல. புரிஞ்சுதுங்களா… தீபாவளி… தல தீபாவளி. ஆனா புருஷன் வேலை விஷயமா வெளியூர் போயிட்றான். இப்பிடி போகுது கதை.”
“பாற்கடல்னா அது?”
“ஆமாம்மா… அதேதான். பாதிக் கதை படிச்சேன். கடைசில என்னாச்சுனு தெரிஞ்சுக்கலாம்னு”
“அதுவா? அதான் தலைப்பிலயே சொல்லிட்டாரே.. பாற்கடல்னு. குடும்பம்னா அதில ஆலகால விஷமும் இருக்கும், அமிர்தமும் இருக்கும்னு முடிச்சுட்டார்.”
“ஐய்யய்யோ.. அப்பிடியா?” அதிர்ந்தார் அண்ணாச்சி.
கடைப்பையன் வந்து அடிபம்பு வாஷரை எடுத்துக் கொடுத்து காசை வாங்கி கல்லாவில் போட்டான். அந்தப் பெண்மணி சற்றே அகன்றதும் “பஸ்ல ஜன்னலோரத்தில எப்பவும் ஒரு பொஸ்தகம் படிச்சுக்கிட்டு போவும் இந்த அக்கா. அவங்க வூட்டுக்காரு துபாய்ல வேலை செய்றாரு” என்றான் பையன்.
“அடக் கொடுமையே இந்தப் பொண்ணோட நிஜக் கதைதான் போலருக்கு” என்று கதைமுடிவு தெரிந்த திருப்தியில் சேகுவேரா கடிதங்களைத் தொடையில் தட்டி படிக்க ஆரம்பித்தார் அண்ணாச்சி.
tamilmagan2000@gmail.com
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது ?(கட்டுரை: 21)
- வெள்ளித்திரை
- சி புஸ்பராஜா இரண்டாவது நினைவு பகிர்தலும் நூல் அறிமுகமும்
- திருச்சியில் பன்னாட்டுக் கருத்தரங்கு (டிசம்பர் 2007)
- நஸீம்
- சம்பந்தமில்லை என்றாலும் – தமிழ்நாடு-நேற்று இன்று நாளை (எடிடர்: என். முருகானந்தம்)
- எல்லாமே சிரிப்புத்தானா?
- வெடிக்காய் வியாபாரம்
- The Kite Runner – பட்டம் ஓட்டி
- காற்றினிலே வரும் கீதங்கள் – 11 சரண் புகுந்திடுவாள் !
- தாகூரின் கீதங்கள் – 22 கவிஞனைத் தேடுகிறாயா ?
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- எழுத்துக்கலை பற்றி இவர்கள் …….16 தொ.மு.சி.ரகுநாதன்
- ஒட்டுக் கேட்க ஆசை
- அகண்ட பஜனை
- அஞ்சலியிலும் சாதி துவேஷமா?
- கிழிபடும் POAக்கள்
- வார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…
- பன்முக நோக்கில் திருக்குறள் – தேசியக்கருத்தரங்கம்
- கி ரா ஆவணப்பட வெளியீடு
- தமிழ் பிரவாகம் – இலக்கியப் போட்டி
- Tamilnadu Thiraippada Iyakkam
- காக்கை எச்சமிட்டும் களங்கமடையாத பாரதி சிலை
- அநங்கம் சிற்றிதழ்-மலேசியா
- சகோதரர் வஹ்ஹாபியுடன் நேசகுமார் நடத்திக் கொண்டிருக்கும் விவாதம்
- மொழியால் நிகழும் மகத்துவம் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை- பவா.செல்லதுரை சிறுகதைகள்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 3
- சங்க இலக்கியத்தில் மேலாண்மை – முனைவர் ஆ. மணவழகன் நூல் மதிப்புரை
- சுடர்விடும் வரிகள் – பர்த்ருஹரியின் சுபாஷிதம் (தமிழாக்கம் : மதுமிதா)
- சுஜாதாவோடு..,
- சம்பள நாள்
- இரண்டு கடிதங்கள்
- மாட்டுவால்
- வளர்ப்பு
- ஜீன்களைச் சிதைத்துக் கொண்டு மீண்டும் பிற
- போய் வா நண்பனே
- கவிதைகள்
- விபச்சாரியை பெண்ணென்று ஆங்கீகரிப்பதும், சூசானும்*
- ‘தன்னுணர்வு’: பெருஞ்சித்திரனாரின் தமிழாக்கம்
- ஹிந்துக்களின் குரலை எதிரொலிக்கும் மலேசியத் தேர்தல்