இரண்டாவது முகம்

This entry is part 39 of 38 in the series 20100523_Issue

ராம்ப்ரசாத்


‘ஹேய் காஞ்சனா, வில் மீட் யூ அட் த சேம் ப்லேஸ் அட் காலேஜ். லெட்ஸ் ஸீ ஹூ பிக்ஸ் த ரோஸ் ஃபர்ஸ்ட்… ராகவி’
ராகவி, இதழ்களில் தவறவிட்ட மெலிதான புன்னகையுடன், அந்த வாசகங்களை மீண்டும் ஒரு முறை வாசித்துவிட்டு என்டர் தட்டினாள். கணிணி விரைந்து அவளின் கடிதத்தை ஒரு உரையில் போட்டு மூடி, காஞ்சனாவிற்கு அனுப்பியது.
காஞ்சனா ராகவியின் தோழி. இருவரும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கிறார்கள். அது செமஸ்டர் தேர்வு நேரம். ஒரு தேர்வுக்கும் அடுத்த தேர்வுக்கும் இடையில் இரண்டு நாட்களேனும் விடுமுறை இருக்கும். அந்த நாட்களில் இருவரும் கல்லூரி நூலகத்தை ஒட்டிய வராந்தையில் அமர்ந்து கூட்டாக படிப்பது வழக்கம். இது போன்ற தேர்வு நேரங்களில் கல்லூரி, வழக்கமான ஆர்பாட்டங்கள் ஏதுமில்லாமல் மிகவும் அமைதியாக இருக்கும். நூலகம் திறந்திருக்கும் என்பதால் அவசரத்துக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்பட்டால் பலதரப்பட்ட புத்தகங்களை ரெஃபர் செய்யலாம். அதனாலேயே இவர்கள் அங்கு கூட்டாக படிப்பது வழக்கம்.
மெயின் ரோட்டிலிருந்து கல்லூரிக்குள் நுழைகையில் வைக்கப்பட்டிருந்த ரோஜா செடியில் தினம் ஒரு ரோஜா பூக்கும். யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் அந்த ரோஜா பறித்துவிட்டால், இரண்டாவதாக வருபவள் முதலாவதாக வந்தவளுக்கு கான்டீனில் மதிய உணவு வாங்கித்தரவேண்டும். இது இவர்களுக்கு இடையில் ஒரு ஒப்பந்தம். இப்படியாக கல்லூரிக்கு விரைந்து வந்து படித்ததில் சில தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற காரணத்தால் அது அவர்களிடம் ஒரு சென்டிமென்ட் ஆகிவிட்டது. அதுவும் கையில் மொபைல் இருந்தாலும் மெயிலில் தான் இத்த‌க‌வலை முத‌ன் முத‌லில் தெரிவித்து அத‌ற்கு பிற‌கான‌ முத‌ல் தேர்வில் தொண்ணூருக்கும் மேல் ம‌திப்பெண்க‌ள் வாங்கிய‌தும் மெயிலில் தெரிவிப்ப‌தும் கூட‌ சென்டிமென்ட் ஆகிவிட்ட‌து.
ம‌னித‌ர்க‌ள் இப்ப‌டித்தானே. எல்லோருக்கும் வெற்றி ம‌ட்டுமே வேண்டும். தோல்விகள் யாருக்கும் பிடித்த‌மில்லை. தோல்விக‌ளை யாரும் விரும்புவ‌தில்லை. ஒரு வெற்றியை ம‌ன‌ம் சுவைத்துவிட்டால் மீண்டும் மீண்டும் அது கேட்கிற‌து. அத‌ற்கு என்ன‌ வ‌ழியென்று தேடுகிற‌து. அது முத‌லில் கிடைத்த‌போது என்னென்ன‌ இருந்த‌தோ அது அத்த‌னையையும் விரும்புகிற‌து. அவ‌ற்றைத் த‌ன்னிட‌த்தே த‌க்க‌ வைக்க‌ ஜ‌ன்ம‌ப்பிர‌ய‌த்த‌னப்ப‌டுகிற‌து.
ராக‌விக்கும் காஞ்ச‌னாவிற்கும் அப்ப‌டித்தான் ஆகிப்போன‌து அந்த வராந்தை படிப்பும், ரோஜாவும். ராக‌வி துள்ள‌லாய் வெளியே வ‌ந்து ஸ்கூட்டியை உதைத்து உரும‌ வைத்து, ஏறி அம‌ர்ந்து க‌ல்லூரிக்குப் ப‌ய‌ண‌ப்ப‌ட்டாள். போகும் வ‌ழியெங்கும் ரோஜாவை முத‌லில் ப‌றித்துவிடும் வேக‌ம் இருந்த‌து அவ‌ளிட‌ம். அன்று ப‌டிக்க‌ வேண்டிய‌ பாட‌த்திற்குத் தேவையான‌ எல்லா புத்த‌க‌ங்க‌ளையும் எடுத்துக்கொண்டோமா என்றொரு எண்ண‌ம் வ‌ருகையிலேயே, மொபைல் சிணுங்குவ‌து காதில் விழுந்த‌து. ஸ்கூட்டியை ஓர‌மாக‌ நிறுத்திவிட்டு யாரென்று பார்த்தாள். ம‌த‌ன் கூப்பிடுகிறான்.ம‌த‌ன் வ‌குப்புத்தோழ‌ன். இவ‌ளிட‌ம் அன்பாக‌ப் ப‌ழ‌குவான். இவ‌ளுக்கும் அவ‌னைப்பிடிக்கும். ஏனெனில் மதன் கண்கள் இவளிடம் மட்டும் ஏதோ பேச முயற்சிப்பதை உணர்ந்திருக்கிறாள். அது காதல் தானென்று அவள் உணராமல் இல்லைதான். சிறிது நாட்க‌ளாக‌, ம‌த‌ன் இவ‌ளிட‌ம் ஏதோ சொல்ல‌ நினைப்ப‌தும், த‌ய‌ங்கி ஒதுங்குவ‌துமாக‌ இருப்ப‌தை இவ‌ள் க‌வ‌னித்தே இருந்தாள். அதை நினைக்கும்போதே அவ‌ள் ம‌ன‌ம் உள்ளுக்குள் குதூக‌லிப்ப‌தை அவ‌ளாலேயே உண‌ர‌ முடிந்த‌து. அவ‌ளால் என்ன‌ ந‌ட‌க்குமென்று யூகிக்க‌முடிந்த‌தோ, அத‌ன் மேல் ஒரு விருப்ப‌ம் இருந்த‌து. அவ‌ளுக்கு அது பிடித்தே இருந்த‌து. அவ‌னாக‌ சொல்ல‌ட்டும் என்று அவ‌ளே காத்திருந்தாள்தான். ஆனால் ம‌த‌ன் அவ‌ள் எதிர்பார்த்த‌தையும் விட‌ அதிக‌ நேர‌ம் எடுத்துக்கொண்டிருந்தான்.
பொறுமையிழந்தவளாய், அவ‌ளுக்கான‌ அவ‌னின் நேர‌த்தில், த‌ன்னைப் பொறுத்திக்கொள்ள‌க்கூட‌ அவ‌ள் த‌ய‌ராகிவிட்டிருந்த‌ நேர‌த்தில் தான் அவ‌னின் அழைப்பு. உட‌னே எடுத்தாள்.
‘ஹாய் ம‌த‌ன்…. ஆங் ஆமா பா, ப‌ர‌வாயில்ல‌ சொல்லு. த‌ட்ஸ் ஃபைன். நீ சொல்லு. ஓ..ஓ.கே. ம்ம்ம் மே பி ம‌த்தியான‌ம் ஒரு ம‌ணிக்கு அந்த‌ பார்க்குக்கு வ‌ந்திடேன். ஆங் ஃபைன். ஒகே பை’.
ராக‌விக்கு ப‌ட‌ப‌ட‌ப்பாக‌ இருந்த‌து.ம‌த‌ன் த‌ன்னிட‌ம் ஏதோ த‌னியாக‌ பேச‌ வேண்டும் என்ப‌தாக‌த் தான் தொட‌ர்பு கொண்டிருக்கிறான். நிச்சயம் அதுவாகத்தான் இருக்கும். பயலுக்கு இப்போவாவது தைரியம் வந்ததே. ராகவிக்கு இனிமேலும் காலம் தாழ்த்த முடியாது. அந்த வார்த்தைகளை கேட்கும் மயக்கத்தை உடனே அனுபவித்தாக வேண்டும் அவளுக்கு. அவனை அத்தனை பிடிக்கும் அவளுக்கு. பாவிப்பயல், சொல்ல இத்தனை நாளா. ம‌திய‌ம் 1 ம‌ணிக்கு வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி உள்ள‌ பார்க்கில் ச‌ந்திக்க‌லாம் என்று சொல்லியாகிவிட்ட‌து. கல்லூரி, அதன் எதிர் திசையில், வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி இருந்தது.
மணி காலை ப‌தினொன்று. ஏற்கனவே ப்ளான் பண்ணியபடி கல்லூரிக்குச் சென்று மதிய உணவை முடித்துவிட்டு ப‌டிப்பை தொட‌ர‌ நேர‌மிருக்காது. உணவு முடித்து, படிக்க‌ ஆர‌ம்பித்த‌ சிறிது நேர‌த்திலேயே கிள‌ம்பும்ப‌டி இருக்க‌லாம். காஞ்ச‌னா நிச்ச‌ய‌ம் க‌த்த‌ப்போகிறாள்தான். அவ‌ளை வேறு வ‌ர‌சொல்லியாகவிட்ட‌து. அவ‌ள் த‌னியே அம‌ர்ந்து ப‌டிக்க‌ நிச்ச‌ய‌ம் பிரிய‌ப்ப‌ட‌மாட்டாள் அவ‌ளை எப்ப‌டி ச‌மாளிப்ப‌து என்று குழ‌ப்ப‌மாயிருந்த‌து. இன்றைக்கு தாம‌த‌மாக‌ செல்வ‌துபோல் சென்று, காஞ்ச‌னாவிற்கு ம‌திய‌ உண‌வு வாங்கிக்கொடுத்துவிட்டு, எப்ப‌டியாவ‌து ச‌மாதான‌ப்ப‌டுத்திவிட்டு ம‌த‌னைப் பார்க்க‌ பார்க்கிற்கு போய்விட‌வேண்டும். இன்று விட்டால் ப‌யல் ம‌றுப‌டி சொல்ல‌ யுக‌ங்க‌ள் கூட‌ எடுத்துக்கொள்ள‌லாம் என்றே தோன்றிய‌து.
ராக‌விக்கு ப‌த‌ட்ட‌ம் இன்னும் குறைய‌வில்லை. ம‌ன‌சு முழுக்க‌ ஏதோ ஒரு ச‌ந்தோஷ‌ம் அடைத்துக்கொண்டிருந்த‌து. அவள் பல நாள் எதிர்பார்த்து காத்திருந்த‌ விஷ‌ய‌ம் திடீரென ந‌ட‌க்க‌ப்போவ‌தை எதிர்கொள்வ‌தில் ஒரு அதிர்ச்சியும், குறுகுறுப்பும் க‌ல‌ந்த‌ ஒரு ஆர்வ‌ம். இன்று ரோஜாவை காஞ்ச‌னாவிற்கு விட்டுக்கொடுத்துவிட‌லாம். அப்போது தான் அவ‌ள் கோப‌த்தை ச‌மாளிக்க‌ முடியும் என்று தோன்றிய‌து. ராக‌வி ஸ்கூட்டியை வ‌ழ‌க்க‌மான‌ வேக‌த்தில் ஓட்டாம‌ல் மெதுவாக‌வே ஓட்டினாள். அவ‌ள் காலேஜை நெருங்கிய‌போது அந்த‌ ரோஜா செடியில் ரோஜா இல்லை. காஞ்ச‌னா வ‌ந்துவிட்டாள். உட‌னே நூல‌க‌த்தை ஒட்டிய‌ வ‌ராந்தைக்கு சென்று அவ‌ளைக் காண்டீனுக்கு அழைத்துச் சென்று ம‌திய‌ உண‌வு வாங்கிக்கொடுத்து, உண‌வு சாப்பிடுகையில், மெதுவாக‌ வேறு ஏதாவ‌து கார‌ண‌ம் சொல்லி வீட்டுக்குத் திரும்பிப்போக‌ வேண்டும் என்று சொல்ல‌ வேண்டும். ம‌த‌னைப் பார்க்க‌ போவ‌தாக‌ இப்போது சொல்ல‌ வேண்டாம். ச‌ர்ப்ரைஸாக‌ சொல்லிக்கொள்ள‌லாம். வ‌யிற்றுவ‌லி என்று சொல்ல‌லாம், மாத‌விடாய் பிர‌ச்ச‌னை என்று நினைத்துக்கொண்டால், அவ‌ள் கோப‌த்தை பெரும‌ள‌வு குறைக்க‌லாம் என்று ம‌ன‌ம் க‌ண‌க்குப்போட்ட‌து. ந‌ல்ல‌ யோச‌னை. அப்ப‌டியே செய்ய‌லாம். என்ன‌ சொல்ல‌ போகிறாளோ? அவள் என்ன சொன்னாலும் அவளை சமாதானப்படுத்திவிட்டு நிச்சயமாக இன்று மதனைப் பார்க்க பார்க் போக வேண்டும்.
காஞ்ச‌னாவிட‌ம் என்ன‌ கார‌ண‌ம் சொல்ல‌லாம் என்று யோசித்த‌ப‌டியே, ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, புத்தகப்பையை எடுத்துக்கொண்டு ஓட்ட‌மும் ந‌டையுமாக‌ க‌ல்லூரி நூல‌க‌த்தை ஒட்டிய‌ வ‌ராந்தைக்கு சென்றாள். அங்கு அந்த வராந்தையில் அவர்கள் வழக்கமாக உட்காரும் இடத்துக்கும் அருகில் அந்த‌ ஒற்றை ரோஜா ம‌ட்டும் இருந்த‌து. வழக்கமாக காஞ்சனா இங்குதான் அந்த ஒற்றை ரோஜாவுடன் அமர்ந்திருப்பாள். காஞ்ச‌னாவைக் காண‌வில்லை. எங்கு போயிருப்பாள் என்று எண்ணிய‌ப‌டியே சுற்றும் முற்றும் பார்த்தாள். எங்கும் நிச‌ப்த‌மாயிருந்த‌து. சில‌ நேர‌ங்க‌ளில் காஞ்ச‌னா போர‌டிக்காம‌ல் இருக்க‌ ச‌ற்று த‌ள்ளி இருக்கும் வ‌குப்ப‌ரை போர்டில் ஏதாவ‌து வ‌ரைவ‌து வ‌ழ‌க்க‌ம். அவ‌ளைத் தேடி அந்த‌ வ‌குப்ப‌ரை சென்றாள். வகுப்பரை உள்ளே நுழைந்தபோது பேரதிர்ச்சி அவளுக்காய் காத்திருந்தது. அங்கே யுவ‌ராஜ் நின்றிருந்தான்.

யுவ‌ராஜ் அவ‌ள் வ‌குப்பில் ஒரு பொறுக்கி. அவ‌னை அவ‌ளுக்கு சுத்த‌மாக‌ப் பிடிக்காது. இர‌ண்டு மூன்று முறை இவ‌ளைக் காத‌லிப்ப‌தாய் அவ‌ன் சொல்ல‌, இவ‌ள் ம‌றுக்க‌, அவ‌ன் ப‌ல‌வ‌ந்த‌ப்ப‌டுத்த‌ அவ‌ள் அவ‌னை அறைய‌வும் செய்திருக்கிறாள். பின்னே அவன் மன்னித்துவிடும்படி மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டபடியால் அந்த விஷயத்தைப் பெரிதுபடுத்தாமல், யாரிடமும் சொல்லாமல் விட்டுவிட்டாள். காஞ்சனா நெருங்கிய தோழியென்பதால் அவளிடம் மட்டும் பகிர்ந்து கொண்டிருக்கிறாள். இப்போது இவ‌ன் ஏன் இங்கே நிற்கிறான் என்று அவ‌ள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே இவ‌ள் உள்ளே நுழைவ‌த‌ற்கே காத்திருந்த‌வ‌ன் போல‌ அவ‌ச‌ர‌மாக‌ வ‌குப்ப‌ரைக் க‌த‌வை மூடி சாத்தினான். ஒரு வார்த்தையும் பேசாமல் அவளையே வெறித்துப் பார்த்து நின்றான். அவ‌ன் க‌ண்க‌ள் மானைக் குறிவைத்த‌ புலியைப் போல‌ அவ‌ளையே வெறித்திருந்த‌து. அந்த‌ப்பார்வை அவ‌ள் க‌ண்க‌ளை விட‌ அவ‌ளின் அங்க‌ங்க‌ளையே அதிக‌ம் மேய்வ‌தை அவ‌ளால் உண‌ர‌ முடிந்த‌து. அவ‌ளுக்கு விப‌ரீத‌மாய் ஏதோ ந‌ட‌க்க‌ப்போகிற‌தென்று ப‌ட்ட‌ நொடிக‌ளில் அவ‌ன் மூர்க்க‌மாய் அவ‌ள் மேல் பாய‌ எத்த‌னிக்க‌ ச‌ட்டேன‌ குனிந்து அவ‌ன் கைக‌ளில் சிக்காம‌ல், அவ‌னைத் த‌ள்ளிவிட‌, நிலைத‌டுமாறி அவ‌ன் வ‌குப்ப‌ரை பெஞ்ச்சில் இட‌றி நிலைகுலைந்து கீழே விழ அந்த‌ இடைப்ப‌ட்ட‌ நேர‌த்தில் மூடியிருந்த‌ க‌த‌வைத் திற‌ந்து வெளியே ஓடினாள் ராக‌வி.
திரும்பிப்பாராமல் வேக‌வேக‌மாய் ப‌டியிற‌ங்கி, கீழ்த்த‌ள‌த்திற்கு வ‌ந்து ஓட்ட‌மாய் ஸ்கூட்டி நிறுத்தியிருந்த‌ இட‌த்திற்கு வ‌ந்து, கைப்பையிலிருந்து சாவி எடுத்து ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து புத்தகப்பையை கால்களுக்கிடையில் லாவகமாய் வைத்துவிட்டு க‌ல்லூரியை விட்டு வெளியே வ‌ந்து சாலையில் பாய்ந்தாள். அவ‌ள் ப‌த‌ட்ட‌ம் இன்னும் அட‌ங்க‌வில்லை. கைக‌ள் ந‌டுங்கின‌. ஸ்கூட்டியை க‌வ‌ன‌மாக‌ ஓட்ட‌ முடிய‌வில்லை. எங்காவ‌து விழுந்துவிடுவோமோ என்று தோன்றிய‌து.ச‌ற்று தூர‌ம் சென்ற‌தும் ரோட்டோர‌மாக‌ நிறுத்தினாள். இத‌ய‌த்துடிப்பு ப‌ட‌ப‌ட‌வென்று இருந்த‌து. விய‌ர்த்துக்கொட்டிய‌து. ம‌ண்டையில் உஷ்ண‌ம் வேக‌மாக‌ ப‌ர‌வுவ‌தைப் போல‌ உண‌ர்ந்தாள். இந்த‌ யுவ‌ராஜைப் ப‌ற்றி அன்றே காலேஜ் டீன் வ‌ரை புகார் த‌ராம‌ல் போன‌து த‌வ‌றாக‌ப்போய்விட்ட‌து. எத்த‌னை துணிச்ச‌ல் இவ‌னுக்கு. என்ன‌ காரிய‌ம் செய்துவிட‌த் துணிந்தான் அவ‌ன். ந‌ல்ல‌ வேளை த‌ப்பித்தோம். இல்லையெனில் என்ன‌வாகியிருக்கும்.
ராக‌விக்கு இன்ன‌மும் மூச்சு வாங்கிய‌து. அய்யோ, காஞ்ச‌னா என்ன‌வானாள்? ரோஜா இல்லையே. அப்ப‌டியானால் காஞ்ச‌னா வ‌ந்திருக்க‌வேண்டும். த‌னியே இருப்பாள். இந்த‌ பாவியும் அங்குதானிருக்கிறான். அய்யோ, நினைக்கும்போதே ப‌த‌றுகிற‌தே. ராக‌வி உட‌னே மொபைலை எடுத்து காஞ்ச‌னாவைத் தொட‌ர்பு கொண்டாள்.
‘ஹேய் காஞ்சு, எங்க‌ இருக்க? … என்ன, காஞ்சிபுரத்துலயா? உங்க மாமா வீட்லயா? அப்போ நீ என் மெயில் பாக்கவே இல்லையா?… ஓ ம்ம்ம் சரி சரி… ஆங்.. சரி பை’.
ராக‌விக்கும் ஒன்றும் விள‌ங்க‌வில்லை. காஞ்ச‌னா த‌ன் மெயிலைப் பார்க்க‌வே இல்லை. காஞ்சிபுர‌த்தில் அவ‌ளின் மாமா விட்டிற்கு அவ‌ச‌ர‌ வேலையாக‌ நேற்றே சென்றுவிட்டிருக்கிறாள். இப்போது கூட அவசர வேலையில் இருப்பதால் பிறகு பேசுவதாய் அவசரமாய்த் தொடர்பைத் துண்டித்துவிட்டாள். அப்ப‌டியானால், த‌ன‌க்கும் காஞ்ச‌னாவிற்கும் ம‌ட்டுமே தெரிந்த அந்த ‌ரோஜாவைக் கிள்ளி அந்த‌ வ‌ராந்தையில் வைத்த‌து யார்? காஞ்ச‌னாவும் தானும் ம‌ட்டுமே அறிந்த‌ அந்த‌ வ‌குப்ப‌ரையில் யுவ‌ராஜ் எப்ப‌டி வ‌ந்தான்? இன்று த‌ங்க‌ளுக்கு தேர்வு இல்லை. ஆனாலும் த‌ங்க‌ளை எதிர்பார்த்து யுவ‌ராஜ் எப்ப‌டி அங்கு வ‌ந்தான். அதுவும் அந்த‌ வ‌குப்ப‌ரையில் தான் வ‌ர‌வே காத்திருந்த‌வ‌ன் போல‌ எப்ப‌டி அவ‌ன் அங்கு நின்றிருந்தான்?.
இன்று கல்லூரி வருவதைப்பற்றி காஞ்சனாவிற்கு மட்டும்தான் மெயில் அனுப்பினேன். காஞ்சனா அவளின் மெயில் பாக்ஸை ஓபன் செய்திருந்தால் அவளுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் காஞ்சனா ஓபன் செய்யவில்லை. ஆனால், யுவராஜ்க்கு தெரிந்திருக்கிறது. எப்படி? காஞ்சனா மெயில் பாக்ஸை யுவராஜ் ஓபன் செய்தானா? அப்படியானால், அவளின் மெயில் பாஸ்வோர்டு அவனுக்கு தெரியுமா? எப்படித் தெரியும்? கல்லூரியில் தனக்கு யுவராஜ் எப்படியோ அப்படியேதான் காஞ்சனாவிற்கும் என்று தானே நினைத்திருந்தேன். காஞ்சனா இது வரையில் யுவராஜ் பற்றி ஏதும் தன்னிடம் பேசியிருக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. அன்னியோன்யம் இருந்தால் மட்டுமே ஒருவரின் பாஸ்வோர்டு இன்னொருவருக்கு தெரியலாம். அப்படியானால் காஞ்சனாவுக்கும் யுவராஜுக்கும் அன்னியோன்யம் இருக்கிறதா?
இது நாள் வரையில் இப்படி ஒன்று இருப்பதாய் தனக்கு தெரிய வரவேயில்லையே. அப்படியிருந்தால் காஞ்சனா ஏன் தன்னிடம் அதை மறைக்க வேண்டும். தன்னிடம் சொல்லியிருந்தால் யுவராஜ் போன்ற பொறுக்கியை தோழியின் நண்பனாக நிச்சயம் தன்னால் அங்கீகரித்திருக்கலாகாது. அதனால்தான் அவள் என்னிடம் அதைச் சொல்லவில்லைய ோ? ஒரு வேளை காஞ்சனா அவனை காதலித்திருப்பாளா? இருக்காது. நிச்சயம் இருக்காது. யுவராஜ் ஒரு பொம்பளைப் பொறுக்கி என்பது காலேஜே அறிந்த விஷயம். என்னிடம் தவறாகப் பழகுபவனை எப்படி காஞ்சனா தன் வாழ்க்கைத்துணையாக தேர்ந்தெடுப்பாள்? அப்படியானால் அவள் வாழ்க்கைத்துணையாக தேர்ந்தெடுக்கவில்லையா? வேட்கையின் வடிகாலாக தேர்ந்தெடுத்திருப்பாளோ? இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இவ்விரண்டு பக்கங்களில் எந்தப்பக்கம் காஞ்சனாவின் அந்தரங்கம் சாயும்?
தன் மனம் ஏன் காஞ்சனாவையும் யுவராஜையும் தொடர்பு படுத்தி இப்படி யோசிக்கிறது என்றே விளங்கவில்லை. ஆனால், காரணங்கள் இல்லாமலில்லை தான். யுவராஜைப் பற்றி அன்று தாறுமாறாக காஞ்சனாவிடம் பேசியபோதும் அவள் அப்படியா, அப்படியா என்று கேட்டாளே ஒழிய வேறு ஏதும் சொல்லவில்லை. ஏன் சொல்லவில்லை? அவள் ஏதும் சொல்லவில்லை என்பதால், அவளுக்கு அவனுடன் தொடர்பு இருக்கும் என்று அர்த்தமா என்ன? இன்று நடந்ததென்ன? காஞ்சனாவுக்கு மெயிலில் அனுப்பிய செய்தி யுவராஜுக்கு எப்படித் தெரிந்தது? தாங்கள் ரோஜா பறிப்பதை வழக்கமாக வைத்திருப்பதை யுவராஜ் அறிந்திருக்கிறான். மேலும் அதை எங்கே கொண்டு வந்து வைப்போம் என்பது அவனுக்கு தெரிந்திருக்கிறது. அதன்படியே செய்திருக்கிறான். அப்படியானால், தன்னை நம்ப வைக்கவே இப்படி நடந்திருக்கிறான். இதெல்லாம் இவனுக்கு எப்படித் தெரியும்?. காஞ்சனாவின் அந்தரங்கத்தில் யுவராஜுக்கு ஏதோ ஒரு தொடர்பு நிச்சயமாய் இருக்கிறது. ராகவியால் இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. காஞ்சனாதான் வகுப்பிலேயே தனக்கு மிகவும் நெருக்கமானவள், அவளைப் பற்றி தனக்கு தெரியாதது ஏதுமில்லை என்று இருமாந்திருந்தாள். ஆனால் அந்த நினைப்பு இன்று பொய்யாகிவிட்டது.
உற‌வுக‌ளுக்குள், ந‌ட்புக‌ளுக்குள் இந்த‌ எதிர்பாராத‌ ஒன்று, என்றோ ஒரு நாள் தெரிய‌ வ‌ரும் ஒன்றாக‌வே அமைந்துவிடுகிற‌து. வேறு மாதிரி சொல்ல‌வேண்டுமென்றால், இந்த‌ எதிர்பாராத‌ திருப்ப‌ம், ஒரு உற‌வுக்குள் இல்லையென்றால், ஒன்று, இனிமேல் நிக‌ழ‌ வாய்ப்பிருக்கிற‌தென்று கொள்ள‌லாம் அல்ல‌து, இந்த‌த் திருப்ப‌ம் தெரிய‌வ‌ராம‌லே போய்விட்ட‌தென்று கொள்ள‌லாம். எது எப்ப‌டியாயினும், இது போன்ற‌ ர‌க‌சிய‌ங்க‌ளால் நிறைந்து கிடப்பதுதான் மனித வாழ்க்கை. குப்பைக‌ளுக்கிடையில் தான் வாழ‌வேண்டுமென்கிற‌ நிர்ப‌ந்த‌ம் த‌லைதூக்குகையில் தான் இருக்கும் இட‌த்தை பெருக்கிச் சுத்த‌மாக‌ வைத்துக்கொள்வதுதான் சிறந்ததாகிறது
ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்த பட்சம் இரண்டு முகங்களேனும் இருந்தே ஆகிறது. எந்த ஒரு மனிதனும், காலத்தின் எந்தவொரு நொடியிலும், இன்னொரு மனிதனுக்கு தன் முகத்தில் ஒன்றையே காட்டுகிறான். இரண்டாவது பக்கம் மறைந்தே தான் கிடக்கிறது அல்லது இரண்டாவது பக்கத்தை பார்ப்பதற்கான வாய்ப்பு அமையப்பெறுவதில்லை. ஆனால், அந்த இரண்டாவது பக்கத்திலோ அல்லது மூன்றாவது நான்காவது பக்கத்திலோதான் அம்மனிதனின் முழு ரூபம், உண்மையாய் புலனாகிறது. கண்ணுக்குத் தெரியும் ஒரு முகத்தைக் கொண்டு, எந்த ஒரு மனிதனைப் பற்றிய அனுமானமும் கொள்வது உண்மையின் ஒரு பகுதியை மட்டுமே படிப்பதான அர்த்தம் மட்டுமே கொள்கிறது. .
ராகவி நீண்டதொரு பெருமூச்செறிந்தாள். மூச்சுக் குழலில் பிராணவாயு கூட எடை கூடிவிட்டதான உணர்வு மிஞ்சியது. குப்பையை விட்ட‌க‌ன்று ப‌ரிசுத்த‌மான‌ இட‌த்தை நோக்கிச்செல்ல‌ ம‌ன‌ம் விரும்பிய‌து. ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து சாலையில் விரைய‌த் தொட‌ங்கினாள். அப்போதைக்கு அவ‌ள் விரும்பும் ப‌ரிசுத்த‌ம் அவ‌ளுக்கு பார்க்கில் கிடைக்க‌லாம் என்று தோன்றிய‌து.

– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigation<< விநோதநாம வியாசம்களம் ஒன்று – கதை பத்து -முதல் கதை -உதட்டோடு முத்தமிட்டவன் >>

ராம்ப்ரசாத்

ராம்ப்ரசாத்