புதியமாதவி, மும்பை
————————————->>
கன்னட எழுத்தாளர் பைரப்பாவின் “பருவம்’ வாசித்தவுடன் அனைவரும்
கேட்டது எம்.டி.வாசுதேவன்நாயரின் மலையாள நாவல்
“இரண்டாம் பருவம்’ வாசித்தீர்களா என்பதுதான்.
குறிஞ்சிவேலனின் தமிழ் மொழியாக்கமாக சாகித்திய அக்கதெமியின் வெளியீடாக
வந்திருக்கும் அந்நாவலை அண்மையில் வாசித்தேன்.
தலைமைக்குத் தகுதியான வீரம், காதல் இரண்டும் அளவுக்கு அதிகமாகவே
கொண்டிருந்த மகாபாரதக்கதையின் பீமன் எப்போதும் இரண்டாம் இடத்தில்
இருக்கிறான். அவன் தான் வாசுதேவநாயரின் மகாபாரதக்கதையை
இரண்டாம் இடத்தின் பார்வையில் நின்று கொண்டு பார்க்கிறான்.
காலமெல்லாம் தர்மம், மனு சாத்திரம், முன்னோர் சொன்னது,
அரசு சட்டம், வழக்கம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமைப்பீடத்தை
அவனுடைய இரண்டாம் இடம் கேள்விக்குரியதாக்குகிறது.
அர்ச்சுனன் சுயம்வரத்தில் வென்றெடுத்தவள் பாஞ்சாலி என்று
அர்ச்சுனனுடன் மட்டுமே சம்பந்தப்படுத்திப் பேசப்படுகிறாள்
பாஞ்சாலி. ஆனால் சுயம்வரத்தில் வென்றவளைப் பத்திரமாக
காப்பாற்றி எதிர்த்தவர்களை எல்லாம் ஓடச்செய்தவன் பீமன்.
அந்தவகையில் பார்த்தால் பாஞ்சாலி பீமனுக்குரியவளாகிறாள்.
ஆனால் எப்போதும் அப்படி பேசப்படுவதில்லை.
யுத்தத்தில் பகைவர்களை வென்றவனுக்கே அரசுரிமை என்பது வழக்கம்.
அப்படிப்பார்த்தால் குருசேத்திரத்தில் பகைவர்களான துரியோதனன்,
துச்சாததனை வென்றவன் பீமன். அரசுரிமை அவனுக்குத்தான் உரியது
என்று தருமனும் சொல்ல ஒரு கணநேரம் அரசனாகும் கனவுகளில்
மிதக்கும் பீமனை பாஞ்சாலி தன் தலைமையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக
சந்திக்கிறாள்.
பீமன் அரசன் ஆனால் அவனுடைய மனைவி பலந்தரை அரசியாவாள். தன்னுடைய
இடம் ‘இரண்டாம் இடமாகி’விடும் என்று அச்சப்படுகிறாள் அவள்.
விதுரனோ காலமெல்லாம் பணிப்பெண்ணுக்குப் பிறந்த காரணத்தால்
அரசுரிமைகளிலிருந்து விலக்கப்பட்டவன். தன் மகன் யுதிஷ்டரனுக்கு
அரசுரிமை எக்காரணம் கொண்டும் மறுக்கப்படக்கூடாது என்பதில்
கவனமாக இருக்கிறான். யுதிஷ்ட்ரன் விதுரனின் மகன் என்பதை
குறிப்பால் உணர்த்தும் இடங்களை ஆசிரியர் தன் பின்னுரையாக இணைத்துள்ளார்.
பீமன் தன்னை எப்போதும் தருமசீலன் என்று சொல்லிக்கொள்வதில்லை.
துவாரகைக் கடலில் மூழ்கி எல்லாம் முடிந்து ஐவரும் பாஞ்சாலியுடன்
இறைவனடி சேர மகாபிரஸ்தானம் ஆரம்பிக்கிறார்கள்.
களைப்புற்று பாஞ்சாலி மண்ணில் சாய்கிறாள். அப்போது தருமசீலன்
யுதிஷ்டிரன் ,”அவள் எப்போதும் அர்ச்சுணனை மட்டும்தான் மனதார
நேசித்துக்கொண்டிருந்தாள். ராஜசூயத்தில் என் அருகில் அமர்ந்திருக்கும்போதும்
அவள் கண்கள் அர்ச்சுனனிடம் தான் நிலைத்திருந்தன” என்று குற்றம்
சுமத்திவிட்டு சொர்க்கத்தேரை நோக்கி நடக்கிறான்.
பீமன் மட்டும் தான் சொர்க்கத்தேரை மறந்து தான் நேசித்த தன்
பாஞ்சாலியின் கண்கள் திறக்குமா என்று காத்திருக்கிறான்.
பீமனுக்கும் தெரியும் அவளின் காதல் மனம்.
நான்காண்டுகளுக்குப் பிறகு அவனுடைய முறையில் அவனுடைய குடிலில்
அவள் அர்ச்சுனனை நினைத்து “சொல்லுங்கள், காலகேயவதத்தைப் பற்றி
முழுவதுமாகக் கூறுங்கள்” (பக் 286) என்று சொன்ன நாட்கள்.
” வேண்டாம், தன் மனதில் அர்ச்சுனனைக் கனவில் கண்டு கொண்டிருக்கும்
அவளின் குளிர்ந்த உடல் இன்றைய இரவில் எனக்கு வேண்டாம்’ என்று
அவன் குடிலிலிருந்து வெளியில் வந்த நாட்கள்.
ஆனாலும் அவன் மட்டும் தான் கடைசிவரை அவளுக்காக வாழ்ந்தவன்.
ஜெயாசக்கரவர்த்தி எழுதிய ‘திரெளபதி’ யில் தருமர் சொர்க்கம் போய்
சேர்வதற்கு முன்பே பாஞ்சாலியும் பீமனும் சொர்க்கத்தில் அவரை
வரவேற்றார்கள், என்ன அதிசயம்!” என்று எழுதியிருப்பார்.(பக் 14)
ஒவ்வொரு நிகழ்விலும் தருமன் பேசும் தருமம் எவ்வளவு
கேலிக்கூத்தானது என்பதை பீமன் போகிறப்போக்கில் சொல்லிக்கொண்டிருப்பான்.
போர்க்களத்தில் அபிமன்யு மாண்ட செய்தி கேட்டு கிருஷ்ணனின் முகம்
கறுத்துவிடுகிறது. அவன் உபதேசம் செய்த கீதையின் சாயம் வெளுத்து
விடுகிறது பீமனின் பார்வையில்.
‘கிருஷ்ணனின் கருத்த முகத்தைக் கண்டேன், சொந்த இரத்தமென்றும்
குடும்பம் என்றும் வரும்போது தான் நைந்த ஆடைகளின் உவமையை
மறந்துவிடுகிறோம்…” என்கிறான் பீமன்.
பீமனின் மகன் கடோத்கஜன் போரில் இறந்துவிடுகிறான். கர்ணன் அர்ச்சுனனுக்கு
எதிராக இறுதியில் பயன்படுத்த வைத்திருந்த வேலைப் பயன்படுத்தியே
கடோத்கஜனைக் கொல்ல முடிந்தது. எனவே அர்ச்சுனன் தப்பித்துக் கொண்டான்
என்பதற்காக பாண்டவர்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணன்
பாண்டவர்களிடன் சொல்கிறான்.
திட்டமிட்டே தன் மகன் கடோத்கஜன் அன்றைய போரில் முன்
வரிசையில் அனுப்பப்பட்டதை அறிகிறான் பீமன். அதுமட்டுமல்ல
கிருஷ்ணன் மீண்டும் சொல்கிறான்,
” கடோத்கஜன் காட்டுமிராண்டிதானே! அரக்ககுணமுள்ளவன், யாகத்தின்
எதிரி, பிராமணர்களின் பகைவன் அவன் இப்போது இறக்கவில்லை
என்றாலும் என்றாவது நாமே கொல்ல வேண்டியது வரலாம்..”
கதை முடிவில் பீமனும் ஒரு காட்டுவாசிக்குப் பிறந்தவன் என்பதை
குந்தியே ஒத்துக்கொள்வாள்.
‘அந்தப் பயங்கரக் காட்டிலிருந்து அவர் வந்தார். அதுவும் சங்கிலி அறுபட்ட
ஒரு சண்டமாருதத்தைப் போல்.. பெயர் தெரியாத ஒரு காட்டுவாசி வந்தார்”
என்று பீமன் பிறந்தக்கதையைச் சொல்லுவாள்.
கிருஷ்ணனின் கூற்றும் பீமன் பிறந்தக்கதையும் இணைத்துப் பார்க்கும்
போது அனைத்து திறமைகளும் கொண்ட பீமனுக்கு
பாரதக்கதையின் ஒதுக்கப்பட்ட இரண்டாம் இடத்தின் வரலாறு
சமூகப்பின்னணியுடன் புரியும்.
பீமனின் பார்வையில் ஒரு சமூகப்பின்னணியைக் குறிப்பாக
உணர்த்தியிருக்கும் நாவல் இரண்டாம் இடம். வாசிப்பவர்களுக்காக
படைப்பாளன் விட்டு வைத்திருக்கும் பக்கங்கள் அவை.
வெளிப்படையாகச் சொல்லாமல் சொல்லியிருக்கும் சொற்களுக்கு
நடுவில் மவுனத்தில் இமயத்தின் பனிக்கட்டியாக உறைந்து
போயிருக்கிறது இரண்டாம் இடத்தின் வரலாறு.
அந்த வரலாற்றின் எச்சமாகவே
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில்
நாட்டுப்புறப்பாடல்களில் ஒப்பாரிப் பாடல்களில் பீமனும் கர்ணனும்
மற்ற கதை மாந்தர்களை விட அதிகமாகப் பாடப்பட்டிருக்கிறார்கள்.
‘கத்தி எடுத்துச் சண்டைசெய்து -நான்
கர்ணனோட பொண்பொறந்தேன்
கர்ணன் மதிச்சாலும்
கர்ணனுக்கு வந்தவள மதிக்கலியே
காணமுற்றுத் தேடலியே
வில்லெடுத்துச் சண்டைசெய்து
வீமனோட பொன்பொறந்தேன்
வீமனுக்கு வந்த வேசிமதிப்பாவ
வேணுமின்னு தேடுவானா..”
.
இரண்டாம் இடம் :இன்று
———————-
எப்போதும் சிலருக்கு இரண்டாம் இடம் நிரந்தரமாக இருந்துவிடுகிறது.
இரண்டாம் இடத்தில் இருப்பதாலேயே அவருடைய திறமைகள்
பல நேரங்களில் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.
இன்னும் சிலர் இரண்டாம் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள போட்டிப்
போடுகிறார்கள். அவர்களும் முதலிடம் காலியானால் இரண்டாம் இடம்
முதலிடமாகும் எழுதப்படாத சட்டத்தை நம்புகிறார்கள்.
அரசியலில் இந்த நம்பிக்கை பல நேரங்களில் பொய்த்திருக்கிறது.
அப்போதெல்லாம் முதலிடத்தைத் தவறவிட்டவர்கள் தங்களின்
இரண்டாம் இடத்திலும் நிலைத்து இருக்க முடியாமல் மன உளைச்சலில்
கூடாரம் மாற்றிக்கொள்கிறார்கள். கொள்கையாவது கொள்கை..!
வெங்காயம்!!
இரண்டாம் இடத்தில் இருப்பது சிலருக்கு பாதுகாவலாக அமைந்து
விடுகிறது. அவர்கள் செய்கிற நல்லதுகளுக்கு மட்டுமே அவர்கள்
பொறுப்பு. அவர்களின் அநியாயச் செயல்களுக்கு பொறுப்பேற்க
வேண்டியது அவர்களை இரண்டாம் இடத்தில் வைத்திருக்கும்
முதலிடம். இதைப் பயன்படுத்திக்கொண்டு முதலிடத்தை விட
அதிகமாகக் கோடி கோடியாக தன் கணக்கில் சேர்த்துக்கொண்டவர்களூம்
உண்டு.
ஒரு கருத்துக்கணிப்பில் முதலிடமா இரண்டாவது இடமா என்று
காகிதத்தில் வந்த வெறும் அட்டவணைகள் கூட சிலரின்
அரசியல் முகவரியை மாற்றி இருக்கிறது.
போட்டிகள் எப்போதுமே முதலிடத்திற்குத்தான். எனினும் அமைதியாக
இந்தப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்துக் கொண்டவர்கள்
பிழைக்கத் தெரிந்தவர்கள்.
முதலிடத்தை ரப்பர் ஸ்டாம்பாக்கிய இரண்டாம் இடங்களின்
துணிச்சலைப் பாரட்டியே ஆகவேண்டும்.
முதலிடத்தைத் தீர்மானிக்கும் ஆற்றல் இப்போதெல்லாம் இரண்டாமிடங்களுக்கு
இருப்பதால் இரண்டாம் இடத்தின் அதிகாரம் கொடிக் கட்டிப்பறக்கிறது.
மும்பையில் பாருங்கள்..
மண்ணின் மைந்தன் கொள்கை உன்னுடையது மட்டும்தானா?
என்று போட்டி நடக்கிறது. பாவம் மாராட்டிமானுஷ்.
யார்ப்பக்கம் சேர்வது என்பது தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
மகாராஷ்டிராவில் பீகார், உத்திரபிரதேசத்துக்காரர்களின் ஆதிக்கம்
அதிலும் குறிப்பாக மும்பையில் என்கிறார் – ராஜ்தாக்கரே.
இதே ராஜ்தாக்கரே கடந்த தேர்தலில் தன் கட்சியில் 15 வட இந்தியர்களை
நிறுத்தியிருந்தார் என்பதும் அந்த 15 பேரும் தோற்றுப்போனார்கள்
என்பதும் உண்மை.
ஈழத்துப் பிரச்சனையையும் தமிழனின் அகதி வாழ்க்கையையும் புரிந்து
கொள்ளாமல் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் ஈழப்போராளிகளை
ஆதரிக்கவில்லையா என்று வேறு கேட்டு வைத்திருக்கிறார்.!
பெரியவர் பால்தாக்கரேயோ விடுதலைப்புலிகளின் தலைவர்
பிரபாகரனை வெளிப்படையாகவே ஆதரிப்பவர்.
இந்தியாவின் தலைமை அமைச்சராகும் தகுதி சரத்பவாருக்கு
உண்டு, அவர் பிரதமராக வேண்டும் என்றார் பெரியவர் தாக்கரே.
20 எம்.பி.களை வைத்துக்கொண்டு இந்தியாவின் தலைமை அமைச்சராக
எப்படி வரமுடியும்? என்று சிரித்தார் சரத்பவார்.
சரி இது என்னவொ கொள்கைப் பிடிப்பில் மண்ணின் மைந்தர்கள் மீது
கொண்ட அதீதமான அக்கறையுடன் செயல்படுவது என்கிறமாதிரியான
ஒரு தோற்றத்தை… ஆம் தோற்றத்தைத் தருகிறது.
ஆட்சி, அதிகாரம் கைப்பற்றுவதற்கும் ஒரு எளிதான வழியாக
இருக்கிறது. இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும்
வெளிமாநிலத்திலிருந்து மும்பை வந்து மும்பையை வணிகப்பெருநகரமாக்கி
இருக்கும் அம்பானி போன்றவர்களின் வருவாயை இழக்கத் துணிய
மாட்டார்கள். பொன்முட்டையிடும் வாத்துகளை இழக்க யாருக்குத்
துணிச்சல் வரும்?
ராஜ்தாக்கரே எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்
என்ற செய்தி வந்தவுடன் (12/2/2008) பாட்னாவில் இனிப்பு
வழங்கி இசை வாத்தியம் முழங்க ஆடிப்பாடிக் கொண்டாடி
இருக்கிறார்கள்! மனிதர்கள் இரண்டாம் இடத்தில் இருக்கலாம் !
ஆனால் இரண்டாம் தரச் செயல்களைச் செய்வது என்பது
கேவலம்!
இரண்டாம் இடத்தில் கூட இப்போதெல்லாம் இரண்டு பேருக்கு
நிம்மதியாக இருக்க முடிவதில்லை. முதலிடத்தைக் குறிவைத்து
இரண்டாம் இடங்கள் நடத்தும் குருசேத்திரத்தில்
மீண்டும் ஒரு மகாபாரதக்கதை ….!!.
puthiyamaadhavi@hotmail.com
- தாகூரின் கீதங்கள் – 16 என்னோடு சுற்றுகிறாய் !
- இன்னொரு உலகில் . . . இன்னொரு மாலையில் . . . கவிஞர் வைகைச் செல்வியின் இரண்டாம் கவிதை நூல் வெளியீடு
- சென்னைப் புத்தகக் கண்காட்சியும்,அவ்வமயம் வெளியான இரண்டு ‘பார்வைக்குறை உடையவர்களின் கவிதைத் தொகுப்புகளும்
- திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும் – 2
- திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள்
- அருணகிரியின் அலங்காரம்
- பன்னாட்டுக் கருத்தரங்கம், இக்காலத் தமிழ்க்கவிதைகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
- ஓடிப் போனவள்
- கடிதம் : வஹ்ஹாபி, இப்னு பஷீர், நம்பிக்கையாளர்கள்
- எழுத்தாளர் கருவூர் இரா. பழனிச்சாமியின் நூல் வெளியீடு
- எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன் படைப்புலகம் – ஆய்வரங்கம்
- கடிதம்
- காதலர் தினம்
- தமிழச்சியின் வனப்பேச்சி நூல் வெளியீட்டு விழா வீடியோ
- எழுத்துக்கலை பற்றி இவர்கள்……….12 க.நா.சுப்ரமண்யம்
- தூயதமிழ் காப்பும் தொடர்புடைய உண்மைகளும்!
- கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலவெளியில் காமாக் கதிர் வெடிப்புகள் ! )Cosmos Gamma-Ray Bursts) (கட்டுரை: 16)
- குகை என்பது ஓர் உணர்வுநிலை
- மெளனமே…
- காற்றினிலே வரும் கீதங்கள் -6 கண்ணனுக்குத் காத்திருக்கிறாள் !
- ஒரு பயணியின் வாழ்வு பற்றிய பாடல்
- நினைவுகளின் தடத்தில் (5)
- வாலெண்டைனும் தமிழ்க் காதலும்
- தமிழ் ஏன் கற்க வேண்டும்?
- சம்பந்தமில்லை என்றாலும் – மாசுகோவில் தமிழன் – தரு. ராமச்சந்திரன். (ஆங்கிலம்- மிஷன் டு மாசுகோ)
- ராஜ் தாக்கரே மட்டும் என்ன செய்தார்?
- இரண்டாம் இடம் -அன்றும் இன்றும்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 7
- இரண்டாவது மரணம்