இயற்கையே நீயுமா…. ?

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

சந்திரவதனா,யேர்மனி


‘எனக்கா, எனக்குமா….! ? நானுமா….! ? ‘ அதிர்வுடன் அவளைக் கேள்விகள் மின்சாரமாய்த் தாக்க அவசரமாய்த் துடித்தெழுந்தாள், சோபாவில் சாய்ந்திருந்த சர்மிளா. உலகமே ஒரு தரம் தலைகீழாய்ச் சுழல்வது போலவும், வீட்டுக்கூரை நிலை கெட்டு ஆடுவது போலவும் ஒரு பிரமை அவளை மருட்டியது. தலை விறைத்து மனமெல்லாம் உதறல் எடுத்தது. மீண்டும் ஒருமுறை மார்பகத்தை ஒற்றை விரலால் மெலிதாக அழுத்தி அழுத்தி தடவிப்பார்த்தாள். ‘ஓம்…. ‘ தட்டுப்படுது. சின்னதாய் ஒரு கட்டி.

ஓவென்று கதறி அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு. துள்ளியெழுந்த வேகத்துடன் அப்படியே கம்பளத் தரையில் அமர்ந்து விட்டாள். இப்போது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது.

காலையே வேலைக்குப் போனவள் வந்து பிள்ளைகள் பாடசாலையால் வரமுன்னம் அவசரமாய்ச் சமைத்து, அவர்கள் வர சாப்பாடு கொடுத்து ரியூசனுக்கு அனுப்பி விட்டாள்.

இப்போ சில நாட்களாகவே உடம்பில் ஒரு அசதி. எல்லாவற்றிலும் ஒரு மறதி. இடது பக்கத் தோள் மூட்டில் தாங்க முடியாத வலி. அதுதான் மாலையில் செய்யும் பகுதி நேர வேலைக்குப் போகுமுன் சிறிது நேரம் ஓய்வெடுக்க எண்ணி சோபாவில் சாய்ந்தவள்.

சாய்ந்து படுக்கும் போது இடது பக்கம் சாய்வதில் ஏதோ ஒரு பாரம் தெரிந்தது. முதுகுப் பக்கம் தெண்டுவது போல ஒரு அந்தரமாய் இருந்தது.. நிமிர்ந்து படுத்துப் பார்த்தாள். அது சுகமாக இருந்தது. பஞ்சி தீர்வது போலத் தெரிந்தது. அப்படியே படுத்திருந்த படியே அவளின் கைகள் தன்னையறியாமலே மார்பகங்களை மேயத் தொடங்கியது. அப்போதுதான் அந்தக் கட்டி அவள் விரல்களில் இடிபட்டு, மனதுள் ஒரு இடியை இறக்கியது. சில மாதங்களாகவே அவளையும் அவளது சக வேலையாட்களையும் வாட்டிக் கொண்டிருந்த வேதனையும் பயமும் இதுதான்.

ஐந்து மாதங்களின் முன்பு புதைகுழியில் கிடந்த எறீனாவின் மேல் பூங்கொத்தைப் போட்டு விட்டு, இனி மண்ணை அள்ளிப்போட்டு மூடி, நினைவுக்கல்லை நாட்டி விடுவார்களே என்ற கனத்த நினைப்போடு வந்த போதிலிருந்து மனசை விட்டகலாத சோகம்,– சர்மிளாவால் அதை மறக்க முடிவதில்லை..

‘எறீனா….! ‘ பெருமூச்சொன்று சர்மிளாவையும் மீறி வெளிவந்தது.

பாஷை நிறம் என்று சர்மிளா அந்நியதேசத்தில் அந்நியப் பட்டு நின்ற போது அவளை அரவணைத்து அவளும் மனிதஜென்மம்தான் என்று உணர வைத்த அந்த வெண்மையான மென்மையான எறீனா. என்ன மாதிரி அழகாயிருந்தவள். சுற்றியுள்ள எல்லோரையும் எப்போதும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் அவள், இயற்கையே சிரித்து நின்ற ஒரு அழகிய கோடை நாளில் அழுத விழிகளுடன் வேலைக்கு வந்தாள். வழமை போல் சர்மிளா தவிர்ந்த மற்றைய எல்லோரும் ஆல் போல் தழைத்து, அரசு போல் குடை விரித்திருந்த கஸ்தானியன் மரத்தின் கீழ் நின்று சிகரெட் புகைக்க, எறீனா மட்டும் வழமைக்கு மாறாக சர்மிளாவுடன் உள்ளே போனாள்.

உள்ளே போய் கதவைச் சாத்தியதுதான் தாமதம் சர்மிளாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கி விட்டாள். சர்மிளாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் இப்படி எறீனா அழுகிறாள் என்பதுவும் தெரியவில்லை. ஆனாலும் எறீனாவின் அழுகை அவளை என்னவோ செய்ய ‘என்ன நடந்திட்டுதெண்டு இப்ப அழுறாய், தயவு செய்து சொல்லிப் போட்டு அழு. ‘ கலக்கத்துடன் அதட்டினாள்.

எறீனா உடனே சர்மிளாவை இழுத்துக் கொண்டு குசினிக்குள் ஓடினாள். தனது மேலாடைகளை அவசரமாக இழுத்துக் கழற்றினாள். சர்மிளாவின் சுட்டு விரலை அவள் அனுமதியின்றிப் பிடித்து, ஒரு ஆவேசத்துடன் இழுத்து, தனது இடது மார்பகத்தில் வைத்து ‘இப்போ அழுத்திப் பார் ‘ என்றாள்.

சர்மிளாவுக்கு இப்போது எறீனாவின் குழப்பத்துக்கான காரணம் ஓரளவு புரிந்தாலும், விரலால் எதையும் உணர முடியவில்லை. ‘ஏன் இப்பச் சும்மா அழுறாய். அங்கை ஒண்டுமே தெரியேல்லை. ‘ என்றாள்.

‘சரியாக அழுத்திப்பார். இதிலை. இதிலை. ‘ என்று தனது விரலாலேயே எறீனா சரியான இடத்தைக் காண்பித்தாள்.,

எறீனாவின் அழகிய பெரிய மார்பகத்தின் ஆழத்தில் சிறிதாக, கட்டியாக எதுவோ தட்டியது. இப்போதுதான் சர்மிளர்வுக்குத் திக்கிட்டது. நெஞ்சு படபடத்தது.

உயிர் சுமக்கும் கருவறைக்குள்ளும்

உதிரத்தைப் பாலாக்கி

உணவூட்டும் மார்பகத்துக்குள்ளும்

உயிர் கொல்லும் புற்றுநோயை

உருக்கொள்ள வைத்தது யார் ? ? ? ?

‘ஆண்டவா…! அவள் உனக்கு என்ன பாபம் செய்தாள். ஏன் அவளுக்கு இந்தத் தண்டனை ? மூன்று உயிர்களைக் கருவிலே சுமந்து, தன் உதிரத்தைப் பாலாக்கி, இந்த மார்பகங்களால் தானே அக்குழந்தைகளுக்கு உரமூட்டி, இந்த உலகத்தில் நடமாட வைத்தாள். அந்தப் புனிதமான மார்பகங்களுக்குள் உயிர் கொல்லும் இந்த வைரசுக்கள் எப்படி வந்தன ? ‘

இயற்கை மீதும் ஆண்டவன் மீதும் சர்மிளாவுக்கு அளவிலாத கோபம் வந்தது. ஆனாலும் அதை அவள் எறீனாவிடம் காட்டிக் கொள்ளாமல் , உடனேயே சமாளித்துக் கொண்டு ‘அது சும்மா கட்டியா இருக்கும். இதுக்குப் போய்ப் பயப்படுறியே..! ‘ என்றாள்.

‘இல்லை சர்மிளா, நீ நினைக்கிற மாதிரி நான் ஒண்டும் வெறும் பிரமையிலை இதைச் சொல்லேல்லை. எனக்கு முதல்லை இதைப் பற்றி ஒரு எண்ணமுமே வரேல்லை. இண்டைக்கு நான் சும்மா செக்கிங்குக்கு எண்டு Frauen Artzt (gynaecology- பெண்களுக்கான பிரத்தியேக வைத்தியர்)ட்டைப் போனனான். அவர்தான் இதைக் கண்டு பிடிச்சவர். உடனை அவற்றை முகமே கோணிப் போட்டுது. வழமையான அவற்றை புன்சிரிப்புக் கூட அப்பிடியே எங்கையோ ஒழிச்சிட்டுது. நாளைக்கு என்னை mammography செய்ய ஸ்பெஷல் டொக்டரிட்டைப் போகச் சொன்னவர். எனக்குச் சரியான பயமாயிருக்கு. ‘ மீண்டும் அழத் தொடங்கி விட்டாள்

‘எறீனா..! சீ… சும்மா அழாதை. அது சும்மா ஒரு கட்டியாக(Tumor) இருக்கும். இப்பிடி வாற கட்டியளிலை, எப்பவுமே நாலைஞ்சு கட்டியள் துப்பரவா எந்தக் கெடுதியையும் விளைவிக்காத கட்டியளாத்தான் இருக்கும். அப்பிடியான அனேகமான கட்டியளுக்கு எந்த வைத்தியமும் செய்யத் தேவையில்லை. உதாரணமா Zysten (cyst- நீர் நிறைந்த பை) இது எந்தக் கெடுதியையும் விளைவிக்காது. அது போலை Mastopathien (ே ?ார்மோன் மாற்றத்தாலை பால் சுரப்பிகளில் ஏற்படுகிற மாற்றங்கள்) இதுக்கும் பயப்படத் தேவையில்லை. ‘ சர்மிளா தனக்குத் தெரிந்தவைகளைச் சொல்லி எறீனாவைச் சமாதானப் படுத்த முயற்சித்தாள்.

எறீனாவை இந்த சமாதானஙகள் பெரிய அளவாக ஆறதல் படுத்தவில்லை. இது Fibroadenome(பால் சுரப்பிகளிலும் இணையச் சவ்வுகளிலும் வரும் கட்டி) ஆகவும் இருக்கலாம்தானே ? குழப்பத்துடன் கேட்டாள்.

‘Fibroadenome எண்டாலும் பயமில்லை. இவைகளும் கெடுதலை விளைவிக்காதவைதான். மார்பகத்தைக் கீறி அந்தக் கட்டியை மட்டும் எடுத்து விட்டால் போதும். உடம்பின்ரை மற்றப் பகுதியளுக்கு எந்தப் பாதிப்பும் வராது.

நீ நினைக்கிற மாதிரி பயப்பட ஒண்டுமில்லை. சும்மா தேவையில்லாமல் இதையெல்லாம் நினைச்சு மனசைப் போட்டுக் குழப்பாதை. உனக்கொண்டும் நடக்காது. இந்தா நான் கோப்பி போடுறன். குடிச்சிட்டு ரிலாக்ஸ் ஆகு. ‘

அன்று சர்மிளா எறீனாவை அப்படிச் சமாதானம் செய்து கோப்பியைப் போட்டுக் கொடுத்து குடிக்க வைத்தாலும்—-

அதற்குப் பிறகு ஒவ்வொன்றாக நடந்தவை சர்மிளாவின் நினைவுகளில் ஓட, ஒரு கணம் அவளுக்கு மயிர்க்கூச்செறிந்தது. இயலாமையா ஆக்ரோஷமா தெரியவில்லை. தன்மீது பச்சாத்தாபமும் இயற்கையின் மீது சீற்றமுமாய் குழம்பினாள்.

`இனியென்ன ? என்ரை கையிலை ஏதும் இருக்கே ? நாளைக்கு டொக்டரிட்டைப் போனால் அவர் பாத்திட்டு mamography செய்ய ஸ்பெசலிஷ்ற்ரிட்டை அனுப்புவார். அவர் mamography செய்து போட்டு ‘பயப்படவேண்டாம். ஓரு கட்டி இருக்குதுதான். ஆனால் பயப்படத் தேவையில்லை. எதுக்கும் நாலு நாளிலை டொக்டரிட்டைப் போங்கோ. ரிப்போர்ட் அனுப்பிவிடுறன். ‘ எண்டுவார்.

நாலு நாளிலை டொக்டரிட்டைப் போனால் அவர் சொல்லுவார் ‘பயப்படாதைங்கோ.ஓரு கட்டி இருக்குதுதான். அது சும்மா tumor ஆத்தான் இருக்கும். பயங்கரமா ஓண்டும் இருக்காது. அதை வெட்டி எடுத்து விட்டால் பிரச்சனை முடிஞ்சிடும். ‘ என்று.

அவரே மருத்துவமனைக்கு தொலைபேசியில் அழைத்து அந்தக் கட்டியை வெட்டி எடுக்கிறதுக்கான நாளையும் குறிச்சுத் தருவார்.

பிறகென்ன! மருத்துவமனைக்கு இரண்டுநாள் முந்தியே வரச்சொல்லுவினம் அந்தச் செக்கிங் இந்தச் செக்கிங் எண்டு இரத்தத்திலை இருந்து இதயம் வரை தலையிலை இருந்து கால் நுனிவரை செக் பண்ணப்படும். Chemo ஏத்துவினம். பிறகு என்னை மயக்கிப் போட்டு என்ரை மார்பகத்தை கீறி அந்தக் கட்டியை எடுத்து Heidelberg மருத்துவமனைக்கு அனுப்புவினம்.

பிறகு அது கெடுதி விளைவிக்கக் கூடிய மூர்க்கமான கட்டி எண்டு சொல்லி- மார்பகத்தை அப்பிடியே முழுசா வெட்டி எடுப்பினம். கொஞ்ச நாளிலை புற்றுநோய் வைரஸ் மற்ற மார்பகத்துக்கும் தாவீட்டுது எண்டு சொல்லி அதையும் வெட்டி எடுப்பினம்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமா வெட்டி வெட்டி- கிட்னியிலையும் தாவீட்டுது எண்டு சொல்லி—- இப்பிடித்தானே எறீனாவுக்கு எல்லாம் நடந்தது. கான்சர் கிருமிகள் அவளை அணுஅணுவாகத் தின்றபோது எப்படி எல்லாம் துடித்தாள், துவண்டாள். எத்தனை தரம் அவளை வெட்டி வெட்டித் தைத்தார்கள். அத்தனை துன்பத்தையும் அனுபவித்தவளின் உயிராவது மிஞ்சியதா ? நாற்பத்திரண்டு வயதிலேயே புதைகுழியுள் போய்விட்டாளே. அன்று அவள். இன்று நானா ? இது என் முறையா ? எதற்காக இந்தப் பழிதீர்ப்பு ?` சர்மிளாவின் நினைவுகள் விசனமாக நகர்ந்து கொண்டிருந்தன.

அவளை ஆறுதல் படுத்த யாரும் அருகிருக்கவில்லை. வேலையிடத்தில் இருக்கும் கணவனை தொலைபேசியில் அழைத்து விசயத்தைச் சொன்னால் தேவலை போலிருந்தது. நினைத்த மாத்திரத்திலேயே எறீனாவின் ஒரு மார்பகம் எடுக்கப்பட்டதும், எறீனாவை விவாகரத்துச் செய்து கொண்ட எறீனாவின் கணவன் ஞாபகத்தில் வந்தான்.

கணவனுடன் தொலைபேசும் எண்ணம் அப்படியே கலைந்து போக நேரத்தைப் பார்த்தாள். அது தன்பாட்டில் ஓடிக் கொண்டிருந்தது. வேலைக்குப் போக வேண்டும். அழுத விழிகளுடன் அவசரமானாள்.

புற்றுநோய் கிருமிகள் அவளைத் தின்னத் தொடங்கி விட்டனவோ! இல்லையோ! புற்றுநோய் பற்றிய நினைவுகள் அவளைக் கொல்லத் தொடங்கியிருந்தன.

-முற்றும்-

Series Navigation

சந்திரவதனா ,யேர்மனி

சந்திரவதனா ,யேர்மனி