இப்போதாவது புரிகிறதா

This entry is part [part not set] of 32 in the series 20060210_Issue

கவிஞர் புகாரி


விடைபெற்ற மெளனக் கணங்கள்
உடைபட்டு உதிர்கின்றன
கனத்த உணர்வு மலர்களாய்
என் மென்மனதில்

நீ நிறுத்தி வைத்த இடத்திலேயே
நெடு நேரமாய் நான்
நின்று கொண்டிருக்கிறேன்
அதுவும் எனக்கு
விருப்பமானதாகவே இருக்கிறது

உன் வலக்கரத்தை என் இரு
கரங்களுக்கும் இடையில் வைத்து
மூன்று கரங்களுடன் நான் வணங்கியது
நம் காதலைத்தான்

உன்னை நான் சந்தித்தது
எதேச்சைச் செயலென்று
நம்பிக்கொண்டிருக்காதே

யுகம் யுகமாய்த் திட்டமிட்டு
நாம் அறியாத மர்மக் குறிப்பேட்டில்
குறித்து வைக்கப்பட்ட
தேவ சந்திப்பு அது

மென்மைகள் கூடி
தேர்வு செய்த மென்மை
மென்மையாய்ப் பெற்றெடுத்த
மென்மை நீ

உன் குதிகால் பூவெடுத்து
நீ நடப்பதைக் கண்டு
என் விழிகள் வியப்பதை
நீ வேடிக்கை பார்ப்பாய்

எனவேதான்
என் மூச்சுக்காற்றும்
உன்னைக் கருக்கிவிடுமோ
என்ற கவலையில்
எப்போதும் இப்படியே நான்
என்னை மட்டுமே வதைத்துக்கொண்டு
—-

buhari@gmail.com

Series Navigation

கவிஞர் புகாரி

கவிஞர் புகாரி