இன்னுமொரு சமாதானப் பகடையாட்டம்

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

கே.பி.எஸ்.கில்


எத்தனை முறை இந்தியாவும் பாகிஸ்தானும் ‘பேசுவதற்கு ஒப்புக்கொண்டன ‘, அவை தோல்வியில் முடிந்தன, மீண்டும் வன்முறை பொங்கியது என்று எண்ணுவதும் அலுப்புத் தரக்கூடியது. இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி, சென்ற தென் ஆசிய பிராந்திய உச்சிமாநாட்டில், (SAARC) இஸ்லாமாபாத்தில் சென்றவாரம் சரியாகவே கூறினார், ‘வரலாறு நமக்கு ஞாபகப்படுத்துகிறது, நம்மை வழிநடத்துகிறது, நமக்கு கற்பிக்கிறது. ஆனால் அது நமக்கு விலங்கிடக்கூடாது ‘

ஆனால், இந்தியா பாகிஸ்தான் பிரசினைக்கும், காஷ்மீர் வன்முறைக்கும் காரணம் வரலாறு நமக்கு விலங்கிடுவது என்பதல்ல. கொள்கை (ideology). பாகிஸ்தான் உருவாவதற்கும் இன்று தொடர்ந்து இருப்பதற்கும் காரணமான, தீவிரவாத இஸ்லாமும், அது இரு மதங்கள்-இரு நாடுகள் கோட்பாடு என்ற உருவில், முஸ்லீம்களும் முஸ்லீம் அல்லாதவர்களும் ஒரே அரசியல் அமைப்பின் கீழ் ஒன்றாக வாழ முடியாது என்று உருவாக்கிய கருத்தாக்கமும், அது உருவாக்கும் ஜிகாத் தொழிற்சாலைகள் உலகெங்கும் இருக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு தரும் ஜிகாதிப் போராளிகளுமே காரணம். இந்தக் கொள்கையே, வேறெந்த சட்டப்பூர்வமான அல்லது வரலாற்று ரீதியான கோரிக்கையைக் காட்டிலும் பாகிஸ்தான் காஷ்மீரைக் கேட்பதற்குக் காரணம். இந்த காரணத்தினாலாயே தான் வன்முறை முடிவு பெறாது.

சந்தேகக்கண் கொண்டு பார்ப்பது உண்மையில் எந்தப் பலனையும் அளிக்காதுதான். இருப்பினும், சார்க் உச்சி மாநாட்டில் பிற முக்கியமான விஷயங்களை விட்டு விட்டு எப்படி இந்திய- பாகிஸ்தான் கூட்டு அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றது என்பதை பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.

பாகிஸ்தானிலும், அமைதிக்காகவும் சமாதானத்துக்காகவும் குரல்கள்மெழுகின்றன. அப்படிப்பட்ட சமாதானப்புறாக்கள் ஆங்கில மொழிப் பத்திரிக்கைகளில் மட்டுமே இருக்கின்றன. மீண்டும், பாகிஸ்தானின் பொதுமக்களின் கருத்தும் உணர்வுகளும் என்ன என்று எவரும் கண்டுகொள்வதில்லை. இப்போது இந்த ‘அமைதி முயற்சி ‘யில் நாம் என்ன எதிர்பார்க்கலாம் ?

பயங்கரவாத வன்முறையில் ஒரு தொடர்ச்சி அற்ற நிலைமை இருப்பதை ஜம்மு காஷ்மீரில் நடந்திருக்கும் வன்முறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2002 வருடத்தைவிட 2003இல் வன்முறை குறைந்தது என்பது உண்மைதான். 2002இல் 2001 வருடத்தை விட குறைவான வன்முறையே இருந்தது என்பதும் உண்மையே (பயங்கரவாதம் மூலம் இறப்பு: 2001 வருடத்தில் 4507 பேர், 2002இல் 3022 பேர், 2003 இல் 2542 பேர்), குறையும் இந்த வன்முறையின் போக்கு, உலகளாவிய சூழலில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக பார்க்கப்படுகிறது. இது பாகிஸ்தானுக்குள் நிலவும் முரண்பாடுகளை மேலாண்மை செய்ய முடியாத நிலைமையின் வெளிப்பாடாகவும் இது அறியப்படுகிறது. ஆனால், பாகிஸ்தானிய தலைமையின் அடிப்படைக் கொள்கையிலும், பார்வையிலும், போர்தந்திர நோக்கங்களிலும் எந்த விதமான அடிப்படை மாற்றமும் நிகழவில்லை என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன.

இருப்பினும், ground realities என்று சொல்லக்கூடிய நடப்பு நிலவரத்தைப் பார்ப்பவர்கள், மக்களிடையே இருக்கும் தற்போதைய உணர்வு கூட நடப்பு நிலவரத்தில் ஒரு பகுதி என ஞாபகப்படுத்திக்கொள்வது நல்லது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஆங்கில பத்திரிக்கையாளர்கள், மற்றும் அவற்றைப் படிப்பவர்கள் தெற்கு ஆசியாவில் உணர்வு மாறிவிட்டது என்று நம்புகிறார்கள். சமாதானம் மற்றும் ஒருங்கிணைந்த வாழ்வுக்கான உண்மையான ஆசை இந்த இரண்டு நாட்டு மக்களிடமும் இருக்கிறது என்றும் நம்புகிறார்கள். ஆனால், அதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும், பாகிஸ்தானிய ‘நிபுணர்கள் ‘ என்று கூறிக்கொண்டு, சார்க் உச்சி மாநாட்டின் போது, இந்தியப் பத்திரிக்கையாளர்களை மொய்த்த ஆட்களிடம் பார்க்க முடியவில்லை. அவர்களது தீவிரத்தையும், அடிப்படைவாதத்தையும் அவர்களது அடிப்படைக் கொள்கைகளையும் அவர்கள் மாற்றிக்கொண்டதாகத் தெரியவில்லை.

கடந்த 55 வருடங்களாக நடந்து வருவதைப் பார்க்கும் ஒரு சராசரி இந்தியன் இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே ஒரு நிரந்தரமான சமாதானம் நிலவும் என்று உண்மையிலேயே நம்பிக்கைப் படவில்லை. ஜம்மு காஷ்மீரில், பாகிஸ்தான் உருவாக்கிய பயங்கரவாதிகளின் கையில் இறக்கும் ஏராளமான ராணுவ வீரர்கள் பற்றிய செய்திகளும், திரும்பி வரும் சவப்பெட்டிகளும் இந்தியாவின் கிராமங்களிலும் கிராமச் சந்தைகளிலும் தினசரிப் பேசப்படுகின்றன. ஏனெனில் இந்தியாவின் கிராமங்களிலிருந்துதான் பெரும்பாலான இந்திய ராணுவ வீரர்கள் வருகிறார்கள். இவை மிகவும் ஆழமான முறையில் இந்தியாவின் பொதுமக்களைப் பாதித்திருக்கின்றன.

பாகிஸ்தானிலும் சமாதானத்துக்கான சில குரல்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட புது சமாதானப் புறாக்கள் ஆங்கிலப்பத்திரிக்கைகளில் தான் இருக்கின்றன. ஆனால், அவையும் பெரும்பாலும் உதாசீனம் செய்யப்படுகின்றன. உருது மற்றும் பிராந்திய மொழிப் பத்திரிக்கைகளைப் படிக்கும் மக்கள் அந்தப் பத்திரிக்கைகளின் தீவிரவாத எழுத்துக்களாலேயே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இஸ்லாமாபாத் உச்சிமாநாட்டைப் பற்றி, நவா–ஈ-வக்த் என்ற உருதுப் பத்திரிக்கையின் பத்திரிக்கையாளர் இவ்வாறு நெருப்பைக் கக்கியிருந்தார்.

‘நான் அமெரிக்காவை குஷிப்படுத்த ஆஃப்கானிஸ்தானில் ஒரு தலைகீழ் நிலை எடுத்தோம். நமது பழைய நண்பர்கள் – ஆஃப்கானிஸ்தான் ஆட்கள் – அமெரிக்கர்களால் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தோம். அங்கு நமது போர்வீரர்கள் கொல்லப்படுவதற்கும் காரணமாக இருந்தோம். இதில் எல்லாச் சிறப்பும் இந்தியாவுக்கே சென்றது. மீண்டும் நாம் மூலைக்குத் தள்ளப்படுகிறோம். இன்னொரு தலைகீழ் நிலைபாட்டை காஷ்மீரில் எடுக்கும்படி நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம். ஏன் ஒருவேளை நமது அணு ஆயுதங்களைக் கூட நாம் தியாகம் செய்யவைக்க வற்புறுத்தப்படலாம் (கடவுள் தான் அதை நிறுத்த வேண்டும்). இப்படி தலைகீழ் நிலைபாடுகளுக்கு அப்புறம் மக்களுக்கு என்ன கிடைக்கும் ? ‘

இந்தப் பத்திரிக்கையாளரின் தீர்வு இந்தியா மீது ‘ஆயிரம் காயங்கள் ‘(thousand cuts) தான். இது பாகிஸ்தானின் போர்தந்திரத் திட்டம் வரையறுக்கும் குழுமத்தில் பழைய அடிப்படைக் கருத்துருவம். இப்படிப்பட்ட உணர்வுகளே உருது பத்திரிக்கைகள் மூலமாக அந்த நாடெங்கும் பரப்பப்படுகிறது. இன்னும் பாகிஸ்தானில் ஜிகாத் போராளிகளை உருவாக்கும் அஸெம்பிளி லைன் கட்டுமானம் உடைக்கப்படவில்லை. ஒரு சராசரி பாகிஸ்தானிக்கு நாட்டின் அணு ஆயுதங்கள் மிக மிக முக்கியமான தேச சொத்தாக இருக்கின்றன. இது தேச பொதுமனத்தின் வக்கிரத்தின் அளவைக் காட்டுகிறது.

ஆனால், ‘ஆயிரம் காயங்கள் ‘ மூலம் இந்தியாவை உடைக்கும் போர்தந்திரம் நிச்சயமாகத் தோல்வியடைந்துவிட்டது. வேறெங்கும் இது உபயோகப்படுத்தப்பட்டாலும் அது தோல்வியுறும் என்றே நம்புகிறேன். இந்த சார்க் அமைதிப் பேச்சுவார்த்தைகள் அளவுக்கு நம் கவனத்தை இழுக்காத, ஆனால், அதனை விட முக்கியமாக தெற்கு ஆசியாவில் பல மாற்றங்கள் நடந்திருக்கின்றன.

அவற்றில் ஒன்று, முஷாரஃப் அவர்களுக்கு, வெளிப்படையாகச் சொல்லப்படாவிட்டாலும், நல்லபெயர் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. வட கொரியா, ஈரான், லிபியா போன்ற நாடுகளுக்கு அணு ஆயுத தொழில்நுட்பத்தை கொடுத்தது உலகளாவிய பேச்சாகவும், பல நாடுகளிலிருந்து தீவிரமான அழுத்தத்தையும் கொண்டு வந்து கொடுத்திருக்கிறது. இப்படிப்பட்ட அணு ஆயுத தொழில்நுட்ப விற்பனை பயங்கரவாதிகளுக்குத் துணை போகும் செயலாகப் பார்க்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் இவ்வாறு அத்துமீறிச் சென்று அணு ஆயுத விற்பனை செய்ததைப் பற்றி முக்கியமான அமெரிக்கப்பத்திரிக்கைகளில் தினம் ஒரு கட்டுரையோ அல்லது எடிட்டோரியலோ வந்து கொண்டிருக்கிறது. கூட்டாக இருந்து ‘பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவியப் போருக்கு ‘ துணை நின்று கொண்டே மறுபுறம், அமெரிக்காவை ஏமாற்றி, அமெரிக்காவின் எதிரி நாடுகளுக்கு அணு ஆயுத விற்பனையையும் உலக பயங்கரவாதத்துக்கும் துணை போவதையும் பற்றி எழுதாத நாளே இல்லை. உள்நாட்டிலும், பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான பிரச்னைகள் வலுவடைந்து வருகின்றன. இரண்டு முறை அவர் மீது கொலை முயற்சி நடந்திருப்பதாகச் செய்தி வருகிறது. இவை ஒரு பக்கம் அமெரிக்காவுக்கு துணையாகவும் மறு புறம் உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு ஆதரவையும் கொடுத்துக்கொண்டே பாகிஸ்தான் தன் வழக்கமான வழியில் செல்லமுடியும் என்ற நம்பிக்கையை உடைப்பதாக ராணுவ சர்வாதிகாரிக்குத் தோன்றுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், துரதிர்ஷ்டவசமாக, கடந்த இரண்டு வருடங்களாக சட்டப்பூர்வமற்றதாக ஆகி வரும் இந்த ராணுவ சர்வாதிகாரியின் அரசினை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதாக ஆகிவிட்டது, இஸ்லாமாபாத்தில் நடந்த இந்த சார்க் மாநாடும், அங்கு எழுதப்பட்ட இந்திய பாகிஸ்தான் ஒப்பந்தமும்.

இந்த ஒப்பந்தம், இந்தியா இதுவரை பாகிஸ்தான் மீது தொடுத்திருந்த வழக்கை ஒரே வினாடியில் நிர்மூலம் செய்துவிட்டது. ஆகவே இதனால், ஒரு பக்கம் தன்னை பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டதாகக் காண்பித்துக்கொண்டே மறுபுறம் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு தரும் ஆதரவை நிறுத்தாமல் தொடர்ந்து கொள்ளவும் இது அனுமதித்துவிட்டது. இது ‘நம்பத்தகுந்த மறுப்பை ‘ (credible deniability) பாகிஸ்தானிய சர்வாதிகாரிக்கு உருவாக்கித் தந்துவிட்டது. இது இன்னும் தொடர்ந்து நடக்கும் மாபெரும் அத்துமீறல்களாலேயே இப்படிப்பட்ட நம்பத்தகுந்த மறுப்பை உடைக்க முடியும்.

இதனை விட இன்னும் ஒரு மோசம் இருக்கிறது. ஒரு மாபெரும் பயங்கரவாதச் செயல் இந்தியாவில் நடந்தாலும் கூட, இதன் வேர்மூலம் பாகிஸ்தானில் இருக்கிறது என்று நிருப்பித்தாலும் கூட, இந்தியா தன்னுடைய சமாதானப் பேச்சுவார்த்தைகளையோ அல்லது ‘நம்பிக்கை உருவாக்கும் செயல்பாடுகளை ‘யோ நிறுத்தமுடியாது. இப்படிப்பட்ட செயல்களைச் செய்பவர்கள் சட்டத்துக்கு வெளியே இருக்கும் ஜிகாதிகள் என்றும், இவர்கள் எந்தவிதமான அரசாங்க ஆதரவும் இன்றியே இவ்வாறு செய்கிறார்கள் என்றும், தானும் பாகிஸ்தானும் இவர்களால் குறிவைக்கப்பட்டு பயங்கரவாதத்துக்கு எதிராக நடுங்கிக்கொண்டிருக்கிறோம் என்றும் வாதிடுவார் முஷாரஃப்.

‘ஆப்பரேஷன் பராக்ரம் ‘ சமயத்தில் இந்தியா எந்த அளவு உறுதியான நிலைப்பாட்டை எடுத்தது என்பதை நினைவில் கொண்டால், இன்று எந்த அளவுக்கு தன்னுடைய பழைய நிலைப்பாட்டிலிருந்து விட்டுக்கொடுத்திருக்கிறது என்பது புரியும். பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு அளித்து வரும் ஆதரவையும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்குக் கொடுத்து வரும் ஆதரவையும், பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதத்துக்கு அரசாங்கம் அமைத்துக்கொடுத்திருக்கும் அமைப்பு ரீதியான உதவியையும் எல்லோரும் அறியும் படி நிறுத்தாமல், எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்று பிரதமர் அறிவித்திருந்தார். இந்தியா கொடுத்திருந்த அறிக்கையில் இருந்த 20 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் இந்தியாவுக்கு சிறைபிடித்து கொடுக்காமல் எந்த பேச்சுவார்த்தையும் இராது என்றும் அறிவித்திருந்தார். இப்படி எந்த ஒரு கோரிக்கையும் பாகிஸ்தானால் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், இந்தியா இன்று பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறது.

தெளிவாகவே, இந்த இரண்டு தரப்பாளர்களும் நேரத்தையே கடத்துகிறார்கள். இறுதிமுடிவுக்கான ஒரு தெளிவான நடவடிக்கை ஏதும் இல்லை. இன்று எந்த தெளிவான முடிவுகளை நோக்கிய முயற்சியும் இல்லாமல், இந்த பிராந்தியத்தில் வன்முறையைக் குறைக்க முயற்சிகளும், ‘நம்பிக்கை ஊட்டும் நடவடிக்கைகளுமே ‘ பேசப்படுகின்றன.

ஒருகாலத்தில், காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்படும். ஆனால், அது நல்ல எண்ணங்களாலோ அல்லது அண்டைநாடுகளுடன் கொள்ளும் நட்புறவாலோ இருக்காது. பயங்கரவாதத்துக்கு பொறுமை காட்டாத ஒரு உலகக் கருத்தாலும் அது உருவாக்கும் சூழ்நிலையாலுமே வரும். பாகிஸ்தானில் இருக்கும் தலைமைக்கு ஓரளவுக்கு பயம் வந்திருப்பதும், களைப்பு வந்திருப்பதும் தெரிகிறது. கடந்த காலத்தின் அடாவடித்தனத்தைத் தொடர்ந்து நடத்தமுடியாது என்பதும், அது பல தீவிரமான எதிர்ப்புகளையும் தண்டனைகளையும் பெற்றுத்தரும் என்ற அறிவும் வந்திருக்கிறது. இதனால் இன்று பாகிஸ்தான் என்ற ஒரு தேசம் இருப்பதற்கே அபாயம் வந்திருக்கிறது. காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதற்கு காலம் காலமாக பலரால் கொடுக்கப்படும் பார்முலாக்களால் காஷ்மீர் பிரச்னை தீராது. மேற்கண்ட பாகிஸ்தானின் இருப்பு பற்றிய பயமே அதன் தீர்வுக்கும் எதிர்காலத்துக்கும் திறவுகோல்.

——

KPS Gill is President, Institute for Conflict Management and Publisher, SAIR. Courtesy, the South Asia Intelligence Review of the South Asia Terrorism Portal.

Series Navigation

கே.பி.எஸ்.கில்

கே.பி.எஸ்.கில்