இனியொரு விதி செய்வோம்

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

நாகூர் ரூமி


பஞ்சில் பற்றிய தீயென
பிஞ்சு உடல்கள் உண்ணப்பட்டிருக்க வேண்டும்.

வெந்து போன பிஞ்சுகளைவிட
நொந்து போன நெஞ்சுகள் அதிகம் என்பதால்
அடித்துக்கொண்டு அழுது அரற்றிய
அன்னையரின் எண்ணிக்கை
அறிய முடியவில்லை.

காமக் கனல், கற்புக் கனல்
கேள்விப்பட்டிருக்கிறோம்.
படிக்கப் போன குழந்தைகளை
துடிக்கத் துடிக்கத் தீயிலிட்ட
காசுக்கனலை
கண்டது அன்றுதான்.

பள்ளி என்று எண்ணித்தான்
துள்ளிக் குதித்துச் சென்றனர் அன்று
மூன்றடுக்கு சுடுகாடு
அறியாத பாலகர்கள்.

அள்ளி எடுத்த கைகளில்
அப்படியே வந்தன
விதிமுடிந்த குழந்தைகளின் தோல்கள்
வெந்த கிழங்கைப் போல.

யார் குழந்தை யார் என்று
அடையாளம் தெரியாமல்
பால்பேதம் பாராமல்
அனைவருமே அன்னையானது
அன்றைக்குத்தான்.

அலறல் சப்தம் கேட்டதாக
ஒருவர்கூடச் சொல்லவில்லை.
அதற்குக்கூட அவகாசம்
அந்த அக்கினி கொடுக்கவில்லை.

மூன்றடுக்குக் கட்டிடத்தில்
மூன்று பள்ளிகள்.
எழுநூறு பிள்ளைகள்
ஏக காலத்தில் வெளியேற
இருந்தது ஒரு வாசல்.

கணங்களில் பறிகொடுத்த கனவுகளை எண்ணி
யுகம் யுகமாய்க் கதறுகின்றனர்
சுமந்தவர்கள்.

கனவுகளைத் தின்ற நெருப்பை
கண்ணீரால் அணைக்க முடியவில்லை.
அடுப்பு மூட்ட முடியாத
குடும்பங்களின் நெஞ்சில்
நெருப்பு மூட்டியது யார்?

கூரைகள் கூடாதென
கூப்பாடு போட்டது அரசு.
கூரைகளா? காரைகளா?
அவசர காலத்தில் வேலை செய்யாத
அரசு யந்திரமா?

பணம் எண்ணிப் பணம் பண்ணும்
பிணந்திண்ணிக் கழுகுகளைத்
தோள்களில் ஏந்திக் கொண்டது யார்?

மகாமகம் அரங்கேறும் கும்பகோணம்
மகாவதம் அரங்கேறிய கும்பகோணம்.

தனியொரு குழந்தையைக் காக்க முடியவில்லையெனில் — இந்த
தரணியைக் கொளுத்திடுவோம் –
பாடியிருப்பான் பாரதி நிச்சயம்.

விதிகளை மீறி உரிமம் பெற்று
உயிர்களைக் குடிக்கும் சதியை முடிக்க
இனியொரு விதி செய்வோம்…

2:42 AM 09-11-2007


ruminagore@gmail.com

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி