இந்த வாரம் இப்படி (xenophobic நான், பாபி ஜிண்டால், ஈராக்கில் இத்தாலி வீரர்கள், அறம்)

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

சின்னக்கருப்பன்


xenophobic ஆக இல்லாமல் இருப்பது என்னை பலர் பரந்த மனம் கொண்டவன் என்று சொல்ல உதவக் கூடும். என்னை மற்றவர் பாராட்ட வேண்டும் என்பதற்காக நான் மனதில் தோன்றியதை எழுதாமல் விட்டேன் என்றால், நான் எனக்கே துரோகம் செய்கிறேன் என்றே கூற வேண்டும்,

சோனியா ஏன் பிரதமராக ஆகக் கூடாது என்று எழுதியதற்கு பலரிடமிருந்து கண்டனக் கடிதங்களும், சில பாஜக ஆதரவாளர்களிடமிருந்து ஆதரவுக் கடிதங்களும் வந்தன.

அவரவர் தத்தம் கட்சி நிலைப்பாடுகளிலிருந்து எழுதியிருந்தாலும், எனக்கு அவை பொருட்டல்ல. நான் நினைப்பதை எழுதுகிறேன் அவ்வளவுதான். நான் யாருடைய கருத்தையும் மாற்றக் கருதி எழுதவில்லை. என்னுடைய வேண்டுகோளை, என்னுடைய பார்வையை ஒரு ஜனநாயகக் கடமை போல பதிவு செய்கிறேன், அவ்வளவே. ஒரு வாசகர் எழுதிய கடிதத்துக்குக்கூட பதிலில், என்னுடைய கருத்து மற்றவர்களுக்குச் சரியானதாக இருந்தால், அவை மற்றவர்களால் படிக்கப்படும் இல்லையேல் குப்பைக்கூடையில் வீசப்படும். இரண்டுமே ஒன்றுதான் எனக்கு. என்னுடைய கருத்து தவறாக இருக்கலாம். அவை காலம் காலமாகச் சரியானவை என்ற எண்ணமெல்லாம் இல்லை எனக்கு.

***

xenophobic என்றதும் லூசியானாவில் தோற்றுப்போன பாபி ஜிண்டால் ஞாபகத்துக்கு வருகிறார். ஒரு இந்திய அரசியல்வாதி எப்படி இருப்பான் என்பதன் இலக்கணமாக இருக்கிறார் பாபி ஜிண்டால்.

பதவிக்காக பெயரையும், மதத்தையும் மாற்றிக்கொண்டு மிகத் தீவிரவாத கிரிஸ்துவத்தின் புகலிடமாக ஆகியிருக்கும் குடியரசுக் கட்சியில் இணைந்து அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார் பாபி ஜிண்டால்.

ஆயினும் நிச்சயமாக பாபி ஜிண்டால் வெற்றி என்ற அளவுக்கு தேர்தல்களுக்கு முன்னர் நடந்த கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கி, டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்த வெள்ளைக்காரப் பெண்மணியை லூசியானா மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ரிபப்ளிகன் கட்சிக்கு சுமார் 3 அல்லது 4 சதவீத கருப்பர்களே ஓட்டுப்போட்டிருக்கும் சென்ற தேர்தல்களைக் காட்டிலும் இந்த தேர்தலில் சுமார் 12-14 சதவீத அளவுக்கு ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஓட்டுப்போட்டிருந்தும் பாபி ஜிண்டால் தோற்றிருக்கிறார். கருப்பர்கள் பாபி ஜிண்டால் பக்கம் வந்ததைக் காட்டிலும் அதிக அளவில் வெள்ளையர்கள் டெகாக்ரடிக் கட்சிக்கு தாவி ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்.

லூசியானா மக்களை xenophobic என்று அழைப்பது பொருந்தாது. சுமார் பாதிக்கு சற்றே குறைவான லூசியானா மக்கள் பாபி ஜிண்டாலுக்கு ஓட்டுப் போட்டதன் மூலம், இனவாதத்தின் முக்கியத்துவம் தெற்கு அமெரிக்காவில் குறைந்து வருகிறது என்றே கூற வேண்டும். ஆனால் பாபி ஜிண்டால் தோற்றதனால், எதிர்மறை விளைவுகள் விளையலாம். அமெரிக்காவின் தெற்கு மாநில மக்களை ரிபப்ளிகன் கட்சியில் ஒருங்கிணைக்க தீவிர கிரிஸ்துவ வாதம் பயன்படாது எனக் கருதி, தீவிர வெள்ளையின வாதத்தின் பக்கம் செல்லலாம்.

பாபி ஜிண்டாலின் தோல்வியில் ஒரு நல்ல விஷயமும் நடந்துள்ளது. முதன்முதலில் லூசியானா மக்கள் ஒரு பெண்ணை ஆளுனராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

***

வெள்ளையினவாதமும், தீவிர கிரிஸ்துவ வாதமும் ஒருங்கிணையும் இடம் அமெரிக்காவின் தெற்கு மாநிலங்கள் மட்டுமல்ல, இத்தாலியும் கூடத்தான்.

ஈராக்கில் இறந்த 29 இத்தாலிய வீரர்களுக்கு அஞ்சலி போப்பாண்டவர் அரசு புரியும் ரோம்-வாட்டிகன் நகரில் நடைபெற்றது. ஈராக்கில் தினந்தோறும் இறக்கும் அப்பாவி ஈராக்கிய மக்களுக்கு போப்பாண்டவர் இதுவரை எந்த அஞ்சலியும் செய்யவில்லை. ( சரி முஸ்லீம்கள் இறப்புக்கு ஏன் போப்பாண்டவர் அஞ்சலி செலுத்த வேண்டும் எனக் கேட்கலாம். ) ஈராக் போருக்கு முன்னர் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை எதிர்த்து போப்பாண்டவர் திருச்சபையிலிருந்து மெல்லிய எதிர்ப்புக்குரல் வந்தது. அதற்குக் காரணம் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய பிஷப்புகளின் குரலுக்கு அஞ்சி என்று பேச்சு.

புதியதாக எழுதப்பட்டு வரும் ஐரோப்பாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் கிரிஸ்துவ பாரம்பரியம் என்று ஒரு வரியைச் சேர்க்கவேண்டும் என்று வாடிகன் மற்ற கத்தோலிக்க நாடுகளை படுத்தி எடுத்தது. போலந்து பிரான்ஸ் போன்ற நாடுகள் வற்புறுத்தியும், அரசியலமைப்புச் சட்டத்தை எழுத முனைபவர்கள் வெறுமே ‘பாரம்பரியம் ‘ என்ற வார்த்தையை மட்டுமே உபயோகித்திருக்கிறார்கள். இந்த விவாதத்தில் ஒரு சாரார், கிரிஸ்துவம் ஐரோப்பாவை முன்னேற விடாமல் தடுத்தது எனவும், ரோம கிரேக்க ஜனநாயக மற்றும் மறுமலர்ச்சிப் பாரம்பரியமே ஐரோப்பாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் போற்றப்படவேண்டியது என்றும் கருதுகிறார்கள். இப்படிப்பட்ட ‘மதச்சார்பற்ற ‘ பாரம்பரியத்தை வாட்டிகன் தீவிரமாக எதிர்க்கிறது. ஐரோப்பாவில் கிரிஸ்துவம் ஒதுக்கப்பட்டால், கிரிஸ்துவத்தை மற்ற நாடுகளில் பரப்பவியலாமல் போய்விடும் எனவும் கருதுகிறது. (ஐரோப்பாவில் மதச்சார்பற்ற நிலைப்பாட்டை எதிர்க்கும் கிரிஸ்துவக்குழுக்கள், இந்தியாவில் மதச்சார்பற்ற அரசியலமைப்பை பாஜக அழிக்க முனைகிறது என்று மதச்சார்பற்ற நிலைப்பாட்டுக்காக குரல் எழுப்புகின்றன)

இத்தாலியின் ஜனாதிபதி ஈராக்கில் இத்தாலியின் ஆக்கிரமிப்புப்பணி தொடரும் என அறிவித்திருக்கிறார். (ஆனால், இத்தாலியின் ராணுவ வீரர்கள் பெட்ரோலியத்துக்காகவோ அல்லது நவ காலனியாதிக்கத்துக்காவோ இறக்கவில்லை எனவும், அவர்கள் சமாதானத்துக்காக இறந்தார்கள் எனவும் இத்தாலி பத்திரிக்கைகள் முதல், வாடிகன் வரை அறிவிக்கிறது) ஆனால் மறைமுகமாக மற்ற நாடுகளை இந்த வேலையில் பங்கெடுக்க வைக்க தீவிரமாக முயன்று வருகிறார்கள். இத்தாலி மட்டுமல்ல, ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளும் இந்தியா மற்றும் இந்தோனேஷியா போன்ற நாட்டு ராணுவத்தை ஈராக்கின் சுமையை தூக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

சோனியா இந்தியப் பிரதமராக இருந்தால், இத்தாலி நாட்டு ஜனாதிபதி இந்தியப் பிரதமரிடம் எந்த மொழியில் பேசுவார் ?

திருச்சி கண்டோன்மெண்டில் இருக்கும் மெட்ராஸ் ரெஜிமண்ட் ராணுவ வீரர் எதற்காக ஈராக்கில் இறக்க வேண்டும் ?

***

திராவிடக் கலாசாரம் – துக்ளக் பதிவு செய்கிறது

திராவிடக் கட்சித் தலைவர்கள் பேச்சுக்கு இணையாகப் பேசி தமிழகக் காங்கிரசுக்கு ‘உயிரூட்டியவர் ‘ இளங்கோவன். (அவரும் திராவிடப் பாசறையில் பயின்றவர் என்பது காரணமாக இருக்கலாம்)

திராவிடக் கலாச்சாரம் திராவிடக் கலாச்சாரம் என்று சொல்வது (அல்லது தமிழ் மரபு) ஒரு வகை இடக்கரடக்கல் போல எனக்குத் தோற்றமளிக்கிறது.

சாக்கடைப் பேச்சுக்கள், மற்றவர்களின் தனிநபர் வாழ்க்கையை தரம் அற்று பேசுவது, இன்று ஒரு தலைவர் நாளை ஒரு தலைவர், தலைவர் என்று காலைத் தொட்டு வணங்கிய நபரின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை இந்தப்பக்கம் வந்ததும் ‘புழுத்த நாய் ‘ நடுவில் போகக்கூசும் அளவுக்குப் பேசுவது. இவைதானா திராவிடக் கலாச்சாரம் ? இவைதானா திராவிட இயக்கம் கொடுத்த பண்பாடு ? இல்லையெனில் எதுதான் திராவிடப் பண்பாடு ? இவைகளை எல்லாம் பேசிவிட்டு தமிழ்ப் பண்பாடு என்று பேசுவது தமிழர்களை அவமதிப்பதுபோல தோன்றவில்லையா ?

முன்பெல்லாம், பனகல் பார்க் பூக்கடைப்பக்கம் அதிமுக மற்றும் திமுக கழகப் பேச்சாளர்கள் பேசுவதை ஒரு சரோஜாதேவி படிக்கும் திருட்டுத்தனத்தோடு கேட்டுக்கொண்டிருந்தேன். பக்கத்தில் நிற்பவரது முகத்தைப் பார்க்க முடியாத அளவுக்குக் கூசும் பேச்சுக்கள். (குடும்பத்தோடு சினிமாவுக்குப் போன வேளையில் இடைவேளை விடும்போது போடும் டிரைலர்களில் ஆங்கிலப்பட அம்மணங்கள் திடாரென்று தோன்றும்போது ஏற்படும் கூச்சம்)

இவையெல்லாம் ஏன் பத்திரிகை ஏறுவதில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஏறாததும் கூட ஓரளவுக்கு நல்லதுதான்.

இந்த வார, சென்றவார துக்ளக்கில் அவையும் அச்சேறிவிட்டன.

***

பாஜக கட்சித்தலைவர் முன்னர் காசு வாங்கிப் பிடிபட்டு பதவி இழந்தார். இன்று பாஜக மந்திரி பதவி இழந்திருக்கிறார்.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினால் பதவி விலகவேண்டும் என்பதை அந்தக் கட்சியாவது கடை பிடிக்கிறதே என்று மகிழ்ச்சிதான். ஊழல் குற்றச்சாட்டுதான் நடந்திருக்கிறது. நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று கூறவில்லை. டெஹெல்காவின் போது ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவி விலகினார். அவர்மீது எந்தக் குற்றச்சாட்டையும் டெஹெல்கா கூறாதபோதும் அவர் பதவி விலகினார்.

நமது தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நிலைமையோ வேறு. திமுக ஜெயலலிதா மீது கொண்டுவந்த சொத்து வழக்கை, ஜெயலலிதா அரசு ஜெயலலிதா மீதே நடத்துகிறது. நடத்துகிறது. நடத்துகிறது.நடத்துகிறது.நடத்துகிறது. நடத்துகிறது. நடத்துகிறது. நடத்துகிறது. இறுதியில் ஒருவழியாக உச்ச நீதிமன்றம், அந்த வழக்கை கர்னாடகாவுக்கு அனுப்பிவிட்டது. ஃபெடரலிஸம் (அல்லது மாநில சுயாட்சி) பாதிக்கப்படுகிறது என்று கூக்குரல் வரலாம்.

இன்றும் சரி நேற்றும் சரி, இந்த பெடரலிஸம், மாநில சுயாட்சி ஆகிய ‘பல பொருள் ஒரு மொழி ‘கள் தமிழக முதல்வர்கள் ஊழலுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளவும், அவர்களது சர்வாதிகார ஆட்சிமுறையையும் அத்துமீறல்களையும் நியாயப்படுத்தவுமே உபயோகப்பட்டிருக்கின்றன என்றே தோன்றுகிறது.

டான்ஸி வழக்குக்கு இன்னும் நீதி வரவில்லை. யாரும் கவலைப்படவில்லை. யானைக்கு ஓய்வு, பணியாளர் டிஸ்மிஸ், மழை வரவில்லை என்பதற்குக் கூட கலைஞரைத் திட்டும் சோ, மழை வரவில்லை என்பதற்குக் கூட பாஜகவை திட்டும் தி இந்து, ஆடுகோழி பலியிடல் தடுப்பு, மணி சங்கர அய்யர் அடிதடி என்று ஜகஜ்ஜோதியாய் தமிழக வரலாறு எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது.

நாம் அறத்தைக் காப்பாற்றினால்தான் அறம் நம்மைக் காக்கும். அறம் என்பது ஒருபாற்கோடாத சான்றோர்கள் கையிலேயே இருக்கிறது. அத்தகைய சான்றோர்கள் அருகிப்போகும்போது உருவாகும் அறமற்ற தமிழகமே இன்று காண்பது.

***

karuppanchinna@yahoo.com

***

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்