இந்த வாரம் இப்படி – ஜனவரி 20, 2002 (தேர்தல், பட்டியல், ஆயுத விற்பனை, டோனி ப்ளைர் சிமோன் பெரஸ் வருகை)

This entry is part [part not set] of 21 in the series 20020120_Issue

மஞ்சுளா நவநீதன்


ஆண்டிப்பட்டி தேர்தல்

சைதாப்பேட்டை, வாணியம்பாடி தேர்தல் நிறுத்திவைக்கப் பட்டு , ஆண்டிப்பட்டி தேர்தல் மட்டும் நடைபெறுவதாய் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெயலலிதா நிச்சய்ம வெற்றி பெறக் கூடிய சூழ்நிலை உள்ளது. மூன்றாவது அணி என்ற பெயரில் உள்ள கட்சிச் சேர்க்கை வெற்றி பெறும் வாய்ப்புத் தெரியவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் நின்றால் மார்க்ஸிஸ்ட் கட்சி ஆதரிக்காது. ம தி மு க ஏற்கனவே தம் வேட்பாளரை அறிவித்து விட்டது. தி மு க ஆண்டிப்பட்டி தேர்தல் நிறுத்தப் பட வேண்டும் என்று கோரியுள்ளது. மற்ற தொகுதிகளைப் போலவே இங்கும் முறைகேடுகள் நடந்துள்ளன என்பது தி மு க வின் வாதம். பா ஜ க வும் அதி மு கவும் நெருங்கி வரலாம் என்ற வாய்ப்பு இருக்கும் போது தேர்தல் நிறுத்தப்பட வாய்ப்பில்லை.

*********

பாகிஸ்தானிடமும் ஒரு பட்டியல்

இந்தியா கொடுத்த 20 பயங்கரவாதிகள் பட்டியலைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்ட பாகிஸ்தான், எங்களிடமும் ஒரு பட்டியல் இருக்கிறது என்று அறிவிப்புச் செய்துள்ளார். இது நகைப்புக்கிடமாகும் என்று அந்த அமைச்சர் யோசிக்கக் கூட இல்லை. இதற்கிடையில் பால் தாக்ரேயை எங்களிடம் ஒப்படைக்குமா இந்தியா என்று கிண்டல் வேறு. பால் தாக்ரே கிளப்பிவிட்ட வன்முறை பாகிஸ்தான் மண்ணில் நிகழவில்லை என்ற அரிச்சுவடி கூடத் தெரியாமல் பேசும் இவர்கள் பாகிஸ்தானின் அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள்.

போர் மேகங்கள் இன்னும் அகலவில்லை. காலின் போவெல் போன்றோர் வருகை தந்த போதிலும் , காஷ்மீரில் தூண்டிவிடப்படும் பயங்கரவாதம் முற்றுப்பெறும் என்று தோன்றவில்லை. பாகிஸ்தானின் ரத்தத்தில் கலந்தது காஷ்மீர்ப் பிரசினை என்ற அறிவிப்பு வேறு. இந்திய ஜனநாயகத்தின் கீழ் வாக்குரிமையும் சிறப்பு அந்தஸ்தும் காஷ்மீருக்கு உள்ளது. பாகிஸ்தானிலோ ராணுவ ஆட்சியும், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்சியும் தான்.

முன்பு இந்துக்களை காஷ்மீரை விட்டு வெளியேறும்படி அறிக்கைகளும் போஸ்டர்களும் காஷ்மீரெங்கும் ஒட்டப்பட்டன. அது நடந்து சுமார் 10 ஆண்டுகள் கழித்து இப்போது சீக்கியர்கள் காஷ்மீரை விட்டு வெளியேறும்படி ஆணையிட்டு முஸ்லீம் தீவிரவாதிகளால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் பிரச்னையையும் பாகிஸ்தான் வளர்க்க வேண்டியிருந்ததால், சீக்கியர்களை காஷ்மீர் விட்டு வெளியேறும்படி அறிக்கை ஒட்டப்படவில்லை போலும். இப்போது அந்த பஞ்சாப் பிரச்னை முடிவு பெற்றுவிட்டதால், முக்கிய நோக்கமான காஷ்மீர் பிரச்னையை தனக்கு சாதகமாக தீர்க்க பாகிஸ்தான் தீவிரமாக இறங்கி விட்டது போலும். அதனால் இப்போது சீக்கியர்கள் வெளியேறும்படி அறிக்கைகள். (முன்னம் இந்துக்களை வெளியேற்றியது ஜக்மோஹன் என்ற கவர்னர் என்று பாகிஸ்தான் பத்திரிக்கைகளும், இந்தியப் பத்திரிக்கைகளும் குறைகூறி வந்தது இப்போதும் பலருக்கு ஞாபகம் இருக்குமோ என்னமோ. முஸ்லீம் தீவிரவாதிகள் மீது இடதுசாரிகள், இந்திய பத்திரிக்கையாளர்கள், பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள் எல்லோருக்கும் ஒரே அன்பு. இந்த அறிக்கைகளுக்கு காரணம் முஸ்லீம் தீவிரவாதிகள் அல்ல என்று கூறிவிட்டு இன்னும் யாரை குறை சொல்லப்போகிறார்கள் என்று ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறேன்)

********

டோனி ப்ளேர் வருகை – சமாதானமா ஆயுத விற்பனையா ?

பிரிட்டிஷ் பிரதமர் வருகையை ஒட்டியே, பிரிட்டிஷ் ராணுவ மந்திரி இந்தியா வந்ததும் , ராணுவத் தளவாடங்கள் விற்பனை பற்றிப் பேசியதும் தற்செயலல்ல. ஊர் இரண்டுபட்டால், ஆயுதத் தளவாட விற்பனையாளர்களுக்குக் கொண்டாட்டம். இந்தியா- பாகிஸ்தான் சண்டையினால் மிகுந்த லாபம் யாருக்கு. ஐரோப்பிய, அமெரிக்க ராணுவ தளவாட உற்பத்தியாளர்களுக்குத் தான். இந்த இரண்டு நாடுகளும் இதை உணராமல் இல்லை. இந்த பேரங்களில் இந்தியாவின் அரசியல் வாதிகளும், பாகிஸ்தான் ராணுவ ஆட்களும் சுருட்டிக் கொள்ளவும் வழி வகை இருக்கிறதே.

**********

சிமோன் பெரஸ், டோனி ப்ளைர் வருகைகளும் தமிழ்நாடும்.

இந்தியாவுக்கு பல உலகத்தலைவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா பாகிஸ்தான் போர் பதட்டத்தின் காரணமாக பல உலகத்தலைவர்கள் இந்தியாவுக்கு அறிவுரை சொல்வதற்காகவும், இந்தியாவிற்கு ஆதரவு உண்டு என்பதைச் சொல்வதற்காகவும் வந்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட உலகத்தலைவர்களில் முக்கியமானவர்கள் இங்கிலாந்தின் டோனி ப்ளைரும், இஸ்ரேலின் சிமோன் பெரெஸ் அவர்களும்.

வந்தாலும், அவர்கள் முக்கியமாக பெங்களூர், ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு விஜயம் செய்யவும், அங்கு இருக்கும் முதலமைச்சர்களைச் சந்திக்கவும், அவர்களது நாட்டுடனும், இந்த மானிலங்களுடனும் ஒரு இறுக்கமான பொருளாதார இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் தயங்கவில்லை.

இவர்கள் வருகையின் மூலம், பல முதலீட்டாளர்களுக்கு இந்த நகரங்களும் மாநிலங்களும் கணக்கில் வரும். அதுவே இந்த விளம்பரத்தின் முக்கியம்.

தமிழ்நாட்டில் ஏராளமான கணினி மென்பொருள் நிறுவனங்கள் இருந்தாலும், ஏன் அவர்கள் வரவில்லை என்பது பற்றி யாரும், எந்த தமிழ்நாட்டுப் பத்திரிக்கையும் பேசவில்லை. அவர்களை அழைத்து தமிழ்நாட்டு பொருளாதார முன்னேற்றத்துக்கும், தமிழ்நாட்டை உலகம் முழுவது உணரச்செய்யவும், அவர்களது வியாபார, தொழில் நுட்பத் திட்டங்களின் கணக்குகளில் தமிழ்நாட்டையும் சேர்க்கவும் எந்தவிதமான திட்டங்களும், செயல்பாடுகளும் அது பற்றி சிந்தனையும் அக்கறையும் இல்லை.

நமக்கு மிகவும் முக்கியமான பிரச்னை கண்ணகி சிலையும் வாஸ்து சாஸ்திரமும் தானே ? ஆளும் அரசியல் கட்சி, கண்ணகி சிலையை அங்கிருந்து எடுத்துவிட்டால் வாஸ்து சாஸ்திரப்படி தமிழ்நாட்டின் முடிசூடா அரசிக்கு எல்லாம் நல்லது நடக்கும் என்று நினைத்துச் செயல்படுகிறது. கண்ணகி சிலை அங்கு வைத்துவிட்டால் அந்த முடிசூடா அரசிக்கு கெட்டது நடக்கும் என்று இன்னொரு முக்கிய அரசியல் கட்சி நினைத்துச் செயல்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்தச் சண்டையின் சுவாரஸ்யத்தில் உலகம் வெகுவேகமாக இவர்களைக் கடந்து போய்விட்டதை தெரிந்து கொள்ளவில்லை.

தமிழ்நாட்டு மக்கள் என்றென்றும் இப்படியே வாயில் விரலை வைத்துக்கொண்டு அப்பாவியாக அலைய வேண்டும்; அப்படியே வாயிலிருந்து விரலை எடுத்தாலும், அது ஒரு சாதி இன்னொரு சாதியை திட்டத்தான் இருக்க வேண்டும்.

********

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்