மஞ்சுளா நவநீதன்
***
தமிழ் குடமுழுக்கா ? சமஸ்கிருத கும்பாபிஷேகமா ?
எல்லாப் பிரசினைகளையும் ஓரத்தள்ளிவிட்டு முன்னணிக்கு தமிழில் குடமுழுக்குப் பிரசினை வந்திருக்கிறது. அவரவர் இஷ்டத்திற்கு அபத்தத்தை உதிர்க்க ஒரு பொன்னான சந்தர்ப்பம். தமிழ் நாட்டின் அரசியல் வாதிகள் இதை நழுவ விடுவார்களா என்ன ?
தமிழ் தெரியாத கடவுளுக்கு தமிழ் நாட்டில் வேலை இல்லை என்று கருணாநிதி பேச , நாத்திகர்களுக்கு இந்து மதம் பற்றிப்பேச உரிமை இல்லை என்று இந்து முன்னணி பேச இந்த அசடுகளைப் பார்த்து பொது மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். உயிர் போகும் பிரசினைகளில் தமிழ்நாடு பதறிக் கொண்டிருக்கிறது. விவசாயிகளும், நெசவாளிகளும், மாணவர்களும், ஆசிரியர்களும், வழக்குரைஞர்களும், அரசுப் பணியாளர்களும், பேருந்து பயணிகளும், பணியாளர்களும் ஜெயலலிதா எடுத்த நிர்வாக முடிவு ஒவ்வொன்றினாலும் பாதிக்கப் பட்டு எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மையில் அச்சத்துடன் இருக்கிறார்கள். கருணாநிதியும், தமிழ்ப் பற்றுத் தொப்பியை அணிந்தவர்களும் சங்கராசாரியாரை தமிழின விரோதியாகச் சித்தரிக்க, இந்து முன்னணி, பா ஜ க ஆட்கள் , இதில்லாமல் சோ போன்றவர்கள் கருணாநிதியை இந்துமத விரோதி என்று பேச மக்களுக்கு நல்ல தமாஷ் காட்சிகள் அரங்கேற்றம். சோகமான விஷயம் என்னவென்றால் , மக்கள் தமாஷ் பார்க்கும் மன நிலையில் இல்லை. கருணாநிதி இந்துமத விரோதி என்றால் , அவர் கட்சியின் ஆட்கள் எல்லாம் இந்து மதத்தைக் கைவிட்டுவிட்டவர்களா ? யூதர்களாய் ஆகிவிட்டார்களா ? என்று யாரும் கேட்கவில்லை. நடுவில் தேவையே இல்லாமல், இஸ்லாமியர் , கிறுஸ்தவர்கள் வழிபாடு பற்றி தப்பும் தவறுமான பேச்சுகள், நாகரிகமோ தெளிவோ அற்ற முறையில் பா ஜ க மற்றும் இந்து முன்னணியால் பேச்சப்பட்டுள்ளது.
கருணாநிதி ஆதரவு ஆட்களும் சளைத்தவர்கள் இல்லை. சங்கராசாரியார் தமிழ் விரோதி என்றால் , அவர் தமிழில் பேசாமல் ஜப்பானிய மொழியிலா பேசுகிறார் ? கிரேக்க மக்களுக்கா காஞ்சிபுரத்தில் மடம் அமைத்திருக்கிறார் ? என்று யாரும் கேட்கவில்லை. எல்லாப் பிரசினைகளையும் தனக்குத் தெரிந்த இரண்டே வார்த்தைகளில் மடக்கிப் போட்டுவிடுகிற சாதுரியம் தமிழ் நாட்டில் அரசியல் பண்ணும் எல்லாருக்கும் கைவந்திருக்கிறது.
இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்து மதத்தின் செயல்பாடுகள் பற்றிப் பேச எல்லா உரிமையும் இருக்கிறது. நாத்திகர்களுக்கும் விமர்சன உரிமை உண்டு. காஞ்சி சங்கராசாரியாருக்கு ஆகமம் பற்றிப் பேசும் உரிமை இருக்கிறது. ஆனால் அதைச் செயல்படுத்துவது கோயிலைக் கட்டிய உள்ளூர் பக்தர்களின் கையில் இருக்கிறது. மேலிருந்து வரும் கட்டளைகளை ஏற்றுக் கொள்ளும் மதமாக இந்து மதம் இருக்கவில்லை. அவரவர் ஊரில் சமூகத்தில் உள்ள செயல்பாடுகளை நிச்சயிக்கும் உரிமை தொன்றுதொட்டு செயலில் வருகிற ஒன்று.
தமிழ் தெரியாத கடவுளுக்கு தமிழ் நாட்டில் வேலையில்லை என்று கருணாநிதி சொல்வது இன்னொரு ஜோக். தமிழ் தெரியாத ஐ ஏ எஸ் ஆஃபிசரை நீக்குகிற உரிமை கூட கருணாநிதிக்கு இல்லை. கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தமிழ்வழிக்கல்வியைக் குறித்தோ, தமிழ் அறிவுவளர்ச்சியில் மக்கள் பெருமிதம் பெறும்படியோ எதையும் செய்துவிடவில்லை. தமிழே படிக்காமல் ஒரு தலைமுறை உருவாக விதை இட்டது எம் ஜி ஆர் காலத்தில். இந்தப் போக்கிற்கு உரமிட்டு வளர்த்து கருணாநிதி காலத்தில் . ஆட்சியில் இல்லாத போது தமிழினத் தலைவர் வேடமா ?
*********
மதமாற்றத் தடைச் சட்டம் – ஜெயலலிதாவின் ஜனநாயக விரோதச் செயல்
ஜெயலலிதா ‘கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் ‘ என்ற போக்கில் திடாரென்று ஒரு சட்டத்தை இயற்றியிருக்கிறார். மதமாற்றத் தடைச் சட்டமாம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. சீனா போன்று மக்களின் தேர்வுகளில் குறுக்கிடும் எதேச்சாதிகார நாடல்ல. இஸ்லாமிய நாடுகள் போல் ஒரு மதத்தைத் தவிர மற்ற மதத்தினரை இரண்டாம் தரக்குடிமகன்களாக வைத்திருகும் நாடுமல்ல. பணத்தினால் மக்கள் மதம் மாறுகிறார்கள் என்று காரணம் சொல்லி ஜெயலலிதா இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருப்பது ஜனநாயக மறுப்புச் செயல். அரசியலில் புழங்கும் பணத்தைக் காட்டிலும், மதமாற்றத்தில் ஒன்றும் அதிகம் பணம் புழங்குவதில்லை. அப்படிப் புழங்கினாலும் அதில் தவறில்லை. இந்துமதம், 90 சதவீத இந்தியர்களின் மதம் அவரகளிடம் பணம் இல்லை, வெளிநாட்டுப்பணம் தான் மதமாற்றத்தின் பின்னால் என்று சொல்வது விஷமம்.
பணத்திற்காக மக்கள் மதம் மாறுகிறார்கள் என்பது ஏழைகளை அவமதிக்கும் செயல். தன்னுடைய நாட்டின் முதல்வரைத் தேர்ந்தெடுக்கத் தெரிந்தவர்களுக்குத் தம்முடைய மதம் எது என்று தேர்ந்தெடுக்க உரிமை இல்லையா என்ன ? வன்முறையால் அச்சுறுத்தலால் மதம் மாற்றும் நிர்ப்பந்தத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க ஏற்கனவே உள்ள சிவில் சட்டங்களே போதுமானவை. பா ஜ க-வைக் காட்டிலும் தான் இந்து மதக் காவலாளி என்று நிரூபிக்கவும், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாள் முதலாக மிகவும் பின்னடைவாகிவிட்ட தமிழ்நாட்டின் பொருளாதரம் மற்றும் மக்கள் அதிருப்தியை மூடிமறைத்து திசை திருப்பவும் தான் இந்தச் சட்டம் இயற்றப் பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. மக்கள் உரிமைக் கழகத்தினர் இது மக்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் சட்டம் என்று உடனடியாக வழக்குத் தொடர வேண்டும்.
***
manjulanavaneedhan@yahoo.com
- சமயவேல் கவிதைகள்
- ஒரு மனிதன் 500 ஆண்டுகள் வாழ்வது எப்படி ?
- தலைகளின் கதை (Hayavadana – Girish Karnad)
- மருதம் – புதிய இணைய இதழ்
- மெழுகுவர்த்திகளும் குழந்தைகளும் (எனக்குப் பிடித்த கதைகள் -30 அந்தோன் செகாவின் ‘வான்கா ‘)
- சமோசா
- கடவுளும் – நாற்பது ஹெர்ட்ஸும்
- காசநோய்க்கு எதிராக அதிகப்படியான வேலை
- பாரத அணுகுண்டைப் படைத்த டாக்டர் ராஜா ராமண்ணா
- நள பாகம்
- கவலையில்லா மனிதன்
- நம்பிக்கை
- நான்காவது கொலை !!! (அத்யாயம் 10)
- எனதும் அவளதுமான மழைபற்றிய சேகரிப்புகள்
- ஜனனம்
- ஓட்டம்
- காவிரி ஆறு – ஒரு சோகக் கதை
- இந்த வாரம் இப்படி – சூலை 28 2002
- சீன மொழி – ஒரு அறிமுகம் புத்தகம் பற்றி
- நீ. அரவிந்தனின் வீரசவர்க்கார கருத்தியல் குறித்து..
- சீனம் கற்க தமிழில் முதல் நூல்
- எழுதப்படாத தீர்ப்புகள் (ஹெகலின் தீர்ப்புகள் குறித்து)
- வேஷம்