இந்த வாரம் இப்படி – சூன் 3

This entry is part [part not set] of 16 in the series 20010602_Issue

மஞ்சுளா நவநீதன்


இந்த வாரம் மட்டுமல்ல —

ஆமாம், இந்த வாரம் மட்டுமல்ல – இனி எல்லா வாரங்களும் இது பற்றி எழுத நேருமோ என்று அஞ்சுகிறேன். ஜெயலலிதாவின் பழி வாங்கல்கள் வரைமுறையின்றி நிகழத் தொடங்கிவிட்டன. தாமரைக் கனி கைது, பரிதி இளம் வழுதி கைது, பரசுராமன் கைது என்று தொடரும் இந்த அக்கிரமம் இன்னமும் நாம் மனத்தளவில் ஜன நாயகம் என்ற ஒன்றுக்குத் தயாராகவில்லை என்று காட்டுகிறது. ஜன நாயகம் என்பது ஒரு அரசாட்சி முறையல்ல, ஒரு பண்பாடு என்று சொன்னவர் அம்பேத்கர். ஜெயலலிதாவை அரசுக் கட்டிலில் ஏற்றி அமரவைக்கத் துடியாய்த் துடித்த வீரமணி, சோ, ராமதாஸ், மூப்பனார் போன்றவர்கள் பரிதி இளம் வழுதி , தாமரைக் கனி கைது எந்த மதவாதத்தை எதிர்த்த போராட்டம் என்று சொல்லக் கடமைப் பட்டவர்கள். ஜனநாயகப்பண்பாட்டை காலில் மிதித்து நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட குற்றவாளிக்கு அரசுப் பொறுப்பு கொடுத்த ஆளுனரும் கடமைப்பட்டவர்.

*******

நேபாள அரசுக் குடும்பம் அழிந்தது.

துக்ககரமான செய்தி . இங்கிலாந்து மன்னராட்சி எப்படி ஜனநாயகப் பாதையில் இங்கிலாந்தைத் திருப்பத் துணை நின்றதோ அந்த முறையில் நேபாள மன்னரும் நேபாளத்தை ஜனநாயகப் பாதையில் செலுத்தியவர்.

****

பாவம் பா ம க

இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றது அ தி மு க என்றால் அமோகத் தோல்வி பெற்றது பா ம க என்று சொல்ல வேண்டும். தி மு க தோற்றாலும் கூட அ தி மு க-விற்கு அடுத்தபடி – சமமாகக் கூட என்று சொல்லலாம் – உள்ள கட்சியாய்த் தான் இருக்கிறது. ஆனால் பா ம க தான் பாவம். தன்னுடைய எந்த நோக்கமும் நிறைவேற இயலாத ஒரு கிடுக்கிப் பிடியில் சிக்கிக் கொண்டு விட்டது. ஆட்சிக்கு வந்த வுடனேயே அம்மா பா ம க – த மா க போன்ற கட்சிகள் பற்றி எந்தவிதமாகவும் பொருட்படுத்திப் பேசவும் இல்லை. அவற்றிற்கு நன்றி – ஒப்புக்குக் கூடத்– தெரிவிக்கவில்லை. பா ம க பாண்டிச் சேரி ஆளும் கட்சியாகிவிடலாம் என்றும் , தமிழ் நாட்டில் இரண்டாவது பெரிய கட்சியாகிவிடலாம் என்றும் கணக்குப் போட்டதும் நடக்கவில்லை. த மா க-விற்குப் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இருக்கவில்லை அதனால் ஏமாற்றமும் இல்லை.

ஜெயலலிதாவை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பு ஏற்க வைக்கும் பொறுப்பு முடிந்ததால், மீண்டும் மத்தியில் மந்திரிப் பதவி கேட்டு மத்திய ஆட்சியில் இணைய முயற்சிப்பதாக வதந்திகள் வருகின்றன. வங்காளத்தில் கடைசி நேரத்தில் காலை வாரிய மம்தா பானர்ஜியை மீண்டும் தேசீய முன்னணியில் இணைக்கும் எந்தவிதமான திட்டமும் இல்லை என்று (ஏறத்தாழ) துரத்திவிட்டனர் பாஜக தலைவர்கள். அதே போல பாமகவுக்கும் நடக்கலாம். நடக்க வேண்டும்.

*****

கள் இறக்க அனுமதிக்கப் போராட்டம்

கள் இறக்க அனுமதி கேட்டுப் போராட தென் மாவட்டங்களிலிருந்து சிலர் தயாராகிறார்கள் என்று கேள்வி. கள் இறக்குவது ஏன் தடை செய்யப் பட்டது என்றே எனக்குப் புரியவில்லை.

இன்றைய சாராய விற்பனை பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், சிறிய அளவில் செயல் படுகிறவர்களுக்கு எதிராகவும் செயல் படுகிறது. சிறிய அளவில் சாராயம் காய்ச்சுபவர்களைக் குற்றம் சாட்டிக் கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள் என்று சிறையில் அடைக்க் -அல்லது போலிஸின் மாமூலுக்கு வழி வகுக்க- பயன் படுகிறதே தவிர வேறு எந்தப் பயனும் இல்லை. கள் இறக்க அனுமதிப்பதும் தனிப்பட்ட முறையிலோ அல்லது கிராமத்திற்கு ஓரிருவர் என்றோ உழவர் சந்தையில் இவர்களுக்கு விற்பனை வசதிகள் செய்து தருவதன் மூலம் சிறுதொழில் வளர்ச்சியும் ஏற்படும். இயற்கையின் பானமான இது சாராய,ம் மற்றும் வெளிநாட்டுச் சரக்கின் உள்நாட்டுப் போலிகளை விட எவ்வளவோ தேவலை. அது மட்டுமல்லாமல், பல ஒயின் ஷாப்புகள் பார்களாகவும், தரம் குறைந்த கலப்படம் மிக்க பொருள்களின் விற்பனை நிலையங்களாகவும் மாறிவிட்டன. அதன் தீமையைத் தடுப்பதற்குக் கள் உதவும்.

தமிழ்நாட்டில் மக்கள் கேட்கும் விஷயங்களை செய்யும் (அல்லது செய்ய முயற்சியாவது செய்யும்) அரசு இப்போது இல்லை என்பது பலருக்கு விளங்காதது போல இருக்கிறது.

****

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்