மஞ்சுளா நவநீதன்
பா ஜ க வுடன் கூட்டணி — தி மு கவுடன் கூட்டணி இல்லை
மதி மு க -வின் நிலைபாட்டின் கோமாளித்தனம் இது. பாவம் கடைசி வரையில் வை கோ-வைக் காக்க வைத்துத் துரத்தியும் விட்டார் கருணாநிதி. ம், முதன் முதலில் பா ஜ க விற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை அறிவித்த போதே , தன் தேர்வு என்னவாய் இருக்கும் என்று கருணாநிதி தெரிவித்து விட்டார். ஆனாலும், வை கோ பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திருந்தார். இவ்வளவு தாமதமாய் ஆன பிறகு புரட்சித் தலைவியிடமும் கையேந்த முடியாது. பிரசினை தான். (சொல்ல முடியாது, நம் அரசியல் வாதிகள் பற்றி. நாளையே புரட்சித் தலைவி ம தி மு கவை அரவணைத்துக் கொள்ளலாம். )
இன்னொரு வதந்தி வலம் வருகிறது: கடைசி நேரத்தில், தனக்கு எதிரான வாக்குகளைப் பிரிக்க ஜெயலலிதாவின் சதி – ம தி மு க வைப் பிரித்ததில் அவருக்கும் பங்கு உண்டு என்கிறார்கள். போகப் போகத் தெரியும்( ?).
***
***
வன்னியர் வாக்கு அன்னியருக்கு இல்லையா ?
யார் அந்த அன்னியர் என்பது தான் பிரசினையே. தி மு க வில் வன்னியர்களே இல்லையா ? சேலத்து வன்னியர்கள் வாழப்பாடி பின்னாலும், தென் ஆற்காடு போன்ற மாவட்டங்களின் வன்னியர்கள் ராமதாஸ் பின்னாலும் போகிறார்கள் என்று ஒரு பிரமையைப் பத்திரிகைகள் ஏற்படுத்தியிருக்கின்றன. தனியாய் இவர்கள் போட்டியிட்டால் தான் இவர்கள் பலம் அல்லது பலவீனம் தெரியும்.
வாழப்பாடி அமைச்சராய் இருந்திருக்கிறார். பா ம க வும், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறது. இவர்கள் இந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும், அல்லது வன்னியர்களுக்கும் என்ன பயன் பட்டார்கள் என்று தெரிந்தவர்கள் யாரும் சொல்லலாம்.
***
கோமாளிகள் அரசு செய்தால் . ..
பேய் அரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று பாரதி சொன்னதை , பா ஜ க அரசு விவகாரங்களுக்காக , ‘கோமாளிகள் அரசு செய்தால் குட்டிச் சுவராகும் கல்வி ‘ என்று மாற்றியமைக்க வேண்டும் போலிருக்கிறது. முரளி மனோகர் ஜோஷி – என்ற இந்த நபர் கல்வி மந்திரியாம். அவர் ஏற்கனவே ‘ சரஸ்வதி வந்தனம் ‘ பண்ன வேண்டும் எறு சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டார். பிறகு சமஸ்கிருதத்தைக் கட்டாய பாடம் ஆக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்துக் கோமாளி தான் என்பதை ஊர்ஜிதம் செய்தார். இவர் பெளதீகத்தில் பட்டம் பெற்றவராம். எந்தக் கல்லூரி என்று தெரிய ஆவல்.
இப்போது, சோதிடம் பாடமாக பி ஏ, பி எஸ்ஸி பட்டங்கள் துவக்க வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு தலைவர் யோசனை தெரிவித்தது மட்டுமல்லாமல், அதற்கு சில பல்கலைக் கழகங்களும் ஆமாம் சாமி போட்டுள்ளனவாம். கோமாளித் தனங்கள் வக்கிரங்களுடன் கூடவே வருகின்றன. பக்கத்தில் பாகிஸ்தானில் ஜியா உல் ஹக் என்பவன் இப்படித் தான் மதக் கல்வி என்று பரப்பிய விஷ விதை ஆஃகப்கானிஸ்தானத்தில் வளர்ந்து நிற்கிறது. இருந்தும் மதம் பிடித்த இந்தக் குளறுபடியாளர்களுக்குப் புத்தி வருவதில்லை.
கிளி ஜோசியக் காரர்களை நான் மிகவும் மதிக்கிறேன். அவர்கள் வயிற்றுப் பாட்டுக்காகச் செய்கிற இந்தத் தொழில் ஒரு உளவியல் சமாதானம் மற்றும் கேளிக்கையாகிறது. ஆனால் சகுந்தலா தேவி (இவர் கணிதத்தில் மேதை வேறாம்) , பால ஜோசியர், புலியூர் பாலு, ‘ஆஸ்ட்ராலஜிகல் மேகஸின் ‘ ராமன் போன்றோரை மன்னிக்கவே கூடாது. இந்தப் போலிக்கு ஒரு மரியாதையை இப்படிப் பட்டவர்கள் ஏற்படுத்திக் கொடுத்தால். பாரதி சொன்ன இன்னொரு வாசகம் தான் ஞாபகம் வருகிறது. ‘படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் அய்யோன்னு போவான் ‘.
அடுத்தது என்னவென்று தெரியவில்லை. வாஸ்து சாஸ்திரம், சாய் பாபாவின் மாயமாய்ப் பொருள்களை வரவழைக்கும் கலை, சூனியம் வைத்தல், மந்திரித்தல், குறி சொல்லுதல், நாடி சோதிடம் , சோழி சோதிடம் , பேய் விரட்டுதல் என்று எல்லாவற்றையும் இனி எதிர்பார்க்கலாம்.
***
பா ஜ க வின் சினிமா விருதுகள்
தேசீய சினிமா விருதுகளை இனி பா ஜ க வின் சினிமா விருதுகள் என்று அழைக்க வேண்டும். இந்தக் கட்சியின் கோமாளிகள் எல்லாக் கலாசார மேடைகளிலும் புகுந்து விளையாடுகிறார்கள். நீதிபதிகளில் மூவர் மறுப்புத் தெரிவித்து ராஜினாமா செய்து விட்டார்கள். கெளதம் கோஷ் என்ற சிறந்த இயக்குனர் விருதைத் திருப்பி அளித்து விட்டார். செளமித்ர சாட்டர்ஜியும் விருது ஏதோ தனக்கு ‘ஆறுதல் பரிசு ‘ போலத் தரப் பட்டதாகக் கோபத்துடன் விருதைத் திருப்பி விட்டார். இவர் சத்யஜித் ராயின் படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர். இலக்கியப் பத்திரிகயும் வங்காளி மொழியில் நடத்துகிறார் என்று அறிகிறோம். ‘அபராஜிதா ‘ ‘சாருலதா ‘ ‘தேவதாஸ் ‘ போன்ற படங்களில் இவர் நடிப்பு அற்புதமானது. நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.
சினிமாவைப் பற்றி அரிச்சுவடி அறியாதவர்களுக்கு நீதிபதி ஸ்தானம் அளிக்கப் படிருக்கிறது. அவர்களின் ஒரே தகுதி பா ஜ கவுடன் உறவு கொண்டிருப்பவர்கள் என்பது தான். தமிழ்நாட்டிலிருக்கும் எனக்கு இது ஆச்சரியமே இல்லை. பெருங்கவிக்கோவிற்கும், கோவி மணிசேகரனுக்கும், கலைஞர் கருணாநிதிக்கும், ராஜாஜிக்கும் பரிசு அளித்து பரிசுகளை கேலிக்கூத்தாக்கியதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு இது ஒன்றும் புதிதல்ல.
***
ஷார்ஜாவிற்கு இந்திய அணி :
ஷார்ஜாவிற்குப் போய் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வேண்டுமா ? ஹ்ம் இது சும்மானாச்சுக்கும் விளையாட்டுத் தானே. இதனால் மனித உறவுகள் வளரும், பாகிஸ்தான் இந்தியாவுடன் சுமுக உறவு வளரும் என்றெல்லாம் சொல்கிறார்கள். இதில் எனக்கு உடன் பாடில்லை. பாகிஸ்தானுடன் நமக்குச் சுமுக உறவு இல்லை என்பதும், பல்வேறு பிரசினைகள் உள்ளன என்பதும் நிஜம். பாகிஸ்தான் – இந்தியா பந்தயம் ஷார்ஜாவில் மிகுந்த பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதால் தான் இந்த ஏற்பாட்டாளர்கள் தவிக்கிறார்களே தவிர பாகிஸ்தான் – இந்தியா உறவு பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலை இல்லை. பாகிஸ்தானுடன் விளையாடுவது நம் பெருந்தன்மையைக் காட்டும் என்றும் பிரசினைகள் இதனால் தீரும் என்றும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளத் தான் உதவுமே தவிர வேறெதற்கும் உதவாது.
***
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் நடக்கும் இழுபறி
சீனா அமெரிக்காவுக்கு நன்றிக் கடன் பட்டு அமெரிக்கா சொல்லும்படியெல்லாம் ஆடுவதுதான் எதிர்பார்க்கக்கூடியது. அமெரிக்க மூலதனமும், அமெரிக்க தொழில்நுட்ப உதவியும் இல்லையென்றால் சீனா இந்த அளவு முன்னேறி இருக்க முடியாது. வருடாவருடம் சுமார் 54000 சீன மாணவர்களுக்கு அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்க அமெரிக்க ஏற்பாடு செய்கிறது. டபிள்யூ டி ஓவில் சீனா நுழைய அமெரிக்கா உதவி இருக்கிறது (ஏன் அமெரிக்கா உதவ வேண்டும் என்று கேளுங்கள். தொழிலாளர்கள் சுதந்திர தொழிற்சங்கம் வைத்துக்கொள்ள உரிமையில்லாத நாடுகளுக்கு உலக தொழில் நிறுவனம்(WTO) அனுமதி மறுக்க வேண்டும். அதன்படி சீனா தன் தொழிலாளர்களுக்கு சுதந்திர தொழிற்சங்கள் அமைக்க உரிமை வழங்க வேண்டும் என்று உலக தொழில் நிறுவனம்(WTO) கேட்டது. சீனா மறுத்துவிட்டது. இதனால் அமெரிக்காவின் உதவியை நாடி அமெரிக்கா வாக்குறுதி கொடுத்து உலக தொழில் நிறுவனம்(WTO) சீனாவை உள்ளே அனுமதித்திருக்கிறது. நம்மூர் இடதுசாரிகள் இதற்கு ‘விளக்கம் ‘ அளித்தால் நன்றியுடன் இருப்பேன்).
ஆனாலும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் பனிப்போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சீனா அமெரிக்காவுக்கு எதிராக என்ன செய்தாலும் அமெரிக்கா சுற்றி வளைத்து மூக்கைத் தொடுகிறது. பெல்கிரேடில் இருந்த சீன தூதராலயத்தை அமெரிக்கா தாக்கி அழித்துவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்டது. அமெரிக்காவின் சில விமானபாகங்கள் சீனாவுக்கு கடத்த இருந்ததை அவ்வாறு தூதரகத்தை அழித்து தடுத்து நிறுத்தியது என்று ஒரு வதந்தி. சீனமக்கள் ‘தாமாக முன்வந்து ‘ அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் நடத்தியபின்னர், அமெரிக்கா மன்னிப்பும் பணமும் கொடுத்து சரிக்கட்டியது. பின்னர் ஈராக்கில் குண்டு வீசியபோது கூட ஒளிநாறு தொடர்பு தொழில்நுட்பத்தை நிறுவிக்கொண்டிருந்த சீனர்கள் வீட்டுக்குப் போனபின்னரே அமெரிக்க குண்டுகள் அங்கே விழுந்தன. பின்னர் இப்போது மிக வேகமான சீன விமானத்தை மெதுவாக போகும் அமெரிக்க விமானம் இடித்து சீன விமானம் காலி என்று பேசி அமெரிக்காவிடம் இருந்து மன்னிப்பு வேண்டுகிறது சீனா. அமெரிக்காவின் போர்வீரர்களை மீட்பதற்காக மன்னிப்பும் கொடுத்து அமெரிக்கா தன் விமானத்தை மீட்கும் என்றே தோன்றுகிறது.
புதிய பனிப்போர் தொடங்கி விட்டது என்றே தோன்றுகிறது.
சீனா ஒன்று புரிந்து வைத்திருக்கிறது. இன்றைய உலகத்தில் வாழ வேண்டுமெனில், வேண்டியது பணமும், பலமும்தான், இல்லையேல் அமெரிக்கா போன்ற நாடுகளின் முன் ஈராக் போலவும், யூகோஸ்லாவியா போலவும் கண்மண்தெரியாமல் அழிந்து சாகவேண்டியதுதான் என்று.
***
சிதம்பரத்தின் வருத்தம்
ப.சிதம்பரம் இந்தியா டுடேயில் டெஹல்கா விவகாரம் பற்றி எழுதியிருக்கிறார். அவர் ஒரு நல்ல பட்ஜெட்டை போட்ட பின்னர் அது ஓட்டெடுப்பு வருவதற்க்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் வீண் விவகாரம் கிளப்பி அரசை கவிழ்த்தது போலவே, இப்போதும் சின்ஹாவின் பட்ஜெட்டுக்கு முன்னர் இவ்வாறு செய்து கலவரம் செய்கிறார்கள் என்று எழுதியிருக்கிறார். அவர் கண்டு சொல்லும் pattern உண்மையா பொய்யா என்பதில் கருத்து வேறுபாடு இருக்கலாம். மற்றப்படி, மனசாட்சிக்கு உண்மையாக, வெளிப்படையாகப் பேசி, தெளிவாக எழுதும் சிதம்பரத்துக்காக தமிழர்கள் பெருமைப்படலாம். தமிழில் எழுதுவதில்லை என்பது என்னைப்பொறுத்தவரை ஒரு குறைதான்.
துக்ளக் படிப்பதை சமீப காலமாக நிறுத்தி வந்திருக்கிறேன், இருந்தும் அட்டைப்படத்தைப் பார்க்கும்படி நேர்ந்துவிட்டது. மூப்பனார் சந்தோஷமாக சைக்கிளில் போகிறார். பின்சீட்டில் உட்கார்ந்திருந்த சிதம்பரம் கழட்டிக்கொண்டு, ‘உயிர் இதுதான் ‘ என்று சொல்கிறார். இப்படிச் சொல்லும் சிதம்பரத்தை கருணாநிதி கிண்டல் அடிக்கிறார். சோவுக்காக பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை.
***
தேவிலால் மறைவு
விபிசிங்கும் சந்திரசேகரும் ஆடிய ஆடுபுலிஆட்டத்தின் முக்கிய பகடையாக இருந்த தேவிலால் மறைந்துவிட்டார். உழவர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக வட இந்தியப் பத்திரிக்கைகள் எழுதியிருக்கின்றன.
தேர்தல் பிரசாரத்தின் போது இவர் பேசியதெல்லாம் அட்டகாசம். ‘தண்ணீரிலிருந்து மின்சாரச் சக்தியை எடுத்துவிட்டு சக்தியில்லாத உதவாத தண்ணீரை கொடுக்கிறார் ராஜீவ்காந்தி. எனக்கு ஓட்டுப்போட்டால் நான் உங்களுக்கு சக்தியான தண்ணீர் தருவேன் ‘ என்று பேசி ஓட்டு வாங்கிய இவர் இறந்தது எனக்கு எந்தவிதமான இழப்பாகவும் தெரியவில்லை. அவரது குடும்பத்தினர் திண்ணையை படிக்க வாய்ப்பு இருந்தாலாவது அந்தக் குடும்பத்தினருக்கு அனுதாபம் சொல்வதில் நியாயம் இருக்கிறது. எனவே ஏன் வெட்டி இரங்கல் ? ஒன்றும் கிடையாது.
***
- குறைப் பிறவி
- மனப்பான்மைகள்
- தலைப்பிரசவம்…
- புதிய நந்தன்களும் பழைய பார்வைகளும் : கே ஏ குணசேகரனின் கருத்துகள் மீது ஒரு பார்வை
- இந்த வாரம் இப்படி – ஏப்ரல் 7 2001
- விருதுகள் பரிசுகள், பட்டியல்களின் அரசியல் : எதிர்வினை
- நாளை
- எங்கள் வீதி
- பூக்களின் மொழி
- அறிவியல் துளிகள்
- முட்டை மசாலா
- மீன் கபாப்
- விருதுகள் பரிசுகள், பட்டியல்களின் அரசியல் : எதிர்வினை