இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 4 2002

This entry is part [part not set] of 24 in the series 20020805_Issue

மஞ்சுளா நவநீதன்


பெரியார் பெயரும் ரஜனி படமும்

தமிழ் நாட்டின் அரசியல் மற்றும் பொதுவாழ்வில் மதம், கடவுள் நம்பிக்கை எப்போதுமே மையத்தில் இருந்து வந்திருக்கிறது. திரு வி கவும், பெரியாரும், சிங்காரவேலரும், குன்றக்குடி அடிகளும் தோளோடு தோள் சேர்த்து இயங்கிய சூழல் இருந்ததுண்டு.

கடவுள் நம்பிக்கை முழுக்க முழுக்க அரசியலில் பாய்ந்துவிடாமல் இருக்க திராவிட இயக்கங்கள் உதவின. எதிர்மறையான வடிவத்தில் திராவிட இயக்கங்கள் வைத்திருந்தன. ஆனால் எம் ஜி ஆர் காலம் தொடங்கி இது மீண்டும் மையத்திற்கு வரத் தொடங்கியிருக்கிறது. இது மதச்சார்பின்மையின் அடிப்படையை ஆட்டங்காண வைக்கும் விளைவுகளை ஏற்படுத்தவல்லது. எம் ஜி ஆர் மூகாம்பிகை கோயிலுக்கு வைரவாள் அளித்த நிகழ்ச்சி எம் ஜி ஆர் மீதான விமர்சனமாக முன்வைத்ததில் இந்த நிகழ்ச்சி முன்னுக்கு வந்தது. ஜெயலலிதாவின் காலத்திலே இது மிகமிகத் திறந்த முறையில், மதச்சார்பின்மையைப் புறந்தள்ளி முன்னுக்கு வந்துவிட்டது.நெடுஞ்செழியன் மறைவிற்குப் பின்பு, இன்று அ தி மு கவில் பகுத்தறிவு இயக்கத்தில் இருந்தவர்கள என்று சொல்லத் தக யாரும் இல்லை (காளிமுத்து தவிர). அரசியல் உலகில் ஜெயலலிதா செய்ததை ரஜனி சினிமாவில் செய்தார் – செய்கிறார். இந்தவிதத்தில் இருவரும் தமிழ்நாட்டின் பகுத்தறிவு இயக்கத்திற்கு இடப்பட்ட சவால் தான். ரஜனிக்கு முன்பே கூட தேவர் போன்றவர்கள் கடவுள் கருத்துகளைப் பரப்பியவர்கள் தான் என்றாலும், ஒருபுறம் செக்யூலர் சினிமாவும், ஒரு புறம் தேவரின் கடவுளை மையப் படுத்திய படங்களும் இருந்தன. ரஜனி படங்கள் இந்த வேறுபாட்டை அழித்துவிட்டன என்பதால் மிக ஆபத்தானவை என்று சொல்ல வேண்டும். எம் ஜி ஆர் மூகாம்பிகை பக்தராய் மாறியதை விமர்சனம் செய்த தி மு க , ராகவேந்திரா பக்தர் ரஜனியின் ஆதரவு வேண்டி , ரஜனியை விமர்சிக்காமல் அரவணைத்துக் கொண்டது. இதன் தொடர்ச்சி தான் ரஜனி பெரியாரின் பெயரை ராஜாஜி ஆனார் என்று அர்த்தம் வரும்படிப் பயன் படுத்திய நிகழ்ச்சி. பெரியார் பெயரை ரஜனி இந்த நோக்கில் பயன் படுத்தியது இந்தப் போக்கின் உச்சம். நல்லவேளையாக இது முளையிலேயே கிள்ளி எறியப் பட்டுவிட்டது.

ஒரு விதத்தில் பகுத்தறிவு இயக்கங்களுக்கு இது சோதனைக் காலம். பெரியார் சிலையை வைப்பதை உ பியில் பா ஜ க எதிர்க்கிறது. அம்பேத்கர் சிலையை தமிழ்நாட்டின் மேல்சாதியினர் அவமதிக்கின்றனர். இந்தப் போக்கு மிகக் கடுமையாய் எதிர்க்க வேண்டிய ஒன்றாகும். மாற்றுக் கருத்துகளுக்கு , முக்கியமாய் மதச்சார்பின்மை, மற்றும் பகுத்தறிவுக் கருத்துகளுக்கு எதிர்ப்பைக் கடுமை செய்வது மீண்டும் நம்மைக் கற்காலத்திற்குக் கொண்டு சென்று விடும்.

*****

பாகிஸ்தான் சர்வாதிகாரியும், ஸ்ரீலங்காவின் முஸ்லிம் மக்களும்

பாகிஸ்தான் சர்வாதிகாரி முஷரஃப் இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளை வலம் வந்து திரும்பியிருக்கிறார். பங்களா தேஷ் சென்று பாகிஸ்தானின் கடந்த கால அத்துமீறல்களுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். இது இதயபூர்வமானதா என்றால் நிச்சயம் இல்லை. இந்த அட்டூழியத்திற்குக் காரணமான எந்த பாகிஸ்தான் அதிபரும், ராணுவ அதிகாரியும் தண்டனை பெறவில்லை . டாக்காவில் உள்ள ‘யுத்தக் குற்றங்களின் உண்மை அறியும் கமிட்டி ‘ பல வருடங்களாக பாகிஸ்தான் இது பற்றி நடத்திய விசாரணைக் குழுவின் முன் வந்த உண்மைகளை அறியக் கேட்டு வருகிறது. இந்த அறிக்கை இன்னமும் தூங்குகிறது. உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன. அதில்லாமல் கிட்டத்தட்ட 30 வருடங்களாக , பங்களா தேஷில் விடப்பட்ட பாகிஸ்தானியர்களையும் திரும்பப் பெறவில்லை. எண்ணிக்கை சுமார் 250,000 பேர் இருக்கலாம். பங்களா தேஷ் போன்ற ஏழை நாட்டில் இது எப்படிப்பட்ட சுமை என்று சொல்லத் தேவையில்லை. இந்த நிலையில் முஷரஃப் வருத்தம் தெரிவித்தது போலித்தனமே.

ஸ்ரீலங்காவில் முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாய்க் குரல் கொடுத்து இன்னொரு பிரசினையை ஆரம்பித்து வைத்திருக்கிறார். ‘ பேச்சு வார்த்தைகளில் முஸ்லிம் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று ‘ இவர் கோரியிருப்பது சந்தேகத்திற்குரியது. ஸ்ரீலங்காவின் முஸ்லிம் மக்கள் திட்டவட்டமாய் முஷரஃபின் குறுக்கீட்டை நிராகரிக்க வேண்டும்.

*****

துணை ஜனாதிபதி – ஷிண்டே வருவாரா ?

துணை ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் ஷிண்டே வருவது தான் நல்லது. இவர் ஜெயலலிதாவின் ஆதரவைக் கேட்டிருக்கிறார். வைகோ, நெடுமாறன் கைது விவகாரத்தில் பா ஜ கவுடன் உள்ள உரசலினால் ஜெயலலிதா காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கக் கூடும்.

காங்கிரஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு வருவது இந்திய ஜனநாயகத்திற்கு நல்லது. அப்துல் கலாம் பாஜகவின் ஆதரவாளர் என்றாலும் சுய சிந்தனை உள்ளவர் தா. என்றாலும், நிர்வாகம் மற்றும் கொள்கைகள் முழுக்க பா ஜ க மயமாகாமல், ஓரளவு கொள்கைகளில் சமநிலை நிலவ காங்கிரஸ் உதவக் கூடும். இந்தப் பார்வையில் ஷிண்டே வருவது நல்லது.

***

***

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்