இந்திரா கோஸ்வாமியின் எழுத்துலகும் இந்திய ஞானபீட விருதும்

This entry is part [part not set] of 18 in the series 20010812_Issue

பாவண்ணன்


இலக்கிய கெளரவம் மிகுந்த இந்திய ஞானபீடப் பரிசு இந்த முறை அசாமிய எழுத்தாளரான இந்திரா கோஸ்வாமிக்குக் கிடைத்திருக்கிறது. அசாமிய எழுத்துகள் ஏற்கனவே தமிழ் வாசகர்களுக்கு ஓரளவு அறிமுகமானவை. சாகித்திய அகாதெமி வழியாகவும் நேஷனல் புக் டிரஸ்டு வழியாகவும் சில நுால்கள் வந்துள்ளன. இவை இந்தி வழியாக தமிழாக்கம் பெற்றவை. கதாவின் பரிசு பெற்ற சிறுகதை நுால்களில் சில அசாமியக் கதைகள் உண்டு. ஆங்கிலத்தில் வெளிவரும் இந்தியன் லிட்டரேச்சர் என்னும் இதழில் அவ்வப்பொழுது சில படைப்புகள் வெளியிடப்பட்டதுண்டு. மேலும் பல தருணங்களில் மாத இதழ்களில் சில சிறுகதைகள் ஆங்கிலம் வழியாகவும் இந்தி வழியாகவும் நம் மொழிக்கு வந்துள்ளன. தற்சமயம் ஞானபீடப் பரிசு பெற்ற இந்திரா கோஸ்வாமியின் சுயசரிதையின் இந்தி மொழிபெயர்ப்பு 1990 ஆம் ஆண்டு வந்த சமயத்தில் அதன் சில பகுதிகளை உடனடியாகத் தமிழில் மொழிபெயர்த்துச் சுபமங்களாவில் வெளியிட்டவர் சரஸ்வதி ராம்நாத். துக்கமும் வேதனையும் மனஉறுதியும் வெளிப்பட்ட அப்பகுதிகளைத் தமிழ் இலக்கிய வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்திரா கோஸ்வாமிக்கு இணையான எழுத்துகளாக மலையாளத்தில் கமலா தாஸையும் கன்னடத்தில் எம்.கே.இந்திராவையும் சொல்லலாம்.

1943ல் பிறந்த இந்திரா கோஸ்வாமியின் எழுத்துலகம் பெண்களின் துயரம்தான். ஆனால் அதை அவர் விவரிக்கும் விதம் அந்த எழுத்தை இலக்கியமாக்குகிறது. முதலில் அவர் சிறுகதைகளையே அதிகம் எழுதினார்.

பெண்களின் தனிமைத் துயரையும் விதவை நிலையின் கொடுமையையும் மிகைப்படுத்தாத குரலில் பதிவு செய்தார். (சொந்த வாழ்வில் திருமணமான பதினெட்டு மாதங்களில் கணவனை இழந்தவர். பிறகு திருமண வாழ்வில் விருப்பமின்றி இலக்கிய வாழ்வை மேற்கொண்டவர்) அசாமிய இலக்கிய வாசகர்கள் இவரை அன்புடன் பெரியக்கா என்று அழைக்கிறார்கள். அவர்கள் மனத்தில் அந்த அளவு அழுத்தமான இடத்தைப் பெற்றவர் இவர். சிலகாலம் தில்லிப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பிறகு எழுதுவதே அவர் வாழ்வாயிற்று. அசாமிய மொழியிலிருந்து அதிகமும் பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர் இவரே. 1972ல் இவரது முதல் நாவல் வெளிவந்தது. அந்த நாவல் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு நடுவே ஜினாப் என்னும் இடத்தில் பாலம் கட்டப்பட்ட சமயத்தில் அங்கே பணிபுரிந்த பெண் தொழிலாளர்கள் பட்ட துயரங்களைப் பதிவு செய்கிற ஆவணமாயிற்று. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். எல்லா நாவல்களிலும் பெண்களின் வாழ்வே மையப்பொருளாக இருந்தது.

இவரது முக்கியமான படைப்பு ஒரு ஆராய்ச்சி நுாலாகும். ராமாயணம்-கங்கையிலிருந்து பிரம்மபுத்திரா வரை என்னும் அந்த நுாலில் 16ம் நுாற்றாண்டில் மாதவ கண்டாள என்னும் அசாமியக் கவிஞர் படைத்த ராமாயணத்தின் மீது பெண்ணிய நோக்கில் இவர் நிகழ்த்திய ஆய்வே இந்த நுாலாகும்.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்