சின்னக்கருப்பன்
சமீபத்தில் இரண்டு முக்கியமான விஷயங்கள் நடந்துள்ளன. இது பற்றி வழக்கம் போல தமிழ்ப் பத்திரிக்கைகள் ( ஏன் அனைத்து இந்தியப் பத்திரிக்கைகளும் தான்) உதாசீனம் செய்துவிட்டன.
முதலாவது விஷயம் திரிபுராவில் நடந்தது. இங்கு இருக்கும் தீவிரவாதிகள் பழங்குடியைச் சேர்ந்தவர்கள். இது நமது இடதுசாரிகளும், தமிழ் தேசீயவாதிகளும் ஆதரிக்கும் ஒரு அமைப்பு. ஆனால் இங்கு ஆட்சியில் இருப்பது இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி (ஜோதிபாசுவின் கட்சி). ஆட்சியில் பழங்குடியினரும், வங்காளிகளும் சமமாகவே இடம்பெற்றிருக்கிறார்கள். 1980இல் இங்கு கிரிஸ்தவ மதம் பிரச்சாரம் செய்வதற்காக நியூஸிலாந்திலிருந்து இங்கு ஒரு பிரச்சாரக்குழு வந்தது, அதன் பின்னர் 1984 வரை இவர்களால் மதம் மாற்ற முடிந்தது சுமார் 2000 பழங்குடியினரையே. ஆனால் இப்போது ஏராளமான பழங்குடிகள் கிரிஸ்தவராக இருக்கிறார்கள். எப்படி சாத்தியமாயிற்று இது ?
இவ்வாறு மதம் மாற்றப்பட்ட பழங்குடியினரே தீவிரவாதத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். சென்ற வார ஆரம்பத்தில் பிபிஸியில் ஒரு செய்தி வந்தது. அதன் படி இந்த கிரிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த மதகுருக்கள் தீவிரவாதிகளுக்கு வெடிமருந்துகளும் பணமும் கொடுத்து வருகிறார்கள் என்பது. இந்த தேவாலயத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தீவிரவாதிகள் பழங்குடிகளை அவர்கள் காலம் காலமாக செய்து வந்த சரஸ்வதி பூஜை போன்றவற்றை நிறுத்தும்படி ஆணையிட்டிருக்கிறார்கள். தவறி பூஜை செய்பவர்கள் கொலையும் தண்டனையும் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். கட்டாயமாக கிரிஸ்தவ மதத்தில் இணையும் படி வற்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். இதனால் அதி தீவிரமாக கிரிஸ்தவ மதம் திரிபுராவில் வளர்ந்திருக்கிறது.
மதமாற்றத்துக்கு வன்முறை உதவப்பட்டிருக்கிறது. இது மிகவும் கேவலமானது. உயிர்ப்பயத்தின் காரணமாக இங்கு சாதாரண பழங்குடிகள் கிரிஸ்தவ மதத்திற்கு மாறியிருக்கிறார்கள். மதமாற்றத்துக்கு எத்தனையோ காரணங்கள். அதில் வன்முறையும் ஒன்று என்று சிலர் இதை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். இவ்வாறு நியாயப்படுத்துபவர்களுக்கு பாஜகவை விமர்சிக்க எந்த தகுதியும் கிடையாது என்பதை மறந்துவிடுகிறார்கள்.
காந்தி நவகாளி யாத்திரையின் போது உயிர்தப்பிப்பதற்காக முஸ்லீம் மதத்துக்கு மாறிய இந்துக்களை வன்மையாக கண்டித்தார். அவ்வாறு கண்டித்ததற்காக அவரை இந்து தீவிரவாதி என்று இடதுசாரிகள் அவரை முத்திரை குத்தினார்கள். (அதே நேரம் முஸ்லீம்களைக் கொன்ற இந்துக்களிடம், அனாதையான முஸ்லீம் சிறுவர்களை முஸ்லீம்களாகவே வளர்க்க அவர் கோரியதை செளகரியமாக மறந்துவிட்டார்கள்). அதே இடதுசாரிகள், பாஜக இன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மறு பார்வை பார்ப்பதனால், பாஜக இந்து ராஷ்டிரா என்று இந்தியாவை மாற்றிவிடும் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
தடி எடுத்த முஸ்லீம் தீவிரவாதிகளையும், கிரிஸ்தவ தீவிரவாதிகளையும் தண்டல்காரர்கள் என்று ஒத்துக் கொண்டால், தடி எடுக்கும் இந்து தீவிரவாதிகளையும் தண்டல்காரர்கள் என்று இந்த இடதுசாரிகள் ஒத்துக்கொண்டுதானே ஆகவேண்டும்.
இடதுசாரிகள் என்று நான் இங்கு சொல்வது இந்தியாவில் பத்திரிக்கை துறையில் இருக்கும் பெரும்பாலார்களைத்தான். முக்கியமாக இந்து, எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகளில் இருக்கும் பத்திரிக்கையாளர்கள் கிரிஸ்தவ தேவாலயத்தில் திருடு நடந்தால் கூட அது பாஜக செய்ததுதான் என்று எழுதுவது கிரிஸ்தவர்களுக்கு செய்கின்ற நன்மை அல்ல என்பது அவர்களுக்கு புரிவதில்லை. ரோமின் பிரதிநிதியாக இங்கு இருக்கும் ஆலன் டி லாஸ்டிக் அவர்களும் இதேபோல் பேசுவதும் கிரிஸ்தவர்கள் இந்தியாவில் கொடுமை படுத்தப்படுகிறார்கள் என்பது போன்ற ஒரு பிரமையை அமெரிக்காவிலும் மற்ற மேலைய நாடுகளிலும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். கிரிஸ்தவ பிரதிநிதிகளாக தங்களை வெளிநாடுகளில் காண்பித்துக் கொள்ளும் ஜான் தயாள் போன்றவர்களும் அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் பாஜக என்ற இந்து தீவிரவாத கட்சி கிரிஸ்தவர்களை தினமும் கொன்று கொண்டு இருக்கிறது என்று பேசிவருகிறார்கள்.
இந்தியாவில் நடப்பதோ வேறு.
***
இரண்டாவது விஷயம் இந்தியாவில் அக்னி தாண்டவமாடுவது பற்றியது.
இந்தியாவில் பெய்யும் ஒரு வருடத்திய மழை கொண்டு இருபது வருடங்களுக்கு தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருக்கலாம் என்பது ஒரு கணக்கு. ஆனாலும் ஏன் ஒரு வருடம் பருவ மழை பொய்த்தால், அந்த வருடமே தண்ணீர் பஞ்சம் என்றும், வறட்சி என்றும், பயிர்கள் கெட்டுப்போய்விட்டன என்றும் பேசுகிறார்கள் ?
உண்மை என்னவென்றால், அதி நவீன நகரமயமாக்கல், இந்திய நீர்வளங்களை நாசம் செய்துவிட்டது என்பதுதான்.
உதாரணமாக தமிழ்நாட்டில் இருக்கும் பல ஏரிகள் மழைக்காலத்தில் தண்ணீரை சேமித்து மழை அற்ற காலங்களில் தண்ணீர் கொடுக்க பழங்காலத்திய மன்னர்களாலும் சமூகங்களாலும் கட்டப்பட்டவை.
அது நகரமயமாக்கலில் ஏரிகள் தூர்க்கப்பட்டு அங்கு வீடுகள் கட்டப்பட்டன. இதற்குள் ஏராளமான ஊழலும் உண்டு. உதாரணமாக சென்னையில் இருக்கும் பெரிய ஏரிகள் இரண்டு தூர்க்கப்பட்டு முன்னாள் அமைச்சர் ஒருவர் சொந்தமாக்கிக்கொண்ட வரலாறு போரூரில் இருக்கும் பலருக்குத் தெரியும்.
சிவகாசியிலிருந்து சென்னை வரை, கன்னியாகுமரியிலிருந்து ஈரோடு வரை அமைச்சர்கள் ஆக்கிரமித்துக் கொண்ட ஏரிகளின் எண்ணிக்கை அளவிட முடியாதது. இந்த ஆக்கிரமிப்பு மிகச் சமீபத்தில், எம்ஜியார் ஜெயலலிதா காலத்தில்தான் நடந்தது என்பதும் பெரும்பாலான பத்திரிக்கையாளர்களுக்குத் தெரியும்.
எதையோ காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு, முக்கியமானவற்றை இந்த பத்திரிக்கையாளர்கள் அழித்துவிட்டார்கள்.
போபர்ஸ் ஊழல் பற்றி விலாவாரியாக ஸ்விட்சர்லாந்துக்கு ஆட்களை அனுப்பி ஊழல் கட்டுரைகள் வெளியிட்டு பெயரெடுத்த மவுண்ட்ரோடு பத்திரிக்கையான இந்து, சற்றே பஸ்ஸில் போகும் தூரத்தில் இருக்கின்ற போரூரில் நடந்த அடாவடியை கண்டுகொள்ளவில்லை. இந்து ஆபீசுக்கு தண்ணீர்வரவில்லை என்பதுகூட ‘லோக்கல் ‘ விஷயம் அது இந்துவில் இடம் பெறாது. சோ சொன்னது போல, இந்து கவலைப்படுவதெல்லாம் ஜெர்மனியில் செத்துப்போன கொசு பற்றித்தான்.
இது பற்றி ஒரு விவாதம் தமிழகப் பத்திரிக்கைகளிடம் இல்லை. ஊழல் விசாரணை தமிழக அரசிடமிருந்து இல்லை. ஊழல் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் இன்று திமுக ஆதரவாக இருக்கிறார்களா என்ன ?
***
திண்ணை
|