இதயம் கூடவா இரும்பு ?

This entry is part [part not set] of 17 in the series 20010629_Issue

சேவியர்.




இதயம் இரயிலை விட அதிகமாய்
தட தடக்கிறது.
தலைப்புச் செய்தியின் தலையில்
தடம் புரண்ட இரயின் படம்.

மழை வந்து மனசை நனைத்த போது
இதயம் முழுதும் பறந்தன
ஓராயிரம் பட்டாம் பூச்சிகள்,
மழை யின் கரங்கள் இரயிலை இழுத்தபோது
அத்தனை பூச்சிகளும் செத்துத் தொலைந்தன.

மாலை இரவைத் தேடி ஓடிய கணம்
ஆற்றுக்குள் பாய்ந்து
தற்கொலை செய்ய
இரயிலுக்கு எப்படி மனம் வந்தது ?

எத்தனை முகங்கள்
சாரலடிக்கும் சன்னலோரம் அமர்ந்து
வேர்க்கடலை கொறித்துக் கொண்டிருந்தனவோ ?

எத்தனை குழந்தைகள்
அன்னையின் மடியில் தலைசாய்த்து
இளைப்பாறிக் கொண்டிருந்தனவோ ?

முட்டி முட்டி, மோதி மோதி
விடுப்புக் கிடைத்த வெற்றிக் களிப்பில்
எத்தனை மனங்கள்
ஊர்க் கனவில் உறங்கிக் கிடந்தார்களோ ?

அத்தனை கனவுகளையும்
ஒற்றைத் தாழ்ப்பாளில் கொலை செய்ய
இரட்டைத் தண்டவாளங்களுக்கு
இதயம் கூடவா இரும்பு ?

நாளை.,
மழை ஊற்றிய பச்சையத்தின் புண்ணியத்தில்
பொட்டல் காடுகள் கூட பூக்கள் விடுக்கும்.
ஆனால்
ஆயுள் கரைத்த அந்த ஆற்றுக் கரையில் மட்டும்
பிணங்கள் மட்டுமே படுத்துக் கிடக்கும்


(கேரள ரயில் விபத்தில் இறந்தவர்களுக்காக)

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்