இங்கே இப்ப நல்ல நேரம்-முத்துலிங்கத்தின் வெளி

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

மு இராமனாதன்


இங்கே இப்ப நல்ல நேரம்-முத்துலிங்கத்தின் வெளி

மு இராமனாதன்

அ.முத்துலிங்கத்தின் ‘அங்கே இப்ப என்ன நேரம்?’ எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் கடந்த ஆண்டு வெளியானது. இதன் தலைப்புக் கட்டுரை மார்ச் 2004 ‘உயிர்மை’ இதழில் வந்தது. படித்து முடித்ததும் யாரோடேனும் பகிர்ந்து கொள்ள மனம் பரபரத்தது. இந்தக் கட்டுரை பற்றி இங்கே எழுதுவதற்கு இதன் ஆழமும் செய்நேர்த்தியும் ஒரு காரணம். தனிப்பட்ட முறையில் எனக்கும் இந்தக் கட்டுரைக்கும் ஏற்பட்டுப்போன தொடர்பு மற்றொரு காரணம். இரண்டாவதை முதலில் சொல்கிறேன்.

ஹாங்காங்கில் செய்தித்தாள்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டுத்தான் கொடுப்பார்கள். அவ்வளவு கனம். தலைப்புச் செய்திகள், பிராந்தியச் செய்திகள், சீனச் செய்திகள் வழியாக ஆசியா-பசிபிக், தெற்காசியா மார்க்கமாக சர்வ தேசங்களையும் கடந்து தலையங்கம் மற்றும் செய்திக் கட்டுரைகளை எட்டும் போது 16 பக்கங்களைக் கொண்ட முதல் பகுதி முடிந்திருக்கும். இன்னும் நகரச் செய்திகள், கலை நிகழ்வுகள், வாழ்க்கை, விளையாட்டு, வணிகம், வேலைவாய்ப்பு- எல்லாவற்றுக்கும் தனித்தனிப் பகுதிகள். மேலும் ரியல் எஸ்டேட், தொழில்நுட்பம், கல்வி, குதிரைப் பந்தயம்- என்று வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்புப் பகுதி வேறு. எல்லோராலும் எல்லாவற்றையும் படிக்க முடியாது என்று நினைத்துக் கொள்வேன். ஆனபடியால் அதில் அடிக்கடி வரும் சுயமுன்னேற்றம், சமையல் கலை, குழந்தை வளர்ப்பு, குடும்ப உறவுகள் இன்னோரன்ன கட்டுரைகளை ஏறெடுத்தும் பாரேன். இதெல்லாம் சொல்லித் தெரிவதில்லை என்பது என் கட்சி. ஆனால் ஒரு சோம்பலான ஞாயிற்றுக் கிழமை பிற்பகலில், பெரிய முத்துத் தோடணிந்த ஒரு வெள்ளைக்கார அம்மாள் எழுதியிருந்த குழந்தை வளர்ப்புக் கட்டுரையொன்றை வாசிக்கும்படியானது. அதில் டீன் ஏஜ் பிள்ளைகளை வசப்படுத்த அவர் ஓர் ஆலோசனை சொல்லியிருந்தார். வாரக் கடைசிகளில் சாப்பாட்டு மேசையில் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் தாங்கள் படித்தவற்றில் அவரவருக்குப் பிடித்த பகுதிகளை வாசிக்க வேண்டும். இதனால் பரஸ்பர புரிதல் அதிகரிக்குமாம்.

யோசனை எனக்குப் பிடித்துப் போனது. இரண்டு தினங்கள் முன்பு படித்திருந்த ‘அங்கே இப்ப என்ன நேர’த்தை படித்துக் காட்டலாம் என்று உடனேயே தோன்றியது. தமிழ் படிப்பதற்கு டிமிக்கி கொடுக்கும் பிள்ளைகளைத் தமிழ் வாசித்துக் கேட்பிக்கலாம் என்பது உபரி நன்மை. பிள்ளைகள் முதலில் இணங்கவில்லை. அவர்களும், அவர்களுக்குப் பிடித்தமானதைப் படிக்கலாம், அதை சிரத்தையோடு கேட்பேன் என்று ஆசை வார்த்தைகள் சொன்னேன். மனைவி அமைதியாக இருந்தார். அடுத்து வந்த வெள்ளிக்கிழமை இரவு வாசிப்புப் படலத்திற்காக நாள் குறிக்கப்பட்டது. ஹாரி பாட்டரின் மாயாஜால வகுப்பறைக்கும், ராஜ குமாரிக் கனவுகளோடு மிதக்கும் ஒரு டீன் ஏஜ் பெண்ணின் டயரிக் குறிப்புக்கும் பிற்பாடு என் முறை வந்தது. நான் கட்டுரையை வாசிக்கலானேன். முத்துலிங்கம் தம்பதிகள் சூடான் நாட்டில் புதிய வீடொன்றில் குடியேறியபின் புத்தகங்களை ஷெல்·பில் அடுக்குவதிலிருந்து கட்டுரை துவங்குகிறது. மனைவி புத்தகங்களை அடுக்குவதை முத்துலிங்கம் கிண்டல் செய்கிறார். பிள்ளைகள் ஆர்வத்தோடு கேட்கத் துவங்கியிருந்தனர். ஆனால் நான் எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்ப்பு வந்தது.

நான் சிலவற்றை மறந்து போயிருந்தேன். அப்போதுதான் நாங்கள் வீடு மாறியிருந்தோம். சிறிய வீடுகளில் வாழ்வதற்கு ஹாங்காங் மக்களிடம் தான் பாடம் படிக்க வேண்டும். எந்தப் பொருளும் இடத்தை அடைப்பதில்லை. துணி காயப்போடும் மூன்றடுக்கு நிறுத்தம், இஸ்திரி மேசை, உபரி நாற்காலிகள், முக்காலிகள் எல்லாம் வேலை முடிந்ததும் சாதுவாக மடங்கிக் கொள்ளும். சாப்பாட்டு மேசை இரண்டு பேருக்கு ஒரு நீளத்தில் இருக்கும், அதுவே நான்கு பேருக்கும் ஆறு பேருக்கும் ஏற்ற மாதிரி நீளும். கட்டில்களுக்குக் கீழ் காலியிடங்கள் இரா; இழுப்பறைகள் இருக்கும்; வேனல்க் காலத்தில் குளிர் காலத்தின் தடிமனான ஆடைகள் அங்கு பதுங்கும். இந்தத் தீப்பெட்டி வீடுகளில் ஒரு சதுர அடி போலும் வீணாக்காமல் பயன்படுத்துவதில் ஹாங்காங் மக்கள் வல்லுநர்கள். ஆயினும் நாங்கள் குடியேறிய வீட்டில் படுக்கைக்கு இரண்டு பக்கமும் நீளவாக்கில் இடமிருந்தது. இதில் ஒரு பக்கம் பொருத்துவதற்கு ஏற்ற புத்தக ஷெல்·ப் ஒன்றைக் குறைந்த விலையில் வாங்கியிருந்தேன். நான் குச்சு வீட்டிற்குள் சாமான்களை வைத்து அடைப்பதாக மனைவி எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். கட்டுரையை வாசித்தபோது நான் இதை மறந்து போயிருந்தேன். மனைவி நினைவு வைத்திருந்தார். முத்துலிங்கத்தின் குரலில் ஒளிந்து கொண்டு மனைவியைக் கிண்டல் செய்வதுதான் என் நோக்கம் என்று குற்றம் சாட்டினார். புத்தகங்களை அடுக்குவதற்குக் கட்டுரையில் முக்கிய நோக்கமிருக்கிறது, அது கட்டுரையை முழுமையாக வாசித்தால் புரிபடும் என்று நான் சொன்னதை அவர் நிர்தாட்சண்யமாக மறுதலித்தார். வாசிப்புப் படலம் எப்போதைக்குமாக நின்று போனது. நாளிதழ்க் கட்டுரை தரும் யோசனைகளிலிருந்தெல்லாம் குழந்தை வளர்ப்புச் சாத்தியமில்லை என்பது மற்றுமொரு முறை நிரூபணமானது.

கடந்த ஆண்டு முத்துலிங்கத்தின் கட்டுரைத் தொகுப்பு நூலாக வந்தது. ‘அங்கே இப்ப என்ன நேரம்?’ என்பது புலம் பெயர் வாழ்வனுபத்தைச் சொல்கிற கட்டுரைத் தொகுப்பு மொத்தத்திற்கும் பொருத்தமான தலைப்பாக அமைந்தது. சில மாதங்களுக்கு முன்னர் நான் இந்த நூலை வாங்கினேன். சாப்பாட்டு மேசையில், படுக்கையில், வரவேற்பறையில், நான் போகிற இடங்களில் எல்லாம் நூலையும் சுமந்து திரிந்தேன். முத்துலிங்கத்தின் இலங்கைத் தமிழில் ‘காவியபடியே’ திரிந்தேன். மனைவி நூலை அவ்வப்போது புரட்டினார். குறிப்பிட்ட கட்டுரையை அவர் ஒரு நாள் வாசிப்பதைக் கவனித்தேன். இரண்டு நாள்களுக்குப் பிறகு சொன்னார்: “முத்துலிங்கம் அந்தக் கட்டுரையில் மனைவியை இளக்காரமாகப் பேசுகிறார் என்பது உண்மைதான். ஆனால் புத்தகங்கள் அடுக்குவது கட்டுரைக்கு முக்கியமானது என்பதும் உண்மைதான்”. இந்தக் கட்டுரைக்கும் எனக்குமான தொடர்பு இறுகியது இப்படித்தான்.

ஆரவாரமில்லாத எளிய நடையில் நேராகச் சொல்லப்படுகிற கட்டுரை இது. மணற்கேணி போல ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதிய பொருள்கள் ஊறி வருகின்றன. கீழே கட்டுரையின் சாரத்தைத் தர முயற்சிக்கிறேன்.

***************
முத்துலிங்கத்திற்கு சூடானுக்கு மாற்றலாகிறது. அவர் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் பதினொரு கயிற்றுக் கட்டில்கள் இருக்கின்றன. வீட்டின் சொந்தக்காரர் புத்தக செல்·ப் ஒன்றையும் தருகிறார். அவருடைய மனைவி இரண்டு பெரிய பெட்டிகளில் வந்திறங்கிய புத்தகங்களை அடுக்கித்தர முன்வருகிறார். “தொக்கையான புத்தகங்கள் அடி செல்·பிலும், பாரம் குறைந்தவற்றை மேல் தட்டிலும்” அடுக்குகிறார். இதில் புத்தகங்களைத் தேடி எடுப்பது எவ்வளவு “பிரயாசையான சங்கதி” என்று ஆசிரியர் விலாவாரியாக விளக்குகிறார். ஆனால் அவர் மனைவி அதைக் காதில் போட்டுக் கொள்வதில்லை.

முத்துலிங்கம் தம்பதிகள் தொட்டியில் மீன் வளர்க்கிறார்கள்- சூடானில் பலரும் அதைச் செய்ததால். நைல் நதி மீன்களும் பெரிய செதில் மீன்களும் அவருடைய தொட்டியில் நீந்துகின்றன. “மீன்களை நாயைப் போல உலாத்த அழைத்துப் போகத் தேவையில்லை” என்கிறார் ஆசிரியரின் அலுவலக நண்பர். பெயர்- அலி. பங்களாதேஷ்காரர். சுறுசுறுப்பானவர். “அலியின் மனைவி சிறு உடல் கொண்ட அழகி”. அலங்காரப்பிரியை. சோம்பல் பெண். அலியின் ஐந்து வயது மகளின் பெயர் நுஸ்ரத்.

அலி அடிக்கடி வெளிநாடுகள் போவார். ஈமெயில் இல்லாத அந்தக் காலத்தில், டெலக்ஸில் செய்திகள் அனுப்புவார். தொலைபேசியிலும் அழைப்பார். அது நள்ளிரவாக இருக்கும். “அங்கே இப்ப என்ன நேரம்” என்று கேட்பார். மன்னிப்புக் கோருவார். பின் உரையாடலைத் தொடருவார். ஒவ்வொரு முறையும் இதே கதை. ஒரு முறை ஆசிரியர் அலியிடம் சொல்கிறார்: “நீங்கள் கிழக்கில் இருக்கும்போது உங்களுக்கு சூரியன் முதலில் உதயமாகிவிடும். அப்போது மேற்கில் இருக்கும் எனக்கு இன்னும் விடியாமல் நடுச்சாமமாக இருக்கும். ஆகையால் உங்கள் நேரத்தில் சில மணித்தியாலங்களைக் கழித்தபிறகே என் நேரம் வரும்”. சர்வதேசத் தேதிக்கோடு பற்றிப் போதிக்கவும் செய்கிறார். ஆனால் அலிக்கு நேர வித்தியாசம் பிடிபடுவதில்லை.

அலிக்கு திடீரென ஜப்பானுக்கு மாற்றலாகிறது. அவர் முதலில் வீட்டைக் காலி செய்துவிட்டுப் போகிறார். அவர் மனைவியும் நுஸ்ரத்தும் ஒரு வாரம் கழித்துப் போவதாக ஏற்பாடு. இந்த ஒரு வாரமும் முத்துலிங்கம் வீட்டில் தங்குகிறார்கள். துடிதுடியென இருக்கும் நுஸ்ரத்தைப் பற்றி ஆசிரியர் சொல்கிறார்: “நுஸ்ரத் எப்பவும் சிவப்பு சொக்ஸ் அணிந்த கால்களில், சில்லுப் பூட்டி வைத்ததுபோல் அவசரம் காட்டுவாள்….அவளைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குள் துயரம் பொங்கும். நுஸ்ரத்தின் தாயார் அவளைக் கொஞ்சுவது கிடையாது. அவளுக்கு உடுப்பு அணிவித்து சரி பார்த்ததையோ, தலை சீவி விட்டதையோ நாங்கள் பார்க்கவில்லை. ஆனால் நுஸ்ரத் ஏவிய வேலைகளைச் செய்வதற்கு நாங்கள் இருவரும் எப்பவும் தயார் நிலையில் இருந்தோம்”.

புத்தக அடித்தட்டில் உள்ள தொக்கையான, இப்போது பதிப்பில் இல்லாத, ஓவியங்கள் மிகுந்த உலக சரித்திரப் புத்தகமொன்று நுஸ்ரத்துக்குப் பிடித்துப் போகிறது. அதை எடுத்து வைத்து மணிக்கணக்காகப் பார்த்துக்கொண்டே இருக்கிறாள். அவர்கள் வீட்டில் இருந்த ஒரு வாரமும் நுஸ்ரத் வீட்டில் உண்டாக்கும் சேதங்கள் அநேகம். எனினும் இவர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. அவர்கள் புறப்படும் அன்று மணல்புயல் அடிக்கிறது. காரை மூடிய மணலை அகற்றி, விமான நிலையத்திற்குப் புறப்படுகிறார்கள். விமான அறிவிப்பு வந்ததும் நுஸ்ரத் தம்பதிகளைக் கட்டிப் பிடித்து அழுகிறாள். இளகிப்போன ஆசிரியருக்குத் தோன்றுகிறது: “இந்தக் குழந்தைக்கு நாங்கள் என்ன செய்தோம்- திறமான இரண்டு வேலைக்காரர்போல் செயல்பட்டது தவிர..”. வீட்டிற்குத் திரும்பும்போது கழுதையின் மீது தூக்கத்தில் தலை கவிழ்ந்தபடி வரும் ஒரு பால்காரன் எதிர்ப்படுகிறான்.

அடுத்த நாள்தான் ஆசிரியருக்குப் பொக்கிஷமான உலக சரித்திரப் புத்தகத்தைக் காணவில்லை என்பதைக் கண்டறிகிறார்கள். மணல்புயல் உண்டாக்கிய “மெல்லிய தூசியில் புத்தகத் தட்டுக்கு முன் சிறு பாதச் சுவடுகள் வந்து, திரும்பிப்போன தடங்கள்”. நுஸ்ரத் திருடியிருப்பாள் என்பது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. முத்துலிங்கத்தின் மனைவி இதை அலியிடம் சொல்ல வேண்டும் என்கிறார். ஆனால் அப்படியே விட்டுவிடவே ஆசிரியர் விரும்புகிறார். “அந்தக் குழந்தையைக் குற்றம் சொல்ல யாருக்கு மனது வரும்”.

ஆறு மாதங்களுக்குப் பிறகு அலியிடமிருந்து விடிகாலை தொலைபேசி வருகிறது. எதிர்பாராத செய்தி. “நுஸ்ரத்தை இப்போதுதான் அடக்கம் செய்துவிட்டு வருகிறோம்” என்கிறார் அலி. அன்று காலை எப்போதும்போல் பள்ளிக்கூடம் போயிருக்கிறாள். பள்ளியில் மயக்கம் போட்டு விழுந்திருக்கிறாள். உடனே அவசரப்பிரிவுக்கு கொண்டு போயிருக்கிறார்கள். மூளையிலே ரத்த நாளம் வெடித்து விட்டது என்கிறார்கள்.

“நான் எடுத்த படம் ஒன்று இருக்கிறது. நுஸ்ரத் சூரியனைப் பார்த்தபடி கண்களைச் சரித்துக்கொண்டு நிற்கிறாள்…என்னுடைய நிழல் அவள்மேல் விழுந்து அந்தப் படத்தில் அவளுடன் இருக்கிறது. நான் இரவு உணவு சாப்பிட்டபோது அவள் அங்கே பாத்ரூமில் நுனிக்காலில் நின்று பிரஷ் பண்ணி, கோணல்மாணலாகத் தலைசீவி, ஒரு புதிய நாளைத் தொடங்கியிருக்கிறாள். பின்னிரவில் நிலாபட்டு என்னிடம் வந்துசேர்ந்தபோது, அவள் சீருடை போட்டு சிவப்பு சொக்ஸ் அணிந்து, பள்ளிக்கூடம் போயிருக்கிறாள். நான் நிம்மதியான நித்திரைக் கனவுகளில் திளைத்தபோது அவள் இறந்துவிட்டிருக்கிறாள்”.

“அதன் பிறகு, ஒரு தேசத்தையும் தீண்டாத சர்வதேசத் தேதிக்கோடு இடையிலே விழுந்ததுபோல எங்களுக்குள் பெரும் மௌனம் இறங்கிவிட்டது. அலியின் நடுநிசித் தொலைபேசிகள் நின்றன. திருட்டுப்போன அதே சைஸ் மொத்தையான வேறு ஒரு புத்தகத்தை என் மனைவியால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனபடியால், என்னுடைய புத்தக செல்·பில் செவ்வக வடிவ ஓட்டையொன்று, நாங்கள் சூடானை விடும்வரைக்கும், அப்படியே நிரப்பப்படாமல் இருந்தது. உதிர்ந்து போன கிழவரின் முன்பல்லைப்போல, எப்பவும் ஞாபகப்படுத்தியபடி”.

**************

இந்தக் கட்டுரை நகைச்சுவையில் நடை போட்டு நெகிழ்ச்சியில் நின்றடைகிறது. எளிய சொற்களால் செதுக்கிச் செதுக்கிச் செய்யப்பட்டிருக்கிறது. கீழே வருவது இந்தக் கட்டுரையை ஒரு வாசகன் தொட்டுணர்ந்து நேடிய அனுபவம்.

கட்டுரையின் களம் நுட்பமாக விரிகிறது. பரந்து கிடக்கும் பாலைவனங்கள் மிகுந்த சூடானில்தான், தெற்கு வடக்காக வகிடெடுத்தது போல் தேசத்தை நெடுகிலும் நனைத்தபடி உலகின் நீளமான நைல் நதியும் ஓடுகிறது. பாலை வெளியின் மணல்புயலும் நைல் நதியின் மீன்களும் கதைப் போக்கில் இடம் பெறுகின்றன. ‘அந்தக் காலத்தில் ஈமெயில் இல்லை’ என்று நேராகச் சுட்டுப்படுகிற காலம், பிறிதொரு இடத்தில் ‘சுழட்டி டயல் பண்ணும் டெலிபோன் கைப்பிடியைக் காதில் வைக்கும் போது’ மறைமுகமாக நினைவூட்டப் படுகிறது. கயிற்றுக் கட்டில்கள் மக்களின் வாழ்நிலையைக் குறிக்கின்றன.

கட்டுரை, புத்தகம் அடுக்குவதில் தொடங்குகிறது. எட்டுப் பக்கக் கட்டுரையில் இரண்டு பக்கம்-கால் பாகம்- இது வருகிறது. முத்துலிங்கம் தம்பதிகளின் அந்நியோன்யம் ஓசையின்றி வாசக மனத்தில் படிவது இந்தப் பகுதியில்தான். ஆனால் எடை வாரியாகப் புத்தகம் அடுக்குவதில்தான் இந்தப் பகுதியின் முக்கியத்துவம் இருக்கிறது. அதனால்தான் குழந்தையின் கையெட்டுகிற கீழ்த்தட்டில் அந்தத் தொக்கையான புத்தகம் இடம் பிடிக்கிறது. அது களவு போனதும் அந்தக் காலியிடம் இழப்பை ஞாபகப்படுத்தியபடியே இருக்கிறது.

வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாகச் சொல்லும் முத்துலிங்கத்தின் சில அபூர்வ வாக்கியங்கள் இந்தக் கட்டுரையில் வருகின்றன. ‘அலியின் மனைவி சிறு உடல் கொண்ட அழகி’ என்பதில் அந்தப் பாத்திரம் சிக்கனமான வார்த்தைகளினூடே கதையில் பிரவேசிக்கிறது. சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே சில குறிப்புக’ளில் வரும் எழுத்தாளர் சுபத்திரம்மாத் தங்கச்சியைக் குறித்து ‘பார்க்கப் பார்க்கப் பெண் போலவே காட்சியளிக்கூடியவள் அவள்’ என்று ஒற்றை வரி வர்ணனை வரும். ஜி.நாகராஜன் தனது ‘ஆண்டுகள்’ எனும் சிறுகதையின் நடுத்தர வயது-நடுத்தர வர்க்க நாயகி மெர்ஸியை ‘அலுத்துப் போன அழகி’ என்று ரத்தினச் சுருக்கமாய் அறிமுகப்படுத்துவார். முத்துலிங்கத்தின் ‘அழகி’யையும் இந்த வர்ணனைகளின் தொடர்ச்சியாகப் பார்க்கலாம்.

விரிந்து கிடக்கும் பக்கங்களுக்கு மேல் தூங்கிவிடும் குழந்தை ஆசிரியரின் பார்வைக்கு, ‘இன்னும் வாசிக்கப் பழகாத சொற்களுக்கு மேல் தலையை வைத்தபடி’ உறங்குவதாகப் படுகிறது. விமான நிலையத்தில் விடைபெறும்போது குழந்தை கையை உயர்த்தி ஆட்டியபடி செல்வது, ‘தன்னிலும் உயரமான ஒரு கண்ணாடியைத் துடைப்பது’ போலத் தோன்றுகிறது. ஜோடனைகள் இல்லாத முறுக்கிக் கொள்ளாத எளிய சொற்களின் கூட்டில் வரும் இந்த வாக்கியங்கள் யாரைத்தான் வசீகரிக்காது?

கட்டுரை பாதிக்கு மேல் நகர்ந்த பின்தான் கதையின் நாயகி நுஸ்ரத் வருகிறாள். எட்டுப் பக்கக் கட்டுரையில் ஆறு பக்கங்கள் கேலியும் கிண்டலுமாகப் போகிறது. ஆனால் கதை முடிவில் நெகிழ்ச்சி படர்வதற்கு இது தடையாக இல்லை. ஆறாம் பக்க இறுதியில் கழுதையின் மீது கவிழ்ந்த தலையோடு வரும் பால்காரன் எதிர்ப்படுகிறான். ஒரு விதத்தில் கட்டுரையின் துக்ககரமான முடிவை வாசகனுக்கு அவன் குறி சொல்கிறான்.

கிழக்கே சூரியன் முன்பே உதித்துவிடுகிற டோக்கியோவில் நுஸ்ரத் தனது கடைசி தினத்தை தொடங்கும்போது, ஆசிரியர் மேற்கே சூடானில் மற்றுமொரு மாலைப் பொழுதைத் தொடங்குகிறார். தான் எடுத்த படத்தில் தனது நிழல் சிறுமியின் மீது கவிந்திருப்பது அவருக்கு நினைவு வருகிறது. இந்த overlap, அடுத்து வரும் வரிகளின் உருவத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் வாசகனைத் தயாராக்குகிறது. அவர் இங்கே இரவு உணவு சாப்பிட்டபோது அவள் அங்கே நுனிக்காலில் நின்று பிரஷ் பண்ணி, கோணல்மாணலாகத் தலை சீவி, ஒரு புதிய நாளைத் தொடங்குகிறாள். ஏன் நுனிக்காலில் நின்று பிரஷ் பண்ண வேண்டும்? வாஷ் பேசினிற்கு மேல் இருக்கும் கண்ணாடி குழந்தைக்கு எட்டாதே. அல்லது, ஆசிரியரின் வீட்டில் அப்படி எட்டாமல் இருந்திருக்க வேண்டும். ஏன் கோணல்மாணலாகத் தலை சீவ வேண்டும்? நுஸ்ரத்தின் தாயார் அவளுக்குத் தலைசீவி விட்டு அவர் பார்த்ததில்லையே? சிறுமியால் கோணல்மாணலாகத் தானே தலை சீவிக் கொள்ள முடியும்? அப்புறம், அன்றைய தினத்தின் காலம் மெல்ல நகர்கிறது. அது ஆசிரியரின் கலாபூர்வமான மொழியில், பின்னரவில் ஒவ்வொரு இலையாக நிலா பட்டு அவரிடம் வந்து சேர்கிறது. அப்போது அவள் சீருடை போட்டு சிவப்பு சொக்ஸ் அணிந்து பள்ளிக்கூடம் போகிறாள். ஏன் சிவப்பு சொக்ஸ் அணிய வேண்டும்? இவரது வீட்டில் தங்கியிருந்தபோது எப்பவும் சிவப்பு சொக்ஸ் அணிந்த கால்களில் சில்லுப்பூட்டி வைத்தது போல் அவசரம் காட்டிய சித்திரம் அவர் மனசில் பதிந்திருக்கிறது. அதனால் சிறுமி சிவப்பு சொக்ஸே அணிந்திருக்க வேண்டும் என்று அவர் நினைத்துக் கொள்கிறார். சிறுமி இறந்து போகிறபோது, தான் நிம்மதியான நித்திரைக் கனவில் இருந்தது அவரை வருத்துகிறது. துக்கம் வாசக மனதில் கூராக இறங்குகிறது. கட்டுரையின் பல இடங்களில் மேலெழும்பும் சர்வதேசத் தேதிக்கோடு, இறுதியில் நண்பர்களுக்கிடையில் எப்போதைக்குமாய் இறங்கி விடுகிறது.

முத்துலிங்கம், தனது மற்ற பத்திகளைப் போலவே இதிலும் கட்டுரைகளின் சம்பிரதாய வடிவங்களை ஓசையின்றித் தகர்க்கிறார். முன்னுரை-உள்ளடக்கம்-முடிவுரை என்கிற ஆகிவந்த கட்டமைப்பு அவருக்கு உவப்பாக இல்லை. படைப்பிலக்கியத்தின் வடிவத்தையும் மொழியையும் கையிலெடுத்துக் கொண்டு அவர் கட்டுரைகளை எதிர்கொள்கிறார். அப்போது அவரது பேனா நுனியில் கட்டுரையும் கதையும் ஒன்றன் மீது மற்றொன்று கவிகிறது. இந்த இரண்டுக்கும் இடையிலான முத்துலிங்கத்தின் வெளி உருவாகிறது. இந்த வெளியில் கதைகளின் சுவாரஸ்யம் இருக்கிறது. ஆனால் கதைகளின் புனைவுத்தன்மை இல்லை. மாறாகக் கட்டுரைகளின் நம்பகத்தன்மை இருக்கிறது. அதே வேளையில் கட்டுரைகளின் இறுக்கம் இல்லை. தமிழில் அதிகம் பேர் பிரவேசித்திராத வெளியிது. இந்த வெளியில் வாசகனால் இயல்பாக நடக்க முடிகிறது. அப்படி நடக்கிற நேரமெல்லாம் வாசகனின் நல்ல நேரமாகிறது.

***************

“அங்கே இப்ப என்ன நேரம்”
(கட்டுரைகள்)
அ. முத்துலிங்கம்
வெளியீடு: தமிழினி,
பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14.
ISBN 81-87641-53-3

*******************

mu.ramanathan@gmail.com

Series Navigation

மு இராமனாதன்

மு இராமனாதன்