தேவமைந்தன்
‘ஆர்.கே.நாராயண்’ என்று ஆங்கிலத்தில் பெயர் கொண்டவர் ஆர்.கே.நாராயணன். அவர் பெயரைச் சொன்னாலே அவர் எழுத்தில் வெளிப்பட்ட ‘ஹ்யூமர்’ எனப்படும் மெல்லிய நகைச்சுவைதான் நினைவுக்கு வரும். சென்ற அறுபதுகளிலேயே பல்கலைக் கழகப் பாடத்திட்டங்களில் அவருடைய படைப்புகள் தகுந்த இடம்பெற்றன.
தன்னுடைய நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டதில் அவருக்கு முழு மகிழ்ச்சி இல்லைதான்.
‘வழிகாட்டி’ என்று பொருள்படும் ‘The Guide’ என்ற அவருடைய நாவல், சென்ற எண்பதுகளின் தொடக்க ஆண்டுகளுக்குள்ளேயே தமிழ், பிரெஞ்சு, இத்தாலி, ஜெர்மன், ருஷ்யன், சுவீடிஷ் முதலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது. அதன் இந்தியப் பதிப்பு மட்டும் அப்பொழுது ஒன்றரை லட்சம் புத்தகங்களுக்கு மேல் விற்றுத் தீர்ந்ததாம்.
ஆர்.கே.நாராயணன் “சாதாரணமாக எழுதியதாக”க் குறிப்பிட்டதும் 1935ஆம் ஆண்டில் வெளியானதுமான அவருடைய முதல் நாவல் ‘சுவாமி அண்ட் ஃப்ரெண்ட்ஸ்'(Swami and Friends), தமிழ் முதலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆனந்த விகடன் இதழில், ‘சுவாமியும் சிநேகிதர்களும்’ என்ற தலைப்பில், கிருஷ்ணசாமி அவர்களின் மொழிபெயர்ப்பில் அந்த நாவல் தொடராக வெளிவந்து, தமிழ் வாசகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தது. அந்த நாவலில் வரும் சுவாமி பத்து வயதே நிரம்பிய சிறுவன்; வீட்டுப்பாடங்கள் எழுதுவதின் கொடுமையை வெறுத்து, தன் நண்பர்களுடன் வீரதீரச் செயல்களில் ஈடுபட்டவன். ஆனாலும் தான் அன்றாடம் சந்திக்க நேரும் ஆசிரியர்களிடமும் பெரியவர்களிடமும் கூடுமானவரை ஒத்துப்போகிறவன். ‘எம்.சி.சி.’ என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட ‘மால்குடி கிரிக்கெட் கிளப்’தான் அவனுடைய பேரார்வத்தைக் கொள்ளை கொண்டது. அவனும் அவன் நண்பர்களும் சேர்ந்து தோற்றுவித்ததல்லவா அது? தேர்வுகள் எல்லாம் முடிந்து, கோடை விடுமுறை விடுகிற காலமே சுவாமியின் கனாக்காலம்.
1930இல், நம் இந்திய தேசத்தில், பிரிட்டிஷ் அடக்குமுறையின்கீழ் பல தேசபக்தர்கள் சிறைசெய்யப்பட்டனர். அதன் அடிப்படையில் 1930, ஆகஸ்ட் 15ஆம் நாளன்று சரயு நதியின் வலக்கரையில் மால்குடியைச் சேர்ந்த இரண்டாயிரம் குடிமக்கள் கூடினர். மும்பையில் கெளரி சங்கர் என்ற விடுதலைப் போராட்ட வீரர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துக் கூடிய கூட்டம் அது. கதராடை அணிந்தவரும் கம்பீரமும் மிக்கவருமான பேச்சாளர் ஒருவர், அங்கே, உணர்ச்சிமிக்கதோர் உரையாற்றினார். மால்குடி மக்கள் அதைக் கேட்டு உள்ளம் உருகினர். அவர்களுக்கிடையில் நம் சுவாமிநாதனும் அவன் நண்பன் மணியும் இருந்தனர். பத்து வயதே ஆன சிறுவன் சுவாமிநாதன் (நாவலில் கதைசொல்லுதலின்பொழுது ‘சுவாமிநாதன்’ என்ற முழுப் பெயரும், உரையாடல்களின்பொழுது ‘சுவாமி” என்ற சுருக்கப் பெயரும் வரும்) பேச்சாளர் ஆத்திரத்துடன் சொன்ன ஒன்றைக் கூர்ந்து கவனித்தான்.
அவர் சொன்னார்: “ஏன் நாம் அச்சப்பட்டுப் போனோம்? அடிமைகள் ஆனோம்? நம்மிடம் எந்த விதக் குறையுமில்லையே! பிரிட்டிஷ் நிர்வாகம் இப்படி எல்லாம் நம்மை ஆக்கி விட்டிருக்கிறது. நன்றாகக் கேளுங்கள். நீங்கள் ஒன்றும் அதிகமாகச் செய்துவிட வேண்டாம். ஒவ்வோர் இந்தியனும் இங்கிலாந்தின் மீது ஒரே நேரத்தில் எச்சில் உமிழ்ந்தால்கூடப் போதும்; இந்திய மக்கள் எல்லோரும் உமிழும் அந்த அளவு எச்சில் போதும், இங்கிலாந்தையே மூழ்கடித்துவிட…..”
சுவாமிநாதன் அதைக் கேட்டு வியப்பில் மூழ்கி, நண்பன் மணியிடம் அது குறித்து விவாதித்தான். முதலில் மணி சுவாமிநாதனை எச்சரித்துப் பார்த்தான். பயனில்லை. சுவாமிநாதன், இந்திய மாதாவையும் காந்தி அடிகளையும் சுதந்திரப் போராட்டத்தையும் வாழ்த்திக் ‘கோஷம்’ போட்டு, அடுத்தடுத்து இரண்டு பள்ளிகளிலிருந்து விரட்டியடிக்கவும் படுகிறான். கடைசியில், வேறுவழியே இல்லாமல், வீட்டை விட்டும் ஓடுகிறான். இப்படி ‘Swami and Friends’ செல்கிறது.
சிறுவர் உலகத்தை, சிறுவர்களின் பார்வையிலிருந்தே சித்தரிக்கும் கதைசொல்லலினூடு, அதற்குப்பிறகு அவர்கள் ஆகவுள்ள பெரியவர்களின் உலகத்தையும் மால்குடியைக் களமாகக் கொண்டு ஆர்.கே.நாராயணன் நுட்பமாக இந்த நாவலில் வெளிப்படுத்தியுள்ளார்.
கிரகாம் கிரீன், அந்த நாவலைப் “பத்தாயிரத்தில் ஒரு புத்தகம்” என்று பாராட்டினார். முதற் பதிப்பு, லண்டனில் ஹமிஷ் ஹாமில்டன் நிறுவனத்தால் 1935ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. முதல் இந்தியப் பதிப்பு 1944இல் வந்தது. 1993இல் இருபதாவது மறுஅச்சு வந்தவரை எனக்குத் தெரியும்.
சென்ற எண்பதுகளின் முதற்பகுதியில் ஆர்.கே.நாராயணனின் ‘The Painter of Signs’ போலிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
தன் நாவல்களின் மொழிபெயர்ப்புகள் குறித்து ஆர்.கே.நாராயணனுக்கு மகிழ்ச்சி இல்லை என்று முதலிலேயே குறிப்பிட்டேன். காரணத்தை அவரே நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். “மொழிபெயர்ப்பைப் பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. பொதுவாகவே என் நாவல் மொழிபெயர்ப்புகளை நான் வாசிப்பதுமில்லை. ஒரு நாவலில் உள்ள ஹியூமரை, மொழிபெயர்ப்பாளரால் இன்னொரு மொழியில் எப்படிக் கொண்டு வர முடியும்? ஆனால் கருத்தோட்டத்தைத் தெரிந்துகொள்ள மொழிபெயர்ப்பு தேவைதான். ஐரோப்பிய மொழிகளில் என் நாவல்களின் மொழிபெயர்ப்பு நன்றாக வந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள்.”
ஆர்.கே.நாராயணன் தன் பெரும்பாலான நாவல்களில், மால்குடி என்ற ஊரையே களமாகக் கொண்டதன் காரணம் என்ன? “சின்ன ஊர், குறைச்சலான ஜனங்கள். கடைக்குப் போய் சாமான் வாங்கிய பிறகு காசு குறைந்தால், நாளைக்குத் தருகிறேன் என்று வாங்கிய சாமான்களை எடுத்துக் கொண்டு வந்துவிடலாம்..” என்று இது குறித்து ஆர்.கே.நாராயணன் நகைச்சுவையாகக் கூறியிருக்கிறார்.
“The Painter of Signs’க்கும் ‘A Tiger for Malgudi’க்கும் இடையில் ஏழாண்டுகள் இடைவெளி விழுந்தது. அவரின் படைப்புத் திறன் குன்றிவிட்டதோ என்று திறனாய்வாளர்கள் ஐயம் கிளப்பினர். அது ஒன்றும் புதியதல்ல, ஏற்கெனவே ‘The Vendor of Sweets’க்கும் ‘The Painter of Signs’க்குமிடையில் கிட்டத்தட்ட பத்தாண்டு இடைவெளி இயல்பாகவே ஏற்பட்டது. ‘A Tiger for Malgudi’ மீண்டும் அவரைப் புகழ் ஏணியில் ஏற்றியது.
‘A Tiger for Malgudi’ நாவலில், முதன்மைப் பாத்திரமாய் வரும் ராஜா என்கிற புலியின் இயற்கையான காட்டு வாழ்க்கை சொல்லப்படுகிறது.
இளைய ‘ராஜா’வின் கானக வாழ்க்கை, குறிப்பாக மெம்ப்பி காடுகளின் விலங்குகள் உலகத்தில் அது வலிமை மிக்க புலியாக உருவாகும் விதம் நாவலில் நன்கு விளக்கப் பட்டிருக்கிறது. பெண்புலி ஒன்றுடன் போர்செய்து தோற்கடித்து அதைத் தன்னுடையதாக்கி. பின்னர் நான்கு புலிக்குட்டிகளுக்குத் தந்தை ஆகிறது ராஜா. கேவலமானவர்களும் குரூரமானவர்களுமான மனிதர்களின் கைகளில் அந்தப் பெண்புலியும் குட்டிகளும் மாட்டிக்கொண்டு இரையாகின்றன. தன் துணையையையும் குட்டிகளையும் இழந்துவிட்ட நிலையில், எவ்வளவுதான் எச்சரிக்கையுடனிருந்தும் ‘கிரேண்ட் மால்குடி சர்க்க’ஸின் உரிமையாளரான ‘கேப்ட’னிடம் சிக்கிக் கொள்கிறது. சர்க்கஸ் உலகில் அவனால் தன்மேல் சுமத்தப்படும் வேலையைச் சிறப்பாக நிறைவேற்றும் அளவு கடுமையான பயிற்சிகளைப் பெறுகிறது. மேலும், திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரிடமும் அதை நடிக்க வைத்துப் பணம்பெற ‘கேப்டன்’ ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்கிறான். அடுத்து, ராஜாவை மேலும் ஒடுக்கிப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டாக, ‘உலோக நாக்கு'(‘metal tongue’) எனப்படும் கொடிய கருவியைப் பயன்படுத்தவும் தொடங்குகிறான். ராஜாவுக்குப் பழைமை – கானக நியாயம் – திரும்புகிறது. கொடுமையும் பேராசையும் நிரம்பிய ‘கேப்ட’ன் மேல் பாய்ந்து அவனைக் கொன்றுவிட்டு, அந்த இடத்தை விட்டே அகன்று விடுகிறது. பள்ளிக்கூடக் கட்டடம் ஒன்றில் தஞ்சம் அடைகிறது. அங்கு, சுவாமி என்கிற தனக்கான குருவைச் சந்திக்கிறது.
இந்த சுவாமி என்ற கதைப்பாத்திரம், ‘ Swami and Friends’ நாவலில் இடம்பெறும் சுவாமிநாதன் என்ற சுவாமியேதான். அவன் இப்பொழுது நன்கு வளர்ந்து பெரியவனாயிருக்கிறான். சரயு நதி பாயுமிடத்திற்கு அருகிலுள்ள எல்லம்மன் தெருவில்(‘The Painter of Signs’ நாவலில் ராமன் தன் அத்தை வீட்டில் வாழும் தெரு) சுவாமி தன் மனைவியுடனும் குழந்தைகளுடனும் வாழ்கிறான். ‘வெள்ளையனே வெளியேறு'(Quit India movement) இயக்கத்தில் மிகவும் சிறப்பாக அவன் பங்கேற்று, பாராட்டப் பெற்றிருக்கிறான். ஒருநாள் நள்ளிரவில் சித்தார்த்தன்போல் வீட்டைவிட்டே வெளியேறி விடுகிறான். உலகில் நன்மையை நிலைநாட்டத் தன் எஞ்சிய வாழ்வை அர்ப்பணிக்கிறான்.
அவனைத்தான் தன் குருவாக ராஜா என்னும் அந்தப் புலி ஏற்கிறது. ஒவ்வொரு படிநிலையிலும் அவனிடம் கீழ்ப்படிந்து நடக்க அது கற்றுக் கொள்கிறது. அதற்கு வயதாவதால், ‘சமாதி நிலை’யை அது அடையும் முன்பு, அதன் பாதுகாப்புக்காக விலங்குக் காட்சிச் சாலைக்கு அதன் குருவான சுவாமி அனுப்பி விடுகிறான். தன் சீடனான ராஜாவை அடுத்த பிறப்பில் சந்திக்கப் போவதாகவும் சுவாமி நம்புகிறான்.
இந்த நாவல், அது படைக்கப்பெற்ற காலம் வரை இல்லாத புதிய கோட்பாட்டைக் கொண்டிருந்தது. அப்பொழுதெல்லாம் சில வீடுகளின் கூடத்தில் பார்த்தீர்களானால், சுவர்மேல் ஒரு ‘வீரமான’ படம் தவறாமல் மாட்டப்பட்டிருக்கும். மெய்யாக வேட்டையாடினாரோ இல்லையோ, அந்த வீட்டின் தலைவர், தன் வலது கையில் ஒரு வேட்டைத் துப்பாக்கியைத் தாங்கிக் கொண்டு, இறந்து கிடக்கும் புலி ஒன்றின் மேல் தன் பாதத்தை வைத்து நின்று புகைப்படத்துக்குப் ‘போஸ்’ கொடுத்திருப்பார். இது, சாதாரணமான வீடுகளில் கண்ட காட்சி . ‘அசாதாரணமானவர்கள்’ வீடுகளில், வளைந்த மாடிப்படிகளுக்கு முன்னால் உயரமான பீடமொன்றில் உண்மையான புலியே போல இறந்த ‘பாடம்’ பண்ணப்பட்ட புலி அமர்ந்திருக்கும்.
அப்படிப்பட்ட காலகட்டத்தில், பிற்காலத்தில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துபோய்விடும் என்பதைக் கவனத்தில் இருத்திக் கொண்டோ என்னவோ, மனிதருக்கும் புலிகளுக்கும் இருக்க வேண்டிய இயற்கை இணக்கத்தை ஆர்.கே.நாராயணன் இந்த நாவலில் வலியுறுத்தியிருக்கிறார். அதனால்தான், மனிதர்கள் கொண்டிருக்க வேண்டிய நேயத்தை விடவும் அதிகமான ஆன்மநேயத்தை இந்த நாவலின் தலைமைப் பாத்திரமான ராஜா என்கிற புலி கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் ராஜா, புலி என்ற விலங்கு நிலையிலிருந்து உயர்மனித நிலைக்கு மாற்றம் பெற்றிருக்கிறது. தனக்கு என்றைக்கு உன்னதமான உய்திநிலை(salvation) கிடைக்குமோ என்று நாடி ஏங்கியிருக்கிறது. உண்மையில், நாலாசிரியர்தான் ராஜாவுக்குள் புகுந்து கொண்டு தன்னுடைய வெவ்வேறான வாழ்க்கை அனுபவங்களையும் அவற்றின்பொழுது தான் அடையும் வெவ்வேறான மனநிலைகளையும் புலப்படுத்துகிறார் என்பதை வாசகர் புரிந்துகொண்டு வாசித்துச் செல்ல முடிவது, இந்த நாவலின் சிறப்பம்சங்களுள் ஒன்று.
ஆர்.கே.நாராயணனின் முதிர்ந்து பக்குவம் மிக்க வயதில் ‘The Painter of Signs’ நாவல் எழுதப்பெற்றது. விடுதலைக்குப் பிறகு மால்குடியில் ஏற்பட்ட மாற்றங்கள் அதில் பதிவு செய்யப்பட்டன. முதலிலேயே வெளிவந்ததும், மால்குடி நாவல்களில் இரண்டாவதுமான ‘The Dark Room’இல் வெளிப்பட்டுள்ள குடும்ப வாழ்க்கையின் கூறுபாடுகளும் பெண்ணின் சமூக உறவு நிலைகளும் ‘The Painter of Signs’இல் மிகவும் மாற்றம் கண்டுள்ளன.
திரு எஸ்.கிருஷ்ணனுக்கு அளித்த நேர்காணலில் அது குறித்து ஆர்.கே.நாராயணன் கூறியுள்ளார். ” ‘The Dark Room’ நாவலில், சமூகத்தில் பெண் எவ்வாறு ஆணைச் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது என்பதைத் தெரிவிப்பதிலேயே கவனத்தைச் செலுத்தினேன். இந்த(‘The Painter of Signs’) நாவலில் நான் சொல்லியிருக்கும் பெண்(Daisy), ஆண்களைச் சார்ந்திருக்கவில்லை என்பது மட்டுமல்ல; அவளுடைய ஒருங்கிணைந்த வாழ்வில் ஆண்களுக்கு முக்கியத்துவமே இல்லை.”
‘The Painter of Signs’ நாவலில், வெறும் தொழிலாக மட்டும் அல்லாமல் முருகியல் மதிப்பீடு கொண்டதாகவும் பெயர்ப் பலகைகளைத் தீட்டுகின்ற இளம் ஓவியத் தொழிலாளி ராமன், எல்லம்மன் தெருவின் கடைசி வீட்டில் தன் அத்தையின் ஆதரவில் வாழ்கிறான். சரயு நதி பாய்கிற அழகான இடம் அது.
நாவலின் தொடக்கத்திலேயே, தன் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கும் ஒருவருக்கான பெயர்ப் பலகையை ராமன் உருவாக்குவதும், அவர் ஆயிரத்தெட்டு குறைகள் சொல்லி, அவனுக்கு அதற்கான பணத்தைத் தராமலிருக்க முயற்சி செய்வதும், அவர்களிடையே நிகழும் வாதங்களும் சொல்லப் படுகின்றன. ராமன் வெறும் பெயர்ப்பலகை தீட்டுபவன் மட்டுமல்ல; உலக முழுதும் காரணம் முதன்மைபெறும் காலத்தை(Age of Reason) நிறுவ முற்படுபவன் என்பது மெல்லிய நகைச்சுவையுடன் தெரிவிக்கப் படுகிறது. ராமனுக்கு, ஒவ்வொன்றுக்கும் பகுத்தறிவு அடிப்படையிலான விளக்கம் இருந்தே ஆக வேண்டும். ‘டவுன் ஹால்’ பேராசிரியர், அவையினர்முன் ஆற்றும் சொற்பொழிவில் நிலவும் ஆன்மிகச் செய்தியைக் கேட்க, ராமனின் பகுத்தறிவுக் கொள்கை படாத பாடு படுகிறது.
மால்குடியின் குடும்பக் கட்டுப்பாட்டு மையத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றும் டெய்சியை ராமன் தன் தொழில் அடிப்படையில்தான் முதலில் சந்திக்கிறான். ஆனால் போகப் போக, தன் வறட்டுத்தனத்துக்கும் டெய்சியின் யதார்த்தத்துக்கும் உள்ள வேறுபாடு கண்டு மலைத்துப் போகிறான். அவன்தான் டெய்சிமேல் ஆராக்காதல் கொண்டு உருகித் தவிக்கிறான். அவளோ அவன்மேல் எந்த விதமான ஆர்வமும் கொள்வதில்லை. டெய்சியின் அலட்சியப் போக்கால், ராமனின் தன்மதிப்பு காயமுறுகிறது. அவள் பணி புரியும் இடத்துக்குப் போவதையே தவிர்த்து விடுகிறான்.
சில நாள்கள் கழித்து டெய்சியே தன்னுடன் அக்கம் பக்கத்து ஊர்களுக்கு வந்து, குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரம் செய்வதில் உதவுமாறு ராமனுக்கு வேண்டுகோள் விடுக்கிறாள். அந்தந்த ஊர்களின் முதன்மையான இடங்களில் குடும்பக் கட்டுப்பாட்டு விளம்பரத் தட்டிகளை வரைந்து வைக்கும் வேலை தருகிறாள்.
எந்த ஊரானாலும் அங்கு வாழ்பவர்களின் வாழ்முறையோடு ஒத்துப்போகும் டெய்சியின் மனநிலையை ஆங்காங்கே கண்டு ராமன் வியந்து போகிறான். ஊர்க்கேணியில் நீர் எடுத்து, அங்கேயே இயல்பாகக் குளித்து, உடைகளைத் துவைத்துக் காயப்போடுவதுடன் மாற்றிக் கொள்ளும் டெய்சியின் போக்கு, ஆணான தனக்குங்கூட வாய்க்காதது உணர்ந்து தன்னிரக்கம் கொள்ளுகிறான்.
டெய்சி எஃகு உள்ளம் வாய்ந்தவள். ஆனால், எளிய சிற்றூர் மக்களைக் கூடவைத்து, அவர்களுக்கு ‘பிள்ளைப்பேறும் குடும்பக் கட்டுப்பாடும்’ குறித்துப் படம் வரைந்து விளக்குகிறாள். அவர்கள் அவை தொடர்பாகக் கேட்கும் எந்தக் கேள்விக்கும் கூச்சமில்லாமல் மறுமொழி சொல்கிறாள். அதையெல்லாம் பார்க்க, ராமனுக்குத் தாழ்வு மனப்பான்மை தீவிரமாக ஏற்படுகிறது.
விளைவாக, பிரச்சாரப் பணி முடிந்து அவர்கள் வீடு திரும்பும் சமயத்தில், வழியில் கிடைத்த தனிமையைப் பயன்படுத்திக் கொண்டு, டெய்சியைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்த ராமன் முயல்கிறான். அவளுடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அவனுடைய முட்டாள்தனமான செயல் தோற்கடிக்கப்படுகிறது.
டெய்சி, அதற்கப்புறம் நெடுநாட்கள் ராமனுடன் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை. ராமனின் அடாவடிச் செயல் குறித்துக் காவல்துறைக்குப் புகார் தெரிவித்து விடுவதாகவும் மிரட்டுகிறாள். அதற்கு அஞ்சிய அவன், அவளை விட்டே ஒதுங்கி விடுகிறான்.
ஆனால் அந்த இடைவெளியில்தான் டெய்சியும் ராமனும் தங்களுக்குள் நிலவும் மெய்யான காதலை உணர்கிறார்கள். மீண்டும் சந்திக்க வாய்த்த பொழுது, காதலர்களாகச் சந்திக்கிறார்கள். கந்தருவ முறையில் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ராமன் நினைக்கிறான். அத்தகைய திருமணத்தில்தான் அதிக பந்தம் இருக்காது என்றும் டெய்சிக்கும் அதுதான் பிடித்திருக்கும் என்றும் ராமன் நம்புகிறான்.
இதற்கிடையில் ராமனின் அத்தை, சாதி மதக் கலப்புத் திருமணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். காசிக்குப் போகும் தன் உறுதியான எண்ணத்தை ராமனிடம் தெரிவிக்கிறாள். காசிக்குப் போவதுடன் வாழ்வின் இறுதி இலட்சியம் நிறைவேறும் என்று அவள் நம்புகிறாள். அதனாலொன்றும் நாவலின் போக்கு மாறுவதில்லை. ‘பிளாட்’ என்று திறனாய்வாளர்கள் சொல்லும் கதைப் பின்னலில், ஆர்.கே.நாராயணன் சமரசம் செய்து கொள்வதே இல்லை. நாடக பாணியில் கதைமாந்தரின் உணர்வுகளை ஆட்டி வைப்பதில்லை. வாசகர்களுக்காகக் கதைப்போக்கில் விறுவிறுப்புச் சேர்த்தல், வேகம் கூட்டுதல் முதலானவற்றை அவர் செய்ததில்லை.
திட்டவட்டமான ஆழ்ந்த சிந்தனைக்குப்பின், டெய்சியின் மனம் மாற்றம் கொள்கிறது. ராமனைத் திருமணம் செய்து கொள்ளத் தெளிவாக மறுத்து விடுகிறாள். கடைசியில், குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரச்சாரம் தொடர்பான நெடும்பயணம் ஒன்றை மேற்கொண்டு, ராமனை விட்டே பிரிந்து செல்கிறாள். இவ்வாறு, நெடுங்காலம் நம்பிக்கையூட்டி ஏமாற்றிச் சுமத்தப்பட்ட கனத்த தனிமைச் சுமையை ராமன் ஏற்றுக் கொள்ளுமாறு நேர்ந்து விடுகிறது.
இந்த நாவலில், பழைமையிலிருந்து விடுபட்டுப் புதுமையைத் தழுவும் மால்குடியை நாம் பார்க்க முடிகிறது. இந்தக் கதை சொல்லப்பட்ட பொழுதில், அது பரபரப்பான நகரமாகி விட்டது. 1976ஆம் அண்டு வெளியான இந்த நாவல் சித்தரிக்கும் காலகட்டத்திலேயே ‘நவீனப்பட்டுவிட்ட’ ஆணும் பெண்ணுமாக ராமனும் டெய்சியும் திகழ்கின்றனர். டெய்சி, ராமனை விடவும் வலிமையான பாத்திரமாகவும் ‘தேசவிடுதலைக் காலத்துக்குப் பிந்திய வகைமாதிரிப் பெண்'(typical woman of the post indepentent era) உருவாக்கப்பெற்றுள்ளாள்.
தன் நினைவுகளைத் தொகுத்து(memoirs) அவர் எழுதிய ‘My Days’ என்ற புத்தகம், நாராயணனை உணர்ச்சிமிக்க மனிதராக நம்மை அறிய வைத்துள்ளது. ஒருவருக்கு மிகவும் நெருக்கமாக வாழ்ந்து இறந்து போனவர்கள், அவரை மீண்டும் தேடி வருவார்கள் என்ற சொந்த அனுபவத்தை அவர் எழுதிய விதம், வாசகர்களை அதிர வைத்தது. “The Painter of Signs’ ராமனைப் படைத்தவரல்லவா அவர்? அவரா இப்படி எழுதினார்? – என்று பகுத்தறிவுக் கொள்கையுள்ள வாசகர்கள் எண்ணினர். எழுத்தாற்றல் மிக்கவராக மட்டும் அல்லாமல், ஒரு சராசரி மனிதராக ஆர்.கே.நாராயணனை நாம் பார்க்க முடிவது இந்தப் புத்தகத்தில் மட்டுமே.
தனக்கு மகிழ்ச்சி கொடுப்பது, படிப்பதும் எழுதுவதும்தான் என்று குறிப்பிட்ட ஆர்.கே.நாராயணன், ஒருநாளைக்கு இரண்டாயிரம் சொற்களை இரண்டு மணி நேரத்தில் எழுதிவிடுவதாகவும் சொன்னார். அதுதான் முதல் வரைவு(draft) என்றும் பிறகு அதைப் படித்துப் பார்த்துத் திருத்த நான்குமணி நேரம் போலப் பிடிக்கும் என்றும் “திருத்தியதை மறுபடியும் திருத்தி எழுதுவேன்; வார்த்தைகளை மாற்றிப் போடுவேன்; அதற்கு எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் போலப் பிடிக்கும்; மெதுவாக யோசித்து யோசித்துதான் திருத்தி எழுதுகிறேன்” என்றும் சொன்னார்.
அதற்கெல்லாம் காரணம், எழுதுவது நன்றாக வரவேண்டும் என்ற அக்கறைதான். “வெட்டிக் குறைக்க நான் கவலைப் படுவதே இல்லை. எழுதியதில் நிறையவே தாட்சண்யம் இன்றி அடித்து விடுவேன். எழுத்தாளனுக்குத் தான் எழுதினதையே அடிக்கத்தான் தைரியம் வேண்டும்” என்றார். “வாசகர்கள் ஒரு புத்தகத்தின் பக்கங்களைத் தள்ளி விடுவதற்கு இடங் கொடுக்காமல் சரியாக எழுத வேண்டும். அதற்கு எழுத்தாளன், தான் எழுதியதைப் படித்துப் பார்க்க வேண்டும். திருத்தி எழுத வேண்டும். சில தமிழ் எழுத்தாளர்கள் எழுதியதைத் திருப்பிக் கூடப் பார்ப்பதில்லை என்றும், அவை அப்படியே அச்சு ஏறி புத்தகமாக வந்துவிடும் என்றும் கேள்விப்படுகிறேன். அது எப்படிச் சாத்தியம் என்று தெரியவில்லை. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது…. எழுதி எழுதித்தான் – திருத்தி எழுதித்தான் சரிபண்ண முடியும் என்ற வகையைச் சார்ந்தது என் எழுத்து…” என்று திட்டவட்டமாகச் சொன்னார்.
ஆர்.கே.நாராயணன், சென்னையில் புரசைவாக்கத்தில் 1907ஆம் ஆண்டு பிறந்தவர். இதை அவரே தன் மைசூர் இல்லத்தில் ‘குங்குமம்’ சிறப்பு நேர்காணலில் சொல்லியுள்ளார். விக்கிபீடியா கட்டுரை முதலான சிலவற்றில் அவர் 1906ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் நாள் பிறந்ததாகச் செய்தி உள்ளது.
தமிழ் அவர் தாய்மொழி. முதலில் நுங்கம்பாக்கத்தில் இருந்தார். உயர்நிலைப் பள்ளி வரை சென்னையில்தான் படித்தார். தகப்பனார் கிருஷ்ணசாமி தலைமையாசிரியராக மைசூர் வந்ததால், கல்லூரியில் படிக்கத் தானும் மைசூர் வந்ததாகத் தெரிவித்துள்ளார்.[குங்குமம் சிறப்பு நேர்காணல்]
மைசூர்ப் பல்கலைக் கழகத்தில், உ.வே.சாமிநாத ஐயர் அமைத்துக் கொடுத்த தமிழ்ப் பாடத்திட்டத்தைத் தன் இரண்டாவது மொழித் தெரிவின்கீழ்ப் பயின்றார். பின்னர், பெரும்பாலும் மைசூரிலேயே வாழ்ந்தார். சென்னைக்குத் தன் உறவினர்களைப் பார்க்கவும் பிற காரணங்களுக்காகவும் அடிக்கடி பயணம் செய்தார். இந்தியாவில் பல மாநிலங்களுக்கும் சென்று வந்துள்ளார். உலகப் பயணமும் செய்துள்ளார். சென்னைதான் தனக்குப் பிடித்தமானது என்று நேர்காணல்களில் சொல்லியுள்ளார். ராசிபுரத்தில் தன் முன்னோர்கள் வாழ்ந்ததால், குடும்பத்தினர் பெயர்களின் தலைப்பெழுத்துகளில் ‘ஆர்’ கட்டாயமாக இடம்பெற்றதாம்.
1936ஆம் ஆண்டு ‘கலா நிலையம்’ என்ற தரமான தமிழ் இதழைத் தொடங்கியவர் தன் மாமா சேஷாசலம் அவர்கள் என்று தெரிவித்துள்ளார். ஒய்.எம்.சி.ஏ.’வில் மாலைநேரத் தமிழ் வகுப்புகள் நடத்தியதோடு ‘கலா நிலயம்’ இதழில் ‘தமிழ்ப் பாடம்’ என்ற பகுதியில் நளவெண்பா பாடம் நடத்தி, சேக்கிழார் பற்றியும் தொடர் கட்டுரையை அவர் வெளியிட்டாராம். மக்களுக்குப் புரியாது என்று சொல்லித் தரம் தாழக் கூடாது என்பதைத் தன் உள்ளத்தில் உருவேற்றியவரும் அவரே என்று தெரிவித்தார். உயர்நிலைப் பள்ளிக் காலத்திலேயே, தான் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ ‘கமலாம்பாள் சரித்திரம்’ முதலான தமிழ் நாவல்களைப் படிக்க முடிந்ததற்கும் தன் மாமா தந்த ஊக்கமே காரணம் என்றும் குறிப்பிட்டார். ‘கலா நிலையம்’ இதழ்களைத் தொகுப்புகளாகச் செய்து வைத்திருந்தபொழுது பேராசிரியர் ஏ.கே.ராமானுஜன் அவற்றுள் இரண்டு தொகுப்புகளை வாங்கிச் சென்று சிகாகோ பல்கலைக் கழகத்தில் ‘மைக்ரோ பிலிம்’ செய்து பாதுகாத்தாராம்.
மால்குடி வரிசையில் ஆர்.கே.நாராயணனின் நாவல்கள்:
The Bachelor of Arts
The Dark Room
The English Teacher
Mr.Sampath – The Printer of Malgudi
The Financial Expert
Waiting for the Mahatma
The Guide
The Man-eater of Malgudi
The Vendor of Sweets
The Painter of Signs
A Tiger for Malgudi
Talkative Man [சென்னையிலிருந்து வெளிவந்த ‘Frontline’ மாதமிருமுறை இதழில் தொடராக ஓராண்டுக் காலம் வெளிவந்தது. ஆர்.கே.நாராயணன் எழுதிய நாவல்களிலேயே அளவில் மிகச் சிறியது இதுதான். ‘TM’ என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் ‘Talkative Man,’ அவர் எழுதிய சிறுகதைகளை வாசித்தவர்களுக்குப் புதிய ‘கேரக்டர்’ அல்ல.]
The World of Nagaraj
இதிகாசங்களின் புதிய ஆக்கங்கள்:
Gods, Demons and Others
The Ramayana
The Mahabharata
கதைகள்:
A Horse and Two Goats
An Astrologer’s Day and Other Stories
Lawley Road
Malgudi Days
Under the Banyan Tree and Other Stories
நினைவுத் தடங்கள்:
My Days
பயண நூல்கள்:
My Dateless Diary
The Emerald Route
கட்டுரை நூல்கள்:
Next Sunday
Reluctant Guru
A Writer’s Nightmare
The World of the Story-Teller
******
குறிப்பு:
ஆர்.கே.நாராயணன் தன்னை நேர்கண்டவர்களுக்குச் சொன்ன சேதிகளே இக்கட்டுரையில் உள்ளன. விக்கிபீடியா முதலியவற்றின் செய்திகளை இக்கட்டுரை தழுவவில்லை.
பார்வை:
மைசூரில் ஆர்.கே.நாராயணன் இல்லத்தில், 1983 நவம்பர் இறுதி வாரத்தில் எடுக்கப்பட்ட குங்குமம் இதழின் சிறப்பு நேர்காணல். வெளியான இதழ்: குங்குமம் 7:8. 5-2-1984. பக்கங்கள்: 31, 34, 48.
திரு எஸ்.கிருஷ்ணனுக்கு அளித்த நேர்காணல்.
****
karuppannan.pasupathy@gmail.com
- ஜெகத்ஜால ஜப்பான் 12. மோஷி மோஷி
- உங்கள் மேம்பாட்டிற்கு ஒரு இணைய தளம்
- நினைவுகளின் தடத்தில் – (10)
- செவ்வாய்க் கோளில் சீராக இறங்கித் தடம்வைத்த ·பீனிக்ஸ் தளவுளவி (மே 25, 2008)
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 7
- அறை எண் 305 ல்- வயிற்றெரிச்சல்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 21 எதுவும் சொந்தமில்லை இப்புவியில் !
- கர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன?
- ஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா?
- வார்த்தை – ஜூன் 2008 இதழில்
- தாகூரின் கீதங்கள் – 32 முன்னறியாப் பாதையில் நடந்து !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 9 (சுருக்கப் பட்டது)
- மரங்களும் மனிதர்களும் : ழான் ழியோனோவின் “மரத்திற்கு வித்திட்ட மாமனிதன்”
- அம்மாவின் ஆசை
- அவனுக்கு நீங்களென்று பெயர்
- உங்கள் சாய்ஸ்
- 35வது இலக்கியச்சந்திப்பு ஸ்ருட்காட், ஜேர்மனி. ஜூன் 14-15, 2008.
- மனவெளியின் மறுபக்கம்
- கடவுளின் மொழி ( பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம் ” கவிதைத்தொகுதியை முன்வைத்து)
- பரிவிற் பிறந்த இலக்கியம்
- தனித் தமிழ்
- இலக்கியச் சந்திப்பு
- நூலகத் திட்டத்தினரின் தினமும் ஒரு மின்னூல் வெளியீடு
- ஹாங்காங் தமிழ் வகுப்பு நான்காம் ஆண்டு விழா
- ஆர்.கே.நாராயணன்: ஆங்கிலத்தில் எழுதிவென்ற சென்னைத் தமிழர்
- காலச்சுவடு நடத்திய சுந்தரராமசாமி -75 சிறுகதைப் போட்டியில் எம்.கே. குமார் எழுதிய சிறுகதை முதல் பரிசு பெற்றிருக்கிறது
- தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சங்கம் மூன்றாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்
- ஒர் எழுத்தாளனின் கடைசி கலந்துரையாடல்
- ஈஸ்வர அல்லா தேரே நாம்
- என்னை மட்டும்.. ..
- கடிதம்
- குற்றாலக் குறவஞ்சியும் திருமுறைப் பெருமையும்
- Last Kilo byte – 15 : தேடலும், தேடியதும் உரச
- விழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு-தொடர்ச்சி
- த.அகிலனின் ‘தனிமையின் நிழல் குடை’
- மீரான் மைதீனின் சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் – நூல் விமர்சனம்
- பேராண்டிகள்: தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்
- கூட்டத்தின் கடைசியில் ஒருவன்- சிறுகதை
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 13
- கவிதைகள்
- மரம் தாவும் சிலந்திகள்
- முன்கர்நகீர் என் தோழர்
- அவர் தன்னொடு எடுத்துச் சென்று விட்ட உலகம்
- அறிவியல் தமிழின் ஆரம்ப நாயகன் – அப்புஸ்வாமி
- பெண்மை விலங்கில்
- ‘தொராண்டோ’வின் இரவுப் பொழுதொன்றில்….