எஸ். இராமச்சந்திரன்
முகப்பேறு, திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் வட்டத்தில் அடங்கிய ஊராகும். அண்ணாநகரின் வடமேற்கே 3 கி.மீ. தொலைவில் முகப்பேறு அமைந்துள்ளது. மேற்கு முகப்பேறு ஊரில் வேளாளர் தெரு என வழங்கப்படும் பகுதியில் சந்தான சீனிவாசப் பெருமாள் கோயில் எனப்படும் திருமால் கோயில் உள்ளது. அண்மையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரால் இக்கோயில் ஆய்வு செய்யப்பட்டது.1 இக்கோயிலிலிருந்து மூன்று கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டன.
இக்கோயில் வேசர விமானத்துடன் கூடிய பெரிய கோயிலாகும். பிரஸ்தரம் வரை கருங்கல்லாலும் அதற்கு மேலே செங்கல் மற்றும் சுதையாலும் கட்டப்பட்ட இக்கோயில் பலமுறை புதுப்பிக்கப்பட்டுள்ளதால் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ள கற்களும் இடம் மாறியும் தனித்தனிக் கல்வெட்டுத் துண்டுகளாகவும் உள்ளன. இக்கோயிலிலிருந்து இரண்டு பர்லாங் தொலைவில் மார்க்கண்டாஸ்வரர் கோயில் என வழங்கப்படும் அண்மைக்காலச் சிவன் கோயில் உள்ளது. சந்தான சீனிவாசப் பெருமாள் கோயிலில் கல்வெட்டுகள் இடம் மாற்றிப் பொருத்தப்பட்டிருப்பினும், கோயிற் கட்டடக் கலையமைப்பு நேர்த்தியான முறையிலேயே இருப்பதால் இது பழமையான கோயிலே எனத் தெரிகிறது. தூண்களில் புஷ்பபோதிகை அமைப்பின் தொடக்க நிலை காணப்படுவதாலும், யாளி வரியில் இடம் பெற்றுள்ள யாளி உருவங்களின் உருவமைதியைக் கொண்டாடும் இக்கோயில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என முடிவு செய்ய இயல்கிறது. கோயில் கருவறையின் வடபுற வெளிச் சுவரில் (வேதிகைப் பகுதியில்) கோயில் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்ட அளவைக் கோலின் குறியீடு பொறிக்கப்பட்டுள்ளது. + – என்ற குறியீடுகளால் குறிப்பிடப்பட்டிருக்கும் இதன் நீளம் 11 அடியாகும்.
கல்வெட்டுச் செய்திகள்
இக்கோயிற் கல்வெட்டுகள் மூன்றுள் ஒன்று, கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆட்சி புரிந்த தெலுங்குச் சோழ அரசன் விசய கண்டகோபாலனின் துண்டுக் கல்வெட்டாகும். கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்ததாகக் கருதத்தகும் பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரனின் கல்வெட்டு, இரண்டு தனித்தனித் துண்டுக் கல்வெட்டுகளாக வெவ்வேறிடத்தில் வைத்துக் கட்டப்பட்டிருப்பினும், இணைத்துப் படித்தால் பொருள் தொடர்ச்சி கிடைக்கும் வகையில் முழுமையாக உள்ளது. மூன்று தனித்தனித் துண்டுக் கல்வெட்டுகளாக வெவ்வேறிடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் விஜயநகர அரசர் வீரதேவ மகாராயரின் கல்வெட்டு முழுமையின்றி உள்ளது. இவரது கல்வெட்டில் ஆனந்த வருடம் குறிப்பிடப்படுகிறது. இவ்வரசர் அருணகிரிநாதரால் பிரபுடதேவமாராயன் எனக் குறிப்பிடப்படும் இரண்டாம் தேவராயன் (கி.பி. 1422-47) எனக் கொள்வது பொருத்தமாகும். எனில் இக்கல்வெட்டு கி.பி. 1436-ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இவ்வூர் ‘ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புழற்கோட்டத்து அம்பத்தூர் நாடு ‘ என்ற வருவாய் நிர்வாகப் பிரிவிலடங்கியிருந்தது. தொண்டை மண்டலம் என்ற பழமையான அரசியல்-புவியியல் அமைப்பே, சோழப்பெரு மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் ஜயங்கொண்ட சோழ மண்டலம் எனப் பெயர் பெற்றிருந்தது. இன்றைய சென்னை நகர, புற நகர்ப் பகுதிகள் அக்காலத்தில் புலியூர்க் கோட்டம் என்றும், புழற்கோட்டம் என்றும் பெயர் பெற்றிருந்த இரு கோட்டங்களில் அடங்கியிருந்தன. முதற்குலோத்துங்கன் மற்றும் விக்ரம சோழன் ஆட்சிக் காலங்களில் (கி.பி. 1070 – 1135) புலியூர்க்கோட்டம் என்பது குலோத்துங்க சோழ வளநாடு என்றும், புழற்கோட்டம் என்பது விக்ரம சோழ வளநாடு என்றும் பெயர் மாற்றம் பெற்றன. சோழர்களுக்குப் பின்னர் தமிழகத்தையாண்ட பாண்டிய மன்னர்களும் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த விஜயநகர வேந்தர்களும் இப்பெயர் மாற்றத்தினை ஏற்றுக்கொண்டு பின்பற்றினர்.
கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பெற்றபோது இவ்வூரின் பெயர் ‘விசைய நுளம்பியாறு ‘ என்பதாகும். கோயில் இறைவனின் பெயர் ‘இளந்திரு வேங்கடமுடையான் ‘ என்று இனிய தமிழ் வழக்கில் அமைந்திருந்தது. ‘விசைய நுளம்பியாறு ‘ என்பது இப்பகுதியில் ஓடிய சிற்றாறாகும். இவ்வாற்றின் பெயரே ஊருக்கும் ஆகி வந்துள்ளது. இது காலப் போக்கில் நுளப்பியாறு எனச் சுருங்கி, முளப்பியாறு எனத்திரிந்து, முகப்பேறு என அடையாளந் தெரியாத அளவுக்கு மருவியுள்ளது. முகப்பேறு என்பதை மகப்பேறு எனக் கொண்டு சந்தான சீனிவாசப் பெருமாள் என மொழி பெயர்த்திருக்கலாம். இப் பகுதியைச் சேர்ந்த முதியவர்கள், இவ்வூரை முளப்பாக்கம் அல்லது முழப்பாக்கம் என்று வழங்குவதும் மேற்குறித்த நமது முடிபுக்குத் துணை நிற்கிறது. முகப்பேறு ஊரையடுத்து நுளம்பூர் என்ற (வருவாய்க் கிராமம்) சிற்றூர் உள்ளது. இவ்வூர்ப் பெயரும் நுளப்பியாற்றுடன் தொடர்புடையதே.2
சடையவர்மன் சுந்தர பாண்டியனிடத்துப் பணிபுரிந்த ‘ஆறை வேளான் அம்பத்தூர் நாட்டு மூவேந்த வேளான் ‘ என்ற பதவிப் பெயர் கொண்ட ஓர் அதிகாரி வழங்கிய கொடை இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. வரந்தருமாள் (வரந்தரும் பெருமாள் என்பதன் மரூஉ ஆகலாம்) என்ற இயற்பெயரும் குருகுலராயர் என்ற குடும்பப் பெயரும் கொண்ட அவ்வதிகாரி, இக்கோயிலில் அந்திப்பொழுதில் இரண்டு விளக்குகள் எரிக்கும் பொருட்டு, இரண்டு திருக்குற்றி (குத்து) விளக்குகள் செய்வித்து வழங்கியதோடு, விளக்கு எரிக்கத் தேவையான நெய்க்கான நான்கு பசுக்களையும் நான்கு கிடாரிக் கன்றுகளையும் வழங்கியுள்ளார். கிடாரிக்கன்று என்பது ‘நாகு ‘ என இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. கோயிலில் பூசைப்பணி புரியும் நம்பிமார்கள், தினமும் அந்திப்பொழுதில் இவ்விளக்குகளை ஏற்றும் பொறுப்பினை ஏற்றனர்.
இரண்டாம் தேவராயரின் கல்வெட்டாகக் கருதத்தக்க கல்வெட்டில் மேதினி மிஸ்ர கண்டன், கட்டாரி சாளுவன் என்ற பட்டங்கள் கூடிய பெம்மைய தெய்வ மகாராசா என்பவர் பெயர் குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டு முழுமையாக இல்லாததால் அவரது கொடை பற்றிய விவரம் தெரியவில்லை. ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் வடபெண்ணை கரையில் அமைந்துள்ள தாடி பத்ரியில் பெம்மையதேவ மகாராசா என்பவரது பரிதாபி வருடத் தெலுங்குக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.3 பரிதாபி என்பது ஆனந்த வருடத்திற்கு இரண்டு ஆண்டுகள் முற்பட்டதாகும். எனவே தாடி பத்ரி கல்வெட்டு, கி.பி. 1434-ஆம் ஆண்டுக்குரியதெனக் கொள்ளலாம். கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் தாடி பத்ரியைத் தலைநகராகக் கொண்டு ‘பெம்ம சானி ‘ என்ற பட்டப்பெயர் கொண்ட கண்டிக்கோட்டை அரசவம்சத்தினர் ஆண்டுள்ளனர் என விஜயநகர அரச வரலாற்றுக் குறிப்புகளால் தெரியவருகிறது. பெம்மைய தேவ மகாராசா என்பவரே இவ்வம்சத்தவரின் மூதாதை என்பதும் அவரது நிர்வாகத்தின் கீழ் தொண்டை மண்டலமும் அடங்கியிருக்கிறது என்பதும் நாம் ஊகித்தறிந்து கொள்ளமுடிகிறது.
முகப்பேறில் சமண சமயத் தடயம்
சந்தான சீனிவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ள தெருவின் ஒரு பகுதியில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதத்தக்க சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று உள்ளது. அர்த்த பர்யங்காசனத்தில், கைகளைத் தியான முத்திரையில் வைத்த வண்ணம் அமர்ந்துள்ள தீர்த்தங்கரரின் இருமருங்கிலும் இயக்கர்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர். அண்மைக்காலத்தில் சிறிய சன்னிதி ஒன்று எழுப்பப்பட்டு இச்சிற்பம் வழிபடப்படுகிறது. புழற்கோட்டத் தலைநகரான புழல் சமண சமயத் தலமாக இருந்துள்ளது. எனவே இவ்வூரில் சமண சமயத் தடயம் இருப்பதில் வியப்பில்லை.
கல்வெட்டு எண் 1
இருப்பிடம்: சந்தான சீனிவாசப் பெருமாள் கோயில் அர்த்த மண்டபத் தென்புற வெளிச்சுவர். இரண்டு துண்டுகளாக உள்ளது.
காலம்: கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகலாம். (சடையவர்மன் சுந்தரபாண்டியனின் 13-ஆம் ஆட்சியாண்டு)
வாசகம்:
1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சட பன்மரான திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீசுந்தர பாண்டிய (தே)வர்க்கு யாண்டு யஙு4 – ஜயங்கொண்ட
2. சோழ மண்டலத்துப் புழற் கோட்டமான விக்கிரம (சோழ) வளநாட்டு அம்பத்தூர் நாட்டு
3. விசைய நுளப்பியாற்று இளந்திரு வேங்கட முடையானு (க்குஇ)வ்வூர் ஆறை வேளான் அம்பத்தூர் நாட்டு
4. மூவேந்த வேளான் வரந்தருமாளான குருகுலராய(ர் ை)வத்த சந்தி விளக்கு இரண்டுக்கு
5. விட்ட பசு நாகு ஆக உரு எட்டும் கைக்கொண்டு இத்திருவிளக்கு இரண்டும் சந்திராதி
6. த்த வரை ஏற்றக் கடவோம் இக்கோயில் நம்பிம(ாரே)ாம் இத்திருவிளக்கு ஸ்ரீ வைஷ்ணவ ரக்ஷை
7. திருவிளக்கேற்ற இக் குருகுலராயர் இட்ட திருக்குத்தி வி(ளக்கு)… னால் எடை…
கல்வெட்டு எண் 2
இருப்பிடம்: கருவறையின் தென்புற, மேற்புற வெளிச்சுவர்களில் மூன்று துண்டுகளாக உள்ளது. முழுமை இன்றி உள்ளது.
காலம்: கி.பி. 1436 ஆகலாம்
வாசகம்:
I 1. ஸ்ரீ மன்மகா மண்டலேசுர மூவராயர் (கண்)ட பாஷைக்குத் தப்புவர
2. ாயர் கண்ட வீரதேவராய மஹா இராய(ர்க்கு)ச் செல்லா நின்ற ஆனந்த
3. வருஷம் தை மாஸம் மேதினி மீசுர கண்(ட) கட்டாரி சாளுவ பொம்மை
4. ய தெய்வ மகா இராசா5 ஜயங்கொண்ட (சோ)ழ வளநாட்டில் தொண்டை
5. மண்டலத்தில் புழல்க் கோட்டத்தில் (அம்)பத்தூர் நாட்டில் விசையா . . . .
II 1. இறைவர்க்கு திருவிளக்கு
2. விட்டளவுக்கு இந்தத்….
III 1. அகிதம்
2. ள் உண்டானால் கெ
3. ங்கைக் கரை
4. யில் கராந்ப(சு) . . . .
கல்வெட்டு எண் 3
இருப்பிடம்: மகாமண்டபக் கிழக்கு வெளிச்சுவர். துண்டுக் கல்வெட்டு
காலம்: தெலுங்குச் சோழ அரசன் விசய கண்ட கோபாலன் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு
வாசகம்:
1. (வி)சைய கண்ட . . .
2. தியதி நாள் . . .
3. கு நுளப்பியாறு . . .
4. வந்த நாயனார்6 . . .
5. பிமார் கை . . .
6. இத் திருவிளக்கு . . .
அடிக்குறிப்புகள்
1. தொல்லியல் துறைத் தொழில் நுட்ப உதவியர் திரு. ஸ்ரீகுமார் இக்கோயிலில் கல்வெட்டுகள் உள்ளமை பற்றித் தகவல் தெரிவித்தார். இக்கட்டுரையாசிரியருடன் கல்வெட்டு படியெடுப்பவர் திரு. க. ஈஸ்வரன், கல்வெட்டுச் சிற்றெழுத்தர் திரு. பெ. முருகேசன், கல்வெட்டுப் பயிற்சி நிறுவன மாணவர்கள் சக்திவேல், புண்ணியமூர்த்தி, திருமூர்த்தி, கோவிந்தராஜ், சுப்பிரமணியன், குமாரவேல் ஆகியோர் ஆய்வில் பங்கேற்றனர்.[1]
2. திருவொற்றியூர்க் கல்வெட்டுகளில் நுளப்பியாறு குறிப்பிடப்படுவதாகக் கல்வெட்டாய்வாளர் திரு. க. குழந்தைவேலன் தெரிவிக்கிறார்.[2]
3. ARE 339/1892.[3]
4. குறியீட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. யஙுவரு எனப் பொறிக்கப்பட்டுள்ளது, ‘வருடம் ‘ என்பதன் சுருக்கமாகவோ, ‘ஆவது ‘ என்பதன் சுருக்கமாகவோ கொள்ளலாம்.[4]
5. சாளுவ நாயக்கப்பாடி மீசரகண்டன் பெம்மண நாயக்கர் – ஸ்ரீரங்கம்-கி.பி. 1430. S.I.I. XXIV no. 326
6. நாயனார் என்ற குறிப்பு சிவபெருமானைக் குறிப்பதாகக் கொண்டால் இக்கல்வெட்டு, வேறொரு சிவன் கோயிலுக்குரியதாக இருந்து, அக்கோயில் சிதைந்த பிறகு இக் கோயிலில் வைத்துக் கட்டப்பட்டிருக்க வேண்டும் என ஊகிக்கலாம்.[6]
(கல்வெட்டு ஆய்விதழில் அச்சு வடிவத்தில் வெளிவந்த கட்டுரை)
maanilavan@gmail.com
- திண்ணையும் மரத்தடியும் இணைந்து நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி
- ஆட்டோகிராஃப் 18-ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருள் என்னவோ ?
- வைகறை இலக்கிய வாசல்-18-09-04
- கடிதம் செப்டம்பர் 16,2004
- கடிதம் செப்டம்பர் 16,2004
- கர்நாடக சங்கீத நிகழ்ச்சி -செப் 25,2004
- கருணாநிதிக்கு ஒரு வார்த்தை…
- சமைந்தவர்கள்(பிறைநதிபுரத்தானுக்கான பதில் அல்ல இது. சமைந்தவர் அத்தனைபேரின் பார்வைக்கும்…)
- வாக்கிற்காக ஒரு வாக்
- கடிதம் செப்டம்பர் 16,2004
- கடிதம் செப்டம்பர் 16,2004
- கவுரியின் எதிர்காலம் ?
- சொன்னார்கள்
- தேடுகிறேன் தோழி
- கவிக்கட்டு 25-காதலின் மறுவடிவம்
- அந்தத் தருணங்களில்…!
- எங்கள் பாரதி ஒரு தென்றல்.
- பசுமைப் புரட்சி….
- மெய்மையின் மயக்கம்-17
- கடிதம் செப்டம்பர் 16,2004
- தமிழ் தெய்வீகம் இஇணைய தளங்கள்
- கடிதம் செப்டம்பர் 16,2004
- அவசியம் படியுங்கள்:வேல்முருகன் போன்ற அன்பர்களுக்கு உதவ வேண்டும்
- இரவுத்தினவுகள்
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 37
- சுந்தர ராமசாமியுடன் ஒரு கலந்துரையாடல் – செப்டம்பர் 19,2004
- ஆய்வுக் கட்டுரை: முகப்பேறு ஆய்வு
- வாழ்வதற்காக சாகத்துணிந்த மீனவர்களும் சேது சமுத்திரமும்
- பெரியபுராணம் – 9
- பூகம்பம்
- பாரதி (பா)ரதத்தின் சாரதி
- அந்தத் தருணங்களில்…!
- சித்தனாய் நானிருந்தால்.. ?
- அக்கினி விதைகள்
- தோப்பு
- கழுதைகளுக்குத் தெரியுமா….
- நாட்குறிப்பு
- உயர் இரத்த அழுத்தம் – ஓர் அமைதிக் கூற்றுவன்
- பூச்சிகளைத் தின்னும் செடிகள்
- சரித்திரப் பதிவுகள் – 2 : U – படகுகள்
- வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்
- ஓர் இனிய மாலைப் பொழுது இயக்குனர் சேரனுடன்…
- சமூக விரோதியாகிய கார்
- பெ அய்யனாரின் ‘அலை புரளும் வாழ்க்கை ‘- நூல் அறிமுகம்
- அனைத்துலக அரங்கில் தமிழ்