ஆப்பிரிக்கப் பஞ்சாயத்து

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

அ.முத்துலிங்கம்


ஒரு பேச்சுக்கு இந்த உலகத்தில் நூறு கொசுக்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொண்டால் அதிலே 50 பெண் கொசுக்களும், 50 ஆண் கொசுக்களும் இருக்கும். ஆண் கொசு கடிக்காது, பெண் கொசுதான் கடிக்கும். கடிக்கும் 50 பெண் கொசுக்களில் 30 கொசுக்கள் மலேரியா கிருமியை காவும் என்றால் அதிலே ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த கொசுக்கள் 24 ஆக இருக்கும். அந்த 24 கொசுக்களில் இரண்டு சியாரா லியோன் என்ற நாட்டைச் சேர்ந்தவை என்று வைத்துக் கொள்வோம்.
அந்த இரண்டில் ஒரு கொசு என்னைக் கடித்துவிட்டது.
அதுதான் என்னுடைய முதல் மலேரியாக் காய்ச்சல். துரதிர்ஷ்டம் என்னவென்றால் நான் ஆப்பிரிக்கக் காட்டில் இருந்த ஒரு வீட்டில் தனியாக அகப்பட்டுக் கொண்டதுதான். என்னுடைய மனைவியும் பிள்ளைகளும் விடுமுறையில் போய்விட்டார்கள். என்னைப் பார்க்க ஒரு வேலைக்காரன் மட்டுமே இருந்தான். அவனுடைய பெயர் ஸாண்டி. கறுத்த மேனி. கன்னங்களில் சாய்வாக இரண்டு கோடுகள் கிழித்திருக்கும். அவனுடைய இனக்குழுவின் அடையாளம். உயரமாக வாட்டசாட்டமாக இருந்த அவன் ஓர் ஆபத்து என்றால் என்னைத் தூக்கிக்கொண்டு 10 மைல் நடக்கக்கூடியவன். ஒரு தகப்பனைப்போல, ஒரு மகனைப்போல அவன் என்னருகே நின்று என்னைக் கவனித்தான்.
அந்த இரவு வீட்டிலே இருந்த அத்தனை போர்வைகளை போர்த்திய பிறகும் தூக்கி தூக்கிப் போட்டது. அடுத்த நாள் காலை மட்டும் காத்திருக்காமல் என்னைத் தனியாக விட்டுவிட்டு அவன் நடந்து சென்று மருத்துவரை அழைத்து வந்தான். அவர் ஊசி போட்டதும், மருந்து தந்ததும் அரை ஞாபகமாக என் நினைவில் இருந்தது. ஸாண்டிக்கு வெள்ளைக்கார மருந்தில் நம்பிக்கை கிடையாது. தன் கணக்குக்கு ·பீவர் மரத்து பட்டையையும் அவித்து அந்த நீரைப் பருக்கினான். அது உடம்பில் தங்கவில்லை. பச்சை நாடாவாக வாந்தி வெளியே வந்து விழுந்தது. எப்பொழுது கண் விழித்தாலும் ஸாண்டி என் முன்னே என்னைப் பார்த்தபடி நின்றான்.
அப்படி ஒருமுறை கண் விழித்தபோது எனக்கு பயம் பிடித்துக்கொண்டது. எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம். ஒரு பேப்பரில் என்னுடைய முகவரியை எழுதி அப்படி ஏதாவது ஆகிப்போனால் தந்தி கொடுப்பாயா என்று கேட்டேன். தலையை ஆட்டினான். எட்டு மைல் தூரமுள்ள அஞ்சல் நிலையத்துக்கு அவன் நடந்து போகவேண்டும். சிறிது நேரம் கழித்து அவன் என் காலைச் சுரண்டினான். ‘ மாஸ்ட, தந்தியடிக்க காசு’ என்றான். எனக்கு கிலி பிடித்தது. அப்பொழுதே அடித்தாலும் அடித்துவிடுவான் போலப்பட்டது. என் பணப்பையில் இருந்த அவ்வளவு காசையும் அவன் கையில் வைத்தேன். அப்படியே நித்திரையாகிவிட்டேன்.
மூன்றாவது நாள் காலை கண் விழித்தபோதும் அவன் என் முன்னே சிரித்தபடி நின்றான். அவன் கையில் சூப் கோப்பை இருந்தது. அவனைப் பார்த்தபோது அவன் கன்னத்தில் தள்ளிக்கொண்டு நிற்கும் வடு தெரியவில்லை. சப்பையான மூக்கும் அகலமான முகமும் தெரியவில்லை. அவன் நெஞ்சிலே இருந்து தொடங்கும் வைரமான தொடைகளும் என் கண்ணுக்கு படவில்லை. ஒரு தேவதூதன்தான் தெரிந்தான். அவ்வளவு சூப்பையும் ஒரு சொட்டு விடாமல் நான் குடித்தேன். கொஞ்சம் புளிப்பும், ஆப்பிரிக்க உறைப்பும் கலந்து அது சுவையாக இருந்தது.
இரண்டு மூன்று நாட்கள் இப்படி ஓடின. நான் படுக்கையில் இருந்தபடி யன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு விநோதமான காட்சி தென்பட்டது. ஆறடி உயரமான ஸாண்டி ஒரு சிறு பெண்ணைத் துரத்திக்கொண்டு போனான். அவளுக்கு 12, 13 வயதுதான் இருக்கும். முதுகிலே ஒரு குழந்தையைக் கட்டியிருந்தாள். அது கழுத்து முறிந்ததுபோல ஒரு பக்கத்துக்கு தலையை மடித்து தூங்கிக்கொண்டிருந்தது. ஸாண்டியின் முகத்தில் கோபம் படபடத்தது. வீட்டின் எல்லை வரைக்கும் அவளைக் கலைத்து அவள் போய்விட்டாளா என்று நிச்சயப் படுத்திக்கொண்டு திரும்பினான். மத்தியானம் அவன் சாப்பாடு பரிமாறியபோது என்னப்பா விசயம் என்று விசாரித்தேன். அவன் சொன்ன விருத்தாந்தம் இதுதான்.
அந்தச் சிறுமியின் பெயர் கதீஜா. எங்கள் வீட்டிலிருந்து சிறிது தூரத்திலுள்ள ஒரு வீட்டில் அவள் வேலை செய்தாள். அவளுடைய எசமானும் எசமானியும் இளம் தம்பதியர். இருவருமே வேலைக்குப் போனார்கள். அவர்களுடைய குழந்தையத்தான் அவள் முதுகிலே கட்டியபடி திரிந்தாள். பிள்ளை பார்ப்பதோடு சமையல் வேலையையும் அவள் ஒருத்தியாகவே கவனித்தாளாம்.
‘அது சரி, எதற்காக அவளை அந்த விரட்டு விரட்டினாய்?’
அவன் முகம் ஆத்திரத்தால் சிவந்திருக்கவேண்டும், ஆனால் கறுப்பு நிறம்தான் இன்னும் கூடியது. கோபத்தில் நாக்குளறத் தொடங்கியது. எங்கள் வீட்டு வளவில் எட்டுக்கு எட்டு வலையடித்து கூண்டு செய்து அதற்குள் இரண்டு காட்டு முயல்களை வளர்த்தோம். அதைப் பார்க்க வந்திருக்கிறாள். அவள் ஏதோ பாரதூரமான குற்றம் செய்ததுபோல முகத்தை வைத்துக்கொண்டான். ‘நாங்கள் வளர்க்கும் முயல்களை அவள் என்ன வந்து பார்ப்பது. இது என்ன நியாயம்?’
பக்கத்து வீட்டு கணவனின் பெயர் வூ·ரி. அவர் அணை கட்டும் கம்பனி ஒன்றில் வேலை பார்த்தார். இங்கிலாந்தில் படித்து திரும்பிய பொறியியலாளர். அவர் மனைவி அமினாட்டா காரியதரிசி படிப்பு படித்தவர். அவரும் கணவர் வேலை பார்க்கும் அதே கம்பனி மேலதிகாரியிடம் காரியதரிசியாக பணியாற்றினார். அமினாட்டா கொடிபோல மெலிந்து இருப்பார். தலை மொட்டை போட்ட அழகி. எந்தக் கொடிய வெய்யில் மழை என்றாலும் நீண்ட கறுப்பு ஸ்டொக்கிங்க்ஸ் அணியாமல் அவர் வெளியே புறப்படுவதில்லை. நீளத்துக்கு லேஸ் கட்டிய பூட்ஸ் டக்டக் என்று சப்தம் எழுப்பி அவர் தூரத்தில் நடந்து வரும்போதே அறிவித்துவிடும்.
அவர்கள் மணமுடித்த காலத்திலிருந்து கதீஜா அங்கே வேலைசெய்தாள். ‘1000 முயல்கள்’ என்ற கிராமத்துக்கு போய் அவளைப் பிடித்து வந்திருந்தார்கள். அதென்ன அப்படி ஒரு பெயர் என்று கேட்டேன். ஆப்பிரிக்க கிராமத்துப் பெயர்களுக்கு காரணம் கேட்கக்கூடாது என்றார்கள். முப்பத்து முக்கோடி தேவர்கள் என்பதுபோல இதுவும் ஒரு கணக்கு என்று நினைத்துக்கொண்டேன்.
என் மனைவியும் பிள்ளைகளும் விடுமுறையிலிருந்து திரும்பிய பிறகு நாங்கள் காட்டு முயல்களைப் பராமரிப்பதில் இன்னும் தீவிரமாக ஈடுபட்டோம். முயல்கள் அபாரமாகப் பெருகும் என்று படித்திருந்தேன். ஒரு வருடத்தில் மூன்று தரம் குட்டிபோடும். இரண்டு வருடத்தில் குட்டிக்குமேல் குட்டி போட்டு எண்ணிக்கை நூறுக்கு மேலே போய்விடும். ஆனால் இந்த முயல்களுக்கு அப்படியான ஒரு நோக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆண் அணுகும் போதெல்லாம் பெண் முயல் பைத்தியம் பிடித்ததுபோல முன்னங்காலால் அடித்து விரட்டும். அநேகமாக மார்ச் மாதத்தில் இது நடைபெறுவதால் லூயி கரோல்கூட தன்னுடைய ‘அலிஸின் அற்புத உலகம்’ புத்தகத்தில் தேநீரில் பைக்கடிகாரத்தை முங்கி எடுக்கும் முயலுக்கு ‘மார்ச் ஹேர்’ என்று பெயர் சூட்டியிருப்பார்.
காட்டு விலங்குகளைப் பற்றி தெரிந்த ஆப்பிரிக்க நண்பர் ஒருவர் வந்தபோது அவை ஏன் பெருகவில்லை என்று கேட்டேன். பெண் முயல், ஆணுடைய ஆசையை அதிகரிப்பதற்காக அப்படித்தான் அடித்து விரட்டும் என்றார். தன்னுடைய விலையை அது எப்பவும் கூட்டியபடியே இருக்குமாம். ஆப்பிரிக்க வயலட்டும், ஆப்பிரிக்க முயலும் ஒன்றுதான். திடீரென பெருக ஆரம்பிக்கும், திடீரென நிறுத்திக்கொள்ளும் என்றார்.
நாங்கள் முயல்களைப் பார்வையிடும் சமயங்களில் கதீஜா குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு கண் படும் தூரத்தில் சுற்றிக்கொண்டே நிற்பாள். தேடக் கிடைக்காத திரவியம் அங்கே இருக்கிறது என்பதுபோல அவள் கண்கள் மினுங்கும். கையசைத்து அவளை எவ்வளவு கூப்பிட்டாலும் கிட்ட வரவே மாட்டாள். ஸாண்டி அவளை அப்படி அச்சுறுத்தி வைத்திருந்தான்.
எங்களுக்கு அயல் வீடு என்றால் அது அமினாட்டாவின் வீடுதான். இன்னும் சில வீடுகள் தூரமாக இருந்தன. அமினாட்டா எங்கள் வீட்டுக்கு ஏதாவது கடன் வாங்குவதற்காக அவ்வப்போது வருவாள். சில சமயம் கால் பாதங்களை மறைக்கும் நீண்ட அங்கி அணிந்து, பெரிய கவடுகள் எடுத்து வைத்து, வூ·ரி வருவார். ஏதாவது பழைய ஆங்கில மாத இதழ்கள் கேட்பார். ஆனால் ஒரு போதும் இருவரும் சேர்ந்து வந்ததில்லை. எந்தச் சமயத்திலும் அவர்கள் தங்கள் பிள்ளையை தூக்கி விளையாடியதையும் நான் காணவில்லை. அது கதீஜாவின் முதுகில் நிரந்திரமாக குடியிருந்தது. அவள் போகும் இடமெல்லாம் போனது.
ஆனால் காலம் எப்போதும் ஒரே மாதிரியாக மேடு பள்ளம் இல்லாமல் அலுப்பு தரும்படி இருப்பதில்லை, அல்லவா?
ஒரு சனிக்கிழமை பின்மதியம், மழை பெய்து ஓய்ந்திருந்த சமயம், வூ·ரியும் அவர் மனைவியும் திடீரென்று ஒன்றாக வந்து கதவை தட்டினார்கள். ஏதோ விவகாரமாக இருக்கவேண்டும் என்று உள்மனது பதைத்தது. அமினாட்டா அன்றைக்கு உடம்பைவிட்டு சற்று விரிந்திருந்த ஆடம்பரமான உடையுடுத்தி எங்கோ புறப்பட்டதுபோல காட்சியளித்தார். நான் உள்ளே அழைத்ததும் இருவரும் வந்து அமர்ந்துகொண்டார்கள். அப்பொழுதுதான் பார்த்தேன், இவர்களுக்கு பின்னால் கதீஜாவும் நின்றாள். வழக்கம்போல குழந்தை அவள் முதுகிலே தூங்கியது. அவளும் உள்ளே வந்து, கால்களை மாறி மாறி தூக்கி வைத்து மனதுக்குள் ஓடும் ஒரு பாடலுக்கு ஆடிக்கொண்டிருந்தாள்.
மூன்றாம் ஆள் ஒட்டுக் கேட்கமுடியாத ரகஸ்யக் குரலில் அமினாட்டா ஏதோ வூ·ரியிடம் சொன்னார். எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் கடிகாரத்தையே பார்த்தபடி இருந்தவர், ஒரு குறிப்பிட்ட நேரம் வந்ததும் ‘உங்களுக்கு தெரியாமல் பல காரியங்கள் நடந்துவிடுகின்றன’ என்றார். ‘என்ன விசயம், சொல்லுங்கள்?’ என்றேன்.
அவர் கதீஜாவை சுட்டிக்காட்டி ‘இவள் இப்போது கர்ப்பம்’ என்றார். நான் திகைத்துப்போய் அந்தச் சிறுபெண்ணைப் பார்த்தேன். அவள் ஒரு பொருட்டாகவே எங்களை மதிக்காமல் இரண்டு பக்கமும் தலையை வளைத்து ஆடிக்கொண்டிருந்தாள். அமினாட்டா மேலும் நல்லாய் பின்னால் சாய்ந்துகொண்டு ஸ்டொக்கிங்ஸ் அணிந்த தன்னுடைய நீண்ட கால்களை மடிக்காமல் நீளத்துக்கு நீட்டி உட்கார்ந்தார். அவருடைய ஆயத்தத்தைப் பார்த்தால் அன்று முழுக்க அங்கே தங்குவதற்கு தீர்மானித்து வந்தவர்போல இருந்தது.
‘இதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்?’
‘ஸாண்டிதான் இதற்கு காரணம். உங்களிடம் வழக்கை தீர்த்துவைக்கும்படி கேட்க வந்தோம்.’
இப்படித்தான் நான் ஆப்பிரிக்காவில் பஞ்சாயத்து தலைவர் உத்தியோகம் பார்க்கும்படியான நிலைமை ஏற்பட்டது.
பஞ்சாயத்துக்கள் எப்படி இயங்குகின்றன என்பது எனக்கு தெரியாது. ஒரு பஞ்சாயத்தை நேரிலே பார்த்த அனுபவமும் இல்லை. ‘எத்தனை தமிழ் சினிமா பார்த்திருக்கிறேன், எப்படியும் சமாளித்துவிடலாம். இது தினசரி கிடைக்கக்கூடிய வாய்ப்பா, என்ன?’ என்று நினைத்தேன். வழக்கு என்ற வார்த்தை காதில் விழுந்ததும் போட்டது போட்டபடியே மனைவியும் வந்து எங்களுடன் கலந்து கொண்டார். நாலு அங்கத்தவர், ஒரு வாதி, ஒரு பிரதிவாதி.
ஸாண்டியை கூப்பிட்டதும் அவன் ஆடி அசைந்து இரண்டடி தூரத்தை மூன்று நிமிடத்தில் கடந்து வந்து சேர்ந்தான். எதற்கு இவர்கள் கூடியிருக்கிறார்கள், என்னை எதற்காக அழைக்கிறார்கள் என்ற ஒருவித குழப்பமோ, அச்சமோ, வியப்புக் குறியோ அவன் முகத்தில் கிடையாது.
கதீஜாவைக் காட்டி ‘இந்தப் பெண் கர்ப்பம் என்று இவர்கள் கூறுகிறார்களே, உண்மையா? என்றேன்.
‘எனக்கு எப்படி தெரியும்?’ என்றான். என்னுடைய ஆரம்பக் கேள்வியே பிழை.
‘நீதான் காரணம் என்று சொல்கிறார்களே?’
‘அதுபற்றி நிச்சயமாக எதுவும் சொல்லமுடியாது.’
‘நீ அவளுடன் எப்பவாவது பேசிப் பழகி இருக்கிறாயா?’
‘இல்லை.’
‘அவளுடன் உறவு கொண்டிருக்கிறாயா?’
‘அப்படித்தான் நினைக்கிறேன்.’
‘எத்தனை தடவை?’ இது அவசியமில்லாத கேள்வி, ஆனால் மனித ஆர்வத்தை யார் தடுக்க முடியும்?
‘கணக்கு வைக்கவில்லை. பிடித்த தடவை எல்லாம்.’
‘அது என்ன பிடித்த தடவை எல்லாம்?’
‘மாஸ்ட, இவள் முயல் பார்க்க அடிக்கடி வருவாள். நான் துரத்துவேன். தப்பி ஓடிவிடுவாள். சிலவேளை பிடிபடுவாள். பிடிபடும் சமயங்களில் மட்டுமே உறவுகொள்வேன்.’
‘எங்கே உடலுறவு வைப்பீர்கள்?’ இதுவும் தேவையில்லாதது.
‘முயல் கூட்டுக்குள்தான்.’
வூ·ரியும் அமினாட்டாவும் வாய் திறக்கவில்லை. பூரண ஒத்துழைப்போடு விசாரணையை செவிமடுத்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் ஒரேயொரு கேள்வி, ஆனால் அதைக் கதீஜாவிடம் கேட்கவேண்டும். அவளுக்கும் இதில் பங்கிருக்கிறதல்லவா? கதீஜா முதுகில் கட்டிய குழந்தையுடன் நடுக்கூடத்தில் வந்து நின்றாள். ஒரு கன்கூரன் நடனம் ஆட அழைத்ததுபோல இரண்டு கைகளையும் பின்னால் நீட்டி ஆயத்தமாக அசைந்தபடி நின்றாள்.
‘நீ உடலுறவுக்கு சம்மதம் கொடுத்தாயா?’
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அமினாட்டா ‘1000 முயல்கள்’ கிராமத்தில் மட்டுமே புழங்கும் ஒரு கொச்சை மொழியில் நீண்ட நேரம் எதோ கூறினார். அதற்கு கதீஜா பதில் சொன்னாள். அதுவும் மிக நீண்டதாக இருந்தது. முடிவில் என் பக்கம் திரும்பி அவள் சொன்னதை அமினாட்டா மொழிபெயர்த்தார்.
‘நான் பெரிய ஓம் சொல்லவில்லை, சின்ன ஓம் தான் சொன்னேன்’
அது என்ன பெரிய ஓம், சின்ன ஓம், நான் மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். சின்ன ஓம் என்றால் மூன்று மாதத்தில் பிள்ளை பிறந்துவிடுமா? என் மனதுக்குள் நடந்ததை எப்படியோ அறிந்து என் மனைவி சொண்டுக்குள் சிரித்தாரே ஒழிய எனக்கு ஒருவித உதவியும் செய்யவில்லை.
கேள்விகள் எல்லாம் முடிந்துவிட்டன, இப்போது தீர்ப்பு சொல்லும் முறை. ஆனால் ஸாண்டி, தன் நெஞ்சு பொத்தான் சட்டையை ஒரு கையால் பிடித்து திருகியபடி, பேசத் தொடங்கினான். ‘இவளுக்கு இங்கே என்ன வேலை? ஏன் சும்மா சும்மா முயல்களைப் பார்க்க வருகிறாள். அதுதான் துரத்தினேன். இவள் வேகமாக ஓடவில்லை. போகப்போக இவள் வேண்டுமென்றே என்னிடம் பிடிபட்டுக்கொண்டாள்’ என்று குற்றம் சாட்டினான். நான் வூ·ரியையும், அமினாட்டாவையும் கடைசியில் கதீஜாவையும் பார்த்தேன். இறுதி முடிவுக்கான கட்டம் நெருங்கி வந்தது. ஆப்பிரிக்காவிலே இப்படியான குற்றத்துக்கு என்ன தண்டனை? தாலிகட்டச் சொல்வதா? இருக்காது. கணவனும் மனைவியும் என் வாயிலே இருந்து உதிரப் போகும் வார்த்தைகளுக்காக காத்திருந்தார்கள்.
என் சங்கடத்தைப் புரிந்துகொண்டு வூ·ரியே அடி எடுத்துக் கொடுத்தார். ‘கர்ப்பம் என்பதை நாங்கள் உறுதிப்படுத்திவிட்டோம். எங்களுக்கு உத்திரவாதம் வேண்டும். பிள்ளை பிறந்ததும் ஸாண்டி மாதாமாதம் பராமரிப்பு பணம் கட்டுவதாக.’
‘அவ்வளவுதானா?’
‘அவ்வளவுதான்.’
ஸாண்டி பெருத்த குரலில் புலம்பத் தொடங்கினான். ‘இவளல்லவோ அத்துமீறி நுழைந்தவள். இவளுக்கல்லவோ தண்டனை கொடுக்கவேண்டும்.’ அவனுடைய முகம் அவன் கத்தக் கத்த அகலமாகிக்கொண்டு போனது. மலேரியாக் காய்ச்சலில் நான் படுத்திருந்தபோது எந்த நேரம் கண்ணைத் திறந்தாலும் என் முன்னே தோன்றிய தேவதூத முகம் நினைவுக்கு வந்தது. ஆனால் நீதிபதிக்கு பாரபட்சம் கூடாது. நான் ‘பிள்ளை பிறக்கும் தினத்திலிருந்து அவனுடைய சம்பளப் பணத்தில் 25 வீதம் அவன் தரவேண்டும்’ என்றேன். அதுதான் தீர்ப்பு.
யாரோ தலையில் அடித்தது போல ஸாண்டி வாய் பிளந்து நின்றான். கணவனும் மனைவியும் திறந்தவாய் மூடவில்லை. ஒரு வேளை தீர்ப்பு பணம் மிக அதிகம் போல என்று நினைத்துக்கொண்டேன். ஸாண்டி மட்டும் தன் காதுகளை நம்பமுடியாமல் ‘அவளுக்கு தண்டனை என்ன? அவளுக்கு தண்டனை என்ன?’ என்று அரற்றிக்கொண்டே இருந்தான். ஆப்பிரிக்க முன்குடிகள் உடலுறவை குற்றத்துக்கு தண்டனையாக பயன்படுத்தியிருக்கலாம் என்ற விசயம் எனக்கு பல வருடங்கள் கழித்துதான் தெரிய வரும்.
அமினாட்டா ஒரு மகாராணியின் தோரணையுடன் முன்னே நடக்க, அவளுடைய மொட்டைத் தலை சூரிய ஒளிபட்டு பிரகாசித்தது. வூ·ரி மிகத் திருப்தியடைந்தவராக சற்று இடைவெளிவிட்டு நடந்தார். கதீஜா நடனமாடியபடியே அவர்களைப் பின்தொடர்ந்தாள்.

நாளடைவில் கதீஜாவுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இப்பொழுது அவள் தன்னுடைய குழந்தையை முதுகிலே கட்டிக்கொண்டு, எசமானியின் குழந்தையை தள்ளுவண்டியில் தள்ளிக்கொண்டு உலாத்தினாள். ஸாண்டி இல்லாத சமயம் பார்த்து முயல் கூண்டுப் பக்கம் காலடி எடுத்து வைப்பாள். வீட்டினுள்ளே என்ன தலைபோகிற காரியமாயிருந்தாலும் ஸாண்டி பாய்ந்து வந்து அவளை துரத்துவான். அவள் எப்படியோ தப்பி ஓடிவிடுவாள்.
ஒவ்வொரு மாதமும் முதலாம் தேதி அமினாட்டா வந்து ஸாண்டியின் சம்பளத்திலிருந்து பராமரிப்பு காசை பெற்றுப் போவாள். சம்பளத்துக்கு மூன்று நாள் இருக்கும்போதே ஸாண்டி மன்றாட ஆரம்பித்துவிடுவான். ‘மாஸ்ட, இந்த மாதம் பராமரிப்பு காசு கொடுக்கவேண்டாம். எனக்கு பணக் கஷ்டம். அடுத்தமாதம் பார்க்கலாம்’ என்பான். நானோ பஞ்சாயத்து தீர்ப்புக்கு மதிப்பு கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.
எனக்கு மாற்றல் உத்தரவு கிடைத்தது. நாங்கள் புறப்படும் வேளை வந்தபோது ஸாண்டியை கூப்பிட்டு முயல்களை என்ன செய்யலாம் என்று கேட்டேன். அவன் காட்டுக்குள் விடலாம் என்றான். ‘பாவம், செத்துப் போகுமே. அவைகளுக்கு தங்களை பாதுகாத்துக்கொள்ளத் தெரியாதே’ என்றேன். அவன் சிரித்தான். ‘மாஸ்ட, வேட்டையாடும் மிருகம் என்றால் அது புதிதாக வேட்டை கற்க முடியாது. பட்டினி கிடந்து இறந்துவிடும். முயல் அப்படியல்ல. அது பதுங்கும் மிருகம். பதுங்குவதற்கு பயிற்சி தேவை இல்லை’ என்றான். முப்பத்தியொரு முயல்களை எண்ணினோம். அவற்றைப் பிடித்து காட்டுக்குள் விட்டு வந்தபோது முயல்கூடு வெறுமையாகிக் கிடந்தது.
முயல்கள் போன பிறகு, பெரிய ஒம் சொல்லாமல் சின்ன ஓம் சொன்ன பெண், கழுத்து ஆடும் குழந்தையை முதுகிலே கட்டிக்கொண்டு முயல்கள் பார்க்க வருவதை நிறுத்திவிட்டாள். ஸாண்டிக்கும் அவளை துரத்திச் செல்லவேண்டிய அவசியம் நேரவில்லை. ‘அவளுக்கு என்ன தண்டனை’ என்று அவன் கத்தக்கத்த நான் வழங்கிய தீர்ப்பு அவனுக்கு பிடிக்கவில்லை. அவனும் தன் ஊருக்கு புறப்படப்போவதாகச் சொன்னான். அவனுடைய ஊரின் பெயர் ‘3000 முயல்கள்’ என்றுகூட இருக்கலாம். நான் முதன்முதல் பஞ்சாயத்து தலைவராக பதவியேற்று வழங்கிய தீர்ப்பு அதற்கு பிறகு நடைமுறைப் படுத்தப்பட்டதா என்ற தகவல் என்னிடம் இல்லை.

END

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்