ஆண்டவனே கண்ணுறங்கு

This entry is part [part not set] of 23 in the series 20051111_Issue

கவிஞர் புகாரி


யாராரோ யாரெவரோ
ஏதேதோ சொன்னாரோ
ஆராரோ ஆரிரரோ
ஆண்டவனே கண்ணுறங்கு

தேரோட்டிப் போனாலும்
தேர்மீதே போனாலும்
தெருவோரம் கிடந்தாலும்
திருவாகி நின்றாலும்

யாராரோ யாரெவரோ
ஏதேதோ சொல்வாரே
ஆராரோ ஆரிரரோ
ஆண்டவனே கண்ணுறங்கு
.

இருப்பவனோ ஒரு வீட்டில்
இல்லாதான் பல வீட்டில்
உனக்கென்று ஏன் வீடு
நீதானே பெரும் வீடு

ஆளுக்கொரு பேரு வெச்சு
ஆயிரமா வீடு கட்டி
ஆண்டவனே உனக்காக
ஆள்வெட்டிச் சாகையிலே

ஐயோன்னு அழுவாயோ
அடங்காமச் சிரிப்பாயோ
ஆராரோ ஆரிரரோ
ஆண்டவனே கண்ணுறங்கு
.

ஆண்டவனே உனக்கென்று
அறிமுகமும் ஒன்றல்ல
ஆண்டவனே உனக்கிங்கே
அடையாளம் பலகோடி

ஆண்டவனும் ஒருவனென்று
ஆளாளும் சொல்லுகிறார்
யாரென்று கேட்டாத்தான்
ஆளுக்கொண்ணு காட்டுகிறார்

யாரென்று முகங்காட்ட
நீயென்ன சின்னவனா
ஆராரோ ஆரிரரோ
ஆண்டவனே கண்ணுறங்கு
.

லாட்டரிக்குப் பத்து ரூபா
உண்டியலில் ஒத்தை ரூபா
ஆண்டவனே உன்னிடத்தில்
வேண்டுதலோ பலகோடி

எனக்கேநீ தாவென்று
எழுநூறு குரல்கேட்க
யாருக்காய்க் கொடுப்பாயோ
எப்பவும்போல் இருப்பாயோ

உண்டியலின் சில்லறைக்கு
உழைத்துத்தான் களைப்பாயோ
ஆராரோ ஆரிரரோ
ஆண்டவனே கண்ணுறங்கு
.

கோழியா முட்டையான்ன
கேள்விக்கோ பதிலில்லை
அறிவியலில் சொன்னதிலும்
அவ்வளவாத் தெளிவில்லை

கணக்குக்கு எட்டவில்லை
கற்பனைக்குச் சிக்கவில்லை
இறந்தவனும் சொன்னதில்லை
இருப்பவனும் கண்டதில்லை

ஆத்திகனோ துதிக்கின்றான்
நாத்திகனோ சிரிக்கின்றான்
பார்த்தவனே இல்லாமல்
பலகாலம் வாழ்கின்றாய்
.

எனக்குள்ளே நீ இருக்க
உனக்குள்ளே யார் இருக்கா
உனக்குள்ளே நான் இருந்தா
எனக்குள்ளே யார் இருக்கா

பூமிக்கோ வயசிருக்கு
சூரியனின் வயசிருக்கு
உனக்குமொரு வயசிருக்கா
உசுருன்னு ஒண்ணுருக்கா

அத்தனைபேர் சொந்தத்தில்
அனுதினமும் திண்டாட
ஆராரோ ஆரிரரோ
ஆண்டவனே கண்ணுறங்கு
.

எது உனக்குப் பேரென்று
எது உனக்கு முகமென்று
எது உனக்கு ஊரென்று
எது உனக்கு நாடென்று

வெட்டருவா வேல்கம்பு
பட்டப்பகல் வீதிகளில்
வெட்டித்தினம் ரத்தஆறு
பாய்ந்தோடி நிக்கையிலே

பக்தி கண்ட வேதனையில்
பழகிப்போன மெளனத்தில்
ஆராரோ ஆரிரரோ
ஆண்டவனே கண்ணுறங்கு
.

தடவைக்கொரு வேடமிட்டு
தரையிறங்கி நீயும் வந்து
ஒண்ணுஞ்செய்ய முடியாம
ஓய்ந்துபோய் விட்டாயோ

இன்று நீ எவரெவர்க்கோ
ஏதேதோ ஆகிவிட்டாய்
நேற்று நீ யாரென்று
அறிந்தோரும் யாரிருக்கா

நாளை நீ யாரென்று
அறியலாமோ ஆண்டவனே
அன்றைக்குக் கண்விழிப்பாய்
அதுவரைக்கும் கண்ணுறங்கு

(பச்சைமிளகாய் இளவரசி கவிதைத் தொகுப்பிலிருந்து)

Series Navigation

கவிஞர் புகாரி

கவிஞர் புகாரி