ஆட்டோகிராஃப் – 13- மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

சித்ரா ரமேஷ்


‘எங்கண்ணா குழந்தைக்கு ஆயுஷ்ஷேமம்! இந்தாடி! குஞ்சாலாடு ‘, என்று நீட்டி முழக்கிக் கொண்டு பித்தளை சம்படத்திலிருந்து ஒரு பெரிய சைஸ் லட்டுவை எடுத்துக் கொடுத்தாள் என் தோழி. லட்டுவை வாயில் வைத்து சாப்பிடும் போது எப்படியோ கரெக்ட்டா அவள் அம்மா வந்து விட்டாள். ‘எச்சப் பண்ணி சாப்பிட்டாச்சா ? சீக்கிரம் மிச்சத்தையும் வாயிலே போட்டுண்டு கையே அலம்பிக்கோ! பாட்டி பாத்தா திட்டப் போறா! ஏண்டா பெரியவா இருக்கறச்சே நீயே உபசாரம் பண்ணியாறதா ? ‘, என்று தன் பெண்ணின் மேல் பாய்ந்த அந்த மாமிக்கு கோபம் லட்டு எடுத்துக் கொடுத்ததாலா, எச்சப் பண்ணி சாப்பிட்டதாலா புரியவில்லை. திருப்பதி லட்டு சைஸில் பாதி வாசி கால் வாசி சைஸில் இருந்த குஞ்சாலாடுவை கடிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக கையால் பிய்த்துத்தான் தின்ன வேண்டும். முறுக்கு, தட்டை,தேங்குழல் எதையுமே கையில் வைத்துக் கொண்டு அப்படியே கடித்து சாப்பிடக் கூடாது. எச்சப் பண்ணி சாப்பிடாதே என்று இன்ஸ்ட்ர்க்ஷன் கொடுக்க யாராவது தோன்றி விடுவார்கள். அப்புறம் அந்த குஞ்சாலாடு வேப்பலாடுவாய் கசந்தது. நல்ல பட்டுப் பாவாடை கட்டிக் கொண்டு போனல் கூட ‘ சின்னாளம் பட்டிப் பாவாடையில் இந்த மாதிரி கலர்லாம் கிடைக்கறதா ? ‘, ‘வைரத்தோடுங்கறேளே! இப்படி எண்ணெய் இறங்கி ஏன் இப்படி குருட்டு முழி முழிக்கறது ? ‘, ‘புள்ளையாத்துக்காராகிட்டே செவ்வாய் தோஷம்னு சொல்லி பண்றேளா இல்லை மறைச்சுக் பண்றேளா ? ‘, இப்படி வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவது போல் குத்தல் பேச்சு,முகத்தில் அடித்தது போல் குதர்க்கப் பேச்சு! வேண்டாத விஷயங்களில் எல்லாம் யார் வேண்டுமானாலும் தலையிடுவது! அப்பபப்ப சாஸ்திர சம்பிரதாயங்களை மீறாத மக்களாய் காட்டிக் கொள்வது! இதையெல்லாம் நிறைய அங்குப் பார்க்கலாம். இதனால் அந்த அமைப்பை எல்லோரும் விரும்பினார்கள் என்று சொல்ல முடியாது.

பள்ளியில் வாசுகி என்ற பெண் சட்டையில் வாசனை கமகமக்க எதையோ பூசிக் கொண்டு வந்தாள். எதுக்கு என்று கேட்டதற்கு ‘எங்கக்கா மேஜராய்ட்டா! அதுக்குத்தான் எங்க வீட்டுக்கு வறியா ? ‘ என்று கூப்பிட்டாள். மேஜராவது என்றால் என்ன ? பெரிய பெண்ணாகி விட்டாள். இந்த இரண்டு டெர்மினாலஜியும் புரியவில்லை. ஸ்கூல் முடிந்ததும் நேராக வீட்டுக்குத்தான் போக வேண்டும். இஷ்டத்துக்கு திரிந்து விட்டு போக முடியாது.

‘எங்க வீட்டுலே நாய் நாலு குட்டி போட்டிருக்கு! வந்தா அதையும் பாக்கலாம் ‘, என்று கூப்பிட்டதும் தடுக்கப்பட்ட கனியை சுவைக்க ஏவாளுக்கு ஏற்பட்ட ஆர்வம் வந்துவிட்டது. அவளுடன் கிளம்பி விட்டேன். அவள் அண்ணனும் அதே வகுப்புத்தான். அப்போது நிறைய பேர் இப்படித்தான் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று வித விதமான காம்பினேஷனில் ஒரே வகுப்பு படிப்பார்கள். பள்ளியில் சேர்க்கும் போதே இப்படி ஒன்றாக சேர்த்து விடுவார்கள். எதோ கோமாளி வேலை செய்து சிரிக்க வைத்துக் கொண்டு வந்தான். ஆண் பிள்ளைகளுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்தான். எதையாவது செய்து எல்லாருடைய கவனத்தையும் தன் பக்கம் திருப்பும் முயற்சியில் இதுவும் ஒன்று. வீட்டு வாசலில் தொய்ந்து போன கயிற்றுக் கட்டிலில் வசதியாக உட்கார்ந்தாகி விட்டது. வாடாமல்லி நிறப் பொட்டோடு மூக்கும் முழியுமாக அசப்பில் நம்ப ஊர் அம்மன் ஜாடையில் அவள் அம்மா இருந்தாள். கன்னத்தைக் கிள்ளி ஆசையாக நெட்டி முறித்தது இன்னும் கன்னத்தில் வலிக்கிறது. பசுஞ்சாணம் போட்டு மெழுகிய தரையில் லேசாக சாணி வாசம் வீசிக்கொண்டிருந்தது. அவள் அக்கா அப்படியொண்ணும் பெரிய பெண்ணாகத் தெரியவில்லை. மாடு, கோழி, நாய் என்று குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களைக் கொண்டிருந்தது வீடு. பொதுவாக ‘அம்மா ‘ நாய் தன் குட்டிகளை யாரையும் தொட விடாது. ஆனால் அந்த ‘அம்மாவுக்கு ‘ எங்கள் மீது அசாத்திய நம்பிக்கை! அப்போதுதான் கண் திறந்திருந்த குட்டிகளை எங்கள் பொறுப்பில் விட்டு விட்டு வெளியில் எங்கேயோ கிளம்பி விட்டது. நாய்க்குட்டிகளோடு விளையாடுவதைப் போன்ற சுகமான விஷயம் உலகத்திலேயெ வேறேதுவும் இருக்க முடியாது. லேசாக ஈரம் படர்ந்த மூக்கால் முட்டி, நாக்கால் நக்கி, வாலாட்டி குழைந்து முளை விட்டுக் கொண்டிருக்கும் பற்களால் கவ்வி கடித்து! அடேயப்பா! பரமாத்மாவை தரிசிக்கும் பேரானந்தம் என்று ஞானிகள் சொல்வார்களே! அந்த நிலைக்குப் போய்விடலாம். சின்னக் குழந்தைகளுக்குப் பல் முளைக்கும் போது வாயில் விரல் கொடுத்தால் நைசாக பல் முளைக்கும் இடத்திற்கு கொண்டு போய் நறுக்கென்று கடித்து விட்டு ஈறு தெரிய சிரிக்குமே! அதே போலத்தான் நாய்க்குட்டியும். நாய்க்குட்டிக்கும் பல் முளைக்கும் போது கையைக் கொடுத்தால் பல் ஊறுகின்ற இடத்திற்கு லாகவமாய் விரலைத் தள்ளிக் கொண்டு போய் கடிக்கும். ‘ஆ ‘ என்று கத்தினால் நாக்கால் நக்கி சமாதானப் படுத்தும். கொஞ்ச நேரத்தில் அம்மா நாயும் திரும்பி வந்து விட்டது. நேரம் போவதே தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தோம். ஒரு நாய்க் குட்டியை வீட்டுக்கு தூக்கிக் கொண்டு போவதாக அவசரப் பட்டு ஒரு வாக்குறுதியைக் கொடுத்து விட்டேன். வாசுகியின் அம்மா கறந்த பாலை சுட வைத்து எங்களுக்கு, நாய்க்கு, நாய்க்குட்டிகளுக்கு எல்லோருக்கும் கொடுத்து உபசாரம். அதில் வழக்கமாகப் போடும் ‘அஸ்கா ‘ சர்க்கரை போடப்பட்டிருக்கவில்லை என்பது ஒரு வித்தியாசமான சுவையிலிருந்து தெரிந்தது. வெல்லம் போட்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன். சர்க்கரை விலை அதிகம் என்று நிறைய பேர் வீட்டில் வாங்க மாட்டார்கள். அந்தப் பாலையும் ரசித்து சீப்பி குடித்தாகிவிட்டது. வழக்கமாக நான் சேர்ந்து போகும் பெண்கள் போகிற வழியில் தாத்தாவிடம் நான் வீட்டுக்கு வராமல் எங்கே போயிருக்கிறேன் என்ற விவரத்தை விலாசத்தோடு வத்தி வைத்து விட என் தாத்தாவுக்கு செம கோபம்.

கொஞ்ச நேரம் பொறுத்திருந்து பார்த்து விட்டு சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார். ஏய் உன்னைத் தேடி உங்க தாத்தா வந்துட்டார்ன்னு சொன்னதும் சரெல்லென்று ஒரு கத்தி பாய்ந்தது. தாத்தா வீட்டுக்கு திரும்பி வரும் வழி முழுவதும் ‘பிரஸ்டாஜ், பிரஸ்டாஜ் ‘ என்று ஏதோ சொல்லிக் கொண்டே வந்தார். சின்னப் பெண்தானே! செய்யக்கூடாத பெரிய தப்பு செய்து விட்டதாக அப்போது தோன்றியது. பிறகு என் அம்மா வந்த போது இதைப் பெரிய விஷயமாகத் தாத்தா முறையிட அம்மா என்ன சொல்லியிருப்பாள் ? வழக்கம் போல் சின்னப் பெண்தானே! ஏதோ விளையாட்டுக்கு செஞ்சிருப்பா! இதையெல்லாம் பெரிசு பண்ணாதீங்க என்று சொன்னதும் அப்படியொண்ணும் செய்யக் கூடாத தப்பு செய்து விடவில்லை என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஒரு மஞ்சள் பையில் புத்தகம் சிலேட்டு வைத்து தலையில் மாட்டிக் கொண்டு வரும் குழந்ைதைகளிடையே பிளாஸ்டிக் பாக்ஸ்,(அலுமினிய பாக்ஸ் மாதிரி இருக்கும்), வாட்டர்பாட்டில், சைனீஸ்காலர் சட்டை,ஃபிராக் அணிந்து போன வித்தியாசமான பெண்ணாக ஏற்கெனவே அடையாளம் காட்டப்பட்ட எனக்கு என் தாத்தாவின் அதீதமான கண்டிப்பினால் அவளை விளையாட்டுக்கு சேர்த்துக் கொள்ள வேண்டாம். அடிபட்டா அவங்க தாத்தா திட்டுவாரு என்ற அனுதாபம் சேர்ந்து கொண்டது.

பிறகு அதிக நாள் அந்த வாழ்க்கைத் தொடரவில்லை. கிராமச் சூழ்நிலை, பள்ளிக்கூடம், படிப்பு எதுவுமே என் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. நான் வேறு தனிமையில் ஏங்கியதால், தாத்தாவுக்கு இத்தனை வயதுக்குப் பிறகு எதற்கு கூடுதலாக ஒரு பொறுப்பு என்று நான் என் குடும்பத்தோடு இணைய வேண்டிய காலக் கட்டாயம் ஏற்பட்டு விட்டது. என் தாத்தாவும் ரொம்ப நாள் அங்கு இருக்கவில்லை. அந்த பெரிய வீட்டில் இரண்டு வயதானவர்கள் தனிமையில் இருப்பது கஷ்டம்தான். இரண்டு மூன்று முறை ஓட்டை பிரித்துக் கொண்டு திருடன் இறங்கியதை கையும் களவுமாக பிடித்தாலும் மனதில் பயமும், பாதுகாப்பற்றத்தன்மையும் தோன்றி விட்டது. ஒரு முஸ்லிம் பெரியவர் அந்த வீட்டைப் பார்த்து விட்டு ஆசையாக விலைக்குக் கேட்டார். அக்ரஹாரத்தில் எப்படி என்று தயங்கி என் தாத்தா அவருக்கு விற்கவில்லை. கடைசியில் கிடைத்த விலைக்கு விற்று விட்டார். இதெல்லாம் முடிந்து கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்களில் அக்ரஹார அமைப்பே காணாமல் போய் விட்டது. முதலில் பனிப் பாறையை யார் உடைப்பது என்ற கேள்வி இருந்து கொண்டேயிருந்தது. ஒருவர் செய்ய ஆரம்பித்ததும் மடமடவென்று சரியும் சீட்டுக்கட்டுச் சங்கிலித் தொடராய் அனைவரும் யாருக்கு வேண்டுமானாலும் வீட்டை விற்க ஆரம்பித்து விட்டனர். அவ்வளவுதான்! இப்பொது அந்த ஊர் பாராளுமன்றத் தொகுதியாகி விட்டது. (ரிஸர்வ்டு தொகுதி ?) பெரிய ஊராகிவிட்டது. பாழடைந்த அரண்மனை எல்லாம் மறைந்து போய் பெரிய கடைகள் கொண்ட கடைத்தொகுதி. இங்கிலீஷ் மீடியம் வகுப்புகள் கொண்ட மெட்ரிகுலேஷன் ஸ்கூல்! ஊருக்குள் போவதற்கு ஆட்டோ என்று முன்னேறி விட்டது. இண்டெர்நெட் சென்ட்டர், என்ஜினியரிங் காலேஜ் கூட வந்திருக்கும். பஜனை மடம் பாழடைந்து அதிலிருந்த அழகான ரவிவர்மா படங்கள், தஞ்சாவூர் பாணியில் வரையப்பட்ட தெய்வங்கள் நிறமங்கி, பொலிவிழந்து கடந்த காலத்தின் பிரதிநிதிகளாகி நிற்கின்றன. ஜோதி மஹாலிங்கம் நியான் விளக்கில் சிரிக்கின்றார். பிரகாரங்கள் இருட்டைப் பூசிக்கொண்டு வெளவால்கள் வட்டமிட கிசுகிசுக்கின்றன. இதெல்லாம் ஊரின் வளர்ச்சிக்கு கொடுக்கும் விலை. கும்பகோணத்திலிருந்து 19ஆம் நம்பர் பஸ் (வழி: வேப்பத்தூர்) ஏறிப் போனால் பஜனை மடம் தாண்டியவுடன் வரும் இரண்டாவது வீடு. விலாசம் மாறித்தான் போய்விட்டது. வாசலில் பவளமல்லி, பன்னீர் மரம், முல்லைக்கொடியெல்லாம் இல்லாமல் ஒரு மாட்டுக் கொட்டகை இருக்கிறது. வாங்கியவருக்கு பூக்களின் தேவையை விட வாழ்தலின் தேவை அதிகம்!

‘மதுரையில் பறந்த மீன் கொடி ‘ வரவேயில்லையே என்கிறீர்களா ? இந்தப் பாட்டு முழுவதையும் ஒரு வரி விடாமல் எழுதித் தரப்பட்டதைப் படித்தேன். அதுதான் நான் படித்த ‘முதல் காதல் கடிதம் ‘ என்று அப்போது எனக்குத் தெரியாது. நாலு வீடு தள்ளியிருந்த வீட்டில் கும்பகோணம் காலேஜில் படிப்பை பாதியிலேயே நிறுத்தியப் பெண் கையில் கையில் வைத்துக் கொண்டிருந்தப் பேப்பரை அவளுடன் சேர்ந்து படித்தேன். காலெஜெல்லாம் சேர்ப்பார்கள். தீடாரென்று இவளுக்கு மேலே படிச்ச மாப்பிள்ளையை எங்கே தேடுவது என்று படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுவார்கள். எல்லா ஆண்களுக்கும் முத்துராமன் மாதிரி காம்ப்ளெக்ஸ் வந்து விடுமா ? ஆண்கள்தான் மேம்பட்ட ஹொமொசெபியன்ஸ்ன்னு காட்ட இதெல்லாம் ஒரு ‘பாவ்லா ‘. சரி நம்ப கதைக்கு வருவோம். ‘ஏது ரேடியோலே கேட்டு எழுதினியா ? ‘, என்று கேட்டேன். ‘இல்லேடி ‘ என்று யார் அதை எழுதிக் கொடுத்தார்கள் என்று சொன்னதும் எனக்கு கதை வசனம் டைரக்ஷன் புரியவில்லை. ஒரு சினிமாப் பாட்டை எதற்கு எழுதித் தர வேண்டும் ? அதைப்பற்றி விலாவரியாக கேட்டுத் தெரிந்து கொள்வதற்குள் அவள் கையில் வைத்துக் கொண்டிருந்த ‘கல்கியில் ‘ ஹெலிகாப்டர்கள் கீழே இற்ங்கி விட்டன ‘ கதையின் தலைப்பை எழுத்துக் கூட்டிப் படித்ததைப் பார்த்து என் தலையில் தட்டி ‘ இது ரெண்டுமே உனக்கு இப்ப

புரியாது ‘ என்றாள் சிரித்துக் கொண்டே! இந்த மாதிரி லெட்டர் இன்னியோட மூணாவது! அவாத்துலே ஒத்துப்பாளா ? எதிர் ஜாமீனே நாலாயிரம் அஞ்சாயிரம் கேப்பா ‘என்று சம்பந்தமில்லாமல் பேசியதாகப் பட்டது. ‘நீ போய் யார் கிட்டயும் உளறி வைக்காதே ‘ என்று மிரட்டினாள். அது என்னமோ என் ராசி! எல்லாப் ‘பெரியவர்களும் ‘ என்னிடம் இதுபோல் நிறைய ரகசியங்களை சொல்லிவிடுவார்கள். அப்போதே ஒளிந்திருந்த ஒரு கதை சொல்லியின் திறமையை கண்டு கொண்டார்களோ ? அது இன்று வரை தொடர்கிறது. இப்போது ‘சின்னவர்கள் ‘ சொல்கிறார்கள். பின்னாளில் அது காதல் கடிதம் என்று அறிந்த போது ‘குணா ‘ லெவலில் இருப்பவர்கள் கூட முதல் வரி கண்மணின்னு இருக்கா ? அடுத்த வரி பொன்மணின்னு போட்டுக்க என்று எதுகையோடு காதல் கடிதம் எழுதும் போது, முக்கல் வாசி கவிஞர்கள் கவிதை எழுத ஆரம்பித்ததே காதலியால்தான் என்று பெருமைப் பட்டுக் கொள்ளும் போது சொந்தமாக நாலு வரி எழுதாமல் கண்ணதாசன் வரிகளைக் (வாலியா ?)கடன் வாங்கிய அசட்டுக் காதலன்! என்றுதான் நினைத்தேன். (இந்த பாட்டு வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கே ஜாஸ்தி). ஆனால் அவர் ரொம்ப சமத்தாக தன் காதலை தோல்வியில் முடித்துவிட்டார். தன் அம்மா அப்பாவிடம் இவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று சொல்லி எதிர் ஜாமீன் நகை,

நட்டு என்று எதுவும் கேட்காமல் திருமணம் செய்து கொண்டு விட்டார். காதல் கல்யாணத்தில் முடிந்தால் அது தோல்விதானே ?

அண்ணா இறந்து போனது, கொள்ளிடம் பாலத்தில் அண்ணா இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளப் போனவர்களின் இறுதி ஊர்வலம் நடந்தது, நிலாவில் முதலில் ஆம்ஸ்ட்ராங்க் காலடி எடுத்து வைத்தது இதெல்லாம் அப்போது பரபரப்பாக பேசப்பட்ட சங்கதிகள். அதை செய்தி படத்தில் காட்டுகிறார்கள் என்பதற்காகவே ஒரு சினிமாவுக்குப் போனோம். இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன ‘

ஒரு விடுமுறையில் போன போது எனக்கு படிப்பதற்கு பைண்ட் பண்ணி அந்தப் பெண்ணே கொடுத்தாள். அப்போது அதில் புரியாத விஷயம் எதுவுமில்லை என்பது புரிந்தது. அப்புறம் ஏதாவது பாட்டு எழுதிக் கொடுத்தாரா என்று கேட்க நினைத்தேன். அதெல்லாம் எதற்கு ? அதான் மனமொத்த தம்பதிகள் ஆகி விட்டார்களே ? கவிதையெல்லாம் எதற்கு ?

சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

Series Navigation

சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ்