பாவண்ணன்
நகரவாசியாக நான் மாறியது 1990 ஆம் ஆண்டில். அப்போதுதான் பெங்களூருக்கு வந்தேன். அதிகாலை நடை அன்று முதல் என் பழக்கமாக இருக்கிறது. முதல்நாள் நடையில் எனக்கு அதிசயமாகப் பட்ட விஷயம் நடைக்கு வரும் பலர் தம்முடன் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நாய்களையும் அழைத்து வந்ததாகும். ஒருகணம் எனக்கு எதுவுமே புரியவில்லை. இந்தப் பகுதியில் நடக்க வேண்டும் என்றால் நாயுடன்தான் நடக்க வேண்டுமோ என்று எனக்குச் சந்தேகமே வந்து விட்டது. மற்றவர்களிடம் கேட்க வெட்கமாகவும் அச்சமாகவும் இருந்தது. அதிகாலைக் கருக்கலில் தனியாக நடக்க அச்சப்பட்டுத் துணைக்கு அழைத்து வருகிறார்கள் போலும் என்று மற்றொரு பதிலும் என் மனத்தில் ஓடிக் கொண்டிருந்தது. சற்றே நெருக்கமாகத் தொடங்கிய நண்பருடன் என் சந்தேகத்தை முன்வைத்த போதுதான் நாய்கள் சிறுநீர், மலம் கழிக்கத் தோதாக இருக்கும் என்பதால்தான் கூடவே அழைத்து வரப்படுகின்றன என்றார். ‘மனுஷனுக்குத்தான் வீட்டுக்குள்ள டாய்லெட் கட்ட முடியும், நாய்க்கும் கூடவா கட்ட முடியும் ? ‘ என்றார். நியாயமான கேள்வியாகப் பட்டது.
நாய்களுடன் நடப்பதில் இருக்கும் சிரமங்களைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அது ஒரு பக்கம் இழுக்கும். அழைத்து வருபவர் வேறொரு பக்கம் நடப்பார். ஒவ்வொரு கணமும் சங்கிலியை இழுத்து இழுத்து நேர்வழியில் செலுத்த உறுதியான கைவலிமையும் மனவலிமையும் வேண்டும்.
ஒருநாள் என் மகனுடன் நடந்து கொண்டிருக்கும் போது ‘அந்த நாய் எதற்காக தன் எஜமானன் இழுத்த இழுப்புக்குப் போக மறுக்கிறது ? ‘ என்று கேட்டான். ‘வீட்டுக்குள் இருக்கும் போது உட்கார் என்றால் உட்கார்கிறது. பந்தை எரிந்து துாக்கி வா என்றால் கொண்டு வருகிறது. மடிமீது கூட படுத்து உறங்குகிறது. தெருவில் இறங்கி நடக்கும் போது மட்டும் என்ன பிரச்சனை வந்து விடுகிறது அந்த நாய்க்கு ? ‘ என்று மேலும் கேட்டான். ‘அது நாய் என்பதுதான் பிரச்சனை ‘ என்றேன். அவன் விழித்தான்.
ஆதிகாலத்திலிருந்து மனிதர்களுடன் உறவு கொண்டாடி வந்திருக்கும் விலங்கு நாய் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் அடிப்படையில் அது விலங்கு. அதன் வாழ்க்கை முறை வேறு. நம் வாழ்க்கை முறை வேறு. நமக்குப் பிடித்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக, நமக்குப் பிடித்த முறைகளில் வீட்டுக்குள் அடைத்து வளர்க்கிறோம். வீடுகளில் இருக்கிற வரை பிரச்சனை இல்லை. தெருவில் இறங்கியதும் அதற்குச் சொந்தமான ஆதி ஞாபகம் வந்து விடுகிறது. நாய்கள் நம்மைப் போல பார்வையைத் துணையாகக் கொண்டு நடப்பதில்லை. மோப்பசக்தியைத் துணையாகக் கொண்டு நடக்கிறது. சாதாரணமாக தெருவில் உலவும் நாய்கள் தம் உலவுமிடத்தைத் தம் சிறுநீரால் அடையாளப்படுத்தி வைத்திருக்கும். தம் எல்லையைச் சிறுநீரால் வகுத்திருக்கும். அதை மோப்பத்தால் உணர்ந்து உறுதிப்படுத்திக் கொண்ட பிறகுதான் தம் இடத்துக்குள்தான் இருப்பதாக நிம்மதியடையும். தெருக்களிலேயே இருக்கும் நாய்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. காலை நடைக்கு இறங்கும் நாய்களோ தெருக்களுக்கே புதியவை. சிறுநீரால் எல்லை வகுக்கப்படாத தெருவைக் கண்டதும் மிரட்சி கொள்கின்றன. பரபரப்பு கொள்கின்றன.
‘நாய்களுடன் நட்பு கொள்ளவே முடியாதா ? ‘ என்றான் மகன்.
‘முடியும். ஆனால் அடிப்படையில் அவை விலங்கு என்கிற எண்ணம் நம் மனத்தில் இருக்க வேண்டும். அத்துடன் பழகுவதற்கு ஓர் எல்லை விதித்துக் கொள்வது நல்லது ‘
என் நண்பரொருவர் திடுமென ஏழாண்டுகளுக்கும் மேலாகக் குடியிருந்த வீட்டைத் திடுமென காலி செய்து விட்டுப் புதிதாக வசதி குறைந்த ஒரு வீட்டுக்குக் குடிபுகுந்தார். ‘வீட்டு உரிமையாளரோடு ஏதேனும் பிரச்சனையா ? ‘ என்று கேட்டேன் நான். இல்லையென்றார். ‘வேறு ஏதேனும் மனஸ்தாபமா ? ‘ என்று வலியுறுத்திக் கேட்டபிறகுதான் ‘அவர்கள் ஒரு நாய் வளர்க்கிறார்கள். அதுதான் பிரச்சனை ‘ என்றார். விவரம் புரியாமல் அவர் முகத்தைப் பார்த்தேன். ‘மாடிப்படியேறித்தான் அவர் குடியிருப்புக்குச் செல்ல வேண்டும். மாடிப்படியருகிலேயே நாய் நின்றிருக்கும். புதிய ஆளைப் பார்த்ததும் திருடனைக் கண்டதைப் போலக் குரைக்கும். வந்தவர்கள் அவமானப்பட்டு நிற்க வேண்டும். நெஞ்சு பலவீனமானவர்களுக்கு வலிக்கவும் செய்யும். அந்த நாயின் குரைப்புகளுக்கிடையேயே சொந்தக்காரரின் பேரைப் பலமுறை கூவிச் சொன்னபிறகு ஒரு சத்தம் மட்டும் கேட்கும். ‘ஒன்னும் செய்யாது மேல வாங்க. ‘ அவ்வளவுதான். யாரும் வந்து நாயை அதட்டவோ, கட்டவோ செய்ய மாட்டார்கள். தேடி வந்தவர் தயங்கித் தயங்கி மேலேறுவார்கள். கீழே இருக்கும் நம் வீட்டு வாசலில்தான் இவ்வளவு நாடகமும் நடக்கும். சார் ஒருதரம் மேல்வீடு வரைக்கும் கூடத் துணைக்கு வருகிறீர்களா ? என்று கேட்காத ஆளே இல்லை. அந்த நாயின் சத்தம் கேட்டுக் கேட்டு எங்களுக்கும் மாரடைப்பு வந்து விடும் போலும். அவருக்குப் பலமுறை எடுத்துச் சொன்னாலும் நாயை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்துவதாகத் தெரியவில்லை. பேசாமல் நாம் வெளியேறுவதுதான் நல்ல வழி என்று தோன்றியது ‘ என்று நிம்மதியாக மூச்சு விட்டார்.
எந்த நாயைப் பார்த்தாலும் நண்பரின் நியாயமான அச்சம் ஞாபகம் வரும். கூடவே நகுலனின் ‘ஒரு ராத்தல் இறைச்சி ‘ கதையும் நினைவில் படரும். அக்கதையில் ஒரு பாத்திரம் ஐந்து வருடங்களாக ஒரு நாயை வளர்க்கிறது. அந்த நாய்க்கு அன்பு அதிகமாகி விட்டால் ஓடி வந்து குதிகாலை நாக்கால் நக்குகிற அளவுக்கு அத்துடன் நெருக்கமாக இருக்கிறார். தனக்கு இறைச்சி சாப்பிடும் பழக்கம் இல்லாவிடினும் நாய் உண்ணுவதற்காக வீட்டு வேலைக்காரன் மூலம் ஒவ்வொரு ஞாயிறு தோறும் ஒரு ராத்தல் இறைச்சி வாங்கித் தர ஏற்பாடு செய்திருக்கிறார். இதனால் நாயின் அன்பு மேலும் அதிகரிக்கிறது. இறைச்சி கிட்டும் அன்று நாயிடம் எப்போதும் இன்பப் பரபரப்பு கூடுதலாக இருக்கும்.
ஒரு ஞாயிறு அன்று யாரோ நண்பர் தேடி வந்து விடுகிறார். பேச்சு சுவாரஸ்யத்தில் இறைச்சி விவகாரத்தைச் சுத்தமாக மறந்து விடுகிறார். நடுநடுவே நாய் வந்து தலையைக் காட்டிவிட்டுப் போகிறது. பேச்சு மும்முரத்தில் அவருக்கு எல்லாம் மறந்து விடுகிறது. குறிப்பிட்ட நேரம் கடக்கக் கடக்க நாய் இருப்பு கொள்ளாமல் அலைகிறது. அப்போதும் இறைச்சியின் ஞாபகம் அவருக்கு உறைக்கவில்லை. பொறுமை இழந்த நாய் ஓடிவந்து அவர் கால்சதையைக் கவ்விக்கடித்து விடுகிறது.
இக்குறிப்புகள் கதையில் தனியாக இடம்பெறவில்லை. கதையின் தொடக்கத்தில் தொடர்பே இல்லாததைப் போல இரு குறிப்புகள் காணப்படுகின்றன. ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும் அவள் வேறொருனைக் கைப்பிடித்துத் தாயாகவும் ஆகிவிட்டதாக வருவது முதல் குறிப்பு. அலுவலகத்தில் பலருக்கு முன்பேயே வந்து விட்ட பதவி உயர்வு தாமதமாகத்தான் அவருக்குக் கிடைத்திருப்பதாகச் சொல்வது மற்றொரு குறிப்பு. இவ்விரண்டு குறிப்புகளைத் தொடர்ந்துதான் நாய் வளர்த்த குறிப்பு வருகிறது. ஆசையாய் வளர்த்த நாய் கடித்து விட்டது. தவறில்லை. அது அதன் சுபாவம். ஒரு நாயை அதனுடைய சுபாவத்துடன்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாயுடன் பழகும் போது நாயின் குணமறிந்துதான் பழக வேண்டும். கடிபடுவதை எதிர்பார்த்து ஓர் எல்லையோடு பழக்கத்தை நிறுத்தி வைத்திருக்க வேண்டும். காதலித்த பெண் மற்றொருவரோடு திருமணம் செய்துகொள்வதை எதிர்பார்த்ததே நடந்ததைப் போல சகஜமாக எடுத்துக் கொள்கிற ஒருவர்- தாமதமாகப் பதவி உயர்வு கிடைத்ததற்குத் தன் குணமே காரணமாக இருக்கலாம் என்று சுயஅமைதி அடையத் தெரிந்த ஒருவர், நாயிடம் ஏமாந்து விடுகிறார்.
* டி.கே.துரைசாமி என்னும் இயற்பெயருடைய நகுலனின் படைப்புகள் தமிழ் இலக்கிய உலகில் தனித்தன்மை உடையவை. நினைவுப்பாதை என்னும் நாவல் மிக முக்கியமான படைப்பு. நவீனன் டயரி, நாய்கள், வாக்கு மூலம் ஆகியவை பிற படைப்புகள். கவிதைத்துறையிலும் இவரது சாதனை மிகுதி. 1998 ஆம் ஆண்டில் நகுலன் கதைகளையும் 2001 ஆம் ஆண்டில் நகுலன் கவிதைகளையும் காவ்யா பதிப்பகம் தொகுத்து நுால்வடிவம் கொடுத்துள்ளது. ‘ஒரு ராத்தல் இறைச்சி ‘ என்னும் கதை கணையாழி இதழில் 1967ல் வந்தது. ‘நகுலன் கதைகள் ‘ தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.
***
- முறையாய் முப்பால் குடி!
- காலச்சுவடு கண்ணன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்
- வேர்களை வெட்டி நந்தவனம் – ‘புலிமலைச் சூழ்ச்சி ‘ – சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்
- பாரதி இலக்கிய சங்கம்
- ஆசையும் அடிப்படைக் குணமும் – (எனக்குப் பிடித்த கதைகள் -31 -நகுலனின் ‘ஒரு ராத்தல் இறைச்சி ‘)
- தக்காளி கறி
- எலுமிச்சை மகிமை
- சிம்பன்ஸி vs சாம்ஸ்கி – மனிதனை தவிர மற்ற குரங்கினங்களில் மொழியின் வெளிப்பாடுகள்
- ஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ் (1894-1974)
- அறிவியல் மேதைகள் சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Sir Jagadish Chandra Bose)
- மஞ்சள் மகிமை
- மூலம்: சுவாமி விவேகானந்தரின் கவிதை ‘அன்னை காளி ‘
- வேதனை
- சினேகிதி
- வாசங்களின் வலி
- காதல் பகடை
- குறும்பாக்கள் !
- புல்வெளி மனது
- வேர்களை வெட்டி நந்தவனம் ‘புலிமலைச் சூழ்ச்சி ‘ – சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்
- தென்னிந்தியத் திரைப்படங்களின் தாக்கம்
- நாஸா கண்டுபிடித்த இராமர் கட்டிய பாலம் ?
- காவிரி – மறுக்கப்பட்ட உரிமைகள்*
- காதல் பகடை
- Where are you from ?
- நான்காவது கொலை !!!(அத்யாயம் 11)