அஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல்

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

எஸ் அரவிந்தன் நீலகண்டன்


சுருக்கம்:

அஸோலா ஆல்கே போலத் தோற்றமளிப்பதென்றாலும் இது மிகப் பழமையானதோர் தாவரவகையான ஃபெர்ன்(Fern) இனத்தைச் சார்ந்ததோர் உயிரினமாகும். வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் வசப்படுத்தும் உடனுறை உயிரியாக அனபீனாவினை இது தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த நீர் தாவரம் பாரதம் உட்பட நெல் சாகுபடு செய்யும் பல ஆசிய நாடுகளில் உயிர் உரமாக பயன்படுத்தப்படுகின்றது. அஸோலா தன் உயிர் நிறையை (biomass) 2-3 நாட்களுக்குள் இருமடங்காக்கும் தன்மையுடையது. உயிர் உரமாக பயன்படுத்தப்பட்டுவரும் இத்தாவரத்தை கால்நடை தீவனமாக பயன்படுத்தமுடியும். நிலமற்ற அல்லது நிலம் குறைந்தவர்களாகவுள்ள விவசாயிகள் தாம் வளர்க்கும் கால்நடைகள் மற்றும் கோழிகள் பன்றிகள் ஆகியவற்றிற்கு தீனியாக அஸோலாவினை பயன்படுத்த முடியும். இதற்கு நிலம் தேவையில்லை. செலவு குறைவான முறையில் இதனை தம் கொல்லைப்புறத்திலேயே அவர்கள் வளர்க்கலாம். இதன் மூலம் இரசாயன தீனிக்கு கொடுக்கும் விலையினை வெகுவாக அவர்கள் குறைக்கலாம். அத்துடன் வளமான பால், முட்டை மற்றும் இறைச்சிகளை அவர்கள் பெற முடியும். இத்தொழில்நுட்பத்தினை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி செயல்திட்ட அமைப்பு உருவாக்கியுள்ளது. கேரளாவில் கால்நடை வளர்ப்போர் மற்றும் பால் விற்பனையாளர் கூட்டுறவு அமைப்புகளிடையே அஸோலாவின் தீவன பயன்பாடு பெரும் வெண்மைப் புரட்சியையே உருவாக்கியுள்ளது.

[அஸோலா+அனபீனா] – பரிணாம வரலாறும் உயிரியலும்:

அஸோலாவின் உடனுறை உயிரான அனபீனா அஸோலே என்பது நீலப்பசும் பாசி; அதனை சையனோபாக்டாரியம் (blue-green alga or cyanobacterium ) எனவும் விளிப்பர். பூமி எனும் நம் நீலப்பந்தின் புவியியல் வாழ்வில், மனித இனம் தோன்றுவதற்கு பன்னெடுங்காலம் முன்பே நீலப்பசும் பாசிகள் தோன்றிவிட்டன. நம் வளிமண்டலத்தில் இன்றிருக்கும் பிராணவாயு சதவிகிதத்திற்கு நீலப்பசும் பாசிகள். பெரும் பங்களித்துள்ளன. டைனோசார்கள் முதல் இன்றைய மனிதன் வரையான பரிணாம வளர்ச்சி பிராணவாயு கொண்ட வளிமண்டலத்தினாலேயே சாத்தியமாயிற்று. எனவே நீலப்பசும்பாசிகளுக்கும் நமக்குமான உறவு நாம் பரிணமிக்கும் முன்பே தொடங்கிவிட்டது என்று கூட கூறலாம். ஆனால் இவை மிகச்சிறியவை. நுண்ணோக்கிகளாலேயே இவற்றை காணமுடியும். அஸோலா ஃபெர்ன் (Fern) இனத்தை சார்ந்தது. குறைந்தது 30 கோடி வருடங்களுக்கும் முந்தைய பரிணாம வரலாற்றினை கொண்ட இத்தாவரங்களில் இன்று பூமியில் ஏறக்குறைய 10,000 இனவகைகள் (species) உள்ளன. எனினும் ஃபெர்ன்களில் சில இனவகைகளே நீரில் வாழ்பவையாக உள்ளன. அவ்வாறு நீரில் வாழும் ஒரு ஃபெர்ன் குடும்பத்தின் பெயர் அஸோலேஸியே (Azollaceae) என்பதாகும். இக்குடும்பத்தில் உள்ள தாவரவகைகளில் ஆறு உலகெங்கும் பரவியுள்ளன. இவற்றுள் ஆசியாவில் மிகவும் பரவியுள்ளது அஸோலா பின்னாட்டா (Azolla pinnata) என்பதாகும். ஆசியாவிற்கு இயற்கையான தாவரவகை உட்பிரிவு அஸோலா பின்னாட்டா ஆஸியாட்டிக்கா (Azolla pinnata asiatica) என்பதாகும். இதைத்தவிர சில கலப்பின அஸோலா வகைகளும் உள்ளன. அஸோலா 1-5 செமீ நீளம் கொண்டதாகும். அதன் இலைகள் நுண்ணியவையாக 1 -2 மிமீ நீளத்தில், இரு அடுக்குகளில் ஒன்றின் மீது ஒன்று படர்ந்தவையாக இருக்கும். இத்தாவர அமைப்பே ஒரு மைய அச்சினைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் எனவே அது pinnata எனும் பெயரினைப் பெறுகிறது. இதன் இலைகளின் மேல்பாகங்களின் கீழே இருக்கும் நுண்ணிய அறை போன்ற அமைப்பில் அனபீனா அஸோலே எனும் நீலபசும் பாசி உயிரினம் வாழ்கிறது.

இவ்வாறு அஸோலாவுடன் அனபீனா உடனுறைவதால் இரு உயிர்களுமே நன்மை அடைகின்றன. இத்தகைய உடனுறைதல் பரஸ்பர நலனுடைய உடனுறைவு (Mutualism) ஆகும். அனபீனா வாழ அஸோலா ஆதாரமளிக்கிறது. அதே நேரத்தில் அஸோலாவிற்கு அனபீனா நைட்ரஜனை அளிக்கிறது. அஸோலாவினை நுண்ணொக்கியில் காண்கையில் அனபீனா நுண்ணிய தண்டு போன்று இழைகளாகத் தோற்றமளிக்கும். அஸோலாவின் மற்றொரு முக்கிய பண்பு நலன் அதன் உயிர்நிறை (biomass) அதிகரிப்புத்திறன். பொதுவாக வயல்களில் ஹெக்டேருக்கு அதன் எடை 30-80 டன்கள் வரையிலும், அதன் உலர்ந்த எடை 1.5-4.0 டன்கள் வரையிலும், மற்றும் அதிலுள்ள நைட்ரஜன் அளவு 50-150 கிலோகிராம் வரையிலுமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கால்நடை தீவனப் பிரச்சனைகள்:

கால்நடை தீவனப் பிரச்சனைகள் கடுமையாககி வருகின்றன. கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருவதுடன். அதிக பால் தேவைக்காக கால்நடை வளர்ப்பு அதிகரிப்பதால், மேய்ச்சல் அதிகரித்து புல்வெளி சூழலமைவுகள் சீர்குலைந்து வருகின்றன. பல இடங்களில் மேய்ச்சல் நிலம் வெகுவாக குறைந்துவிட்டதால் கால்நடை வளர்ப்பவர்கள் இரசாயன தீனிகளை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இது பால் தயாரிப்பு விலையை உயர்த்துவதுடன் பாலில் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் இரசாயனப்பொருட்கள் உடலில் ஏறவும் வழிவகுக்கிறது. மேலும் நகரப் புறங்களிலும் கால்நடைகள் குறிப்பாக பசுக்கள் எவ்வித மேய்ச்சல் நிலங்களும் நல்ல தீவனங்களும் இன்றி நகர்ப்புற கழிவுகளை உண்டு வருகின்றன. இத்தகைய பசுக்களிலிருந்து கிடைக்கும் பாலின் தரத்தில் இருக்கும் மோசமான இரசாயனப்பொருட்களின் விளைவு நகர்ப்புற மக்களின் சுகாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும். கிராமங்களில் வறுமையும் நிலமின்மையும் கால்நடை வைத்திருப்போரைப் பீடித்திருக்கும் நோய்களாகும். கிராமங்களில் வாழும் 63 கோடி மக்களில் 40 சதவிகிதத்தினரின் வருவாய் வறுமைக்கோட்டு வரையறைக்கு கீழே உள்ளது. கிராமவாசிகளில் 70 சதவிகித மக்கள் கால்நடைகள் வைத்துள்ளதுடன் அவர்களது வருமானத்தில் 20% கால்நடைகள் மூலமாக கிட்டுகிறது. இவ்வாறு கால்நடை வைத்திருப்போரில் மூன்றில் இரண்டு பங்கு நிலமற்ற விவசாயிகள் மற்றும் சிறு விவசாயிகளே ஆவர். விவசாய பக்கப் பொருளான வைக்கோல் மாட்டுத்தீவனமாக பயன்பட்டுவந்தது. அது குறைந்து வருகிறது. அதிக மகசூல் அளிக்கும் தானியவகைகளில் தீவன வைக்கோல் அளவு குறைந்து வருகிறது. இதனால் கால்நடை வைத்திருக்கும் நிலமற்ற விவசாயிகள் மற்றும் சிறு விவசாயிகள் இரசாயனத் தீவன்ப் பொருட்களுக்கு தள்ளப்படுவார்கள். அதிக ஆற்றல் பயன்பாட்டால் உருவாக்கப்படும் இத்தகைய இரசாயன தீவனங்கள் அதிக ஆற்றல் மற்றும் பொருட்செலவுகளில் உருவாக்கப்படுபவை. எனவே இவற்றிற்கு அரசாங்கமே சலுகைவிலை நிர்ணயிக்க வேண்டிய நிலையும் அது ஒரு அரசியல் கருவியாகவும் கூட பயன்படும் நிலை வரலாம். இவையெல்லாம் தேசிய பொருளாதாரத்திற்கு நீண்ட நோக்கில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்துபவை என்பதைக் கூறத்தேவையில்லை. இன்று தனியாரிடத்தில் 71 இரசாயன தீவன ஆலைகளும் பால் கூட்டுறவு சங்கங்களிடம் 44 ஆலைகளுமாக, 27 இலட்சம் டன்கள் இராசாயன தீவனத்தை உற்பத்தி செய்கின்றன. எனினும் பாரதத்தின் முழுமையான கால்நடை தீவன பயன்பாட்டில் இது 3 சதவிகிதமேயாகும். எனவேதான் சர்வதேச FAO அமைப்பின் ஆய்வறிக்கை ஒன்று பாரதச் சூழலில் ‘புதிய (ஆலை) மரபு சாரா தீவன முறைகளை கண்டுபிடித்து அவற்றின் தீவன செழுமையை மேம்படுத்துவது அவசியமான ஒன்று ‘ என வலியுறுத்துகிறது.

விவேகானந்த கேந்திரத்தில் அஸோலா -ஒருபார்வை:

1997 இல் பாரத அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவினால் அளிக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் போது விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி செயற்திட்டமான நார்டெப்பின் (VK-NARDEP) பணியாளர்கள், கேரள விவசாய விஞ்ஞானி டாக்டர். கமலாசனன் பிள்ளை அவர்களது வழிகாட்டலில் அஸோலாவினை உயிர் உரத்தன்மைகளை ஆராய்ந்து வந்தனர். இது தொடர்பாக அஸோலாவைச் சிக்கனமாக வளர்ப்பது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு 1998 இல் சில்பாவுலின் வளர்ப்பு முறை உருவாக்கப்பட்டது அத்துடன் நீர் குறைவினை சகிக்கும் தன்மை கொண்ட அஸோலா கலப்பினம் ஒன்றும் விருத்தி செய்யப்பட்டது. 1999 இல் அஸோலாவின் கால்நடை தீவனப் பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு நார்டெப் கேரள பால் உற்பத்திக் கூட்டுறவு அமைப்பான MILMAவின் ஊழியர்களுக்கு அஸோலாவின் கால்நடை தீவனப் பயன்பாடு குறித்து ஒரு பயிற்சி பட்டறையை நடத்தியது. இப்பட்டறை தேசிய பால் உற்பத்தி அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது. தீவனப் பயன்பாட்டு பார்வையில் அஸோலாவின் வேதியியல் இயற்கை நார்டெப்பால் வெளியிடப்பட்டது. 2001 இல் அரசு சாரா அமைப்புகள் மற்றும் பால் உற்பத்தி கூட்டுறவுகளுக்கு பல பயிற்சி பட்டறைகளும் விரிவாக்க முகாம்களும் நடத்தப்பட்டன. தூர்தர்ஷன் அஸோலா குறித்த விவரணப்படத்தை ஒளி பரப்பியது. 2002 இல் சுவிஸ் வளர்ச்சி அமைப்பு அஸோலா விரிவாக்க முயற்சியில் பங்கு பெற்றது. ஒரு இலட்சம் கால்நடை வளர்ப்போரை எட்டும் இலக்கு நிர்ணயத்துடன் இப்பெரும் செயல்திட்டம் தொடங்கியது. 2003 இல் கேரள அரசாங்கம் விவேகானந்த கேந்திரத்துடன் இணைந்து தென் கேரளத்தின் நான்கு மாவட்டங்களில் அஸோலா விரிவாக்கத்தை ஆரம்பித்துள்ளது. தமிழகத்திலும் ஆவின் மற்றும் பல அரசு சாரா அமைப்புகள் தம் ஊழியருக்கு அஸோலா தொழில் நுட்ப பயிற்சி பெற விவேகானந்த கேந்திரத்துக்கு அனுப்பி வருகின்றன.

நார்டெப்-சில்பாவுலின் வளர்ப்பு முறை:

படம் ஒன்றில் கண்டவாறு செங்கற்களால் ஏறத்தாழ 3 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட செவ்வக படுகையை தயார் செய்யப்பட்டு பின்னர் படம் இரண்டில் கண்டவாறு பழைய சாக்குப்பைகளால் அதை நிரப்பப்படுகிறது.படம் மூன்றில் கண்டவாறு சில்பாவுலின் ஷீட் (150 GSM தடிமன் கொண்டது) அதில் பரப்பப்படும். அந்த விரிப்பு ஓரத்து செங்கல்கள் மீதாகவும் விரிக்கப்படுகிறது என்பதனைக் கவனிக்கவும்.

30-35 கிலோ அரிக்கப்பட்ட மணல் சமசீராக இந்த சிப்லாவுலின் படுகையில் நிரப்பப்படுகிறது. (படம் நான்கு).

பின்னர் 4.5 கிலோ உலராத பசுஞ் சாணம் 10 லிட்டர் தண்ணீரில் கலக்கப்பட்டு அத்துடன் 45 கிராம் அஸோபெர்ட் கலக்கப்பட்டு இக்கலவை படுகையில் ஊற்றப்படுகிறது(படம் ஐந்து).

பின்னர் 7-8 செமீ க்கு தண்ணீர் தேங்கி நிற்கும்படியாக நீர் விடப்படுகிறது(படம் ஆறு)..

இப்போது சில்பாவுலின் படுகை அஸோலாவிற்கு தயாராகிவிட்டது(படம் ஏழு)

பின்னர் நோயற்ற அஸோலா (ஏறக்குறைய ஒரு கிலோகிராம்) தாய் படுகையிலிருந்து அல்லது விரிவாக்க களப்பணி அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டு படுகையில் இடப்படுகிறது (படம் எட்டு).

நான்கு நாட்களில் அஸோலாவின் பசுமை நீலத்திரை முழுக்கப் பரவிடும் (படம் ஒன்பது).

ஏழு நாட்களுக்கு பின்னர் அஸோலா படுகை அறுவடைக்கு தயாராகிடும். அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் உயிர் நிறையில் 1/5 (அதாவது வளர்ச்சியைப் பொறுத்து 1.2 முதல் 1.5 கிலோகிராம் அஸோலா) படுகையிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். (படம் பத்து). மறுநாளே அறுவடை செய்யப்பட்ட உயிர்நிறை மீண்டும் அறுவடைக்கு தயாராகிவிடும். மழையினால் நீர் அதிகம் கட்டுதல் மற்றும் நைட்ரஜன் அதிக அளவில் சேருதல் ஆகியவற்றை தவிர்க்க நீரினை மாற்ற வேண்டும். 30 சதவிகித நீரினை 10 நாட்களுக்கு ஒரு முறை மாற்றுதல் வேண்டும் (படங்கள் பதினொன்று & பன்னிரண்டு) மண்புழு உர உற்பத்தியை அஸோலா படுகையுடன் இணைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் மண்புழுக்களுக்கு பறவைகளிலிருந்து பாதுகாப்பளிப்பதுடன் இடத்தையும் சிக்கனமாக பயன்படுத்தலாம்( படம் 13). அஸோலாவின் தீவனத் தன்மைகள்: அஸோலா 25-35% எளிதில் செரிக்கும் புரதங்களை கொண்டது. ஏறக்குறைய அனைத்து தாதுச்சத்துக்களையும் கொண்டது. வைட்டமின் ஏ, வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் முன்னோடி மூலக்கூறுகள் அதில் உள்ளன. அதன் நார்ப்பகுதி (fibre content) குறைவானது.

அஸோலா தீவன விளைவுகள்: கால்நடைகளில் 15-20 சதவிகித பால் சுரப்பு அதிகரிப்புடன், 20-30 சதவிகித இரசாயன தீவனப்பொருட்கள் குறைக்கப்படவும் முடியும். கோழித்தீவனத்துடன் அஸோலா 1:2 எனும் கலப்பில் அளிக்கப்படுகையில் முட்டை அளவு அதிகரிப்பதுடன் மஞ்சள் கரு அளவில் அதிகரிப்பது காணப்பட்டுள்ளது. ஆடுகளில் மேய்ச்சல் பிரச்சனை சமாளிக்கப்படுவதுடன், எடை மற்றும் பால் அளவு அதிகரிக்கிறது. வர்த்தக தீவனம் 20-25 சதவிகிதத்திற்கு அஸோலாவால் குறைக்கப்படுகிறது. அஸோலா தீவனத்தால் ஆடுகளில் நோய் எதிர்ப்பு அதிகரிப்பு மற்றும் இனப்பெருக்க வீரியம் அதிகரிப்பு ஆகியவை ஆராயப்பட்டு வருகின்றன.

பயன்படுத்துவோர் மற்றும் ஆராய்ச்சியாளர் பார்வையில்:

பி.ஆனந்த் (i) இயக்குநர் பால் உற்பத்தி மேம்பாட்டு அமைப்பு, கேரள அரசு: கேரளாவில் அஸோலா பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அது கால்நடை வைத்திருப்போருக்கு சிறந்த தீவனமாகவும், உயிர் நிறைக்கான மிகச்சிறந்த மூலமாகவும் விளங்குகிறது.

டாக்டர். என்.என். சசி (ii)(கேரள அரசின் விலங்கு சுகாதார பிரிவின் இயக்குநர்) அஸோலா விலங்குகளுக்கு உயிர் நிறை அதிகமடையவும் புரதச்சத்து அதிகரிக்கவும் முக்கிய வைட்டமின்கள் கிடைக்கவும் வழி செய்கிறது. இது விலங்குகளின் சுகாதாரத்தை அதிகரிப்பதுடன் பால்வளத்தையும் அதிகமாக்குகிறது.

சகோதரி அன்னீஸ்(iii) (பெண்கள் நல அமைப்பு, வயநாடு கேரளா): ‘விவேகானந்த கேந்திரத்தால் பயிற்சி அளிக்கப்பட்டபின் நாங்கள் இத்தொழில்நுட்பத்தை வயநாட்டு பெண்களுக்கு எடுத்துச்சென்றோம். அப்பெண்களிடமிருந்து எங்களுக்கு கிடைத்த அனுபவங்களிலிருந்து அஸோலா மூன்று விதமாக எங்களுக்கு பயன்படுகிறது என்பது புரிந்தது. அஸோலாவின் முக்கிய பயன்பாடுகள்: கால்நடை தீவனமாக, கோழி தீவனமாக, மற்றும் பன்றி தீவனமாக. ‘ மலையாள மனோரமா அளிக்கும் கஷகஸ்ரீ எனும் சிறந்த உக்திகளைப் பயன்படுத்தி மகசூலை பெருக்கும் சிறந்த விவசாயிக்கான விருது பெற்ற ஸ்காரியா பிள்ளை (ஆ) அஸோலா தொழ்ல்நுட்பத்தை பயன்படுத்துபவர் ஆவார். அது போலவே இப்பரிசுக்காக தேர்வு செய்யப்பட்ட டொமினிக் பென்னியும் (இ), கே.வி.போபியும்(அ) அஸோலா பயன்பாட்டினால் நன்மை பெற்றவரே ஆவார். இப்பசுமை படுகையால் வெண்மை புரட்சிக்கு வித்திட்ட டாக்டர், கமலாசனன் பிள்ளையைப் பொறுத்தவரையில் அஸோலா நாம் செல்லவேண்டிய நெடும்பாதையில் ஒரு மைல்கல்.

நன்றி:

டாக்டர். கமலாசனன் பிள்ளை, விவசாய அறிவியலாளர்

திரு வாசுதேவ்ஜி, செயலாளர், நார்டெப்,விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி

மேலதிக விவரங்கள் மற்றும் விரிவாக்க முகாம்கள், பயிற்சி பட்டறைகள் ஆகியவற்றின் தேதிகளுக்கு மேற்கண்ட முகவரியை அணுகவும்.

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்