அழிவைப் போற்றும் கற்பு, காதல் தோல்வி

This entry is part [part not set] of 31 in the series 20051021_Issue

குண்டலகேசி


கணவனே அனைத்தும் என்று கட்டிய மனைவியானாலும், நாட்டியக்காரியானாலும் மனதால் நினைத்தவர்களோடு வாழ்வது உறவின் மேன்மையைச் சொல்வது. கோவலா நீ கண்ணகி பக்கம் போனால் இன்னொருவனைத் தேடுகிறேன் என்று நிலைக் கொள்ளவில்லை.

கண்ணகி மட்டுமே முட்டாள்தனத்தில் சிறந்தவளில்லை. மாதவியும் அப்படித்தானாம். கட்டின பெண்டாட்டியை விட்டுவிட்டு காணாமல் போனவனை மறு கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டு சிலம்பைக் கழற்றிக் கொடுத்ததும், ஒரு பொறுப்பற்ற உதவாக்கரையை மனதால் எண்ணியதால் தன் மீதி வாழ்நாளையும் இந்த கயவனை எண்ணி வீணாக்கியதும் கற்பின் இலக்கணங்கள். மாதவியின் தனிப்பட்ட விருப்பம் இப்படி இருப்பினும், மனதால் நினைத்தவனுக்காக வாழ்வை அழித்துக்கொள்ள வேண்டும் என்பது போல வேறு ஒரு முட்டாள்தனம் இருக்குமா ?

நவீன கற்புக்கரசிகளைக் காண அதிக தூரம் செல்ல வேண்டாம். நம் டிவி சீரியல்கள் செய்யும் கற்புப்பிரச்சாரம் ஆயிரம் புராணங்களாலும் செய்ய முடியாது. ஒரு சீரியலில் மருமகளைப் பிடிக்காத மாமியார் தன் மகனுக்கு வேறு ஒரு பெண்ணை மணமுடிக்க முயற்சிக்கிறாள்.(அந்த வாரம் அத்தனை சீரியலிலும் இதே கதைதான்.) அந்தப் பெண் உடனே கற்புக்கரசிக்கு இலக்கணமாக விடுதலைப் பத்திரம் எழுதிக்கொடுத்துவிட்டு, அந்த வீட்டிலேயே வேலைக்காரியாக

இருக்கிறாள். இந்த உணர்ச்சி கெட்ட கணவனும், மற்றொரு பெண்ணும் ஜாலியாக இருக்க இவள் காப்பி கலந்து கொடுக்கிறாள். ஆகா இவள் நவீன நளாயினியேதான். இவள் படும் துயரை எண்ணி தமிழ்நாட்டு தாய்மார்கள் அழுதுகொண்டே பார்த்து தயாரிப்பாளர்களின் வங்கி பாஸ்புக்கை நிரப்புகிறார்கள். இன்னும் கணவனை கூடையில் தூக்கிக்கொண்டு பரத்தை வீட்டிற்கு கொண்டு போன பெண், கற்பு முத்திப்போய் கணவன் மீதுள்ள காதலை நிரூபிக்க

தீயில் உயிர் விட்ட பெண்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். ஆக பெண்களின் கற்பு எனப்படுவது யாதெனின் அடிபணிதல், தியாகம், சுய அழிவு, துயரம், பொறுப்பற்ற (கயவர்) கணவர்களை தாங்கிப்பிடித்தல், தீயில் உயிர் விடுதல், பேயாய் திரிதல். தன்னுடைய சொத்துக்கள் வேறு எங்கும் கைவிட்டு போய்விடக்கூடாது என்பதற்காக இவர்கள் பெண்களுக்கு செய்த மூளைச்சலவைதான் இந்த கொடுமைகள். இங்கு தன்னம்பிக்கைக்கு மருந்துக்கும் இடமில்லை.

சரி கற்புடைய ஆண் எப்படி இருப்பான் ? அனேகமாக நம் தேவதாஸ் போல இருப்பான். இவனும் மனதால் நினைத்த பார்வதிக்காக உயிரை விட்டவன். பார்வதிக்கு திருமணம் ஆகிவிட்டது. கொஞ்ச நாள் துக்கம் கொண்டாடிவிட்டு தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை சந்தித்தானா ? இவன் உடனே தாடி வளர்த்துக்கொண்டு டாஸ்மாக் கடைக்கு கிளம்பி விட்டான். கடைசியில் குடித்து, குடித்து லொக், லொக்கென்று இருமி உயிரை விட்டான். இந்த கண்றாவியை மீண்டும் மீண்டும் கருப்பு வெள்ளை, கலர் என்று பல மொழிகளில் படமெடுக்கிறார்கள்.

இன்னும் தங்களையே அழித்துக்கொள்ளும் காதல் ஜோடி காவியங்கள், அம்பிகாபதி அமராவதி, லைலா மஜ்னு, புன்னகை மன்னன் ஜோடிகள் போன்ற பாத்திரங்களை தூக்கிப்பிடிப்பதன் மூலம் இன்றைய காதல் ஜோடிகள் குழம்பிப்போய் தற்கொலை செய்து கொண்டதாக சமீபத்தில் கூட ஒரு பத்திரிகை செய்தி படித்தேன். நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள் இப்படி ஆரம்பத்திலேயே வாழ்வை முடித்துக் கொள்கின்றனர். (இதற்கு ஒரு புள்ளி விவரம் எடுத்தால் அதிர்ச்சியாக இருக்கும். இவர்களுடைய பெயர்கள் பல காலம் நிலைத்ததா ? இவர்களை யாருக்கும் நியாபகம் கூட இருக்காது.) இவர்களை சீராட்டி, பாராட்டி, அட்மிஷனுக்கு லைனில் நின்று வளர்த்த பெற்றோர்கள் துயரத்தில்

ஆழ்கிறார்கள். நல்ல வேளை எந்த பெற்றோரும் காதல் தோல்வி அடைந்தவர்களை நீ இனிமேல் கற்போடு சாம்பலாகு என்று சொல்வதில்லை. வேறு வாழ்வை ஆரம்பிக்கதான் சொல்கிறார்கள்.

காவியக் கதாநாயகர்கள் வேண்டுமானால் அழிவில் வாழலாம். நிஜத்தில் வாழ்வை சந்திப்பதில்தான் வெற்றி உள்ளது. வாருங்கள் , அழிவைப் போற்றும் இந்த குப்பைக்காவியங்களை முதலில் தீயிட்டு கொளுத்துவோம்.

kundalakesi_s@yahoo.com

Series Navigation

குண்டலகேசி

குண்டலகேசி