பாவண்ணன்
பெரிய விடுமுறையில் தாத்தா வீட்டுக்குச் செல்வது விருப்பமான ஒரு பழக்கமாக அன்று இருந்தது. சாயங்காலங்களில் வீட்டுக்கு அருகிலிருந்த உணவு விடுதிக்கு அழைத்துச்சென்று சூடாக மிக்சர் அல்லது பகோடாவுடன் தேநீர் வாங்கிக்கொடுப்பார். இவற்றின் சுவைக்காகவும் இந்த அனுபவத்துக்காகவும் பெரிய விடுப்பு எப்போது வரும் என்று ஆண்டு முழுக்கக் காத்திருப்பேன். நடக்கும்போது தாத்தா சொல்லும் கதைகளைக் கேட்பதிலும் அளவுகடந்த ஆர்வமுண்டு.
ஒருமுறை தாத்தா பாம்பையும் சாமியாரையும் பற்றிய ஒரு கதையைச் சொன்னார். அக்கதையில் ஊரைவிட்டுத் தள்ளியிருக்கிற காட்டுவழியில் பாம்பொன்று வசிக்கிறது. பாம்பை நினைத்து எழும் அச்சத்தால் பொழுதடைந்த வேளைகளிலும் இரவு வேளைகளிலும் பொதுமக்களால் அந்த வழியில் செல்லமுடியவில்லை. அதை ஒரு குறையாக அந்தப்பக்கமாக வருகிற ஒரு சாமியாரிடம் சொல்கிறார்கள். பாம்புக்குத் தகுந்த விதமாகப் புத்தி சொல்லிவிட்டுப் போவதாகச் சொல்கிறார் சாமியார்.
சொன்னபடியே பாம்பைச் சந்திக்கிறார். பொதுமக்களின் சிரமங்களையும் அச்சத்தையும் சொல்லிப் பாம்பை அமைதியாக நடந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார். அந்த கோரிக்கைக்குப் பாம்பும் கட்டுப்படுகிறது. மறுநாள் பாம்பின் போக்கைச் சோதித்தறிய விரும்பிய சிலர் புற்றருகே வந்து குச்சியால் குத்திப்பார்க்கிறார்கள். வலி பொறுக்காமல் வெளியே வருகிற பாம்பு எந்த எதிர்வினையும் இல்லாமல் வேறு இடத்தை நோக்கிப் போகிறது. பாம்பு பணிந்துபோவதைக் கண்டு பொதுமக்களுக்குத் தைரியம் அதிகரிக்கிறது. நித்தமும் அதைச் சீண்டிப் பார்ப்பதிலும் விரட்டிவிரட்டி அடிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். தொடர்ந்து அடிபட்டதாலும் சரியான உணவில்லாததாலும் பாம்பு மெலிந்து குற்றுயிரும் குலையுயிருமாக மாறிவிடுகிறது. பல நாள்களுக்குப் பிறகு அதே வழியில் திரும்பி வருகிறார் பழைய சாமியார். பாம்பின் கோலத்தைக் கண்டு அவர் மனம் இரங்குகிறது. ‘மக்களுக்கு அதிக இடைஞ்சல் தராமல் இரு என்றுதானே உன்னிடம் சொன்னேன். அதன் பொருள் உன் சுபாவப்படி தற்காப்புக்காகக் கூடச் சீறக்கூடாது என்பதல்ல தெரியுமா ? ‘ என்றார். அதற்கப்புறம் பாம்பு தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மறுபடியும் சீறத் தொடங்கியதாகவும் மனிதர்களின் வீணான தொல்லைகளில் அகப்படாமல் நிம்மதியாக இருந்ததாகவும் கதையை முடித்தார் தாத்தா. ஒருவர் சொல்வதைத் தவறாகப் புரிந்துகொள்வதால் வரும் விளைவுகளைச் சுட்டுவதுதான் இதன் நீதி என்றார்.
வெகுநேரம் அக்கதையையே அசைபோட்டுக்கொண்டிருந்த நான் தேநீர் குடித்துவிட்டுத் திரும்பும்போது தாத்தாவிடம் ‘பாம்பு மேல எந்தத் தப்புமில்ல தாத்தா, சாமியார் மேலதான் தப்பு ‘ என்றேன். ஆச்சரியத்துடன் ‘எப்படி ? ‘ என்று கேட்டார் தாத்தா.
‘தம்பி அடிக்கறான்னு உன்கிட்ட சொன்னா நீ என்ன செய்வே ? மொதல்ல நீ என்ன செஞ்சேன்னுதானே கேப்ப. அப்பறமாத்தான தம்பிய கூப்பிட்டு விசாரிச்சுப் பாப்பே. பாம்பைப் பத்தி மக்கள் சொன்னதும் சாமியார் நீங்க என்ன செஞ்சிங்கன்னு மக்கள்கிட்ட கேட்டிருக்கணும். அதவிட்டுட்டு அவுங்க சொல்றதெல்லாம் உண்மையா இருக்கும்ன்னு நெனச்சி நேரா பாம்புக்குப் புத்தி சொல்லப்போயிட்டாரு. அடிப்படையில அவரும் ஒரு மனுஷன்ங்கறதுதான் காரணம். பெரியவங்க சொல்றாங்கன்னு கேள்வி கேக்காம பணிஞ்சிபோனதால பாம்புக்குத்தான் பெரிய சங்கடம். ‘
என் விவரிப்பால் தாத்தாவுக்கு அளவற்ற சந்தோஷம். ‘சொல்லி வச்ச கதையையே மாத்திட்டாம்பா ‘ என்று வருகிறவர்கள் எல்லாரிடமும் சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டார்.
வெகுநாள்களாக அந்தக் கதையைத் தொடர்ந்து அசைபோட்டிருக்கிறேன். பிற்காலத்தில் நண்பர்களிடமும் கூட விவாதித்திருக்கிறேன். இந்த உலகத்தில் தோன்றிய எல்லா உயிரினங்களுக்கும் இந்த மண்ணில் உயிர்வாழ உரிமையுண்டு. மனிதனும் ஒருவகை உயிரனமே. தேவைகள் அதிகமுள்ள உயிரினம். தன்னலமும் அதிகமுள்ள உயிரினம். இந்தப் பிரபஞ்சத்தில் பாம்புக்கு எந்த அளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை கீரிக்கும் உண்டு. மானுக்கு எந்த அளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை புலிக்கும் உண்டு. ஒன்றின் உரிமையில் மற்றொன்று குறுக்கிடாமல் வாழ்வதே முக்கியம். ஆனால் ஒன்றை அழித்து மற்றொன்று வாழ்வதே தினசரி வாழ்வாகிவிட்டது. சமநிலையில் இருக்கவேண்டிய ஒரு விஷயம் குலைந்து முரண்நிலையை எய்திவிடுகிறது. தன்னலம், அகங்காரம், சுயபெருமை என எதைஎதையோ இந்த முரண்நிலைக்குக் காரணங்களாக நினைத்துக்கொள்வதுண்டு. ஆனால் மீண்டும் அந்தச் சமநிலைப்புள்ளியை அடைவது எப்படி என்றுதான் தெரிவதில்லை. காணமுடியாத அப்புள்ளியைக் காண மனம் ஏங்கும்போதெல்லாம் பல நினைவுகளும் சம்பவங்களும் மனத்தில் நகரும். அவற்றில் ஒன்று உமா வரதராஜன் எழுதிய ‘எலியம் ‘ என்னும் சிறுகதை.
அக்கதையில் சற்றே பழைய வீடானாலும் அதன் அழகுக்காகவும் அருகில் கிட்டுகிற சில வசதிகளுக்காகவும் குடியேறுகிறான் ஒருவன். ஆனால் அந்த வீட்டில் எலிகள் நிறைந்திருக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனுக்குச் சிறிதும் பிடிக்காத உயிர் எலி. எலிக்கும் அவனுக்கும் இடையிலான சந்திப்பு ஒருநாள் இரவில் நிழ்கிறது.
அன்று லதா மங்கேஷ்கரின் மீரா பஜனையைக் கேட்டபடி படுக்கையில் படுத்திருந்த சமயத்தில் தொப்பென்று ஓர் எலி கட்டிலின் மீது விழுகிறது. அது வழி தடுமாறி அவனுடைய கால் வழியாகக் கடக்க, அவன் காலை உதறிக் கட்டில் மீதேறித் துள்ளிக் குறிக்கிறான். அவன் எடை தாளாமல் கட்டிலின் குறுக்குப் பலகை சடாரென முறிய அவனுடைய ஒற்றைக்கால் பள்ளத்தில் இறங்கிவிடுகிறது. கைகளை மெல்ல ஊன்றியவாறு வெகு பிரயாசையுடன் காலை விடுவித்துக்கொள்கிறான். தீக்குச்சி அளவில் முழங்காலில் ரத்தக்கீறல். எப்படியாவது அந்த எலியை வீழ்த்திவிட வேண்டும் என்று முடிவு கட்டுகிறான்.
அந்த எலியைத் தன் மாபெரும் எதிரியாக அவன் மனம் பாவித்துக்கொள்கிறது.
அந்த வீட்டுக்குப் பின்புறம் ஒரு பாழ்வளவு இருக்கிறது. குட்டையாகவும் நெட்டையாகவும் புற்றுகளும் புதர்களும் அங்கே நிறைந்திருக்கின்றன. குப்பை கொட்டும் பிரதேசமாக அயலவர்கள் அதை ஆக்கி வைத்திருக்கிறார்கள். அருவருப்புத் தரும் அத்தனை ஜீவராசிகளும் அந்த பாழ்வளவுக்குள்ளிருந்துதான் படையெடுத்து வருவதாக அவனுக்குத் தோன்றுகிறது. பாழ்வளவுக்கும் வீட்டுக்கும் நடுவில் இருக்கிற வேலியில் இரவில் சரசரப்புச் சத்தம் கேட்கும்போது, அது பாம்பா எலியா எனப்புரியாமல் குழம்பித்தவிக்கத் தொடங்குகிறான்.
அப்போதுதான் எலிப்பொறியை வைத்து அந்த எலியைப் பிடித்துவிடலாம் என்று அவன் மனத்தில் ஓர் எண்ணம் எழுகிறது. உடனே கடைக்குச் சென்று ஓர் எலிப்பொறியை வாங்கிவருகிறான். ஒரு நெத்திலிக் கருவாட்டைச் சூடுகாட்டிப் பொறியில் பொருத்தி எலிகளின் நடமாட்டப் பிரதேசமென சந்தேகத்தைத் துாண்டுகிற இடமாகப் பார்த்து வைக்கிறான். ஆனாலும் அவனால் அன்றைய இரவில் நிம்மதியாகத் துாங்க முடியவில்லை. ஏதோ ஒரு கட்டத்தில் மரண அடி வாங்கிக் கிரீச்சிடப்போகும் எலியின் சத்தத்தை எதிர்பார்த்துக் குதுாகலத்துடன் காத்திருக்கிறான். ஆனாலும் பின்னிரவில் துாங்கியது தெரியாமல் துாங்கிப்போகிறான். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக எலிப்பொறியைப் பார்க்க ஓடுகிறான். கருவாட்டுத் துண்டை எறும்புகள் மொய்த்திருக்கின்றன. எலிகள் அகப்படாததில் அவனுக்குக் கோபம் பொங்குகிறது. நம்பிக்கை இழக்காமல் மறுநாளும் கருவாட்டுத் துண்டைப் பொருத்திவிட்டுக் காத்திருக்கும்போது ஓர் எலி அகப்பட்டுக்கொள்கிறது. நுழைவாயிலிலேயே உயிர்விட்டதில் கழுத்து நெரிபட்டு கோரமான நிலையில் இறந்துகிடக்கிறது. அதை வெளியே எடுத்து வாலைப்பிடித்தவாறு கொண்டுபோய் மடுவில் வீழ்த்துகிறான். பொறியை நன்றாகக் கழுவி அடுத்த பலிக்காகத் தயார் செய்கிறான். மற்றொரு எலியும் அகப்பட்டு மடிகிறது. ஒரே இரவில் இரண்டு பலிகள்.
ஆனால் மறுநாள் இரவு அவனுடைய நேசத்துக்குரிய சட்டையொன்றைக் குதறிவைக்கிறது எலி. வைத்த இடத்தில் எலிப்பொறி அப்படியே இருக்க, கருவாடு மட்டும் காணாமல் போயிருக்கிறது. பக்கத்து வீட்டிலிருந்தவர் எலிகளைக் கொல்லும் நஞ்சை வாங்கி வைக்குமாறு சொல்கிறார். அது ஓரளவுக்குப் பயனளிக்கிறது. தினமும் ஒன்றிரண்டு எலிகள் இறந்து கிடப்பதைப் பார்க்க நேர்கிறது. ஆனால் திரும்பும் திசையெல்லாம் பிணங்களைப் பார்ப்பதிலும் கண்ணில் படாத இடத்தில் விழநேர்ந்துவிடும் எலியின் உடலிலிருந்து வீசும் துர்நாற்றத்தை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உடனே தன் முயற்சியைக் கைவிடுகிறான். இரண்டு மூன்று வாரங்களில் மறுபடியும் எலிகளின் அட்டகாசம் தொடர்கிறது. பக்கத்து வீட்டு நண்பர் எலிகளைக் கொல்ல ஒரு பூனையை வளர்க்குமாறு ஒரு யோசனையைச் சொல்கிறார். பூனையை உடனே வரவழைத்துவிடுகிறான். ஆனால் அவன் இல்லாத சமயங்களில் அது கறிச்சட்டியைக் காலிசெய்வதைக் கண்டு எரிச்சலுற்று விரட்டிவிடுகிறான். பின்புறம் இருக்கும் பாழ்வளவைச் சுத்தப்படுத்திவிட்டால் எலிகள் வராமலிருக்கக்கூடும் என்று நினைத்து கூலிக்கு ஆள்பிடித்து துப்புரவு செய்ய ஏற்பாடு செய்கிறான். எல்லாக் குப்பைகளும் ஒரு மூலைக்குக் கூட்டியெடுக்கப்பட்டுஅன்று மாலை தீயிடப்படுகிறது. அதற்குப் பின்னரே அவன் நிம்மதியடைகிறான். ஆனாலும் அந்த நிம்மதி அதிக நாள்கள் நீடிக்கவில்லை. மண்ணுக்குள் வேர்பதித்த செடிகளின் பச்சை முளைகள் பாழ்வளவில் மீண்டும் முளைக்கத் தொடங்கிவிட்டதைப்போல வீட்டுக்குள் எலியின் நடமாட்டமும் தொடங்கிவிடுகிறது. மெல்ல மெல்ல அவன்மனத்தில் எலிகளை அழிக்கும் எண்ணத்தைக் கைவிடுகிறான். மாறாக, எலிகளிடமிருந்து தன்னை எவ்விதம் காப்பது என்கிற பயம் உருவாகத் தொடங்குகிறது.
இக்கதையில் எலி ஒரு வலிமையான படிமமாகப் பதிவாகியிருக்கிறது. (எலியைப் படிமமாக்கி எழுதப்பட்ட அசோகமித்திரனுடைய ‘எலி ‘ சிறுகதையை யாராலும் மறக்க முடியாது) பிடிக்காத ஒன்றின் அல்லது சகஜமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றின் படிமமாக விளங்குகிறது எலி. அந்த ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பது இன்னொரு மனிதனாக இருக்கலாம். இன்னொரு குடும்பமாக இருக்கலாம். இன்னொரு மொழி அல்லது இனமாக இருக்கலாம். பல திசைகளில் இப்படிமத்தை விரித்துப் பார்க்கலாம். எல்லாருக்குமான இடத்தை எல்லாரும் பகிர்ந்துகொண்டு வாழ்ந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பது ஒரு லட்சியப்பார்வையாக மட்டுமே எஞ்சி நிற்க, நடைமுறையில் எதிர்ப்புள்ளியில் இருக்கும் ஒன்றை வீழ்த்தியழிப்பது அல்லது அதனிடம் அகப்படாமல் தப்பித்து வாழ்வது என்கிற இரண்டு விளிம்புகளில் இயங்குகிற ஒன்றாக மாறிவிட்டது மனிதவாழ்வு. வாழ முடியாமையின் தவிப்பாலேயே இத்தகு கதைகள் மீண்டும் மீண்டும் எழுதி எழுதி மனித குலத்தால் வாசிக்கப்படுகிறது போலும்.
*
இலங்கையின் இளந்தலைமுறை எழுத்தாளர்களுள் முக்கியமானவர் உடையப்பா மாணிக்கம் வரதராஜன் என்னும் உமா வரதராஜன். கல்முனையைச் சேர்ந்தவர். வியூகம் பதிப்பகத்துக்காக அன்னம் வெளியீடாக 1988 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘உள்மன யாத்திரை ‘ என்னும் சிறுகதைத் தொகுப்பில் ‘எலியம் ‘ என்னும் இக்கதை இடம்பெறுகிறது.
paavannan@hotmail.com
- சொல்லாடலும், பிலிம் காட்டுவதும்
- தாய்மைக் கவிதை
- மனிதனாக வாழ்வோம்
- உருவாக்கம்
- அறிவியல் மேதைகள் – ஓட்டோ வான் கியூரிக் (Otto Von Guericke)
- சனிக்கோளை நெருங்கும் காஸ்ஸினி ஹியூஜென்ஸ் விண்வெளிக் கப்பல் [Cassini Huygens Spaceship Approaching Saturn Planet in 2004]
- ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2
- அழித்தலும் அஞ்சுதலும் (உமா வரதராஜனின் ‘எலியம் ‘ எனக்குப் பிடித்த கதைகள் – 72 )
- நாவலும் யதார்த்தமும்
- மனசெல்லாம் நீ!
- தஞ்சைக் கதம்பம்
- வாரபலன் ஆகஸ்ட் 14, 2003 (ஆவணப்படம், ராஜராஜன், மருத்துவ ஜோதிடம், சோடியவிளக்கு)
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 12
- சங்கப் பாடம்
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி
- ஆடு புலி ஆட்டம்
- என்று உனக்கு விடுதலை
- நல்லவர்கள் = இஇந்தியர்கள்
- 4. இராட்டை – ஒரு வருங்கால தொழில்நுட்ப குறியீடாக
- அப்பா
- விடியும்! நாவல் – (9)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பத்தொன்பது
- ஞாநியின் பார்வையில் பெரியாரின் அறிவு இயக்கம் : சில கேள்விகள்
- கடிதங்கள்
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் குடும்ப நிதி அளிக்கும் நிகழ்ச்சி
- குறிப்புகள் சில 14 ஆகஸ்ட் 2003 எம்.ஐ.டி பிரஸ் – வேனாவர் புஷ் – ஒரு கட்டுரையும், அதன் தாக்கமும் பன்னாட்டு நிதிக்கணக்காய்வு நிறுவ
- சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு நீண்டகால அரசியல் திட்டம் – மதச் சிறுபான்மையினர் தம் பிரசினைகளை, தோல்விகளை, வளர்ச்சிக்கான முயற்சிகளை வ
- வழியில போற ஓணான…
- சிவ -சக்தி- அணு – காஷ்மீர் சைவம் பற்றி சில குறிப்புகள்
- சட்ட பூர்வமான வரதட்சணை! வரதட்சணைத் தொகைப் பதிவு! முதலிரவு முன் ஒப்பந்தம்! பெண்வீட்டார் மனமுவந்து ஒப்புக் கொள்ளும் இவற்றை முதலில்
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள் 3
- தாயே வணங்குகிறோம்
- ராஜீவின் கனவு
- எந்திர வாழ்க்கை
- சுவைகள் பதினாறு
- செயலிழந்த சுதந்திரம்.