அலமாரி

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

அருண் கொலட்கர் மொழியாக்கம் இரா.முருகன்


பழைய செய்தித்தாளில் கிழித்த
பழுப்பேறிய துண்டுகள்
விரிசல் கண்ணாடி விழுந்துவிடாமல்
பிடித்து நிறுத்துகின்றன.

அலமாரிக் கதவின் சதுரம் ஒவ்வொன்றும்
பாதுகாப்பில்லாத சில்லுகளை,
தொத்திக் கொண்டிருக்கும்
கோணல் சதுரங்களை
ஒட்டிச் சேர்த்தது.

அடுக்கு அடுக்காகப் பலகை வைத்து
அழகாக நிறுத்திய வரிசைகளில்
தங்க விக்கிரகங்கள்.

பங்குச் சந்தை விலைவிவரப்
பட்டியல் கிழிசல்கள் பின்னே
தங்கமான தெய்வங்கள்.

அவை உங்களைப்
பாதி கத்தரித்த தலையங்கங்களுக்கும்
தாதுபுஷ்டி லேகிய விளம்பரங்களுக்கும்
பின்னால் இருந்து பார்க்கின்றன.

கஞ்சி போட்டது போல் விரைப்பான
கருத்துச் சொல்லும் கட்டுரை அடியில்
தங்கக் கையொன்று தட்டுப்படுகிறது.

எதிர்பார்த்தபடி
அலமாரிக் கதவில்
பூட்டுப் போட்டிருக்கிறது.

அருண் கொலட்கர் – ஜெஜூரி தொகுப்பு – ‘The Cupboard ‘
மொழியாக்கம் – இரா.முருகன் – நவம்பர் ’04

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்