அற்புதமான ஒரு படைப்பாளி அமரர் அனுராதாரமணன்

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

குரு அரவிந்தன்


அனுராதாரமணன் என்ற அற்புதமான படைப்பாளி எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை நினைக்கவே வேதனையாக இருக்கிறது. சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர், சென்ற ஞாயிற்றுக்கிழமை 16-05-2010, இருதய நோய் காரணமாக அடையார் மருத்துவமனையில் தனது 62வது வயதில் காலமானதாகச் செய்தி வந்தது. சொந்தவாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்தாலும் அவற்றை விட்டுவிட்டு ஓடாமல், துணிந்து எதிர்கொண்டவர். சமூக அக்கறை கொண்டவரான இவர் எங்கெல்லாம் பெண்கள் அடக்கி ஒடுக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் துணிந்து குரல் கொடுத்தவர். பொதுநலன் கருதிப் போராடியதால் தனக்கெனப் பல எதிரிகளைச் சம்பாதித்துக் கொண்டவர். சிலரின் தவறுகளைச் சுட்டிக் காட்டியதால் ஆணாதிக்க சக்திகளால் வேண்டுமென்றே ஒதுக்கப்பட்டவர். இவரது மறைவு தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்குப் பெரியதொரு இழப்பாகும்.

1947ம் ஆண்டு யூன் மாதம் 29ம்திகதி பிறந்த, இவரது முதலாவது கதையான ‘கனவு மலர்கள் கருகும்போது’ மங்கை இதழில் நவம்பர் மாதம் 1977ம் ஆண்டு முதன் முதலாக வெளிவந்தது. சாம்பவி என்ற பெயரில் அதை எழுதியிருந்தார். அவரது இரண்டாவது கதை ‘நான்கு சுவர்களுக்கு நடுவே’ தினமணிக்கதிரில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து அவரது பல கதைகள் பல பத்திரிகைகளிலும் வெளிவரத் தொடங்கின. குறிப்பாக ஆனந்தவிகடனில் வெளிவந்த ‘சிறை’ என்ற சிறுகதை சிறந்த கதையாகத் தெரிவு செய்யப்பட்டு தங்கப் பதக்கத்தைப் பெற்றது. பல வாசகர்களின் மனதைத் தொட்ட இந்தக்கதை தமிழில் திரைப்படமாக்கப்பட்டதும் உங்களுக்கு நினைவிருக்கலாம். லட்சுமியின் நடிப்பில், ஆர்சி.சக்தியின் நெறியாள்கையில் வெளிவந்த இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஆர்.சி.சக்தியின் நெறியாள்கையில் கூட்டுப்புழு என்ற கதை திரைப்படமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு மலரின் பயணம் என்ற கதை முக்தா சிறீனிவாசனாலும், இவரது இன்னுமொரு நாவலான ஒருவீடு இரு வாசல் பிரபல நெறியாளர் கே. பாலச்சந்தராலும் திரைப்படமாக்கப்பட்டன. இதைவிட தெலுங்கு மொழியில் இவரது கதையைத் தழுவி எடுக்கப்பட்ட ஒக பார்யகதா (ழுமய டீயயசலயமயவாய) என்ற திரைப்படம் ஐந்து விருதுகளைப் பெற்றது. கன்னட மொழியிலும் இவரது மூலக்கதையைக் கொண்ட மிதிலையில் சீதை என்ற திரைப்படம் வெளிவந்தது. 1978ம் ஆண்டு சிறந்த இலக்கியத்திற்கான தங்கப்பதக்கப் பரிசைப் புரட்சிக் கலைஞர் எம். ஜி. இராமச்சந்திரனிடம் இருந்து பெற்றுக் கொண்டார். சொந்தவீடு வாடகை மனைவி என்ற கதைதான் முதன்முதலாகச் சினிமாவிற்காக எழுதப்பட்டது, ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அது வெளிவரவில்லை.

இதைவிட அவரது பல கதைகள் மெகா சீரியல்களாக சின்னத்திரையில் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் அர்சனைப்பூக்கள், பாசம், கனாக்கண்டேன் தோழி, அன்புள்ள சினேகிதியே, பெண்ணே பெண்ணே போன்ற சிலவற்றை இங்கே குறிப்பிடலாம். அவருக்குப் பிடித்தமான எழுத்தாளர்களின் பட்டியலில் தேவன், கல்கி, ஜெயகாந்தன், லட்சுமி, தி. ஜானகிராமன் ஆகியோரும் அடங்குவர். தி. ஜானகிராமனின் சிறுகதைகளும், கல்கியின் பொன்னியின் செல்வனும் அவருக்குப் பிடித்தமானவை. 1300 நாவல்களும் 1230 சிறுகதைகளும் இவர் இதுவரை எழுதியிருப்பதாக் குறிப்பிடுகிறார்கள்.

தமிழும், ஆங்கிலமும் தெரிந்த பட்டதாரியான இவர் பழம்பெரும் நடிகரும், வில்லன் வேடங்களில் நடித்தவருமான, ஆர். பாலசுப்ரமணியத்தின் பேர்த்தியாராவார். பத்தொன்பது வயதில் 1967ல் இவரது திருமணம் நடந்தது. சுதா, சுபா என்று இரண்டு பெண்களுக்குத் தாயான இவருக்கு இரண்டு பேர்த்திகளும், ஒரு பேரனும் இருக்கிறார்கள். பெண்கள் இருவரும் வட அமெரிக்காவில் திருமணமாகி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இவர் சுபமங்களா, வளையோசை போன்ற பத்திரிகைகளின் ஆசிரியையாகவும் இருந்தவர். தினமலர் வாரமலரில் இவரது பக்கம் மிகவும் பிரபலமானது. அன்புடன் அந்தரங்கம் என்ற பகுதியில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் எழுதிக் கொண்டிருந்ததன் மூலம் பலரின் பிரச்சனைகளுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார். இதற்காக தனியாக ஒரு தொலைபேசி இணைப்பையும் ஏற்படுத்தியிருந்தார். 2004ம் ஆண்டு காஞ்சி சங்கராச்சாரியாரைப் பற்றி அவர் குறிப்பிட்ட கருத்துப் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. ஆணாதிக்க உலகம் அவரது கூற்றை நம்பமறுத்தது. மனம் தளராது தனியே ஒரு பெண்ணாக நின்று அநீதிக்கு எதிராகப் போராடினார். அதன் பலன்தான் அவரது வலியையும், வேதனையையும் பலரால் புரிந்து கொள்ள முடிந்தது.

எனது சிறுகதைத் தொகுப்பான இதுதான் பாசம் என்பதா..? என்ற தொகுப்பிற்கு அவர் அணிந்துரை எழுதிக் கொடுத்ததைத் தொடர்ந்து எனக்கும் அவருக்குமான இலக்கியத் தொடர்புகள் ஏற்பட்டன. அவரும் ஆனந்தவிகடனில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்ததால், எனது கதைகளை அவர் ஆர்வத்தோடு விரும்பி வாசிக்கத் தொடங்கினார். இதயம் பேசுகிறது மணியன் விகடன் ஆசிரியராக இருந்தபோதுதான் இவரது சிறுகதைக்குப் பரிசு கிடைத்தது. கதைகளை மட்டுமல்ல, பல விடயங்களை அவர் தனிப்பட்ட முறையில் ஆக்க பூர்வமாக விமர்சிப்பார். எங்கேயோ ஓரிருவர் செய்யும் தவறுக்காக பெண்மையை இழிவு படுத்தக்கூடாது, அப்படியான கதைகளைப் படிக்கிற நல்ல குடும்பப்பெண்களுக்கு வலிக்கும் என்பதை ஒரு முறை எனக்குச் சுட்டிக் காட்டினார். உயிர் நிழலில் வெளிவந்த, பலராலும் பேசப்பட்ட அப்போ பிரியா..? என்ற எனது கதை தன்னை வெகுவாகப் பாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். சோகமான முடிவுகளை எப்போதுமே விரும்பாத இவர் எப்பொழுதும் நல்ல முடிவுகளையே கதையில் எதிர்பார்ப்பவர். எல்லா கஷ்டங்களுக்கும் ஒரு நாள் நல்ல முடிவு கிடைக்கும் என்பதை வாசகர்களுக்குக் கதைகள் மூலம் உணரவைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்.

ஒரு சமயம் அவர் என்னிடம் கேட்டுக் கொண்டது இப்பொழுதும் பசுமையாக என் மனதில் நிற்கிறது. அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் இருந்த வரிகளை அப்படியே தருகின்றேன்.
‘அருமை எழுத்தாள சகோதரர் குரு அரவிந்தன் அவர்களுக்கு,
நான் உங்களிடம் வேண்டிக்கொள்ள விரும்புவது இதுதான் – இன்றைய காலகட்டத்தில் மக்கள் எத்தனையோவிதமான பிரச்சனைகளில், வெளியே சொல்லக்கூட முடியாத துயரங்களில் அவதிப்பட்டு தினமும் நொந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இறைவன் நமக்கு அளித்துள்ள இந்த எழுத்துத்திறமை என்கிற வரத்தினால் – நம்மால் முடிந்த வரையில் அவர்களுக்கு உற்சாகத்தை ஊட்டவேண்டும். கதைகளில் வரும் பாத்திரங்கள் கஷ்டப்படலாம், கண்ணீர் விடலாம், ஆனால் அத்தனை கஷ்டங்களுக்கும் ஓர் விடிவு உண்டு என்பதை நாம் அவ்வப்போது அவர்களுக்குச் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும்.’

வார்த்தை ஜாலங்கள் மூலம் என்ன எழுதுகிறோம் என்று தனக்கும் விளங்காமல், மற்றவர்களுக்கும் விளங்காமல் வாசகர்களைக் குழப்பிக் கொண்டிருக்கும் சில எழுத்தாளர்களிடம் இருந்து இவர் வேறுபட்டிருந்தார். தனது எழுத்துக்கள் தங்குதடையின்றி வாசகரைச் சென்றடைய வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். திறந்தமனதோடு எதையுமே நேரடியாக எதிர் கொள்பவராக இருந்தார். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வாழவே அவர் விரும்பியிருந்தார். அதனால் பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தனது பொன்னான நேரத்தை ஒதுக்கியிருந்தார். ஓவியக்கலையில் சிறந்து விளங்கிய இவருக்கு ஓவியம் வரைய நேரம் கிடைப்பதில்லை என்பதே பெரிய குறையாக இருந்தது. இசையிலும் இவருக்கு ஈடுபாடு இருந்தது. இவர் எழுதிய அந்தாதி பாலமுரளிகிருஷ்னாவின் குரலிசையில் குறும்தட்டாக வெளிவந்திருக்கிறது. எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளிகிருஷ்னா போன்றவர்களின் பாடல்களை விரும்பிக் கேட்பார். தனது பெண்களுக்குத் திருமணம் நடந்த அன்றுதான் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த நேரம் என்று குறிப்பிடும் இவர் தனது மோசமான நேரம் 1995ல் இருதய நோயால் திடீரென பாதிப்புக்கு உள்ளான போது ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார். அந்த இக்கட்டான நிலையில் இருந்து அவர் மெல்ல மெல்ல மீண்டாலும் அதன் பாதிப்பால் நீரழிவு, இரத்த அழுத்தம், சிறுநீரகநோய், போன்ற வேறு பல நோய்கள் அவரைப் பீடித்துக்கொண்டன. அவரது கடைசி ஆசையாக, தனது கண்களைக் கண்பார்வை இழந்த இருவருக்குக் கொடுத்து, அவர்களுக்குப் பார்வை அளிக்கும்படி கேட்டிருந்தார். இதன் மூலம் அவரது எழுத்தை வாசிக்கப் புதிதாக இரண்டு வாசகர்களைத் தந்து விட்டுத்தான் எங்களை விட்டுப் பிரிந்திருக்கிறார். அவரது ஆத்மா சாந்தியடைய நாங்களும் பிரார்த்திப்போம்.

Series Navigation

குரு அரவிந்தன்

குரு அரவிந்தன்