நடராஜன் ஸ்ரீனிவாசன்
கோவாவிற்குச் செல்லும் தொடர்வண்டி சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. ஒரு முதல்வகுப்புக் குளிர்ப்பெட்டி மிகவும் கலகலப்பாயிருக்கிறது. அதில்தான் கதிரும் அவன் நண்பர்களும் இருந்தார்கள். கதிர் ஒரு இருபத்தியாறு வயது இளைஞன். துடிப்பானவன். செல்வந்தன். திருமணமாகதவன். சென்னையில் ஒரு கார் தயாரிக்கும் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளுள் ஒருவன். அவன் தந்தை அந்த நிறுவனத்தில் ஒரு இயக்குனர். கதிரும் நண்பர்களும் திடுதிப்பென ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாதான் இது. தொடர்வண்டியில் சென்றுவிட்டு விமானத்தில் திரும்புவதாகத் திட்டம். இவனுடைய ‘சகடாய் ‘ கார் நிறுவனத்தின் விருந்தினர் இல்லத்தில்தான் தங்கப்போகிறார்கள்.
கோவா அனைவருக்கும் புதிது. கோவாவின் வாஸ்கோ தொடர் வண்டி நிலையத்தில் இவர்களுக்காக புதிய ‘சகடாய் 60 ‘ கார் காத்துக் கொண்டிருந்தது. சந்தைக்கு மிகவும் புதியதான அந்தக் காரைச் சுற்றி ஒரு சிறு கூட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. கார்களையும் கலைப் பொருளாகப் பார்க்கும் கலாசாரம் நம் நாட்டிலும் வந்துவிட்டது. 2060ம் வருடத்திற்கான இந்த மாடல் வெளிவந்த சிறிது நாட்களுக்குள்ளேயே பிரபலம் ஆகியிருந்தது.
‘இந்த மாடலைப் பாருங்க. அசந்து போவீங்க. இந்த வருடம் இந்த ஒரு மாடலினாலேயே எங்கள் விற்பனை 25% உயரப் போகிறது. ‘ என்று நண்பர்களுக்குச் சொல்லிக் கொண்டே காரில் ஏறினான் கதிர். கார் மெதுவாக நகரத் தொடங்கியது.
‘ஜப்பானிலிருந்து எல்லா வரைபடங்களையும் வாங்கி அதன்படி காரைத் தயார்செய்துவிட்டு ஏன் இப்படி பெருமை பேசுகிறாய் ? ‘
‘முழுவதும் அப்படி இல்லை. எங்கள் நிறுவனத்தின் திறமையும் நுட்பமும் சேர்ந்துதான் இந்தக் கார் தயாராகியிருக்கிறது. இது ஹைட்ரஜனை எரிபொருளாக உபயோகிக்கும் கார். இந்தப் பெட்டியில் பாருங்கள் கட்டி கட்டியாய் இருப்பது MOF நுட்பம் (Metal Oxide Framework) கொண்டு செய்யப்பட்ட எரிபொருள் கட்டிகள். இந்த கட்டிகளை வைத்துக்கொண்டு நாம் நானூறு கிமீக்களுக்கு மேல் செல்ல இயலும். மேலும் இது எங்களுக்கு ஒரு வின்வின்(winwin) வாய்ப்பு. ஜப்பானிய தொழில்நுட்பம். இந்திய நிறுவனம் மற்றும் இந்தியத் தயாரிப்பு, மிகக் குறைந்த விலையில்….சுரேஷ், 25 லட்சத்திற்கு நாங்கள் தரும் இந்தக் காருக்கு ஈடான ஒரு ஜெர்மானியக் காரை வாங்க 70 லட்சம் தரவேண்டியிருக்கும். மேலும்… ‘
‘அப்பா கதிர் உங்கள் கார் பிரமாதம்தான். ஆனால் உன் கார் பேச்சை இப்ப நிறுத்து. பார்க்க பேச ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன கோவாவில் . ‘
கார் பேச்சு நின்றது. ஆனால் கண்ட பேச்சும் ஆரம்பமானது. வரும்போது தொடர் வண்டி முழுதும் பாட்டும் கூத்துமாக வந்தவர்கள் மிதமான வேகத்தில் கோவாவைக் கண்களால் பருகிக் கொண்டே வெகு தூரத்தில் இருந்த தங்கள் தங்கும் விடுதிக்கு வந்தார்கள். கோவா ஒரு இயற்கையின் அதிசயம். பல நூற்றாண்டுகளுக்கும் செயற்கையின் பாதிப்புகள் மிகக் குறைவாகவே இருக்குமாறு இயற்கை அதை போஷித்து வருகிறது. அந்தக் கடற்கரைகள், அந்தப் பசுமை, அந்தக் குறுகிய சாலைகள், அவற்றில் சீரிய போக்குவரத்து, மிதவேகத்தில் நகரும் சிறு கப்பல்கள், அங்கங்கே தோன்றும் உயர்ந்த பழைய மற்றும் புதிய மாதாக்கோவில்கள் – இது வேறு ஒரு நிலம். பாரதம் முழுவதிலுமே தனியானதொரு நகரம். அமைதியும் உற்சாகமுமாய், அகில இந்திய மக்களும் அதே நேரம் அகில உலக மக்களும் வந்து மகிழும் இந்த இடம் சிறப்பானதாகத்தான் இருக்கவேண்டும். கொஞ்சம் குறிஞ்சியும், கொஞ்சம் முல்லையும், கொஞ்சம் மருதமும், ஏராளமான நெய்தலுமாய் விவரிக்க விவரிக்க விரியும் ஒரு நிலம்.
கதிரும் நண்பர்களும் மாலை மண்டோவி நதியில் பாட்டும் ஆட்டமுமாய் வளையவரும் சொகுசுப் படகு ஒன்றில் ஏறினார்கள். படகில் எக்கச்சக்கமாய் கூட்டம். நூற்றிருபதடிக்கு நாற்பதடியாய் விரிந்திருந்த அந்தப்படகின் பரப்பு லேசான சிற்றசைவுகளுடன் மாபெரும் அன்னம் போல் மிதந்து கொண்டிருந்தது. பலதரப்பு மக்கள், சிறுவர், இருபால் இளைஞர், குடும்பத்தினர் மற்றும் ஒற்றையர் என படகு நிறைந்திருந்தது. சுற்றிலும் மிக ரம்மியமாக பலவண்ண விளக்கலங்காரங்களின் பிரதிபலிப்புகளும், ஒரே நிலவின் சிதறிய பிரதிபிம்பங்களும் நீர்பரப்பில் நெளிந்து கொண்டிருந்தன. உச்சஸ்தாயி சங்கீதம் உச்சமான ஒலியளவில் உடல் முழுக்க உள்நுழைந்து தடுதடுக்க வைத்துக்கொண்டிருந்தது. எல்லாவிதமான பானங்களும் விற்கப்பட்டு தீர்க்கப்பட்டுக் கொண்டிருந்தன. கதிரும் நண்பர்களும் அந்த குட்டி இந்தியாவில் தமிழ்நாட்டின் சார்பில் ஐக்கியமானார்கள். படகு நகர்ந்தது.
படகின் மேடையில் ஒரு தொகுப்பாளர் வந்தார். அங்கே நடன நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தார். குழந்தைகளின் குதியாட்டத்திற்குப் பிறகு ஒரு நடனம் ஆரம்பித்தது. ஒரு ஆப்பிரிக்கக் கருப்பினப் பெண்ணும் ஓர் ஐரோப்பிய இளைஞனும் ஆட ஆரம்பித்தார்கள். வசியமான தாளகதியுடன் நிகழ்ந்த அந்த நடனம் அனைவரையும் கட்டிப்போட்டது. அந்த பெண்ணும் ஆணும் சர்க்கஸ் கலைஞர்களின் சாகசத்துடன் ஆடினார்கள். இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னால் ஒரு அற்புதமான பாலே நடனம் ஆடப்பட்டது. ஆட்டத்தின் பெயரே அன்னம். அன்னம்போல் வெண்மையில் உடலைக்கவ்விய வெள்ளை உடையணிந்து அனைவரையும் சொக்கவைத்தார்கள் ஒரு ஆணும், பெண்ணும். ஆனால் கதிர் கொஞ்சம் அதிகமாக சொக்கிவிட்டான் போலிருக்கிறது. வைத்த கண் வாங்காமல் அந்த நடனமாதையே பார்த்துக்கொண்டிருந்தான். நண்பர்களும் அதைக் கவனித்தார்கள்.
ஆட்டமெல்லாம் முடிந்து ஓர் உணவு விடுதிக்கு வந்தார்கள். சற்றே பட்டும் படாமல் பேசியும் பேசாமலும் வந்த கதிரை சுரேஷ்தான் சீண்டினான்.
‘என்ன கதிரா, ஒரேடியா சொக்கிப்போய்ட்டியா ? பேச்செல்லாம் கொறஞ்சு போச்சு ‘.
‘அதெல்லாமில்லை. ஆனா அந்தப்பெண் ரொம்ப அசத்தல் இல்லை ‘.
‘அதாவது அந்த அன்ன நடனம். ‘
‘ம்…. ‘
‘அதாவது அந்த அன்னம்…. ‘
‘ஆமா சுரேஷ். நாளைக்கு காலை அந்தப் படகுக்கு போகணும். கொஞ்சம் கூடவா. நம்ம ரெண்டுபேர் மட்டும் போவோம் ‘.
‘இதப் பார்ரா.. என்ன காதலா ? ‘
‘எனக்கு அவளை ரொம்பப் பிடித்திருக்கிறது ‘
‘இது என்னடா அறிவுகெட்டத்தனம். நாம கோவா வந்தது யாரோ ஒரு வெள்ளக்காரி பின்னால சுத்தரத்துக்கா ? ‘
‘இல்லை சுரேஷ். எனக்கு பாதிமூளை தான் வேலை செய்யுது. மீதி பாதி பூரா அவதான் இருக்கா ‘.
‘கதிரா, வெளையாடுறியா ? ‘
‘இதுவரைக்கும் என்னை யாரும் இந்த அளவு ஈர்த்ததில்லை. ‘
‘உன்ன நான் இப்படி எதிபார்க்கலைடா ‘.
‘நானும் மனிதன், இப்போதுதன் முழு மனிதனாக உணர்கிறேன் ‘. என்று சொன்னான்.
‘கதிர் நீ ஒரு அறிவாளி. தனியொருவனாய் உன் நிறுவனத்தில் பலதை சாதித்திருக்கிறாய். எதிர்காலத்தில் அந்நிறுவனத்தில் ஒரு உன்னத இடத்தில் அமரப்போகிறாய். எந்தப்பொருளைப் பற்றியும் அறிவுப்பூர்வமாக எவ்வளவு வேண்டுமானாலும் பேசக்கூடிய அறிவாற்றல் உனக்கு உண்டு. உன்னால் விடுபடவும் முடியாதா இதிலிருந்து…வா….வாய்யா முழு கோவாவும் நம்மை அழைக்கிறது ‘.
‘முழுகோவாவில் மட்டுமில்லை. முழு பிரபஞ்சத்திலும் என்னை இப்போது அழைக்கக்கூடியவள் அவள் மட்டும்தான் ‘.
தலையில் அடித்துக்கொண்டான் சுரேஷ். சரி காலையில் தானாய் சரியாய்ப் போகுமென சமாதானமானார்கள் நண்பர்கள். அரைமணி நேரமோ இல்லை ஒரு மணி நேரமோ பத்தடி தூரத்தில் முழு ஒப்பனையில் ஆடிய ஒரு மாதைப்பார்த்து ஒரு அறிவு ஜீவி இப்படியும் மயங்கிப் போவானா என அவன் நண்பர்கள் தனியாகப் பேசிக் கொண்டார்கள். கடற்கரை ஒட்டி அமைந்திருந்த அவர்களின் தங்குமிடத்தில் அலைகளின் ஒலியினூடே கதிரின் மன உளைச்சலின் ஒலியும் சேர்ந்து ஒலிக்கத் தொடங்கியது.
இயற்கை அழைப்பிற்காக இரவின் இடையில் எழுந்த சுரேஷ் மணியைப் பார்த்தான். காலை ஐந்தரை. மேற்குக் கரையிலிருக்கும் கோவாவில் உதயத்தின் வெளிச்சம் சற்று தாமதமாகவே வரும். ஆனால் வேறொரு கதிர் உதயமாகியிருந்தது. கதிர் அறையிலேயே உலவிக் கொண்டிருந்தான்.
‘என்ன கதிர் தூக்கம் வரலியா ? ‘
‘ஏதோ விழிப்பு வந்துவிட்டது. வா கடற்கரையில் சற்று காலார உலாவி வரலாம் ‘.
‘தூக்கம் உனக்குத் தெளிவைக் கொடுத்திருக்கும். சரி இன்று எங்கு போகலாம் ? ‘
‘சுரேஷ், அந்தப் படகிற்குதான். நீ மட்டும் என்னுடன் வா. மற்றவர்களை ஊர்சுற்ற அனுப்பிவிடு ‘.
‘கதிர் இது என்னடா பைத்தியக்காரத்தனம் ? உன் நடவடிக்கை மகா மட்டமாக இருக்கிறது. இந்தப் பேச்சை இத்தோடு விட்டுவிடு ‘, என்று தணிவாக சொன்னான் சுரேஷ்.
‘இல்லை சுரேஷ் நீ வருகிறாய். நாம் அந்தப் படகிற்குப் போகிறோம் அவ்வளவுதான் ‘, ஆணையிடும் தொனியில் அவன் சொன்னபோது சுரேஷ் வேறு வழியில்லாமல் கட்டுண்டான்.
காலை எட்டு மணிக்குப் படகில் இருந்தார்கள். சுரேஷ் சென்று படகின் பொறுப்பாளரிடம் பேசினான். அங்கே வாக்குவாதம் சற்று நீடிக்கவே கதிர் விடுவிடுவென அவர்களிடம் வந்தான்.
‘எனக்கு அந்த நடனப் பெண்ணைப் பார்க்க வேண்டும். அவள் முகவரி வேண்டும் ‘, என்றான் கதிர் மென்மையாக.
‘இல்லை சார். நீங்கள் நினைப்பதுபோல் பெண்ணில்லை அவள். பார்த்தால் நாகரீகமாக இருக்கிறீர்கள், சென்று வாருங்கள் வந்தனம் ‘, என்றான் பொறுப்பாளன். கதிர் உடனே செயலில் இறங்கினான்.
‘ஐந்து நிமிட பேச்சில் பத்தாயிரம் ரூபாய் கிடைப்பது உங்களுக்கு அபூர்வமாகத்தான் நிகழும் மிஸ்டர்…. ‘
‘ராகேஷ் ‘ என்றான் பொறுப்பாளன். ‘சரி என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள். எனக்குப் பத்தாயிரம் கிடைக்குமா என்று பார்ப்போம் ‘.
‘முதலில் அவளுடன் ஒரு சந்திப்பு. பிறகு இரவில் படகில் அவளுடன் ஒரு நடனம். நான் சுமாராய் நடனமாடுவேன். அவ்வளவுதான். உங்களுக்குப் பத்தாயிரம் ‘.
‘பத்தாயிரத்திற்கு முன் அவளைப்பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும் ‘.
‘அவளது கடந்த காலமோ மற்றெந்த தகவலுமோ எனக்குத் தேவையில்லை ராகேஷ் ‘.
‘ஓஹோ ‘
‘தயவு செய்து உதவுங்கள். நாங்கள் சென்னையிலிருந்து வருகிறோம். அவளைச் சாதாரணமாக சந்திக்க வேண்டும். அவ்வளவுதான் ‘.
‘அவள் முகவரி என்றால் இந்தப் படகுதான். ஆனால் இன்று மாலை நடனமாடும்போதுதான் அவளைப் பார்க்க இயலும், போய் வாருங்கள், நன்றி ‘.
‘இந்தப் படகில்தான் இருக்கிறாள் என்றால் இப்போதே பார்க்கலாமே ? ‘
‘நீங்கள் ஏன் அவளைப்பார்க்க வேண்டும் மிஸ்டர்…. ‘
‘என் பெயர் கதிர். இவர் சுரேஷ். எனக்கு அவளை மிகவும் பிடித்துவிட்டது ‘.
அவர்களை அமரச் சொல்லிவிட்டு தன் கைபேசியில் எண்களை ஒற்றி யாருடனோ பேசிக்கொண்டே அப்பால் சென்றான் ராகேஷ். திரும்பி வந்தவன்,
‘சார் உங்களுக்கு நான் ஒத்துழைக்கிறேன். சில நிபந்தனைகள். அவளிடம் ஓரிரு வார்த்தைகள்தான் பேசலாம். ஒரு திரைபாடலுக்கு முழு நடனம் ஆடலாம். இருபதாயிரம் கொடுங்கள், இப்போதே. எந்த காரணத்தை முன்னிட்டும் பணம் திரும்பக்கிடைக்காது. இதற்குச் சம்மதமென்றால் இப்போது பணத்தைக் கொடுத்துவிட்டு மாலை ஏழு மணிக்கு வாருங்கள் ‘. அப்போது ராகேஷின் கைபேசி அழைத்தது.
ராகேஷ் பேசினான், ‘சொல்லுங்கள் குறியெண்….கடவுச்சொல்….சரி. எதாவது சந்தேகமிருந்தால் மீண்டும் கேட்கிறேன், ‘ என்று ஏதோ குறிப்பெழுதிவிட்டு கேட்டான்.
‘ஓகே. என்ன சொல்கிறீர்கள் ? ‘
கதிர் சொன்னான். ‘நீ ஒரு நல்ல வியாபாரி,சந்தர்ப்பத்தை மிகச் சரியாகப் பயன்படுத்துகிறாய் ‘.
‘என்ன ராகேஷ், எங்கள் விஷயமாகவா கைபேசி அழைப்பு ? ‘சுரெஷுக்கு ஏதோ சந்தேகம் வந்துவிட்டிருந்தது.
‘இல்லை, இல்லை. இந்த படகிற்கு ஒரு உதிரிபாகம் வேண்டி ஒரு படகுத்துறையில் பேசினேன். ஆனால் உங்களுக்கு நான் இந்த உதவிசெய்வதும் பணம் வாங்கியதும் என் முதலாளிக்குத் தெரியாமல் செய்கிறேன். உங்களுக்குப் புரியுமென்று நினக்கிறேன். ‘
‘சரி. கவனமாக நடந்து கொள்கிறோம். அவளை இப்போது பார்க்க முடியுமா ? ‘
‘நான்தான் சொன்னேனே, இது முதலாளிக்குத் தெரிந்தால் எனக்கு ஆபத்து. ஆனால் ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தால் முதலாளியுடன் பேசி அவளையே உங்களுடன் அனுப்பி வைக்கிறேன் ‘, என்றான் ராகேஷ். ஐந்து லட்சம் கதிருக்கு கடலைமிட்டாய் மாதிரி. உடனே பதறிப்போய் குறுக்கிட்டான் சுரேஷ்.
‘ஐயோ, அதெல்லாம் வேண்டாம். இருபதாயிரம் ஓக்கே. ஐந்து லட்சமெல்லாம் அப்பறம் பார்க்கலாம். ‘ கதிர் பணம் கொடுத்தான். பணம் கைமாறி இருவரும் கை குலுக்கினார்கள்.
‘ராகேஷ் ஒரு நிமிடம் உங்கள் கைபேசியைக் கொடுங்கள். வித்தியாசமாக இருகிறதே ‘.என்று சுரேஷ் அவனுடைய செல்போனைக் கேட்டான்.
‘இந்தாருங்கள், இது ஜப்பானிலேயே புதிய மாடல் ‘.
‘ரொம்ப நவீனமாக இருக்கிறது ‘, சுரேஷ் கைப்பேசியைப் பார்த்துவிட்டு கொடுத்தான். பிறகு மீண்டும் கைகுலுக்கி விடைபெற்றார்கள்.
சகடாய் 60ஐ கதிர் பூப்போல ஓட்டிக்கொண்டு சென்றான்.
‘கதிர் 20,000 போனாலும் பரவாயில்லை,வா. அவளை மறந்துவிட்டு கோவாவை அனுபவிப்போம். அவள் விஷயத்தில் ஒன்றும் சரியில்லை ‘.
‘என்ன சரியில்லை ? சுரேஷ் நான் அவளுக்கு ஒரு பெயர் வைத்திருக்கிறேன். கமலி….கமலி-கதிர் ….பொருத்தமாக இல்லை ? ‘
‘என்ன கர்மம்டா இது. கதிர் அவள் விஷயத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது. இந்த ராகேஷைப் பார். கைப்பேசியில் யாருடனோ பேசினான். குறிப்பெண் கடவுசொல்லெல்லாம் சொல்கிறான். அவன் பேசும்போது ஷீமோ என்று குறிப்பிட்டுப் பேசினான். நீ ரொம்ப அன்போடு கமலியென்று பெயர் வைத்தாயே அவள் பெயர்தான் ஷீமோ என்று நினைக்கிறேன் ‘.
‘அவன் வேலையில் நீ ஏன் குறிக்கிடுகிறாய். அவன் படகிற்கு உதிரி பாகம் என்றல்லவா சொன்னான் ‘.
‘கதிர் கண்ணை மூடிக்கொண்டு இரவு வந்துவிட்டது என்று சொல்லாதே. அவன் கைபேசியில் வந்த எண்ணை நோட்டமிட்டேன். அந்த அழைப்பு பெங்களுரிலிருந்து வந்திருக்கிறது. பெங்களூரில் ஏது படகுத்துறை ? ‘
‘அவ்வூரில் அல்சூர் ஏரி இருக்கிறதல்லவா! ‘
‘பெங்களூரில் இதுபோன்ற பெரிய படகுகள் சம்பந்தப்பட்ட எந்தத் தொழிலும் இல்லை. கதிர், தயவுசெய்து இந்த மடத்தனத்தை நிறுத்து. அவன் பேசியது நிச்சயமாக படகைப் பற்றி இல்லை ‘.
கதிர் மவுனமானான். இந்த மெளனம் அவனுடைய சம்மததத்தை தெரிவிக்கவில்லை. ஆனால் சுரேஷால் சும்மா இருக்க முடியவில்லை. ஒரு உறவினரைப் பார்க்க வேண்டுமென்று தனியாகச் சென்றுவிட்டான். மற்றவர்கள் காலை பதினோரு மணிக்கு கடற்கரையில் ஒரு உணவகத்தில் வட்டமாக அமர்ந்தார்கள். கடற்கரையில் பலவித நீர் விளையாட்டுகளும், சூரியக் குளியலும், மஸாஜும், இன்னபிறவுமாக, உணவகத்தில் துரிதகதி இந்திப்பாடல்களின் கலவையாக, ஒரே கோலாகலமாயிருந்தது. ஒரு சிற்றாறு போல் கடல் பிரிந்து சென்ற ஓரிடத்தில் மீன் விற்பனையும் கன ஜோராக நடந்து கொண்டிருந்தது. நமது நண்பர்களும் உற்சாக சல்லாபத்தில் ஈடுபட்டிருந்தனர். கதிரை ஒரு கடற்குளியலுக்குக் கட்டாயப்படுத்தினர். கதிரோ எந்த பேச்செடுத்தாலும் அந்தப் பெண்ணைப்பற்றியே பேசினான். நண்பர்களும் அவனை சீண்டிய வண்ணமே இருந்தார்கள். மத்தியான்னம் போல் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டான் சுரேஷ். கதிர் கேட்டான்.
‘என்ன சுரேஷ் ரொம்ப தெளிவா இருக்கே ‘.
‘கதிர் காலையில் நான் கலங்கிப் போயிருந்தது உண்மைதான். ஆனா இப்போ எல்லாம் தெளிவாயிடுச்சு. உன்னைப்பார்க்க சென்னையிலிருந்து அவசரமாக ஒருத்தர் – உன் நிறுவனத்திலிருப்பவர் என நினைக்கிறேன் – வந்திருக்கிறார். கூட்டிவந்திருக்கிறேன் ‘.
கதிர் வந்தவனிடம் பேசிவிட்டு ஒரு பெட்டியைப் பெற்றுக்கொண்டான். பிறகு அவனை அனுப்பிவிட்டு வந்தவன் நண்பர்களைப் பார்த்துச் சொன்னான்.
‘நண்பர்களே இன்றிரவு நான் கமலியுடன் ஆடுவதற்காக ஸ்ட்ரோபோஸ்கோப்பிக் விளக்குகள் அவசரமாக சென்னையிலிருந்து கொண்டுவரச்சொன்னேன். (Stroboscopic lamp – விட்டு விட்டு ஒளிதரும் விளக்கு) நேற்று அந்த படகு மேடையில் இந்தவித விளக்குகள் இல்லை. அதனால்தான். சுரேஷ், நான் ராகேஷிடம் இந்த விளக்குகளைப் பொருத்தவேண்டுமென்று சொல்லிவிட்டேன். ‘
கொதித்துப்போனான் சுரேஷ்.
‘கதிர் இதெல்லாம் தேவையா ? உன் கேவலமான இச்சைக்கு எவ்வளவு செலவு செய்கிறாய். எத்தனை பேரை வேலை வாங்குகிறாய். உன் மனநிலை சரியாகத்தான் இருக்கிறதா ? ‘
‘என் மனநிலைப் பற்றி உனக்கென்ன அவ்வளவு சந்தேகம் சுரேஷ். என்னை என்ன வேண்டுமானாலும் கேள் பதில் சொல்கிறேன். ஒரு பெட்டியில் எரிபொருளுக்காக கட்டி கட்டியாய்க் காட்டினேனே, அது என்ன தெரியுமா ? MOF என்கிற ஹைட்ரஜன் நிறைத்த கட்டி. இதுபற்றி கூட ஒன்று புதிதாய் இப்போது ஒரு சிந்தனை எனக்கு வந்திருக்கிறது. எங்கள் சகடாய் 60ல் உள்ள 6 லிங்க் சஸ்பென்ஷனைப் பற்றிக்கேள். என் நிறுவனத்திலேயே அதுபற்றி முழுதாய் தெரிந்த நான்குபேரில் நானும் ஒருவன். மேடுகளை கடக்கும்போது கிரவுண்ட் க்ளியரன்ஸ் (ground clearence) தானாகவே ஓரங்குலம் உயர்ந்து கொள்ளும் அதிசயத்தைப் பற்றிக் கேள் சொல்கிறேன். சகடாய் 60ல் கோவாவின் வரைபடத்தைப் போட்டுவிட்டால் தானியங்கியாக எங்கும் உன்னை எடுத்துச் செல்லும். அரசாங்க அனுமதி இன்னும் வரவில்லை. அதுபற்றிக்கேள் சொல்கிறேன். இன்று காலை உறவினனைப் பார்க்கப் போவதாகப் பொய் சொல்லிவிட்டு, வேறெங்கோ சென்று தெளிவுடன் வந்திருக்கிறாயே அது பற்றி வேண்டுமானாலும் கேள் சொல்கிறேன் ‘, என்று படபடவெனெ பொரிந்து தள்ளியவன், சுரேஷின் தோளைப்பற்றி வேறுபுறம் திருப்பி அவனிடம் கண்ணடித்ததைக் கண்டு சுரேஷ் மவுனமாய் புரிந்தும் புரியாமலும் இருந்தான்.
மற்றவர்கள் சாந்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு அவர்கள் உலகின் பிரசித்திப்பெற்ற ஒரு கடற்கரையில் சுற்றுலா நிமித்தம் இருப்பதை உணர்த்தினார்கள். இவனிடம் காரைப்பற்றியோ அல்லது அந்தக் காரிகையைப் பற்றியோ மட்டுமே பேசவியலும் என்று உணர்ந்து ஒருவன் கேட்டான்.
‘அதென்னடா சகடாய் ன்னுபேர் வச்சிருக்கீங்க ? ஏதோ கொரியப் பெயருக்கு இயைபாக வைத்தீர்களா ?.
‘சகடை என்பது சக்கரம். கூப்பிட்ட குரலுக்கு உனக்காக எங்கும் ஓடிவரும் கார்கள். விகுதி சேர்த்து அன்போடு விளிக்கும்போது ‘சகடாய் ‘ என்றுவருவதால் சகடாய். 2060க்கான மாடல் ‘சகடாய் 60 ‘. நீரியத்தில்(Hydrogen) இயங்குவது . இந்த விலையில் விற்கும் கார்களில் உலகின் உன்னதமான கார் ‘ என்று முடித்தான் கதிர்.
மாலை அந்தப் படகிற்குச் சென்றார்கள். அந்தப் பெண் ‘கமலியை ‘ சந்திக்க அவ்வளவாக ஆர்வம் காட்டாத கதிர் அவளுடன் நடனமாடும் தருணத்தை எதிர்நோக்கியிருந்தான். ஸ்ட்ரோபோ விளக்கு பொறுத்தப்பட்டிருக்கிறதா என்று சோதித்தான். இரண்டு நடனங்களுக்குப் பிறகு வந்தது அந்த ‘அன்ன நடனம் ‘. அதன் பிறகு அறிவிப்பாளர் சிறப்பு அறிமுகத்துடன் கதிரை நடனமாட அழைத்தார். ஒரு துரித்கதி இந்திப் பாடல் இசைக்கத் தொடங்கியது. அவளோடு இணைந்து ஆடினான். அவ்வப்போது கைகளைப்பற்றி சுழன்றுச் சுழற்றி ஆடினான். முதல் சரணத்தில் அவளைச் சற்று நெருங்கினான். இடையில் கைவளைத்து தன்னைத் தாங்கியாக வைத்து அவளை முழுவதும் வளைத்து ஆடியபோது அந்தப் படகிலிருந்தோர் ஆரவாரித்தனர். அடுத்த சரணத்தில் அவளைச் சுழற்றுவதிலே கவனமாக இருந்தான். ஒரு கட்டத்தில் அவளை அவளின் ஒரு கட்டைவிரலின் மீது மட்டும் விரைப்பாக நிற்க வைத்து பாலே நடனத்தின் மூன்று விரைவு சுற்றுகளை சுழல விட்டான். நீண்டு விரைத்து அவள் சுழன்ற போது ‘கமலி ‘ தன்னைவிட மூன்று அங்குலம் உயர்ந்திருப்பதைகண்டான். கரகோஷம் வானைத்தொட்டு அந்த நீரில் கரைந்தது. ராகேஷுக்கு நன்றி சொல்லி நண்பர்கள் படகைவிட்டு விலகினர். கதிர் அந்த இந்திப் பாட்டை விசிலாக அடித்துக் கொண்டே காரை ஓட்டினான். ஒரு கடற்கரை உணவுவிடுதிக்கு வந்தார்கள்.
‘என்னடா கமலி அவ்வளவுதானா ? ‘
‘இரண்டு வருடம் கழித்து இருபது கிலோ இரும்பாகப் போகிறவளை என்ன செய்யச் சொல்கிறாய் ? ‘ என்றான் கதிர்.
‘என்ன ? அவள் ரோபோவா ? ‘ அதிர்ந்தனர் நண்பர்கள். சுரேஷ் ஆமோதித்தான். ‘அந்த விவரத்தை அறிந்து கொள்ளத்தான் இன்று காலை தனியாகச் சென்றேன். அதன்பிறகுதான் நான் நிம்மதியானேன், உனக்கு எப்போது தெரியும் கதிர் ? ‘ என்று வினவினான் சுரேஷ்.
‘என் மூளைக்குள் எப்போதும் காரும் காரின் பாகங்களும் ஓடிக்கொண்டேயிருக்கும். முதல் நாள் ஆட்டத்தில் ஒரு கணத்தில் சிறு வலியை உள்ளடக்கிய புன்னகை வரவேண்டிய முகத்தில், மலர்ந்த சிரிப்பைப் பார்த்தவுடன் வந்த ஐயத்தை, அடுத்தடுத்த வந்த ஆட்டத்தில் காலணிக்குள்ளிருந்த பாதத்தின் இணப்புகளை ஊகித்தவுடன் எனக்குப் புரிந்துவிட்டது ‘.
‘அப்புறம் எதுக்குடா காதல், கத்திரிக்காய், கமலி கதிர் அப்படின்னு எங்கள கலக்கிட்ட ? ‘
‘கோவா ரொம்ப இனிப்பா இருக்குன்னு கொஞ்சம் மசாலா சேர்க்கத்தான் ‘.
கதிர் ஓட ஓட எல்லோரும் அவனை விரட்டினார்கள்.
++++ ++++ ++++
ஒரு வாரத்திற்குப் பிறகு சகடாய் நிறுவனத்தினுள் குளிர் கொஞ்சும் ஒரு கருத்தரங்கு அரங்கில் கதிர் உரை நிகழ்த்திக்கொண்டிருந்தான்.
‘….இப்படியாக நமது தற்போதைய 6 லிங்க் சஸ்பென்ஷனின் கூட இன்னும் இரண்டு லிங்க் சேர்த்துவிட்டால் கிரவுண்ட் க்ளியரன்ஸ் மூன்றங்குலம் உயரும். இதுவரை உலகில் இல்லாத தொழில் நுட்பம் இது. 8 லிங்க் அமைப்பாக செய்யப்பட்டிருக்கும் ஒரு ரோபோ நடனமாது விரைத்து நிற்கும்போது எவ்வளவு உயர்கிறாள் என்று இந்த வீடியோவைப் பாருங்கள். கூடவே ஸ்ட்ரோபோ விளக்கில் மறைத்து வைத்திருந்து எடுக்கப்பட்ட ஊடுகதிர்( X-ray) படங்களையும் பாருங்கள். முப்பத்தைந்து லட்சத்திற்கு அந்த நிறுவந்த்துடன் இந்த நுட்பத்திற்காக நாம் பேசிக்கொண்டிருக்கும் பேரத்தின் சாரத்தை நான் இருபத்தைந்தாயிரத்தில் கொண்டுவந்திருக்கிறேன் ‘….
படம் ஓடி முடிந்ததும் சாரளத்தின் திரையை விலக்கினான். சற்று தூரத்தில் சகடாய் நிறுவனத்தின் கொடி இந்திய தேசியக் கொடியுடன் இணையாய் உற்சாகமாய் பறந்து கொண்டிருந்தது.
* * * * * * *
நடராஜன் ஸ்ரீனிவாசன்
sn_in@yahoo.com
- நால்வருடன் ஐவரானேன்
- பின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்
- மஸ்ஸர்ரியலிசம்(MASSURREALISM)இலக்கியத்தில்
- புராண நிகழ்வை பிறிதொரு தளத்தில் விரிவடையச் செய்யும் புத்துருவாக்கம்
- கொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை
- மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்
- அலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் ‘
- தொகுதிப் பங்கிடு-ஒரு கற்பனை
- நேரம் கேட்டால்கூடச் சொல்லாதே!
- “ஹால் டிக்கெட்”
- தீம்தரிகிட மாத இதழ் இணைய இதழாகிறது
- உலகமயமாக்கலில் எழும் சில சந்தேகங்கள்
- வனப்பிரஸ்தம் – குந்தியின் தனிமையும், தேடலும்
- பெரியாரும், சிறியாரும்
- நம்பமுடியாமல்…
- இந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு நாடகப் பயிற்சி முகாம்
- யேல் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் திரைப்படங்கள்
- தேயும் விரல்களும், தோய்ந்த நஞ்சும்
- சான்றோர் சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும்
- கடிதம் – ஆங்கிலம்
- கடிதம் ஆங்கிலம்
- கடிதம்
- கடிதம் ஆங்கிலம்
- தமிழகக் குடும்ப வாழ்க்கை (நேற்று – இன்று – நாளை)
- அறிவியல் புனைக்கதை : என்னை யாரென்று எண்ணி எண்ணி
- வேம்பு
- ஒரு மயானத்தின் மரணம்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14
- தொ ட ர் க தை- ராகு கேது ரங்கசாமி -3
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘
- புலம் பெயர் வாழ்வு (6)
- உயிரா வெறும் கறியா ?
- வாசிப்புக் கலாசாரம்
- சிறு தெய்வங்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்
- ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் என்ன தப்பு ?
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-14) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- இறை மறுப்பாளர் நீட்சேயின் இன்ப அறிவியல் (GAY SCIENCE BY FREDRICH NIETZSCHE)
- கீதாஞ்சலி (66) எனது கடைசிக் காணிக்கை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கவிதை
- பெரியபுராணம் – 82 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கவிதைகள்
- அலறியின் கவிதைகள்
- முதலாம் பிசாசின் நடத்தை
- நினைவலையில் காற்றாலை
- வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்!
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -3 (சென்ற வாரத் தொடர்ச்சி)