அறிவியல் புனைகதைவரிசை 5 – பித்தம்

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

ஜெயமோகன்


உள்வளவு அங்கணத்திண்ணையில் அமர்ந்து நல்லகுத்தாலிங்கம் பிள்ளை கஞ்சி குடித்துக் கொண்டிருந்தபோது நாகலட்சுமி அவசரமாக வாசலில் இருந்து உள்ளே வந்து ‘ ‘ அந்த அகமுடிவான் வந்திருக்கான். சொல்லியாச்சு, ஒத்த ஒரு காசு அவனுக்குக் குடுக்கப்பிடாது. குடுத்ததே போரும். இனி அவன் காசும் கொண்டு போனான்னு சொன்னா எனக்க சுபாவம் மாறும் பாத்துக்கிடுங்க ‘ ‘ என்றாள்

பயத்தம்பருப்பு சேர்த்து சமைத்து சூடாக நெய்விட்ட சம்பா அரிசிக்கஞ்சி . துணைக்கு தேங்காயெண்ணை விட்டு மயக்கி இளந்தேங்காய் நசுக்கிப்போட்ட சக்கை அவியல். தொட்டுக்கொள்ள மரச்சீனிப்பப்படம், கண்ணிமாங்காய் ஊறுகாய். மனம் கனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரம். நல்லகுத்தாலிங்கம் பிள்ளை எரிச்சலுடன் ‘ ‘ நாற முண்ட சோலியப்பாத்துப்போறியா ? ‘ ‘ என்றார்.

‘ ‘நான் சொன்னா சொன்னதுக்க குறவு ‘ ‘என்று அவள் ஆரம்பித்தாள்.

‘ ‘எந்திரிச்சேண்ணா கொடலு வாயில வந்துபோடும் நாயே ‘ ‘ என்றார் அவர்.

கைகழுவி குறுஏப்பத்துடன் வாசலுக்கு நடந்தார். பாலராமபுரம் ஈரிழைத்துவர்த்தால் அக்குள் முதுகு கழுத்து எல்லாம் நன்றாக துடைத்துக் கொண்டார். கார்த்திகை மாதம். ஆனால் முன்னிரவில் புழுக்கம்தான்.

அரங்கில் பண்டாரம் அமர்ந்திருந்தார். பிறையில் எரிந்த புன்னைக்காய் எண்ணை விளக்கின் வெளிச்சத்தில் கரிய பண்டாரத்தின் வெண்ணிற விபூதிப்பட்டைகள்தான் துலக்கமாகத் தெரிந்தன.

‘ ‘முருகா ஞானபண்டிதா! ‘ ‘ என்று கூவியபடி வந்து குளிர்ந்த கல்திண்ணையில் சரிந்தார் பிள்ளை. பண்டாரமும் சிவகுமாரனை எண்ணி கூப்பாடு போட்டார்.

பண்டாரம் மாலைநேர ஜெபதபங்களையும் தியானத்தையும் முடித்துவிட்டு வந்திருக்கிறார் என்று தெரிந்தது. உடலில் இருந்து களப குங்கும குந்திரிக்க மணங்களும் பலவித மலர் மணங்களும் கலந்து அடித்தன. சடைமுடிக்கட்டில் அரளிப்பூ செருகப்பட்டிருந்தது. காதில் தெற்றிப்பூக்கள். நல்ல கரிய நெடிய உடல். முற்றிய காய்ச்சில் கிழங்கு போல திரண்ட தசைக்கோளங்கள். பண்டாரத்துக்கு வயது அறுபது என்றால் ஆயுர்வேத வைத்தியன் கூட நம்ப மாட்டான். இப்போதும் தினமும் பனையோலை காக்கோட்டையில் முந்நூறு நடை தண்ணீர் மொண்டு பிள்ளையார்கோயில் நந்தவனத்தை நனைப்பார். இருவேளைதான் சாப்பாடு. வீட்டுக்கு ஒருவர் ஒரு நாளைக்குள்ள அரிசியும் பருப்பும் கொடுத்துவிடுவார்கள். காய்கறிகள் பண்டாரமே நட்டு வளர்த்து வைத்திருந்தார்.

பண்டாரமே பேசட்டும் என்று பிள்ளை காத்திருந்தார். பண்டாரம் அப்படி சுற்றி வளைத்துப் பேசக்கூடியவரல்ல. நேரடியாகப் பேசவும் தயங்குவார். முற்றத்தில் வைக்கோல்குவியலில் இருந்து பனிபட்ட புதுமணம் வந்தது. தொழுவத்து செவலைகளின் மணிகுலுக்கமும் குளம்புமாற்றமும் ஒலித்தன.

பண்டாரம் மெல்ல முடிவுக்கு வந்து அசைந்து அமர்ந்து ‘ ‘ எம்பெருமானே முருகா ‘ ‘ என்று முனகி கைகளை புத்தகம் போல விரித்து படித்து மூடி ‘ ‘ …. ஒரு இருநூறு இருந்தா சோலிய முடிச்சுப்போடலாம்…. ‘ ‘ என்றார் ‘ ‘ இந்த தடவை தப்பாது. முள்ளுமுனை கூட தப்பு நடக்க முடியாது…இதோட சங்கதி திறந்து கிட்டும்.. உறப்பாக்கும் . ‘ ‘ என்றார்.

‘இதைத்தான்வே போன தடவையும் சொன்னீரு…ஆடி முடிஞ்சு இப்ப எத்தனை மாசம் ஆவுது ? ஆவணியும் புரட்டாசியும் தலைதூக்காம கெடந்தீரு…ஐப்பசியில மறுபடியும் தொடங்கியாச்சு… என்கிட்ட இனி எடுக்க பைசா இல்ல…. வேற ஆரயாம் பாரும்வே… ‘

‘ ‘இல்ல… நான் சொல்லுறது என்னாண்ணா…. ‘ ‘

‘ ‘இனிமே நான் இந்த ரெசவாதம் மந்திரம் ஒரு எளவுக்கும் இல்ல. நீரு செம்பை தங்கமாக்குனாலும் செரி தாடகைமலையை வைரக்கலாக்கினாலும் செரி எனக்கு ஒரு புல்லும் இல்ல. போவும்வே ‘ ‘

‘அப்படிச் சொல்லப்பிடாது. இது மந்திரமோ மாயமோ இல்ல. சாஸ்திரமாக்கும். அச்சொட்டான சாஸ்திரம். சாஸ்திரம்னா அதுக்கொரு கணக்கு இருக்கும். கணக்கு தப்பினா விடையும் தப்பும்…. ஆனா கண்டிப்பா செரியான விடை உண்டு. செரியா கணக்கு போட்டோம்னா அது வராம இருக்காது… ‘ ‘

‘இது எத்தனை தடவை ஓய் கணக்கு தப்புதது… ? நீரு இதை தொடங்கி வருசம் இருபதாவுதுல்லா ? உம்ம சென்மம் பாழாப்போச்சுல்லா ? ‘ ‘

‘போனதடவை நான் ரெசாயனம் காய்ச்சின பானையை கணக்காக்காம விட்டேன். அது இரும்பு . இரும்புக்கு அதுக்கான ரெச குணம் உண்டு. அது ரெசாயனம் வற்றி வாறப்ப எடைபட்டுப் போட்டுது. அதை நான் ஊகிக்கல்ல. எந்த உலோகமானாலும் அது இந்த ரெசாயனச் சேர்மானத்தில சேந்துகிடும். சேராத ஒரு பாத்திரம் வேணும்…. ‘

‘ ‘ மண்பானை அதுக்க வேகத்துக்கு நிக்காதுண்ணு சொன்னீரு… ‘ ‘

‘ ‘நிக்காது. பீங்கானும் நிக்காது. ஆனா கண்ணாடி நிக்கும்… ‘ பண்டாரம் உற்சாகமாகச் சொன்னார். ‘ ‘ கண்ணாடியை நான் நல்லா நாப்பது பக்கமும் பாத்து படிச்சாச்சு. அது ஒரு ரெசாயனத்திலயும் எடபடாது. அதாக்கும் இந்த வேலைக்குள்ள செரியான பாத்திரம்…. உம்மாணை கந்தவேளாணை இது கடைசீ தடவை. இதில கண்டிப்பா பலிக்கும்… ‘ ‘

பிள்ளை சற்றே சபலப்பட்டார். ஆனால் இருநூறு ரூபாய் பெரிய தொகை. இரு ஜோடி உழவு மாடு வாங்கலாம். ‘ ‘ இல்ல வே பண்டாரம். நம்மாலே இனிமே கட்டாது. ஆளைவிடும் ‘ ‘

‘ ‘அப்டிச் சொல்லப்பிடாது. இது கண்டிப்பா பலிக்குத சூத்திரமாக்கும். இந்த தடவை எல்லாம் செரியா அமைஞ்சிருக்கு… ‘

சட்டென்று பிள்ளைக்கு எரிந்து ஏறியது ‘ ஏம்வே…எனக்கு வாயில என்னமோ வருது… வே பண்டாரம் இது நீரு எனக்க கிட்ட இப்டி சொல்ல தொடங்கி வருசம் இருபதாவுது . இதுவரை உம்ம ரெசாயனம் கலக்குததுக்காக நான் சிலவாக்கின ரூபா இருந்தா எட்டுகோட்டை வெதைப்பாடு வாங்கியிருக்கலாம். ஒரு பிரயோசனம் உண்டாவே ? இல்ல கேக்கேன். கிடந்து யோசிச்சா சிலப்போ எனக்கு சிரிப்பாக்கும் வாறது. உமக்கா எனக்கா ஆருக்கு பைத்தியம்ணு தெரியல்ல… ‘

‘ரெண்டாளுக்கும்தான் வட்டு… இதில என்ன சிந்திக்க இருக்கு ? ‘ என்றது உள்ளறை இருட்டு

‘நீ போடி கூதற நாயே ‘ என்றார் பிள்ளை.

பண்டாரம் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

‘ ‘நீரு சொன்னப்போ நான் கொஞ்சம் ஆசைப்பட்டது உள்ளதுதான். அது அந்தக்காலம். இப்ப எனக்கு உம்ம ரெசாயனத்தில எள்ளுக்கு இடை கூட நம்பிக்கை இல்ல. போனதடவை உம்ம முகதாட்சணியம் பாத்தாக்கும் நான் ரூபா தந்தது. இதை எங்கியாம் நிப்பாட்டணும். நான் உறச்சாச்சு. இனி இந்த விஷயமா ஒரு நயாபைசா நீர் எனக்க கிட்டே பாக்க வேண்டாம்… ‘ ‘

‘ ‘ முருகனா நினைச்சு கும்பிட்டு கேக்கேன். இது உறப்பான சோதனையாக்கும். எல்லா கணக்கும் இப்ப செரியா வந்தாச்சு. ஒரு குறை இல்ல. இத்தனை நாள் காத்திருந்திட்டு இப்ப நிப்பாட்டினா ….நான் காலுபிடிச்சு கேக்கேன்… ‘ ‘

‘ ‘என்னவே பண்டாரம் காலுபிடிக்கேரு ? ‘ ‘ என்றபடி மாதேவன் பாட்டா படியேறி கல்முற்றத்துக்கு வந்தார். ‘ ‘ ரெசாயனம் காய்ச்ச பணம் கேப்பான்… வேற என்ன ? ‘ ‘

‘ கடசீ சோதனைங்கியாரு… ‘

‘அவன் இருபது வரிசமா கடைசீ சோதனைதான் செய்யுதான்… கர்மபலன் ! வேற என்னத்த சொல்ல…. ‘ ‘ பாட்டா உட்கார்ந்தார். ‘ ‘ உனக்க வீட்டு கல்திண்ணைக்க குளுத்தி வேற எங்கயும் இல்லடே குத்தாலம் . இம்பிடு சுக்குவெந்நீ இருக்காட்டி மருமோளே ? ‘

‘கொண்டாறேன்… ‘ ‘ என்றது இருட்டு.

‘ ‘இது எல்லாம் செரியா அமைஞ்ச சோதனை. நான் ஒண்ணு விடாம பாத்தாச்சு . எல்லாம் செரியா இருக்கு…. என்னை கைவிடப்பிடாது… ‘ என்றார் பண்டாரம் கம்மிய குரலில்.

‘ ‘லே குத்தாலம், இது ஒருமாதிரி பைத்தியமாக்கும் கேட்டுக்கோ. உனக்க கிட்டே நான் இதை அம்பதுதடவை சொல்லியாச்சு. இதுபோல பல கிறுக்கும் மனுஷனுக்கு வரும். பேய் மாதிரி பிடிச்சு ஆட்டிப்போடும். சொத்தும் சுகமும் சுற்றமும் சூழ்ந்ததும் எல்லாம் அந்த ஓட்டத்தில அடிச்சுக்கிட்டுப் போயிரும்… எனக்க நரைச்ச மீசை அனுபவத்திலே நான் இம்மாதிரி எம்பிடு பேரைக் கண்டிருப்பேன்… ‘ ‘ என்றார் பாட்டா

பண்டாரம் மெல்ல ‘ ‘ முருகா! ‘ ‘ என்றார். ‘ ‘ திருமூலரும் போகரும் பொய் சொல்லமாட்டாங்கண்ணு நான் நினைக்குதேன் அய்யா ‘ ‘ என்றார்.

‘ ‘ அவங்க சொன்னதே வேற ‘ ‘ என்று பாட்டா ‘ ‘ சித்தபுருஷங்க மனுஷப்பயகிட்டே பெண்ணாசையையும் மண்ணாசையையும் பொன்னாசையையும் விட்டுடத்தான் சொன்னாங்களே ஒழிய வச்சு கொண்டாடச் சொல்லல்ல. வேய் பண்டாரம், சித்தர்பாட்டுகளிலே எந்த விஷயமாவது நேரடியா சொல்லியிருக்காவே ? எல்லாம் பூடகமா ஒண்ணுக்கு ஒம்பது பொருள் ஒளிச்சுத்தானேவே சொல்லியிருக்கு ? இது மட்டும் எப்டிவே நேரடியா சொல்லியிருப்பாங்க ? ‘ ‘

சைக்கிள் ஒலிகேட்டது. பிள்ளையின் மகன் கோலப்பன் சைக்கிளைத் தூக்கி முற்றத்தில் ஏற்றி உருட்டிவந்து சாய்ப்பில் நிறுத்தி சங்கிலி போட்டு பூட்டினான்.

‘ ‘என்னவே மக்கா சினிமாவா ? ‘ ‘என்றார் பாட்டா

‘ ‘ சினிமாவுக்குப்போனா சந்தோசப்படுவேனே… இவன் அந்த குலமுடிவான் நாயக்கரு கூட்டத்துக்கு ஒப்பம் சேந்துல்லா ஊரூரா அலயுதான்… ஏம்லே பத்தூருக்குப் போயி படியளக்க சாமிய நாறப்பேச்சு பேசியாச்சா ? இனி சோறு எறங்குமா ? ‘ ‘ என்றார் பிள்ளை

கோலப்பன் தந்தையிடம் பேசுவதை தவிர்க்க விரும்பினான்

பாட்டா ‘ இல்ல மக்கா, சொல்லுதேண்ணு நினைக்காதே…உனக்க பீ நான் அள்ளியிருக்கேன் பாத்துக்க. சாமி இல்லேண்ணு சொல்லி அலையுதது செரியில்ல கேட்டுக்கோ. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆனா ஆருபழி ? நீ ஒத்தைக்கு ஒரு பிள்ள. வேண்டின பூசொத்து இருக்கு… ‘ ‘

‘ ‘ நீரு சும்மா கெடயும் பாட்டா…. நீரெல்லாம் சாமிபூதம்ணு சொல்லியாக்கும்கிந்த மாதிரி ஆளுக கெடந்து சீரழியுதானுக. பாத்தேரா, எப்டி இருக்காண்ணு ? முப்பதுவருஷமா செம்பை தங்கமாக்குதாரு…இதையெல்லாம் இப்டியே விட்டுவைச்சா பிறவு எப்டி தமிழ்நாடு உருப்படும்… இவனுகளையெல்லாம் திருத்தணுமானா ஒரு அய்யா போதாது நூறு அய்யா வந்தாகணும்…. ‘ ‘ என்றபடி கோலப்பன் அமர்ந்தான்.

‘ ‘மக்கா கஞ்சி குடிக்கியாலே ? ‘ ‘ என்றது அறை.

‘ ‘நான் சாப்பிட்டாச்சு ‘ ‘

‘எங்கேண்ணு நான் கேக்கல்ல. வல்ல சாம்பான் புலையன் வீட்டிலயும் கேறி இருந்து வெட்டி விழுங்கியிருப்பான்… ‘ ‘ என்றார் பிள்ளை.

‘ ‘சாம்பான் காய்ச்சின சாராயம் குடிக்கலாமில்லா ? ‘ ‘ என்றான் கோலப்பன் முற்றத்து தென்னைமரத்திடம். பிள்ளை உடனே அடங்கி இல்லாமலானார்.

பண்டாரம் ‘ ‘ ரெசவாதத்தை பொன்வித்தைண்ணாக்கும் சித்தர்கள் சொல்லுதது. பொன்னு ஒரு தனி உலோகம் இல்ல. அதில ரெண்டு மூலம் இருக்கு. அக்கினி ஒண்ணு. சந்திரன் இன்னொண்ணு. அக்கினி அம்சமுள்ள வஸ்துக்கள் பலதும் பூமியில் உண்டு. சந்திர அம்சமுள்ள லோகமும் ரெசமும் பலது பூமியிலே உண்டு. செம்பு அக்கினி. பாதரெசம் நிலா. ரெண்டையும் செரியானபடி ஒண்ணாக் கலந்தா தங்கம் உண்டாகும். அதுரெண்டும் நிண்ணு கலக்க மண்ணுவேணும். அது இரும்பு இல்லாட்டி வேற என்னமாம்… ‘ ‘

‘ ‘இப்பம் நீரு சொன்னேரே இது சாஸ்திரத்திலே உள்ளதாக்கும். ஆனா இது ரெசவாதம் இல்ல, மனுஷவாதம். தங்கம்னா என்ன ? யோகத்திலே அமர்ந்த மனசைத்தான் அப்டிச் சொல்லுதாங்க. நீரு கேட்டேருண்ணா இப்பம் நான் ஒரு அம்பது திருமூலர் பாட்டாவது உதாரணமா சொல்லுவேன். வேய் சிவப்பு நெறமுள்ள செம்பு ராஜச கொணம். வெள்ள நிறமுள்ள பாதரெசம் சத்வ கொணம். ரெண்டும் இருக்க எடம் தாற கறுத்த இரும்பும் மண்ணும் தமோ குணம். மூணும் ஒண்ணாச் சேருத ஒத்த மையத்தில செம்பொன்னாட்டு ஆத்மா தொலங்கும். சும்மாவா எம்பெருமானை செம்பொன்மேனியனண்ட்டு சொல்லியிருக்கு ? வேய் சாஸ்திரங்களில சொல்லியிருக்க அம்பிடும் ரெசசவித்தை இல்லவே பிரம்ம வித்தை. நீரு கதையறியாம கெடந்து துள்ளுதீரு பத்து முப்பதுவருஷமா…. ‘

‘ ‘எப்டிவேணுமானாலும் வியாக்கியானம் செய்யலாம். நான் கண்ட சத்தியம் எனக்கு… ‘ ‘என்றார் பண்டாரம் ‘ ‘ எம்பெருமான் குமரன் எனக்கு கனிஞ்சு ஒரு திருட்டாந்தம் காட்டியிருக்காரு… ‘ ‘

‘ ‘திருட்டாந்ந்தமா ? என்னது ? ‘

‘இது நான் அதிகம்பேருகிட்டே சொன்ன காரியம் இல்ல ‘ ‘ என்றார் பண்டாரம் தயங்கி . ‘ ‘ அப்ப நான் பதினெட்டுவயசு சின்னப்பய. நல்ல வாலிப முறுக்கு. கையிலே காசு ஓட்டம். அதுக்குண்டான எல்லா வெளையாட்டும் உண்டு. நமக்கு ஒரு தொடுப்பு. அவளுக்கு அப்ப நாப்பதுவயசு பக்கத்தில இருக்கும். அவளுக்க செட்டியாரு பரம்பரையா பட்டு ஏவாரம் செய்றவரு. நான் பாக்கிறப்ப வியாபாரம் நொடிச்சு திண்ணையில உக்காந்திட்டாரு. அவ பட்டும் துணியும் வீட்டில வைச்சு விப்பா. நம்ம குட்டி ஒருத்திக்கு துணி எடுக்கப்போயி தொடுப்பு உண்டாகிப்போச்சு. அப்ப செட்டியாரு ராப்பகலா என்னமோ காய்ச்சிட்டு இருப்பாரு. இல்லாட்டி புஸ்தகம் வாசிப்பாரு. ஒரு நாள் என்னது அதூண்ணு கேட்டேன். அப்பதான் இதைப்பத்தி கேள்விப்பட்டது. அவரு ஒரு பண்டாரத்துக்கு கிட்டே ரெசவாத ரகசியம் படிச்சிருக்காரு. சும்மா செய்துபாத்தவரு முழுமூச்சா எறங்கி எல்லாத்தையும் தொலைச்சாரு. ஆனா கண்டுபிடிக்காம விடமாட்டேண்ணு நிண்ணாரு. எனக்கு அவரைக் கண்டா சிரிப்பு . இப்ப நீங்க சிரிக்கிறீங்களே இதுமாதிரி. ‘ ‘

பண்டாரம் தொடர்ந்தார் ‘ ‘ ஒருநாள் அவ ஆளனுப்பினா. செட்டியாரு செத்துப்போயிட்டாரு. ரெசம் காய்ச்சிட்டு இருக்கிறப்ப பாஷாணப்புகை கெளம்பி விஷமேறி செத்தாரு. நாந்தான் முன்ன நிண்ணு எல்லாத்தையும் செய்தேன். செட்டியாரை தூக்கி சிதையிலே வைக்கிறப்ப செட்டிச்சி அவரு வைச்சிருந்த சட்டிபானை புஸ்தகம் எல்லாத்தையும் தூக்கி அதில வைண்ணா. குடும்பத்த பிடிச்ச மூதேவி அதோட ஒழியட்டும்ணா . செரீண்ணு நான்தான் தூக்கிவைச்சேன். மண்சட்டியில நீலமா நவச்சாரம் மாதிரி நாத்தமடிச்சிட்டு என்னமோ ஒட்டியிருந்தது. தீ எரியிறப்ப நீலமா சுவாலை கெளம்பிச்சு. மூணாம் நாள் எலும்பு பொறுக்கிறப்ப நானும் நிண்ணேன். குடிமகன் எலும்பை எடுக்கிறப்ப அந்த சட்டியை பாத்தேன். வெடிச்சுகிடந்தது. உள்ள மஞ்சளா பளபளண்ணு நல்ல புதுப்பொன்னு… ‘ ‘

‘ ‘ முருகா! ‘ ‘ என்றார் பிள்ளை

‘ ‘எனக்கு சந்தேகம். சட்டியை எடுத்துக் கொண்டுவந்து நல்லா பாத்தேன். நீலப்பூச்சு அப்டியே தங்கமாகியிருக்கு. நல்ல சுத்த தங்கம். ஆசாரியை வரவழைச்சு சோதிச்சுப் பாத்தேன். தங்கமேதான். எனக்கு அப்டியே சுழட்டிக்கிட்டு வருது. செட்டியாருக்க புச்தகம் குறிமானம் எல்லாத்தையும் எரிச்சாச்சு. என்ன செய்றது ? விடவும் மனசில்ல. அவளைப்போட்டுக் குடைஞ்சேன். அவரு கடைசியா வாங்கின சாமான்களை விசாரிச்சு வாங்கினேன். அந்த நீலரெசாயனத்துக்க மணம் மட்டும்தான் எனக்கு ஆதாரம். அண்ணைக்கு தொடங்கின ரெசவித்தை. சொத்து போச்சு. பண்டாரமா நாடு சுற்றி பல ஊரும் பல குருவும் கண்டு பல புத்தகம் படிச்சு இண்ணைக்கு இங்க வந்து சேந்ந்திருக்கேன். இப்ப எனக்கு நல்லா தெரியும் நான் ரொம்ப கிட்டக்க வந்தாச்சு. சொல்லப்போனா அந்த ரகசியத்த தொட்டாச்சு. என் அகமனசுக்கு தெரியுது… ஆனா என்னால உங்களை சொல்லி நம்பவைக்க முடியாது. நான் செய்ஞ்சு காட்டுதேன்… ‘ ‘

‘ ‘ நீரு மயித்துவேரு ‘ ‘ என்றான் கோலப்பன் ‘ ‘ வேய் பண்டாரம் , சயன்ஸுண்ணு ஒண்ணு இருக்குவே. கேட்டிருக்கேரா ? தங்கம் ஒரு எலிமென்ட் . செம்பு இன்னொரு எலிமென்ட் . இரும்பு வேற ஒரு எலிமென்ட் . எலிமெண்டுண்ணா என்ன தெரியுமா அடிப்படையில இயற்கையில இருக்க மாறாத பொருள். ஒரு எலிமெண்டை இன்னொண்ணுகூட கலக்கலாம், இன்னொண்ணா மாத்த முடியாது…. ‘ ‘

‘ ‘எல்லா எலிமெண்டும் அணுக்களால ஆனதுதான். அணுன்னா என்ன ? பலவிதமான சூட்சுமமான பொருளுக ஒண்ணாச்சேந்து ஒரு அணு ஆவுது. அதை பார்ட்டிக்கிள்கியாங்க சயன்ஸிலே. செம்புக்கும் தங்கத்துக்கும் பார்ட்டிகிள் எண்ணிக்கையிலதான் வித்தியாசம். அந்த எண்ணிக்கைய மாத்த முடிஞ்சா செம்பை தங்கமாக்கலாம்…. ‘ ‘ பண்டாரம் சொன்னார்

கோலப்பன் உள்ளூர அயர்ந்து விட்டான். அதுவே அவனைச் சீண்டியது . ‘ ‘ எப்டிவே பார்ட்டிக்கிள் எண்ணிக்கையை கூட்டுவேரு ? ஒண்ணொண்ணா உடைச்சு உள்ள போடுவேரா ? ‘ ‘

‘ உடைக்கலாம். பார்ட்டிகிள் எலிமெண்டை விட்டு வெளியே போகும் ,உள்ளேயும் போகும்… அதுக்குத்தான் ரேடியேஷன்னு பேரு. தோரியம் எப்டி தம்பி ரேடியம் ஆகுது ? ரேடியம் எப்பிடி பொலேனியம் ஆகுது ? அதுமாதிரித்தான்…. ‘ ‘ என்றார் பண்டாரம் ‘ ‘ இப்பத்தான் வெள்ளைக்காரன் ரேடியேஷனை கண்டுபிடிச்சிருக்கான். ஆனா நம்ம சித்தர்களுக்கு அதுக்க பிரயோசனம் தெரிஞ்சிருக்கு. சந்திரகாந்தக்கல்லுண்ணு கேட்டிருப்பீக. என்ன அது ? இயற்கையா ரேடியேஷனோட இருக்கிற கல்லுதான் அது. தோரியம் கலந்த கல்லு . இண்ணைக்கு நாம அதில தோரியத்தைப் பிரிச்சு விக்கிறோம். அதை பலவிதமான மருந்துகள் தயாரிக்க சித்தர்கள் பயன்படுத்தியிருக்காங்க. நம்ம ரெசவாத முறையில சக்தியான சந்திரகாந்தக்கல்லும் பாதரசமும் வேணும்னு எல்லா சித்தரும் சொல்லியுருக்காங்க. சந்திரகாந்தக்கல் பாதரசத்தை பாதிச்சு கறுப்பா ஆக்கிடும். அது ரேடியேஷன் வழியா பார்ட்டிக்கிள் எண்ணிக்கை கூடுறதுதான்…. ‘ ‘

‘ ‘அரைகுறைசயன்ஸு பேசுறவங்களுக்கு இருக்கிற தர்க்கம் மத்தவங்ககிட்டே இருக்காது… ‘ ‘ என்றான் கோலப்பன்.

‘ ‘நீரு பண்டரம். உமக்கு என்னத்துக்குவே தங்கமும் பொன்னும் ? ‘ என்றார் பாட்டா

‘ ‘எனக்கு ஒரு துண்டு தங்கம் வேண்டாம். ஆனா இது ஞானம். ஞானம்னா என்ன ? எம்பெருமான் கந்தன்கிட்டே நம்மை கூட்டிட்டு போற பாதை. அஞ்ஞானத்தோட கதவைமூடி வைச்சு நம்மை அவன்கிட்டேருந்து மறைச்சுவைச்சிருக்கு பாசம். ஒரு சயன்ஸ்கண்டுபிடிப்பு ஒரு கதவு திறக்கிறதுக்கு சமம். முருகா ஞானபண்டிதா! ‘ ‘ என்றார் பண்டாரம் ‘ ‘ இப்ப தம்பி சொன்னாரே ஒரு பொருளை இன்னொண்ணா மாத்த முடியாதுண்ணு. மாத்த முடியும். இப்ப நான் சொல்லுதேன் எண்ணைக்கானாலும் ஒருநாள் மனுஷன் எல்லா பொருளையும் எல்லாமா மாத்தத்தான் போறான்.அண்ணைக்கு மண்ணையும் கல்லையும் அவன் எரிப்பான் தம்பி. கரும்பாறையை சீனியாக்கித் திம்பான். சயன்ஸ் போற வழி அதாக்கும்… ‘ ‘

பண்டாரம் கைகளைப் பிரித்துப் பார்த்தார் ‘ ‘ பாட்டா நீங்க சொன்னது எனக்குப் புரியாம இல்ல. நான் இதை தொடங்கி முப்பது வருஷமாவுது. எவ்வளவு கேட்டிருப்பேன் எவ்வளவு கண்டிருப்பேன். தங்கம்தேடி வாழ்க்கையை அழிச்சுக்கிட்டவங்க தலைமுறைதலைமுறையா கூடிக்கிட்டே இருக்காங்க… ஆயிரம், லெட்சம்… ஆனா ஒருநாளைக்கும் இந்த அலைச்சல் நிக்காது பாத்துக்கிடுங்க…இதைமட்டும் ஏன் சொல்லுறீங்க ? பசியில்லா உடலுக்காக , வானத்திலே பறக்கிறதுக்காக, சாவில்லா வாழ்வுக்காக, மனுஷன் காலம்தோறும் தேடித்தேடி அலைஞ்சிட்டுதானே இருக்கான்… ? அந்த அலைச்சலை அந்தந்தக் காலத்திலே எத்தனை லெச்சம்பேர் கிண்டல் செய்திருப்பாங்க ? எத்தனை குடும்பங்கள் அவனுக கூடச் சேந்து அழிஞ்சிருக்கும் ? இது ஒருமாதிரி தீயாக்கும் தம்பி. இது நம்ம மேல பிடிச்சுக்கிட்டா பின்ன விடாது. எரிஞ்சி எரிஞ்சு நம்மை சாம்பலாக்கிப்போடும்… ஆனா இப்பிடி எரிஞ்சு சாம்பலாகிப்போறதில ஒரு சொகம் இருக்கு. ஜென்ம சாபல்யமே இதிலே இருக்கு தம்பி. இது நான் சொன்னா உங்களுக்கு யாருக்கும் புரியாது…. நீங்க பைசா குடுக்காட்டி நான் பிச்சை எடுப்பேன் திருடுவேன் கொலைசெய்வேன்…. என் உசிரு இருக்க காலம்வரை இந்த சோதனையை விடமாட்டேன்… ‘

‘இது கஞ்சா கேஸு…திருந்தாது ‘ ‘ என்றபடி கோலப்பன் எழுந்து போனான்.

பாட்டா ‘ ‘ குத்தாலம், மாயை மாயைண்ணு சித்தாந்தம் படிக்கோம். ஆனா நாம அதை செரியா புரிஞ்சுகிடுறதில்ல பாத்துக்க. கண்ணுமுன்னால அது இப்டி பூதம் மாதிரி வந்து நிக்கிறப்ப பயமா இருக்குலே… ‘ ‘ என்றார். ‘ ‘ பைசாவை குடுத்துப்போடு .நாளைக்குப்பின்ன வழியேபோற பெண்டுக தாலிய அறுத்தாண்ணா என்ன செய்வே ? …எப்போ நமச்சிவாயா…நடுவு வலிக்கிடே… ‘ ‘

பாட்டா போனபின் பிள்ளை பண்டாரத்துக்கு ரூபாய் கொடுத்தார்.

‘ ‘அம்பிடு கதையும் இதுக்குத்தான். பைசா வாங்காம போகமாட்டானே…காலைச்சுத்தின சனி ‘ ‘ என்றாள் நாகலட்சுமி.

பண்டாரம் ‘ ‘சும்மா சொல்லல்ல…இதுதான் நான் செய்த கடைசீ சோதனை. இதில ஒரு மயிரளவுக்குகூட பழுது இல்லை. இண்ணைக்கு தங்கம் சிரிக்கும்யா …காலைல வந்து பாருங்க… ‘ ‘ என்றார்.

பிள்ளைக்கு திடாரென்று ஒரு ஆழமான பரிதாப உணர்ச்சி ஏற்பட்டது. அவர் ‘ ‘ செரி பாப்பம் ‘ ‘ என்று மட்டும் சொன்னார்.

காலையில் கோயில்வளைவை கூட்டிப்பெருக்கும் சுடலைக்கண் அலறிப்புடைத்து ஓடிவந்து முற்றத்தில் நின்று கூவ பால்கறப்பதை மேற்பார்வையிட்டபடி தொழுவில் நின்ற பிள்ளையும் தூங்கிக் கொண்டிருந்த கோலப்பனும் பதறி வந்தனர். பண்டாரம் இரவில் கோயில் முற்றத்து மாமரத்தில் தூக்குபோட்டுக்கொண்டு இறந்திருந்தார்.

ஆற்றுக்கு அப்பால் கிராமங்களிலிருந்தும் பண்டாரத்தின் சாவைக்கேட்டு ஆட்கள் கூடினார்கள். காவி மேல்துண்டில் சுருக்கிட்டு கழுத்து இறுகி நாக்கு பற்களால் கடிபட கைகள் முழுடிபிடித்து இறுகி நீண்டிருக்க அரைவாசி விழித்த கண்களுடன் பண்டாரம் மண்ணிலிருந்து இரண்டடி உயரத்தில் வலிந்து நெடுகிய கால்கள் காற்றில் ஆடிச்சுழல நின்றிருந்தார். மலஜலம் பிரிந்து துணியை நனைத்திருந்தது. கீழே உதறப்பட்ட செருப்புகள். ஏதோ தவறுசெய்துவிட்டு தலை குனிந்து நிற்பது போலிருந்தது.

பண்டாரம் இரவெல்லாம் காய்ச்சிய ரசாயனக்கலவை அவராலேயே உதைத்து உடைத்துச் சிதறப்பட்டு மணலில் வற்றிக் கிடந்தது. வெற்றிலை எச்சில் போல ஒரு காவி நிறக் குழம்பு. கண்ணாடிக்குடுவைக்குள் அது மஞ்சளாக இருந்தது.

‘ ‘அவன் நேத்து பேசின பேச்சே செரியில்ல கேட்டியா ? ‘ ‘ என்றார்பாட்டா ‘ ‘எனக்கு அப்பமே ஒரு சந்தேகம். ராத்திரி எனக்கு நல்ல உறக்கம் இல்ல. ரெண்டு தடவை எந்திரிச்சுப் பாத்தேன். பண்டாரம் நல்ல உற்சாகமா பாட்டெல்லாம் பாடாட்டு காய்ச்சிட்டிருந்தார். எப்ப இப்ப்பிடிசெஞ்சாரோ… ‘ ‘

‘ ‘செரியா வரல்லைண்ணு தெரிஞ்ச வேகத்தில தூக்குல ஏறிட்டார்… பாவம்தான் ‘ ‘ என்றார் பொன்னம்பலக் குருக்கள்.

‘ ‘அந்த சட்டி பானை எல்லாத்தையும் சிதையில வையுங்கலே… இந்த ஊருக்கு வந்த பீடை இதோட போச்சுண்ணு வைங்க… ‘ ‘

பண்டாரம் எரிவதை கூட்டம் கூட்டமாக நின்று பார்த்தார்கள். பலபடியாக அனுதாபப்பட்டு பேசிக்கொண்டார்கள். அவர்களுக்கு உண்மையிலேயே துக்கமா இல்லை அது வெறும் பரபரப்பா என்று கோலப்பனுக்குப் புரியவில்லை. அவர்கள் கிளர்ச்சியடைந்திருந்தார்கள். பெரும்பாலானவர்கள் தங்கள் அனுபவம் அல்லது கேட்ட அனுபவம் என்று பொய்களை சொல்லிக் கொண்டிருந்தார்கள். பண்டாரத்தின் மரணம் அவர்களுக்கு ஒருவிதமான நிறைவைத்தான் அளிக்கிறது என்று கோலப்பனுக்குப் பட்டது. அந்தக்கதை அப்படி முடியத்தான் அவர்கள் உள்ளூர விரும்பினார்கள். அவர்கள் அதற்காகக் காத்திருந்திருக்கலாம்.

கசப்புடன் கோலப்பன் திரும்பினான். அவரது மரணத்துக்கு அவனுடைய சொற்களும் ஒருவகையில் காரணம் என்று அவனுக்கு உள்ளூரத் தெரிந்தது. மாமரத்தை பெருமூச்சுடன் நோக்கினான். இனி அது பேய்மரமாகி விடும். யார்கண்டது அடியில் பண்டாரம் ஒரு குட்டிச்சாமியாக அமர்ந்து பலிகேட்க ஆரம்பித்தாலும் ஆச்சரியமில்லை.

கோயில் மதிலோரம் பண்டாரத்தின் செருப்புகள் கிடந்தன. தையல்கள் போடப்பட்ட ஆணிகள் அடிக்கப்பட்ட பழைய முரட்டு டயர் செருப்பு. அதில் ஒன்றில் பண்டாரம் காய்ச்சிய அந்த ரசாயனம் முன்பக்கம் பாதிப்பங்கு நனைத்து உலர்ந்து வயலெட் நிறமாக படர்ந்திருந்தது. பண்டாரம் அதைக் காலில் மாட்டியபடி குடுவையை உதைத்திருக்கவேண்டும். காலால் அதைப் புரட்டிப்பார்த்தவன் மனம் கணம் நின்று இயங்கியது. அமர்ந்து கையால் சுரண்டி நெருடிப் பார்த்தான். செருப்பில் முன்பக்க ஆணிகளில் ஒன்று மின்னியது. இழுத்து எடுத்தான். தோலுக்குள் இருந்த பகுதி இரும்பாகவும் வெளியே இருந்த தலை பொன்னால் ஆனதாகவும் இருந்தது.

====

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்