அறிவியல் துளிகள்-12

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


45.மரத்தாலான பொருட்களைத் தொட்டால் கதகதப்பாகவும், உலோகப் பொருட்களைத் தொட்டால் சில்லென்றிருப்பதும் ஏன் ?

ஒரு பொருளைத் தொட்டால் அது கதகதப்பாக இருப்பதும், சில்லென்றிருப்பதும், நம் உடலிலுள்ள தோல் பரப்பின் வெப்பம் அப்பொருளில் பரவுகிறதா இல்லையா என்பதைப் பொறுத்ததாகும். நமது தோலிலிருந்து வெப்பம் வெளியேறுகையில், தோலின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் வெப்ப உணர்வு நரம்பிலுள்ள உயிர் அணுக்களுக்கு சில்லென்ற உணர்வு தோன்றுகிறது. உலோகம் மிகவும் சிறந்ததொரு வெப்பக் கடத்தியாகும். எனவே அதனைத் தொடும்போது கையிலுள்ள வெப்பம் வெளியே கடத்தப்பெற்று நமக்குச் சில்லென்ற உணர்வு தோன்றுகிறது. குளிர் காலத்தில் நமது சுற்றுச்ச்சூழலின் வெப்ப அளவு நமது உடலின் வெப்ப அளவைவிடக் குறைவாக இருக்கும். அப்போது உலோகத்தாலான பொருட்களைத் தொட்டால் மிகவும் சில்லென்ற உணர்வு உண்டாகிறது. ஆனால் மரத்தாலான பொருட்கள் அரிதில் வெப்பக் கடத்திகள்; உலோகங்களைப் போன்று வெப்பத்தை அவ்வளவாகக் கடத்துவதில்லை; எனவேதான் மரப் பொருட்களைத் தொட்டால் கைத்தோலின் வெப்பம் வெளியேறாமல் கதகதப்பான உணர்வு ஏற்படுகிறது.

46. கண்கள் சிலருக்கு நீல நிறமாகவும், சிலருக்குப் பழுப்பாகவும், வேறு சிலருக்குக் கருமையாகவும் இருப்பது ஏன் ?

மனிதர்களின் கண்ணில் ஒளி புகுந்து செல்லக்கூடிய விழிவெண்படலம் (cornea) முன்னாலும், அதற்குப் பின்னால் கருவிழிப் படலம் (iris) என்ற தசையாலான திரையும் உள்ளன. கருவிழிப் படலம் ஒளி உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்துவது; மெலானின் என்ற நிறமிப் பொருளுடன் கூடிய உயிரணுக்களால் அமைந்தது. கண்களின் நிறத்திற்குக் காரணமாக அமைவது இந்நிறமிப் பொருளே. கருவிழிப்படலத்தில் மெலானின் என்ற நிறமிப் பொருள் இல்லாமற் போகுமானால் கண் நீல நிறமாகத் தோன்றும். இதற்குக் காரணம் கண்ணின் விழிப்படலத்திற்கும் ஒளி வில்லைக்கும் இடையேயுள்ள கண்முன்நீர் (aqueous humour) என்ற திரவப் பகுதியில் ஒளிக்கதிர் ஊடுருவிச் சென்று நீல நிறத்தை உண்டாக்குதலேயாகும். வானம் நீல நிறமாகக் காட்சியளிப்பதற்கும் இவ்விளைவே காரணம் எனலாம். நிறமிப் பொருள் அடர்த்தியாக இருக்குமானால் கண் பழுப்பு நிறமாயும், மிகவும் அடர்த்தியுடன் இருப்பின் கருமை நிறமாகவும் இருக்கும். இந்நிறமிப் பொருள் கருவிழிப்படலத்தில் இல்லாமல் இருப்பதும் அல்லது குறைந்தோ, கூடவோ இருப்பதும் மரபுவழிப்பட்ட பரம்பரை இயல்பாகும். இன்னும் சிலருக்குக் குழந்தைப் பருவத்தில் நீல நிறக் கண்களும், வளர வளரக் கண்கள் பழுப்பு நிறமாக மாறுவதும் உண்டு; கருவிழிப் படலத்தில் நிறமிப் பொருள் வயது கூடக்கூட, அடர்த்தியாகச் சேருவதே இதற்குக் காரணம்.

47. கண்ணாடிக் குவளையிலிருக்கும் திரவத்தை மெதுவாக ஊற்றும்போது சுவர்ப் பகுதியில் ஏன் வழிந்து செல்லுகிறது ?

மெல்லிய சுவர்ப்பகுதியை உடைய கண்ணாடிக் குவளையிலிருந்து பால் போன்ற திரவத்தை மெதுவாக ஊற்றும்போது, குவளையின் விளிம்புடன் ஒட்டிக் கொண்டிருக்கும் திரவப்படலம் (layer) திரவத்தின் மேற்பகுதிப் படலத்தைவிட விரைந்து வெளியேறுகிறது; இதன் விளைவாக பெர்னோலிஸ் கோட்பாட்டின்படி (Bernoulli’s principle) திரவத்தின் உட்படலத்தில் அழுத்தம் மிகுதியாகிறது. இவ்வழுத்தத்தின் விளைவாக சுவர்ப் பகுதியை ஒட்டிய திரவப் படலம் அழுத்தப் பெற்று திரவம் சுவர்ப் பகுதியிலேயே வழிந்து செல்கிறது. ஆனால் குவளையிலிருந்து திரவத்தை விரைந்து ஊற்றினால், திரவம் முழுவதுமாக வெளியேறும்போது அதன் உட்படல அழுத்தமும், வெளிப்படல அழுத்தமும் அதிக வேறுபாடின்றி ஏறக்குறைய சமமாகவே இருக்கும். எனவே திரவம் சுவர்ப் பகுதியில் ஒட்டிக்கொண்டு வழியாமல் வெளியேற இயலுகிறது. குவளையின் மேற்பகுதியில் சற்று பிதுங்கிய உதடு போன்ற அமைப்பு இருக்குமானால் மேற்கூறியவாறு சுவரில் வழிவது முழுவதுமாகத் தவிர்க்கப்பட்டு திரவத்தை எளிதாக ஊற்ற முடியும் என்பது நாம் அறிந்ததே.

48. மட்டையால் வீசப்பெற்ற நெட்டிப் பந்து (shuttle cock) காற்றில் பறக்கும்போது முன்னும் பின்னும் சுழல்வது ஏன் ?

நெட்டிப்பந்தில் இரு பகுதிகள் உள்ளன; ஒன்று இலேசான இறகுகளால் அமைந்த கூம்பு வடிவப் பகுதி; அடுத்தது நெட்டி அல்லது தக்கையாலான (cock) அரைக்கோள வடிவப் பகுதி. சில நெட்டிப் பந்துகளில் மேற்கூறிய இரு பகுதிகளும் பிளாஸ்டிக்கினால் செய்யப்படுவதும் உண்டு. பந்தாட்ட மட்டையினால் (racket) அடித்து வீசப்படும் போது நெட்டிப்பந்தின் அரைக்கோளப் பகுதியே அடிபடும் பகுதியாகும்; இருப்பினும் பந்தின் கூம்புப் பகுதியே காற்றில் முதலில் செலுத்தப்படுகிறது. அவ்வாறு செலுத்தப்பட்ட உடனே நெட்டிப்பந்து காற்றில் சுழலத் துவங்குகிறது. இதற்கு என்ன காரணம் ? இறகுகளாலான கூம்புப் பகுதியைவிட தக்கைப் பகுதி எடை சற்றுக் கூடுதலாக இருப்பதும், நெட்டிப்பந்தின் வடிவமைப்பும் இந்நிகழ்விற்கான காரணங்கள் எனலாம். எப்படி எனக் காண்போம். கூம்பு வடிவத்தின் திறந்த வாய்ப் பகுதியில் விரைந்து வந்து வீசும் காற்று நெட்டிப்பந்தை அதன் போக்கிலிருந்து திரும்பச் செய்கிறது; அத்துடன் சற்று எடை கூடுதலான நெட்டிப் பகுதியின் உந்து விசையும் (momentum) பந்தின் விரைந்த சுழற்சிக்கு உறுதுணையாக அமைகிறது. இதன் விளைவாக தொடர்ந்து காற்றினிடையே பந்து சுழன்று சுழன்று செல்ல முடிகிறது. ஒவ்வொரு முறையும் மட்டையினால் அடித்து பந்தை வீசும் போதும் மேற்கூறிய முறையில் பந்து காற்றில் சுழன்ற வண்ணம் பறக்கிறது.

Dr R Vijayaraghavan முனைவர் இரா விஜயராகவன்

BTech MIE MA MEd PhD பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

2193 V Cross K Block 2193 5ஆவது கிராஸ் கே பிளாக்

Kuvempu Nagar, Mysore 570023, India குவெம்பு நகர், மைசூர் 570023, இந்தியா

Email ragha2193van@yahoo.com தொ.பேசி: 91-0821-561863

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர