அறிவியல் கதை – நாலாவது குழந்தை (மூலம் : நான்ஸி க்ரெஸ்)

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

தமிழில் : ராமன் ராஜா


அன்று மாலை ரவி வீடு திரும்பியபோது அவன் மனைவி சோபாவில் படுத்து விசித்து விசித்து அழுதுகொண்டிருந்தாள்.

‘சுதா ! என்னம்மா ஆச்சு ? ‘

அவள் புலிப் பாய்ச்சலாக எழுந்து அருகில் வந்தாள் : ‘என்ன,… ஆச்சா ? இன்னும் என்ன ஆகவேண்டும் ? அந்தப் பெண்ணுக்கு இத்தனை இடம் கொடுக்காதே என்று நான் தலை தலையாக அடித்துக் கொண்டேன். என்றைக்காவது நீ காது கொடுத்துக் கேட்டாயா கணவனே ? ‘

‘என்ன விஷயம், சொல்லிவிட்டு அழேன். இன்றைக்கு அமி என்ன செய்தாள் ? ‘

‘போலீஸ்…போலீஸ் வந்திருந்தது…. இப்போ….இப்போதுதான் கிளம்பிப் போகிறார்கள் ‘ என்று விசும்பினாள்.

போலீஸா !…

தன் கலவரத்தை மறைத்துக் கொண்டு மனைவியைத் தேற்ற முற்பட்டான் ரவி. குழந்தை மாதிரி அவளை அணைத்து நடத்திப் போய் உட்கார வைத்தான். தலையைக் கோதி விட்டான். ‘கவலைப் படாதே கண்ணம்மா. முதலிலிருந்து என்னிடம் சொல்லு. என்ன நடந்தது ? ‘

‘நான்…வந்து….அமி…. ‘

‘போலீஸ். அவர்கள் எதற்கு வந்தார்கள் நம்ம வீட்டுக்கு ? ‘

‘ரெளடித்தனம்… உங்க பெண்ணும் அவளுடைய சினேகிதர்களும்தான். அந்த எதிர்வீட்டுத் தடியன், சதா கெக்கேபிக்கே என்று சிரிப்பாளே அந்தக் கறுப்புப் பெண், எல்லாருமாகச் சேர்ந்துகொண்டு….சே ! ‘

‘என்னதான் செய்தார்கள் எல்லாரும் ?.. கமான் சுதா, என்னிடம் சொன்னால்தான் உனக்குக் கொஞ்சமாவது ஆறுதலாக இருக்கும். ‘

‘மேம்பாலத்தின் மீது நின்றுகொண்டு போகிற வருகிற கார்கள் மேலெல்லாம் கல்லை வீசி எறிந்திருக்கிறாள். பாறாங்கல் ! ‘

ரவி யோசித்தான். விஷயம் இதைவிடத் தீவிரமாகப் போயிருந்திருக்கலாம். ஆனால் ஒன்று புரியவில்லை. ‘சுதா – போலீஸ்காரர்கள் ஏன் திரும்பிப் போனார்கள் ? அமியை அரெஸ்ட் செய்யப் போகிறார்களாமா ? ‘

‘இல்லை… ‘ (விசும்பல்). ‘இவள்தான் என்று நிச்சயமாய்த் தெரியவில்லையாம்… சந்தேகத்தின் பேரில் வந்து விசாரித்துவிட்டுப் போகிறார்கள்…. ஐயோ ! தாங்கமுடியவில்லையே ! ‘

‘சரி சரி. முதலில் அழுகையை நிறுத்து. அவள் வரட்டும். விசாரிப்போம். ‘

‘என்ன பாவம் செய்தோம் ? நமக்கு என்று இப்படி வந்து பிறந்திருக்கிறதே ! ‘ மாலை மாலையாய்க் கண்ணீர்.

ரவி ஒரு பெருமூச்சுடன் சுவரில் மாட்டியிருந்த போட்டோக்களைப் பார்த்தான். ஆறு மாதக் குழந்தையாக அமி. ரோஜா நிற விரிப்பில் தாமரைப்பூ மாதிரி தூங்கும் அமி. இரண்டு வயதில் கரடி பொம்மையைக் கட்டிக்கொண்டு சிரிக்கும் அமி. தெருவில் எதிர்ப்படுபவர்களெல்லாம் நின்று குழந்தையின் கன்னத்தைக் கிள்ளிவிட்டுப் போவார்கள் – அழகுப் பாப்பா ! ஏழு வயதில் பள்ளிக்கூட நாட்டிய உடையில் இடுப்பில் கை வைத்துக் கொண்டு போஸ் கொடுக்கும் அமி. பன்னிரண்டு வயதில் குதிரை மேல் உட்கார்ந்துகொண்டு. பதினாலு வயதில் புது டிரஸ் அணிந்துகொண்டு – அரிதான புன்னகையுடன் அமி.

கதவு படாரென்று திறந்தது. புயல் மாதிரி நுழைந்தாள் அமி. பதினாலு வயதுப் பெண். வேண்டுமென்றே கிழித்த உடைகள். புருவத்திலும் உதட்டிலும் துளைத்துக் கம்பி வளையங்கள். ஊதா நிற லிப்ஸ்டிக் தீற்றல்.

அவள் பேச ஆரம்பிப்பதற்குள் முந்திக்கொண்டு தாக்குதலை ஆரம்பித்தாள் தாயார்க்காரி. ‘வந்து சேர்ந்தாயாடி, கழுதை ! ஐந்து நிமிஷம் முன்னால் வந்திருந்தாயானால் விலங்கு மாட்டி இழுத்துக் கொண்டு போயிருப்பார்கள் – போலீஸ்காரர்கள் அந்தண்டை போகிறார்கள், நீ உள்ளே வருகிறாய். என்ன செய்து தொலைத்தாய் – மறைக்காமல் சொல்லு. உனக்கு இதுதான் கடைசி சான்ஸ், புரிகிறதா ? போனால் போகிறது, போனால் போகிறது என்று எத்தனை நாள்தான் பொறுப்பது ?… ‘

கொஞ்சம் மூச்சு விட்டுக்கொண்டு, ‘எல்லாப் பரீட்சையிலும் முட்டை முட்டையாக வாங்கிக் கொண்டு வந்து நின்றாய், நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. எப்போதும் உம்மணா மூஞ்சிபோல மூலையில் உட்கார்ந்திருந்தாய். ஒரு வார்த்தை கேட்டோமா ? கடைக்குப் போனால் நைசாக சாமான்களைத் திருடுவது – யார் சொல்லித் தந்த பழக்கம் அதெல்லாம் ? ஆனால் இப்போது நீ செய்துவிட்டு வந்திருக்கிற காரியம் இருக்கிறதே, இது எல்லை மீறிப் போய்விட்டது. காரின் மேல் கல்லை வீசி எறிந்து யார் மண்டையாவது உடைந்து தொலைத்தால் ? கொலைப் பழி வந்து சேருமடி, பேயே ! ‘

அமி கோபமாகக் குறுக்கிட்டாள் : ‘நான் ஒன்றும் கல்லை எறியவில்லை ! ‘

‘பொய் ! போலீஸ்காரர்கள் வந்து – ‘

‘இரு, சுதா… போலீஸ்காரர்கள் உன் மேல் சந்தேகம் இருக்கிறது என்றார்கள் அமி ‘.

‘நான் ஒன்றும் செய்யவில்லை. நிஷாவும் இஷாவும்தான் கல் எறிந்தார்கள். நான் சும்மா நின்றுகொண்டிருந்தேன் ‘.

‘மறுபடி பொய் ! என்ன நெஞ்சழுத்தம் ! ‘

‘நீ நம்பினால் நம்பு, நம்பாவிட்டால் போடி, தே….! ‘

சுதா திகைத்துப் போய் நிற்கும் போதே அமி தன் அறைக்குள் பாய்ந்து சென்று கதவைப் படாரென்று சாத்திக் கொண்டாள்.

‘கேட்டாயா ரவி ? பெற்ற அம்மாவைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டுப் போகிறாள் கேட்டாயா ? ‘ சுதா அவன் கைகளில் துவண்டாள். அவள் உடம்பு நடுங்கிய நடுக்கத்தை அமைதிப் படுத்த இறுக்கமாக அணைத்துக் கொள்ளவேண்டியிருந்தது. ஆனால் ரவியும் ஆடித்தான் போயிருந்தான்.

இதை இப்படியே விட்டு வைக்க முடியாது. ஏதாவது செய்தாகவேண்டும். சிடுமூஞ்சித்தனம், மரியாதையே இல்லாமல் தூக்கி எறிந்து பேசுவது, அடிதடி சண்டை – இப்போது போலீஸ் ! இந்தப் பதினாலு வயசுப் பெண்ணால் நம் வாழ்க்கையே நாசமாகிக் கொண்டிருக்கிறது.

‘ரவி… ‘ என்று கேவினாள் சுதா. ‘ஞாபகமிருக்கிறதா, முன்னே எல்லாம் எப்படி இருப்பாள் குழந்தை ? அவள் பிறந்தபோது இரண்டு பேரும் எவ்வளவு சந்தோஷப் பட்டோம் ! குட்டிப் பாப்பாவாக நம் மடியில் ஏறி உட்கார்ந்து கொள்வாளே…சின்னக் கையால் கழுத்தைக் கட்டிக் கொள்வாளே….எனக்கு அந்தப் பாப்பா மறுபடி வேண்டும் ரவி. ‘

‘உன் ஆசை புரிகிறது சுதா. ‘

‘உண்மையைச் சொல். உனக்கு மட்டும் ஆசையாக இல்லையா ? ‘

அவனுக்கும் ஆசையாகத்தான் இருந்தது. அந்த இனிய குழந்தை மறுபடி வேண்டும். ‘என்னுடைய அப்பாதான் உலகத்திலேயே பெஸ்ட் அப்பா ‘ என்று சொன்ன அந்தக் குழந்தை. கையில் ஏந்திக் கொண்டால் கனமே தெரியாமல் சின்ன பஞ்சு பொம்மை மாதிரி இருப்பாள். அவள் கழுத்தின் பின்புறம் ஒரு அருமையான குழந்தை வாசனை வரும். இன்றைக்கு எங்கே அந்தக் குழந்தை ?

சுதா நிறுத்தி நிதானமாகச் சொன்னாள் : ‘அவளுக்குப் பதினாலு வயசு முடிந்துவிட்டது. சட்டப் பிரச்னை எதுவும் இனி இல்லை. ‘ இதைச் சொல்லி முடித்ததுமே அவள் அழுகை நின்றுவிட்டது. மரம் மாதிரி உறுதியாக நின்று நேராக அவன் கண்ணில் பார்த்தாள். ‘அவள் ஒன்றும் சாகப் போவதில்லை. யாராவது தத்து எடுத்துக் கொள்வார்கள். அல்லது அநாதை விடுதி ஏதாவது கிடைக்காமலா போய்விடும் ? எப்படியும் அவளை மாதிரி நிறையப் பேர் தெருவில் அலைகிறார்கள். நம் வீட்டில் இருந்தபோது எப்படி ராணி மாதிரி வைத்துக் கொண்டிருந்தோம் என்று அப்போதுதான் புத்தி வரும் அவளுக்கு. ‘

ரவி பெருமூச்சுடன் ‘த்சு. புத்தி வந்ததா இல்லையா என்று நமக்கு எங்கே தெரியப் போகிறது ? ‘.

‘வேண்டாம். தெரிய வேண்டாம். எதற்காகத் தெரிய வேண்டும் ? அவளுக்குத்தான் நம்மைக் கண்டாலே ஆகவில்லையே ! எனக்கு மட்டும் என்ன பாசம் பொங்கி வழியவேண்டும் ? ‘

சுதா மறுபடி அவன்மீது சாய்ந்து கொண்டாள். ‘பிரச்னை அவள் இல்லை ரவி. எனக்கு என்னுடைய சின்னக் குழந்தை மறுபடி வேண்டும். நான் இழந்துவிட்ட அந்தக் குழந்தையை மறுபடி மார்போடு அணைத்துக் கொள்ளவேண்டும். அந்தத் தளிர்க் கன்னத்தில் மறுபடி முத்தமிடவேண்டும். அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயார்…. நெஞ்சைத் தொட்டுச் சொல்லு ரவி. உனக்கு அந்தக் குழந்தை வேண்டாம் ? ‘

ரவி ஒரு நிமிடம் யோசித்தான். தற்போதைய சூழ்நிலையில் அடியோட்டமாக சுதாவுக்கு ஒரு அநீதி இருக்கிறது; ஒரு குரூரம் இருக்கிறது. சுதாவுக்கு எப்போதுமே பூஞ்சை மனது. முணுக்கென்றால் அழுது விடுவாள். இந்தப் பிரச்னையில் அவள் உடம்பும் மனதும் பாதிக்கப் பட்டிருக்கிறாள். அவளுக்கும் உரிமைகள் இல்லையா என்ன ? அவர்கள் நடுவே முளைத்துவிட்ட இந்தக் குழந்தை என்ற காளான் இப்படி அசுரத்தனமாக வளர்ந்து பயமுறுத்துவதை இனியும் அனுமதிக்க முடியாது. நமக்கும் வயசாகிக் கொண்டிருக்கிறது.

அவன் முடிவு செய்துவிட்டான். மெதுவாக அவள் காதருகே சொன்னான் : ‘இன்னும் மூன்று கரு முட்டைகள் பாக்கி ‘.

மொத்தம் ஆறு இருந்தன. மூன்று கருக்கள் மீதி. மகப் பேறு ஆஸ்பத்திரியின் ஐஸ் பெட்டிக்குள் பாதுகாப்பாக உறங்கிக் கொண்டிருக்கும் மூன்று உயிர்கள். முதல் தடவை கருத் தரிக்கும்போதே பாதுகாப்புக்காகவும் எதிர்காலத் தேவைக்குமாக ஐந்தாறு கறுவுற்ற செல்களை சேமித்து வைப்பது வழக்கம்தான். எப்போது வேண்டுமானாலும் உயிர்ப்பித்துக் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். அச்சாக அமி மாதிரியே இன்னும் மூன்று குழந்தைகள் இருக்கின்றன.

‘இன்றைக்கு ராத்திரி அவளை வெளியே துரத்தி விடலாம். நாளைக் காலை ஆஸ்பத்திரிக்குப் போவோம். தயாராக இரு. ‘ என்றான் ரவி.

(ஆகஸ்டு 2000 Asimov ‘s இதழில் வெளிவந்த ‘To Cuddle Amy ‘ கதையின் தமிழாக்கம்)

r_for_raja@rediffmail.com

நான்ஸி க்ரெஸ்ஸின் அறிவியல் கதைகள் :

ஜீன் திருடனின் விநோத வழக்கு

Series Navigation

பாலி யூர்க்ரா (தமிழில் : ராமன் ராஜா)

பாலி யூர்க்ரா (தமிழில் : ராமன் ராஜா)