அ.கி.வரதராசன்
சமீபத்தில் அற்புதமான கம்பனின் பாடல் ஒன்று படித்தேன். எழுதி முடித்த உடனேயே, இந்த வாக்கியம் பிழை என்று தோன்றுகிறது. கம்பன் பாடல் ஒன்று படித்தேன் என்று சொன்னாலே போதும் அல்லவா?
பாடலின் இறுதி வரிகள் இரண்டும் வருமாறு:
அரியொடும் வாழ்ந்த பேடை, அங்கணத்து அழுக்குத் தின்னும்
நரியொடும் வாழ்வதுண்டோ? – நாயினும் கடைப் பட்டோனே!
இந்த வரிகளைச் சொல்பவள் சீதை. ஆண் சிங்கம் ஒன்றுடன் கூடி வாழும் பெண்சிங்கம், நரியுடன் வாழ ஒப்புமோ? அதுவும் எப்படிப்பட்ட நரி. முற்றத்தின் (அங்கணத்தின்) அழுக்குகளைத் தின்று வாழும் நரி அது.
போற்றியது இராமனை – அரி என்று.
தூற்றியது இராவணனை – நரி என்று.
இதுவோ சிங்கம் ; அது அசிங்கம்.
என்னவொரு கோபம் இவளுக்கு! என்னவொரு ஆவேசம்! என்னவொரு சீற்றம்! என்னவொரு நெஞ்சுரம் இவளுக்கு ! தன்னம்பிக்கைச் சிகரத்தின் மீது, அதன் உச்சியின் மீது நின்று கொண்டு பேசுகிறாள் சீதை. சிறையிருந்த செல்வியின் சீற்றம் பல இடங்களில் கம்பனால் வெளிப் படுத்தப்படுகிறது என்றாலும், இந்தக் குறிப்பிட்ட வரிகள் மிக முக்கியமானவை. மேலும், சொல்லப்படும் சூழ்நிலை கருதி அந்த வரிகளின் கனம் இன்னும் கூடுகிறது.
இவ்வளவு சீற்றம் மிகுந்த வரிகளைச் சொல்லுபவள் அயோத்தி நகரத்துச் சீதை அல்லள். அசோக வனத்துச் சீதை.
அரண்மனை வாசி அல்லள் ; அரக்கனின் சிறைவாசி.
அயோத்தி நகரத்துச் சீதை எப்படி இருப்பாள் ? அரண்மனை வாசத்தில், இராமனின் முழுப் பொறுப்பில், இராமனின் முழுப் பாதுகாப்பில் இருப்பவள் அவள். அரண்மனைப் பணிப்பெண்கள், வேலையாட்கள் சூழ செளக்கியமாக வாழும் சீதை அவள். சுண்டுவிரல் அசைவித்தால் போதும், கொண்டுவந்து கொட்டுவார்கள் கேட்டவை எல்லாம் என்ற சுகபோகவாசி.
அசோகவனத்துச் சீதை ? அவள் இருக்கும் இடத்தின் பெயரே அவள் தன்மையை விளக்கி விடுகிறது. சோக வனத்துச் சீதை அவள். “ சோகத்தாள் ஆய நங்கை” அவள். அரக்கனால் பலவந்தமாக, ஏமாற்றப் பட்டுக் கடத்திக் கொண்டுவரப் பட்டவள். புலிக் கூட்டத்தின் நடுவே அகப்படுக்கொண்ட புள்ளிமான். மனிதர்களைக் கொன்று தின்னும் “வாள் எயிற்று அரக்கியர்கள்” புடை சூழச் சிறை வைக்கப்பட்டவள். “கல் மருங்கு எழுந்து என்றும் ஒர் துளி வரக் காணா நல் மருந்து போல் நலன் அற உணங்கிய நங்கை ” இவள். கணவனின் பாதுகாப்பு என்ற கவசம் அற்றவள். கற்பெனும் கவசம் திண்மையாகப் பெற்றவள்.
ஆக சந்தர்ப்பம் , சூழ்நிலை எல்லாம் இவளுக்குச் சற்றும் சாதகமாக இல்லாமல் , முற்றும் எதிரானதாக இருந்தாலும், தன்னம்பிக்கைச் சிகரத்தின் மீது நின்று கொண்டு பேசுகிறாள் இந்தச் சீதை.
அரியொடும் வாழ்ந்த பேடை, அங்கணத்து அழுக்குத் தின்னும்
நரியொடும் வாழ்வதுண்டோ? – நாயினும் கடைப் பட்டோனே!
என்ற வரிகள் இராவணனை நோக்கிச் சொல்லப் பட்டவை அல்ல. அதுவே இந்த வரிகளின் முக்கியத்துவத்தைக் கூட்டிவிடுகிறது. இவை போன்ற சீற்றம் மிகுந்த வார்த்தைகள் பலவற்றை, இராவணனை நோக்கி, அவனிடமே நேரிடையாக, அவனுக்கு அறிவு புகட்டும் விதத்தில், அவனை நல்வழிப் படுத்தும் நோக்கில், அவனைத் திருத்தும் முகமாக இவள் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறாள்.
இந்தச் சந்தர்ப்பத்திலும் இராவணுக்கு, இராவணனை நோக்கி, அவனுக்கு உபதேச மொழி என்ற விதத்தில் இவ் வரிகள் சொல்லப் பட்டிருக்குமாயின், அவை பத்தோடு பதினொன்று , அத்தோடு இதுவொன்று என்ற கணக்கில், உப்புச் சப்பற்றுப் போயிருக்கும் .
“நாயினும் கடைப் பட்டோனே!” என்று விளிக்கப்படுபவன் சனகன். தன் தந்தை சனகனைப் பார்த்து இவ்வளவு சீற்றமான வார்த்தைகளைக் கொட்டுகிறாள். தேளின் கொடுக்காக இவள் நா மாறிவிட்டது. கொட்டுகின்றாள்.
இவ்வார்த்தைகள் பேசப் படுவதற்கான பின்னணி என்ன என்று பார்ப்போம்.
கும்பகருணனைப் போருக்கு அனுப்பி இருக்கிறான் இராவணன். அப் போரின் முடிவு இன்னமும் தெரியவில்லை. அந்த நிலையில் சீதையை எவ்விதம் இணங்கச் செய்வது என்பது பற்றி மகோதரனுடன் ஆலோசிக்கிறான் இராவணன். அவனிடம் இதற்கு ஓர் உபாயம் சொல்லும்படி இரந்து பணிந்து கேட்கின்றான் :
மாதிரம் கடந்த தோளான், மந்திர இருக்கை வந்த
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி,
“சீதையை எய்தி, உள்ளம் சிறுமையின் தீரும் செய்கை
யாது ? எனக்கு உணர்த்தி ! இன்று , என்னுயிர் ஈதி” என்றான்
“மாதிரம்” என்றால் திசை. திசைகளக் கடந்த தோள் வலி உடையவன். வடகிழக்கில் வெற்றி, தென் மேற்கில் தோல்வி என்றெல்லாம் இல்லாமல், அனைத்துத் திசைகளிலும் வெற்றியே பெற்றவன். எட்டுத் திக்கு யானைகளுடன் போரிட்டு, வென்று, அவற்றின் தந்தங்கள் மார்பில் குத்தி, முதுகில் வெளிப்பட்ட போர் வீரன். முதுகில் புண்பட்டவன். புறமுதுகு காட்டி அல்ல, மறப்போரில் அவ்விதம் புண்பட்டவன். அப்பேற்பட்ட பலமான வலுவான தோள்களை உடையவன்.” எனவே “மாதிரம் கடந்த தோளான்”.
“உள்ளம் சிறுமை”
இவனால் சீதையை பலவந்தமாக, ஏமாற்றித் தூக்கி வர முடிந்ததே தவிர, அவளை இணங்கச் செய்ய முடியவில்லை. மாற்றான் மனைவியைக் கவர்ந்து வந்து விட்டான் என்ற அவப்பெயர் மட்டும் மிஞ்சிற்றே தவிர, அவளை அடைய முடியவில்லை. ஆக பாதிக் கிணறு தாண்டிய கதையாக, திரி சங்கு சொர்க்கமாகவே இவன் நிலை இருக்கின்றது. அதனால் உள்ளம் சிறுமை அடைகின்றது.
“சனகனைச் சிறைப் பிடித்து, அவனைச் சிறைக்கைதியாக இழுத்து வந்து சீதையின் முன் நிறுத்துவது ; சனகனை விடுவிப்பதற்குச், சீதையின் ஒப்புதலை விலையாகக் கேட்பது, மேலும் சனகனை விட்டுச் சீதையிடம் இராவணனை ஏற்றுக் கொள்ளும் படி சொல்லச் சொல்வது” என்ற யோசனையை மகோதரன் சொல்லுகிறான். தந்தை சொன்னால் அவள் ஏற்றுக் கொள்வாள் என்பது மகோதரனின் கணிப்பு. மிதிலைச் சனகனை அன்று. அவனை இவர்களால் பிடித்து வர முடியாது. அவன் மாயாச் சனகன். இவன் மாயா சனகன். எனவே மருத்தன் என்னும் அரக்கனை சனகன் ( மாயா சனகன் ) போல் உருப்பெறச் செய்வது மகோதரனின் திட்டம். இது நல்ல யோசனை என்று மகோதரனைப் பாராட்டுகிறான் இராவணன். தக்கதொரு சமயத்தில் அசோக வனத்திற்கு, சனகனுடன் மகோதரனை வரச் சொல்லிவிட்டு, சீதையைப் பார்க்க இராவணன் அசோக வனத்திற்குப் போகின்றான்.
அதன்படி மாயா சனகனை உருப்பெறச் செய்கிறான் மகோதரன். வேண்டிய உருவங்கொள்ளும் சக்திபெற்ற அரக்கன் மருத்தனால் மிக எளிதில் சனகனாக மாறி விட முடிகிறது. இராவணன் சொன்ன அந்த தக்க சமயத்துக்குக் காத்திருந்து அசோக வனத்தில் மகோதரன் ஒளிந்து கொண்டிருக்கிறான்.
அசோக வனம் சென்ற இராவணன் சீதையிடம் தன்னை ஏற்றுக் கொள்ளும் படி வேண்டுகிறான். வழக்கமான பிதற்றல், உளறல் தான் இதுவும். ஒரு வித்தியாசம் சீதையை மிகவும் மரியாதையோடு வேண்டுகிறான். மிக்க பணிவு காட்டுகின்றான். தன்னை இகழ்ந்து அவளைப் புகழ்ந்து பேசுகிறான். அவளைப் பன்மையிலேயே விளிக்கின்றான்.
சீதை தன்னை என்ன பாடு படுத்தி வைத்திருக்கிறாள் என்று சொல்கிறான். தன்னிடம் என்னவெல்லாம் மாற்றத்தை அவள் விளைவித்து விட்டாள் என்பது பற்றிக் குறிப்பிடுகிறான். இவள் செய்த மாற்றங்கள் இவனிடம் மட்டும் இல்லை. இயற்கையின் நியதிகளைக் கூட (இவன் சம்பந்தப் பட்ட அளவில் ) இவள் மாற்றி விட்டாள் என்கிறான். இவற்றிற்கெல்லாம் ஒரு பட்டியல் தருகின்றான். பட்டியல் முடிவில்லாததாக இருக்கிறது. எனவே இறுதியில் என்னை இன்னும் என்ன வெல்லாம் செய்து தீர்க்கப் போகிறீர்களோ ? நான் அறியேன் “ என்கிறான். இவளை வழக்கம் போல அச்சுறுத்தாமல், ஆச்சரியத்தைத் தெரிவிக்கும் தொனியில் பேசுகின்றான்.
தோற்பித்தீர் ; மதிக்கு மேனி சுடுவித்தீர் ; தென்றல் தூற்ற
வேர்ப்பித்தீர் ; வயிரத் தோளை மெலிவித்தீர் ;வேனில் வேளை
ஆர்ப்பித்தீர் ;என்னை இன்னல் அறிவித்தீர் ; அமரர் அச்சம்
தீர்ப்பித்தீர் ; இன்னம் என் என் செய்வித்துத் தீர்திர் அம்மா!
“என்னைப் பல வழியிலும் துன்பப் படுத்துகின்றீர். என்னைப் படாத பாடு படுத்துகின்றீர். என்னவெல்லாம் நீர் செய்துவிட்டீர் !” என்று சொல்லி ஒரு நீண்ட பட்டியல் தருகின்றான், தனக்குச் சீதை செய்து விட்டவைகளுக்கு.
”தோற்பித்தீர்”:
அவள் இவனைத் தோற்கடித்துவிட்டாள். இராவணன் இதுவரை யாரிடமும் தோற்றதில்லை. எங்கும் எதிலும் அவனுக்கு வெற்றியே. ஆனாலும் இவளால் தோற்கடிக்கப் பட்டான்.
“மதிக்கு மேனி சுடுவித்தீர்”:
சந்திரன் இயற்கையில் எல்லாருக்கும் எப்பொழுதும் குளிர்ச்சியைத் தருவான்; “சந்திரன் குளுமை. சூரியன் வெம்மை” . இது தான் இயற்கையின் நியதி. எப்பொழுதும் குளிர்ச்சியைத் தருகின்ற சந்திரனைச் சூடு தரும்படிப் பண்ணிவிட்டாள் இந்தச் சீதை. (சூர்ப்பணகை வந்து சீதையப் பற்றி , அவள் அழகைப் பற்றி இவனிடம் வர்ணித்துச் சென்ற பிறகு –இவனைக் காமத் தீ பிடிகின்றது. அவள் மேலுள்ள ஆசையினால் உள்ளமும் உடலும் கொதிக்கின்றான். வேட்கை மிகமிக , வெம்மையும் மிகுகின்றது. இவ்விதம் வெப்பத்தால் பீடிக்கப் பட்ட இவன் சந்திரனை அழைத்து வருமாறு தன் பணியாட்களுக்கு ஏவுகின்றான் ; சந்திரன் வந்து தன் வெம்மையைப் போக்குவான் என்று இராவணன் நம்புகின்றான். ஆனாலும் ,அவ்விதம் அழைத்து வரப் பட சந்திரனால் கூட இவன் வெப்பத்தைத் தணிக்க இயலவில்லை. மதியினுடைய மேனி சுடுகின்றது. அதனால் கோபம் கொண்டு இராவணன் சந்திரனைச் சாடுகின்றான் எனவே “ மதிக்கு மேனி சுடுவித்தீர்” .
என் சிறு வயதில் எனக்குக் காய்ச்சல், ஜுரம் ஜலதோஷம் வரும். அப்போதெல்லாம், என் தாயாரிடம் என் பாட்டி சொல்வாள் : “ சுக்குக் கஷாயம் வைத்துக் கொடு, குழந்தைக்கு. அந்தக் கஷாயத்திற்கு இந்தக் காய்ச்சல் கண்டிப்பாகக் கேட்கும் என்று. அதாவது கஷாயத்திற்கு இந்தக் காய்ச்சல் மட்டுப்படும் என்பது பொருள். அது போல , மதிக்கு இவனுடைய காமத் தீ மட்டுப் பட்டிருக்கக வேண்டும் . இவனுடைய தேகச் சூடு மதியினால் குளிர்ச்சிப் படுத்தப் பட்டிருக்க வேண்டும் . ஆனால் அவ்விதம் சூடு குறையவில்லை. மாறாக அதிகரிக்கிறது. ஆக , மதிக்கு (கேட்காமல்) , இவனுடைய மேனி மேலும் சூடாகிக் கொண்டுதானிருக்கிறது. எனவே , மதிக்கு மேனி சுடுவித்தீர். மேனி என்பது, சந்திரனுடைய மேனி, இராவணின் மேனி என்று இருவகையிலும் பொருள் கொள்ளலாம்.
“தென்றல் தூற்ற வேர்ப்பித்தீர்”
மாலை நேரத்துத் தென்றல், அனுபவிக்க சுகமாக இருக்கும். அதுவும் இளந்தென்றல். அந்தத் தென்றலும் அடித்து வேகமாக வீசவில்லை. நீர்த்திவலைகளையும் சேர்த்து கொண்டு, ஈரப் பதத்தோடு லேசாகத் தூற்றுகிறது. குற்றாலத்தில் இதை நன்கு அனுபவிக்கலாம். சாரல் என்று சொல்லுவோம் .
“ தென்றல் தூற்ற “என்பது கம்பனின் அற்புதமான வார்த்தைப் பிரயோகம் !
அப்படித் தென்றல் தூற்றினாலும் கூட , இவனுக்கு உடல் வேர்கின்றது. அதுவும் சூடாகவே இருக்கின்றது. சுகமாக இல்லை. அந்த மாற்றத்தையும் இவனிடம் விளைவித்தவள் இவள். இதுவும் இயற்கையின் வழக்கமான விளைவுக்கு முரண்.
“வேனில் வேளை ஆர்ப்பிதீர்” :
வேள் என்பது மதன வேள், மன்மத வேள். வேனில் அவனுடைத் துணைவி. மன்மதன் தன் தேவியுடன், இவனச் சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்கிறான். ஆர்ப்பரிக்கின்றான். அவனை என் மீது ஏவிவிட்டீர்கள் என்கிறான். ஆக மன்மதனாலும் துன்பமுறும்படி செய்துவிடாளாம் , சீதை.
“ என்னை இன்னல் அறிவித்தீர்”
துன்பம் என்பது இவன் அறியாத ஒன்று. எவராலும் இவன் துன்பப் படுத்தப்படவில்லை. அது யாராலும் செய்ய முடியாத செயலும் கூட. இவன் தான் மற்வர்களுக்கு இன்னல் செய்வது வழக்கம். ( “ இன்னல் செய் இராவணன் இழைத்த தீமை போல் , துன்ன அரும் கொடுமனக் கூனி தோன்றினாள் “ என்பான் கம்பன், அயோத்தியா காண்டத்தில் ). ஆக இன்னல் என்பதை இது நாள் வரையில் அறியாமல் இருந்த இவனை , இன்னல் என்பது எப்படி இருக்கும் என அறியச் செய்து விட்டாள், சீதை.
“அமரர் அச்சம் தீர்ப்பித்தீர்”: அவனைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த தேவர்களுக்கெல்லாம் சீதை இலங்கைக்கு வந்துவிட்ட பிறகு, குளிர் விட்டுப் போச்சாம் . இவன் சீதையிடம் இந்தப் பாடுபடுவதை அறிந்தவர்களாகி விட்டபடியால் , அவர்கள் யாரும் இப்போதெல்லாம் இவனக் கண்டு அஞ்சுவதில்லையாம். சீதை வந்த பிறகு, அமரர்களுக்கெல்லாம் இவன் கிள்ளுக் கீரையாகி விட்டானாம்.
அவர்களுடைய அச்சத்தைப் போக்கியவளும் இவள் தான்.
சீதை இவனிடம் ஏற்படுத்திய மாற்றங்களில் இது தான் இவனை மிகவும் பாதித்திருக்க வேண்டும். மற்ற மாற்றங்கள் எல்லாம் இவனளவில் மட்டுமே நிகழ்ந்திருக்கின்றன. இவன் சொன்னால் அன்றி அவை மற்றவர்களுக்குத் தெரியப் போவதில்லை. ஆனால் , இம்மாற்றம் அவள் மற்றவர்களிடமே நேரிடையாக ஏற்படுத்தி விட்டாள்.
“ இன்னும் வேறு என்னவெல்லாம் செய்து தீர்க்கப் போகின்றீர்? “ என்று வினவுகின்றான் இராவணன்.
மேலும் சொல்கிறான்.
வஞ்சனேன் எனக்கு நானே , மாதரார் வடிவு கொண்ட
நஞ்சுதோய் அமுதம் உண்பான் நச்சினேன் ; நாளும் தோய்ந்த,
நெஞ்சு நேரானது. உம்மை நினைப்பு விட்டு, ஆவி நீக்க
அஞ்சினேன் ; அடியனேன் நும் அடைக்கலம், அமுதின் வந்தீர்.
“என்னை நானே கெடுத்துக் கொண்டேன், பல மாதர்களை விரும்புவது தீது என்று தெரிந்தும், அத்தீமையை நான் செய்து வந்தேன். அதனால் எனக்கு நானே வஞ்சகம் செய்து கொண்டேன்” என்கிறான். அறியாமல் தீங்கு செய்தால் அதை அறியாமை என்று விட்டுவிடலாம். ஆனால் இவன் அறிந்தே செய்தலால், தனக்குத் தானே வஞ்சனை செய்து கொண்டேன் என்கிறான் “அமுதம் என்று தவறாக எண்ணி , நஞ்சினை உண்ண ஆசைப்பட்டேன். உண்டேன். அதில் நாள் தோறும் தோய்ந்தேன். அமுதம் போலத் தோற்றமளித்தாலும், உண்மையில் அவை நஞ்சு தான். அமுதம் ஒரு மேல் பூச்சே. அது ஒரு போலியான தோற்றமே. அவ்விதம் அதில் நாள் தோறும் ஈடுபட்டு வந்தேன் நான். ஆனால் , என் நெஞ்சு இப்பொழுது நேராகி விட்டது . சரியான பாதைக்கு, நேரான பாதைக்கு வந்து விட்டேன். நான் திருந்தி விட்டேன். நெஞ்சு நேராகி விட்ட போதிலும் , என்னை இப்பொழுது ஏற்றுக் கொள்ள நீர் மறுக்கின்றீர். உம்மை மறக்கவும் என்னால் இயலவில்லை. உம் நினைவு என்னிடமிருந்து போவதற்கு ஒரே ஒரு வழி தான் உண்டு –அது என்னுடைய ஆவி போவதுதான். அப்பபடி ஆவியைப் போக்கிக் கொள்ளும் துணிவும் என்னிடம் இல்லை. ஆக இவ்விதம் பலவழியிலும் துன்பப் படுகின்றேன் ஒரே ஒரு தீர்வுதான் தோன்றுகிறது. எனத்குத் தெரிந்தது இது ஒன்று தான் . நான் உம்முடைய அடைக்கலம். எனக்கு அடைக்கலம் தந்து, அபயம் அளித்துக் காக்க வேண்டும். “ என்றெல்லாம் பொருள் கொள்ளத் தக்க வகையில் பேசுகிறான். இவனுடைய படைக்கலம் எல்லாம் பலனளிக்காமல், தோற்றுப் போனதால் , அடைக்கலம் என்று சரணடைகின்றான்.
இராம காதையில் பல சரணாகதி நிகழ்கின்றன. சுக்கிரீவன் சரணடைகின்றான். விபீஷணனும் அப்படியே. ஏன் உயிர் போகும் முன் கும்பகருணனும் இராமனிடம் சரணடைகின்றான். ஆனாலும் அனைத்துப் பாத்திரங்களும் சரணடைவது இராமனிடம் தான். கம்பனுக்கு இது பொறுக்க வில்லை போலும் ! பெண்ணின் பெருமை பேச அவன் விழைகிறான். அதனால் ஒரு பெண்ணிடம் சரணடைய வைக்கின்றான்- யாரை ? — இலங்கேஸ்வரனை !.
மீண்டும் அற்புதமான வார்த்தைப் பிரயோகம். “அமுதின் வந்தீர்” என்று அழைக்கின்றான் சீதையை. வேறு வார்த்தைகளால் விளிக்காமல். மிக மிகப் பொருத்தம் இவ்வார்த்தைகள், அதுவும் குறிப்பாக இந்த இடத்தில். இவள் அமுதத்திலிருந்து தோன்றியவள். அதனால் இவளே அமுதம். கலப்படமில்லாத , தூய அமுதம் இவள். அசல் வெளி வந்த பிறகு போலி எல்லாம் போய் ஒளிய வேண்டியது தானே ! உண்மையான அமுதமாகிய இவளைக் கண்ட பிறகு அந்தப் போலியான அமுதத்தின் சாயம் வெளிப்பட்டு விட்டது. அவை “ நஞ்சு தோய் அமுதம்” என்பது இவனுக்குத் தெரிந்து விட்டது. எனவே அவற்றை விட்டொழித்தான், நெஞ்சும் நேரானது.
இரந்து, பணிந்து வேண்டியவன் , அவளை மிக மரியாதையாகப் பன்மையில் விளித்தவன், அவளைப் புகழ்ந்து தன்னை இகழ்ந்து பேசியவன், இவற்றிற்கெல்லாம் சீதை ஒன்றும் மறுமொழி சொல்லாமல் இருப்பது கண்டு, வேறு வழி தோன்றாமல் இறுதியில் அவள் கால்களில் வீழ்கிறான். சாஷ்டாங்கமாக அவளை வணங்குகின்றான்.
கூப்புகின்றான் கரம்; தாழ்த்துகின்றான் சிரம்;
மீட்கும் என் நாயகனின் சரம், என ஏறுகின்றதவள் உரம்.
புலியை விரட்டியது பெண்ணின் முறம், அதையும் விஞ்சியது இவள் மறம்.
ஒதுக்குகிறாள் அவனைப் புறம். ஈதவள் கற்பின் திறம். மகளிர்க்கவள் கூறும் அறம்.
அவன் சொல்லியவற்றிற்கும் அவன் செய்கைக்கும் பதில் என்பதாக அவள் பேச ஆரம்பிகின்றாள். பல முறை சொன்னது போல மீண்டும் அவனுக்கு அறிவுரை பகர்கின்றாள். ஒரு புல்லை எடுத்து இருவருக்கும் இடையே போட்டுவிட்டு அந்தப் புல்லிடம் பேசுகின்றாள்.
அவன் சொல்லும் கொடூர வார்த்தைகளைக் கேட்ட பின்னரும் தான் உயிரோடு இருப்பது எதற்காக என்பதைத் தெளிவு படுத்துகின்றாள்.
ஊண் இலா யாக்கை பேணி, உயர் புகழ் சூடாது, உன்முன்
நாண் இலாது இருந்தேன் அல்லேன். நவையறு குணங்கள் என்னும்
பூண் எலாம் பொறுத்த மேனிப் புண்ணிய மூர்த்தி தன்னைக்
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய் .
“ நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கின்றேன் தெரியுமா உனக்கு ? நாணத்தை, என் பொறையை, புகழை நான் இழந்து விடவில்லை. புகழோடும் பொறையோடும் தான் இருக்கின்றேன். உடம்பு மாத்திரம் உணவு இல்லாமல் இளைத்துள்ளேன். (“ ஊண் இலா யாக்கை” ). அந்த யாக்கையை இன்னமும் பேணிக்கொண்டிருக்கின்றேன் ஏன் தெரியுமா ? உயிர் வாழ்வதற்கு உடம்பு என்று ஒன்று வேண்டுமல்லவா? இராமனைக் காணும் ஆசையால்தான் இன்னும் உயிர் தரித்துக் கொண்டிருக்கிறேன் “ என்கிறாள். அவன் எப்பேற்பட்ட இராமன். உடல் முழுவதும் ஆபரணங்களைப் பூண்டுகொண்டிருக்கின்றான் அவன். பொன், வைரம், முத்து, பவழம், புஷ்பராகம், கோமேதகம் போன்ற ஆபரணங்கள் அல்ல அவை. அப்படிப் பட்ட அழியக் கூடிய ஆபரணங்கள் அல்ல இராமன் அணிந்து கொண்டிருப்பவை. குற்றம் சற்றும் இல்லாத நற்குணங்களை ஆபரணமாகத் தன் மேனி முழுவதும் பூண்டவன் அவன். “நவையறு குணங்கள் என்னும் பூண் எலாம் பொறுத்த மேனிப் புண்ணிய மூர்த்தி” அவன்.
அந்த இராமனைக் காண வேண்டும் என்ற ஆசையினால் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். எப்படிப் பட்ட இராமனை இவள் காண விரும்புகின்றாள்? . அதையும் சொல்கிறாள். இவள் காண விரும்பும் இராமன் தசரத இராமனா? அயோத்தி இராமனா? அச்சுத இராமனா? அனந்த ராமனா? சிவ ரரமனா ?சீதா ராமனா ? ரகு ராமனா ? ராஜா ராமனா? ஜானகி ராமனா? வெங்கட் ராமனா? – அவர்களெல்லாம் இல்லை. இவள் காண விரும்புவது ஜெயராமனை. இராவணனை ஜெயித்த ஜெய ராமனைத் தான் இவள் காண விரும்புவதாகச் சொல்கிறாள். “ நீடிய அரக்கர் சேனை
நீறு பட்டு அழிய, வாகை சூடிய வரிசிலை இராமன்: – அவன். “
சென்று சென்று அழியும் ஆவி திரிக்குமால் – செருவில், செம்பொன்
குன்று நின்றனைய தம்பி புறக் கொடை காத்து நிற்ப ,
கொன்று, நின் தலைகள் சிந்தி , அரக்கர்தம் குலத்தை முற்றும்
வென்று நின்றருளும் கோலம் காணிய கிடந்த வேட்கை.
என்னுடைய ஆவி அவ்வப்போது என் உடலை விட்டுப் பிரிந்து போகிறது. இருந்தாலும், அது மீண்டும் மீண்டும் வந்து என்னிடம் சேர்ந்து விடுகின்றது. (“ சென்று சென்று அழியும் ஆவி , திரிக்குமால் ). அவ்விதம் ஏன் மீண்டும் வந்து விடுகின்றது தெரியுமா? .
உயிர் போகாமல் இன்னும் ஏன் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் தெரியுமா? சொல்கிறேன் கேள் . அங்கே போர்க்களத்தில் போர் நடந்து கொண்டிருக்கும் – உனக்கும் இராமனுக்கும் போர். தம்பி இலக்குவன் புறத்தே காவல் காத்துக் கொண்டிருப்பான் . இலக்குவன் நிற்கும் தோரணை எப்படி? “ செம்பொன் குன்று நின்றனைய தம்பி “ பொன்னிறக் குன்று போல ஒளிவீசி, தம்பி இலக்குவன் காவல் செய்து நிற்கிறான். அப் போரில் உன் தலைகள் அனைத்தையும் கொய்து, உன் அரக்கர் குலத்தை முற்றாக என் இராமன் அழிப்பான். அவ்விதம் அழித்து வெற்றி கொண்டவனாக அவன் நிற்கும் கோலத்தைக் – அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் – காணவேண்டும் என்பதற்காகவே உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
இவள் இவ்விதம் மறுத்து உரைக்கவும் இராவணின் சினம் பொங்குகிறது. என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்.
அயோத்தியர் அனைவரையும் சிறைப் பிடித்துக் கொண்டு வருமாறு தன் அசுரர்களை ஏவி விட்டிருப்பதாகச் சொல்கிறான். “ அப்படி அவர்களைப் பிடித்துக் கொண்டுவர இயலாமற் போனால், அவர்களின் தலைகளக் கொய்து வருமாறும், இந்த இரண்டில் உங்களுக்கு எது இயலுமோ அதைச் செய்யுங்கள் எனக் கட்டளையிட்டு என் அசுரர்களை அனுப்பி இருக்கின்றேன்,” என்று சொல்லி அவளை அச்சுறுத்துகின்றான். இவ்விதமே உன் தந்தை மேல் ஏவி, மிதிலைக்கும் என் அரக்கர்களை அனுப்பி இருக்கின்றேன்” , என்றும் சொல்கிறான்.
கொற்ற வாள் அரக்கர் தம்மை , “ அயோத்தியர் குலத்தை முற்றும்
பற்றி நீர் தருதிர் ; அன்றேல் பசுந் தலை கொணர்திர் ; பாரித்து
உற்றது ஒன்று இயற்றுவீர் “ என்று உந்தினேன் ; உந்தை மேலும்
வெற்றியர் தம்மைச் செல்லச் சொல்லினென். விரைவின் ” என்றான்.
“ பசுந் தலை” என்கிறான். அவ்வப்போது வெட்டப் பட்ட தலை. வெட்டப்பட வெட்டப்பட , உடனடியாக அவை இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டும்.
இந்த அச்சுறுத்தலை எண்ணிச் சீதை துடிக்கின்றாள். உறுதியாக நம்புகின்றாள், அயோத்தியருக்கும் மிதிலையருக்கும் உண்மையிலேயே இறுதி என்று.
“என்னை இவ்விதம் கள்ளத் தனமாகக் கவர்ந்து வந்துவிட்ட இவனுக்கு , இராமன் இலக்குவன் என்ற இரு ஆண் சிங்கங்களிட மிருந்தே, அவற்றின் பாதுகாப்பிலிருந்த என்னையே, மாயமான் ஒன்றை ஏவித் தூக்கி வந்து விட்ட இவனுக்கு, (இந்த நரிக்கு) – அப்படிப்பட்ட பாதுகாப்பு இல்லாத அயோத்தியரையும் , மிதிலையரையும் அழிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான செய்கை அன்று ; இச்செய்கை அவனுக்கு ஆகாதது அன்று” — என்று சீதை எண்ணுகின்றாள். இவன் அவற்றைச் செய்து முடிக்கக் கூடியவனே என்று திடமாக நம்புகிறாள். இதை எண்ணித் திகைக்கின்றாள்.
என்று அவன் உரைத்த காலை, “என்னை இம்மாயம் செய்தாற்கு
ஒன்றும் இங்கு அரியது இல்லை” என்பதோர் துணுக்கம் உந்த,
என்பது கம்பனின் வரிகள்.
இவ்விதம் எதை எண்ணி எண்ணி இவள் அஞ்சி நடுங்கி உயிர் போகும் துயரம் அனுபவிக்கின்றாளோ அதுவே உடனடியாக அங்கு நிகழ்ந்து விடுகின்றது.
ஆயது ஓர் காலத்து, ஆங்கண் , மருத்தனைச் சனகன் ஆக்கி,
வாய் திறந்து அரற்றப் பற்றி , மகோதரன் கடிதின் வந்து,
காய் எரி அனையான் முன்னர்க் காட்டினன் ; வணங்கக் கண்டாள்.
தாய் எரி வீழக் கண்ட பார்ப்பு எனத் தரிக்கிலாதாள்.
தன்னுடைய தாய்ப் பறவை காட்டுத் தீயில் விழுந்து மாய்ந்து போவதைக் கண்ட சிறு பறவைக் குஞ்சு ( பார்ப்பு = பறவைக் குஞ்சு ) எவ்வளவு கொடிய துயரம் உறுமோ அது போல இவள் துன்பம் அடைகின்றாள்.
“மிதிலையர்களைப் பிடித்துச் சிறைஎடுத்து வாருங்கள் அல்லது அவர்களைக் கொன்று அவர்களின் தலைகளைக் கொண்டு வாருங்கள் என்பதாகக் கட்டளை பிறப்பித்து அனுப்பி இருக்கின்றேன்” என்று இராவணன் சொல்லி முடிக்கவும், இவன் அவ்வாறு செய்யக் கூடியவனே என்றும் இவள் திடமாக நம்பி இருக்கவும், அந்தத் தருணத்தில், அந்தச் சரியான சந்தர்ப்பத்தில் அங்கே மகோதரன் சனகனை இழுத்து வருகின்றான். எப்படி வருகின்றான் சனகன் ! அலறிக் கொண்டு, ஓவென்று ஓலமிட்டபடி, அரற்றிக் கொண்டு வருகின்றான். “ வாய் திறந்து அரற்றப் பற்றி “ அவனை இழுத்து வருகின்றான் மகோதரன். “கடிது” வருகின்றான் மகோதரன். சனகனைப் பிடித்து இழுத்து வந்து சிறைக் கைதியாக இராவணன் முன்னிலையில் நிறுத்துகின்றான். இராவணன் தீப்போன்று காய்ந்து, கனன்று எரிந்து கொண்டிருக்கின்றான். “காய் எரி அனையான்” என்பது கம்பனின் வரிகள். வந்த சனகன் , இராவணனை வணங்குவதையும் காண்கிறாள்.
அவ்விதம் இழுத்து வரப் பட்டவன் தன் தந்தையே என்று திடமாக எண்ணுகின்றாள் சீதை. உறுதியாக அதில் இருக்கின்றாள். முற்றாக இதை நம்புகிறாள் . வந்திருப்பவன் மாயா சனகன் என்பது அவளுக்குத் தெரியவில்லை; தெரிய வாய்ப்பும் இல்லை. “பொய் என உணராள்” என்பது கம்பனின் வரிகள். சனகனைச் சிறைப்பற்றி, இவ்விதம் இழுத்து வருவது அந்த அரக்கர் கூட்டத்திற்கு இயலக் கூடியதே என்று திடமாக நம்பியதால் , இது குறித்து எந்த விதச் சந்தேகமும் அவளுக்குத் தோன்றவில்லை. “என்னை இம்மாயம் செய்தாற்கு ஒன்றும் இங்கு அரியது இல்லை” என்று நம்பியவள் அல்லவா அவள். இவ்விதம் சனகனைப் பார்த்த சீதை மிகுந்த துயரமும் வேதனையும் அடைகின்றாள். கம்பனின் வரிகள் இதோ.
கைகளை நெரித்தாள் ; கண்ணில் மோதினாள் ; கமலக் கால்கள்
நெய்யெரி மிதித்தால் என்ன, நிலத்திடைப் பதைத்தாள் ; நெஞ்சம்
மெய்யென எரிந்தாள் ; ஏங்கி விம்மினாள் ; நடுங்கி வீழ்ந்தாள்
பொய்யென உணராள் ; அன்பால் புரண்டனள் ; பூசலிட்டாள்.
சனகனுக்கு இவ்விதம் நிகழ்ந்து விட்ட நிலையில், சோகத்தின் எல்லைக்கே போய் வந்தாள் சீதை. மேலே சொன்னதெல்லாம் அவளுடைய உடனடி வெளிப்பாடுகள். இந்த உடனடிப் பாதிப்புக்கள் சற்றுக் குறைந்ததும் , சற்றுத் தெளிந்த நிலையில் மேலும் வேறொன்றை எண்ணுகிறாள் . மிதிலையின் மற்றவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என்று அஞ்சுகின்றாள். இவளுடைய சகோதரிகள் , அன்னையர் மற்றுமுள்ள சுற்றம் எல்லாரும் என்ன ஆனார்களோ என்று துயரம் உறுகின்றாள். தந்தை மாத்திரமே இங்கு கொணரப் பட்டுள்ளான். தந்தைக்கு இவ்விதம் நேர்ந்ததை அவர்கள் அறிய மாட்டார்களோ? மற்றவர்களையும் அரக்கர் கூட்டம் ஏன் இழுத்து வரவில்லை? அவர்களும் தந்தையின் பின் தொடர்ச்சியாக வந்திருக்க வேண்டுமே! சனகன் இருக்குமிடம் தானே மிதிலை ? ஏன் அவர்கள் வரவில்லை ? அவர்களுக்கு வேறு ஏதேனும் நிகழ்ந்து விட்டதோ ? ஏனையர் எல்லோரும் கொல்லப் பட்டனரோ? என்று அச்சமுறுகின்றாள்.
அன்னைமீர் ! ஐயன்மீர் ! என் ஆருயிர்த் தங்கைமீரே !
என்னை ஈன்றெடுத்த எந்தைக்கு எய்தியது யாதும் ஒன்றும்
முன்னம் நீர் உணர்ந்திலீரோ ? உமக்கு வேறு உற்றது உண்டோ ?
துன்ன அரு நெறியின் வந்து தொடர்ந்திலீர் . துஞ்சினீரோ?
இவ்விதம் சீதை அரற்ற இது கண்டு இராவணுக்கு மகிழ்ச்சி பொங்குகிறது.
“உன் மீதுள்ள காதலால், உன்னை அடைய வேண்டும் என்ற தீராத ஆசையால், நான் உனக்கு பெருந் துயர் தந்து விட்டேன். நான் உன் தந்தையை இவ்விதம் அழைத்து வந்தது என்னுடைய பிழைதான். இதனைப் பொறுத்துக் கொள். மிதிலையின் மற்றவர்களை நான் கொல்ல மாட்டேன். என்னுடைய உயிரே போவதானாலும் ““(நான்)விளிந்த போதும்”, இவனை, இந்தச் சனகனைக் கண்டிப்பாகக் கொல்ல மாட்டேன். இது குறித்து நீ அஞ்ச வேண்டாம்.” என்கிறான் அவன்.
“காரிகை ! நின்னை எய்தும் காதலால், கருதல் ஆகாப்
பேரிடர் இயற்றலுற்றேன் ; பிழை இது பொறுத்தி ; இன்னும்
வேறர மிதிலையோரை விளிகிலேன் ; விளிந்த போதும்
ஆருயிர் இவனை உண்ணேன்; அஞ்சலை , அன்னம் அன்னாய்”
என்கிறான் இராவணன். இவன் உயிர் உண்ணமாட்டேன் , “ என்று உறுதியும் அளிக்கின்றான்.
சனகனை இலங்கைக்கு அரசனாக்கி, அவனுடைய சேவகனாகத் தானே இருப்பேன் என்கிறான் அவன். இந்திரனால் முடி சூட்டப் பெற்றவன் இராவணன் . அவ்விதம் இந்திரன் தனக்கு அளித்த மகுடத்தை ( மெளலியை ) , தேவர்கள் எல்லாரும் பணிந்து சனகனை வாழ்த்த – “இமையவர் இறைஞ்சி ஏத்த” – , சனகனுக்கு நான் முடி சூட்டுவேன் என்கிறான். அதுவும் எப்படி ! “முடி சூட்டப் படுவதற்கு என்று வரையறுக்கப் பட்ட நியமத்தின்படி, மரபின்படி, முறைகளின்படி. (“ மந்திர மரபின் ”).
நான் சனகனுக்கு இவ்விதம் மணிமுடி அளிப்பேன். தேவ லோகத்து மங்கையர் – ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை போன்ற அழகுப் பெட்டகங்கள் சனகனுக்கு பணிப் பெண்களாக இருப்பார்கள். நானும் இவனுக்குச் சேவகம் செய்கின்ற பணியில், இவனுக்கு வேலைக்காரனாக இருப்பேன். இவ்வளவும் நான் செய்வேன். நீ பதிலுக்குச் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். அது என்னை ஏற்றுக் கொள்வதுதான்” என்கிறான் இராவணன்.
இந்திரன் கவித்த மெளலி, இமையவர் இறைஞ்சி ஏத்த,
மந்திர மரபின் சூட்டி, வானவர் மகளிர் யாரும்
பந்தரின் உரிமை செய்ய, யான் இவன் பணியில் நிற்பேன்
சுந்தரப் பவள வாய் ஓர் அருள்மொழி சிறிது சொல்லின் .
“சிறிது சொல்லின்” என்பது பாடல் வரிகள். முழு வாக்கியமாகச் சொல்ல வேண்டியதில்லை. தன் ஒப்புதலை, இவள் நீண்ட உரையாக நிகழ்த்தத் தேவை இல்லை. “ஏன் இராவணனை ஏற்றுக் கொள்கிறேன், அவனின் சிறப்புகள் யாவை என்றெல்லாம் பட்டியல் போட்டு, காரண காரியங்களை எல்லாம் விளக்கி அவள் சொல்ல வேண்டியதிலை. சிறியதாக, மிக மிகச் சிறியதாக, ஆம் என்று ஓரெழுத்தில் சொன்னாலும் போதும், என்கிறான் இராவணன். இவனுக்கு இருக்கும் மன நிலைக்கு அவள் வாய் திறந்து சொல்ல வேண்டும் என்பது கூட இல்லை. சிறு கண்சாடை கூடப் போதும். ஒப்புதலாக ஒரு தலை அசைப்பும் இவனை மகிழ்ச்சிக் கடலில் தள்ளி விடும். அவ்விதம் அவள் சிறிதாகச் சொல்வது இவனுக்கு அருள் மொழியாக இருக்கும் என்கிறான்.
ஆனால், அவள் சொல்லும் மறுமொழி, அருள் மொழி அன்று. மருள் மொழி. இருள் மொழி. திட்டவட்டமாக உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்னும் பொருள் மொழி. அவள் தருவது இசை மொழி அன்று. வசை மொழி.
இவ்விதம் இராவணன் வேண்ட, சீதை மீண்டும் சீறுகின்றாள். மறுபடியும் மிகுந்த தைரியம் தன்னம்பிக்கை இவற்றோடு கூறுகின்றாள். — அசோக வனத்துச் சீதையாக , ஆதரவற்ற சீதையாக இருந்த போதிலும் .
“ உன் சம்பந்தப் பட்ட சேதி, உன்னைப் பற்றிய விஷயம் நான் கேட்க ஆசைப்படத்தான் செய்கிறேன். ஆர்வமாகத்தான் இருக்கிறேன் அவ்விஷயத்தில். அவை என்ன சேதி தெரியுமா? இரண்டு விஷயங்கள் கேட்க நான் மிக மிக ஆவலாக உள்ளேன்- உன் சம்பந்தப் பட்டவையாக.
“எப்படிப்பட்ட சேதி நான் கேட்பதற்கு விழைகின்றேன் தெரியுமா. அதை இப்பொழுது சொல்கின்றேன் கேள்” என்ற பீடிகையுடன் சொல்கின்றாள்.
“எனக்குச் சேதி வரும். தூதுவன் ஒருவன் எனக்குச் சேதி கொண்டுவருவான். அனுமன் தான் அத் தூதுவன். அவன் கொண்டுவரும் சேதி, உன் சம்பந்தப் பட்ட சேதி என்ன தெரியுமா? என்னுடைய நாயகன், என்னுடைய வீரன் இராமனுடைய அம்பினால் நீ மாண்டாய் என்பது தான். இரும்பு போன்ற வயிரமுடைய இராமனின் அம்பினால், உன் தலைகள் தரையில் இடறி விழும். இனிமேல் நீ பிழைக்கவே முடியாது என்ற நிலையில் நீ முழுவதுமாக அழிந்தாய் என்று அனுமன் வந்து என்னிடம் ஒருநாள் வந்து சொல்வானே அந்த ஒரு செய்தி, உன் சம்பந்தமாக நான் கேட்க விரும்புவது” என்கிறாள் சீதை.
விரும்பி நான் கேட்பது உண்டால் , நின்னுழை வார்த்தை :“ வீரன்
இரும்பு இயல் வயிர வாளி இடறிட , எயிற்றுப் பேழ் வாய்ப்
பெரும் பியல் தலைகள் சிந்திப் பிழைப்பிலை முடிந்தாய்” என்ன
அரும்பு இயல் துவளப் பைந்தார் அனுமன் வந்து அளித்த அந்நாள்.
தான் இன்னொன்றையும் கேட்க விரும்புவதாகச் சொல்கிறாள் சீதை. மேற் சொன்னதாவது செவிவழிச் செய்தியாகும். எனவே, நான் உன்னனுடைய குரலையும் கேட்க ஆசைப்படுகிறேன். எப்படிப் பட்ட குரல் தெரியுமா? இராவணன் என்கின்ற உன் பெயருக்கு ஏற்ற வகையில் நீ பெருங் குரலெடுத்து ஓலமிடுவாயே, அந்த அழுகையைக் கேட்க விரும்புகின்றேன். நான் கேட்பதற்கு உரியன இது தான்” என்று அவனைப் பார்த்துச் சீறுகிறாள்.
“ உன்னுடைய அலறலைக் கேட்க விரும்புகின்றேன். உன்னுடைய அழுகுரலைக் கேட்க விரும்புகின்றேன். “என் மகன் இறந்தான்” என்று இந்திரசித்து மரணமடையும் போது நீ எழுப்பப் போகும் அந்த அலறலைக் கேட்க விரும்புகிறேன். எங்கள் சுமித்திரை ஈன்றெடுத்த இளைய பெருமாளின் அம்பு உன் மகன் இந்திரசித்துவின் உயிர் குடிக்கும். இந்திர சித்துவின் உயிரைப் போகுவது “ நக்குவது” இலக்குவனின் அம்பு. அவ்விதம் அந்த அம்பினால் வீழ்த்தப் பெற்ற உடலை உண்ண வருபவை, நக்க வருபவை நாய்கள். அந்த வேளையில் நீ அலறுவாயே “ ஐயோ என் மகனைப் பறி கொடுத்தேனே” என்று. அந்த அலறலைக் கேட்க விரும்புகின்றேன். அதுதான் நான் கேட்பதற்கு உரியது. அவையன்றி, நீ இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் அல்ல” என்று உரைக்கின்றாள் சீதை
“ புன்மகன் ! கேட்டி, கேட்டதற்கு உரியது ; புகுந்த போரில்,
உன்மகன் உயிரை எம்மோய் சுமித்திரை உய்ய ஈன்ற
நன்மகன் வாளி நக்க, நாய் அவன் உடலை நக்க,
என்மகன் இறந்தான் என்ன நீஎடுத்து அரற்றல்” என்றாள்
சீதையின் இவ்வார்த்தைகளைக் கேட்ட இராவணன் அவள் மேல் கடுங்கோபம் கொண்டு அவளை அழிக்கும் எண்ணத்தோடு அவள் மீது பாய்கின்றான். மகோதரன் அவனைத் தடுக்கின்றான். “ சனகனை விட்டு, சீதையிடம் இராவணனை ஏற்றுக் கொள் என்று வேண்டச் சொல்லுவோம் . அவள் மறுப்பாளாகில் சனகனைக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டுவோம். தந்தை அவ்விதம் வேண்டினால் அவள் ஒப்புக் கொள்ளுவாள்” என்று யோசனை சொல்கின்றான்.
இராவணன் அவ்விதமே மாயா சனகனுக்கு ஆணை இடுகின்றான். அவனும் சீதையிடம் இராவணனை ஏற்றுக் கொள்ளும்படிச் சொல்கிறான். சீதை அவ்விதம் இராவணனை ஏற்றுக் கொள்ளாவிடில், அவளின் மறுப்பு தன்னையும் தன் குலத்தையும் அழித்து விடும் என்கிறான் மாயா சனகன் – சீதையால் உண்மையான சனகன் என்றே
நம்பப்படுபவன்.
“இன்று இது நேராய் என்னின், என்னை என் குலத்தினோடும்
கொன்றனை ஆதி”
என்பது கம்பனின் வரிகள்.
மேலும் சொல்கிறான் மாயா சனகன்.
பூவின் மேல் இருந்த தெய்வத் தையலும் பொதுமை உற்றாள் ;
பாவி ! யான் பயந்த நங்கை ! நின் பொருட்டாகப் பட்டேன்,
ஆவி போய் அழிதல் நன்றோ ? அமரர்க்கும் அரசன் ஆவான்
தேவியாய் இருத்தல் தீதோ? சிறையிடைத் தேம்புகின்றாய் !
செல்வம் ஒருவரிடத்தில் மட்டும் இருப்பது இல்லை. பலரிடமும் அது இருக்கிறது. ( யாரிடத்தும் செல்வதனாலேயே அது செல்வம் எனப் பெயர் பெற்றதோ ? ) . ஆக செல்வமே, இலக்குமியே பலரிடத்தும் காணப் படுகின்றாள். “பூவின் மேல் இருந்த தெய்வத் தையலும் பொதுமை உற்றாள்” .
அப்படி இருக்கும் போது , நீ இராவணனை ஏற்றுக் கொள்வது தீமையானதோ ? என்கிறான்.
“ நான் என்ன ஒரு குப்பனையோ , சுப்பனையோ ஏற்றுக் கொள் என்றா சொல்கிறேன். தேவர்களுக்கெல்லாம் அதிபதி அல்லவா இவன். இவனை ஏற்றுக் கொண்டால் , உனக்கும் சிறை வாழ்க்கை தீரும். எனக்கும் உயிர் பிழைக்கும் . ஆக ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ! இதுவல்லவோ முறை, ஏன் வாடுகின்றாய் சிறை “ என்று சொல்கின்றான் சனகன். தன் மகளைப் பாவி என்றே திட்டுகிறான். “உன்னால் தானே நான் இவ்வளவு துன்பப் படுகின்றேன் “
இவ்வாறு தன் தந்தையே கூறக் கேட்ட சீதை அவன் மேல் சீறிப் பாய்கின்றாள்.
அந்தச் சந்தர்பத்தில் அவள் கூறும் வரிகள் தான், இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன வரிகள்.
அரியொடும் வாழ்ந்த பேடை, அங்கணத்து அழுக்குத் தின்னும்
நரியொடும் வாழ்வதுண்டோ? – நாயினும் கடைப் பட்டோனே!
“நாயினும் கடைப்பட்டோனே” என்று தன் தந்தையை விளிக்கும் அளவு அவளுக்குச் சினம் பொங்குகிறது. பாடல் முழுவதும் வருமாறு.
வரி சிலை ஒருவன் அல்லால், மைந்தர் என் மருங்கு வந்தார்
எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ? அரசுக்கு ஏற்ற
அரியொடும் வாழ்ந்த பேடை, அங்கணத்து அழுக்குத் தின்னும்
நரியொடும் வாழ்வதுண்டோ? – நாயினும் கடைப் பட்டோனே!
கம்பனின் சொற்பிரயோகம் பிரமிக்க வைக்கிறது. “வரிசிலை அண்ணல்” – “வரிசிலை வள்லல்” – “ வரிசிலை வீரன்” – “வரிசிலை இராமன்” என்றோ சொல்லவில்லை. வரிசிலை “ஒருவன்” என்பது அவனுடைய பிரயோகம். இந்த இடத்தில் அவ்வார்த்தையின் பொருள் மிகக் கூடுகிறது.
“ என் அருகில் வர உரிமை உடையவன் ஒருவன் தான். அந்த இராமன் ஒருவனே அவன். அவனையன்றி வேறு யார் வந்தாலும் அவர்கள் விளக்கினை நெருங்கும் விட்டில் பூச்சியைப் போல மாண்டு போவார்கள் அன்றோ “, என்கிறாள் .
“ இந்த இப்பிறவிக்கு இருஆடவரைச் சிந்தையாலும் தொடேன்” என்று தொனிக்கச் செய்து விட்டான் கம்பன், இந்த ஒருவன் என்னும் பிரயோகத்தால் !
இவள் உடன் உறைந்து வாழும் சிங்கம் “ அரசுக்கு ஏற்ற அரி” . அரசுரிமை என்பது வெறும் சிம்மாசனத்தில் உட்காருவது மட்டும் அன்று. பல்வேறு நற்குணங்களையும் பெற்று , பல்வேறு நற்செயல்களையும் செய்கின்ற ஒரு உத்தமமானவன் பெறும் பதவி அது. தன்னுடன் வாழும், தன்னைத் தலைவனாக ஏற்றிருக்கும், தன்னைச் சார்ந்திருக்கும் அனைவருக்கும் நன்மைகளையே செய்பவனே அரசன். அவ்விதம் அரசனாக வீற்றிருப்பவன் புருஷோத்தமன். அப்படிப் பட்டவனே இராமன் . “அரசுக்கு ஏற்ற அரி “.
இவள் வெறுத்து ஒதுக்கும் நரி, “அங்கணத்து அழுக்குத் தின்னும்” நரி.
அங்கணம் என்றால் முற்றம். நம் சுத்தம் பேணுவதற்காக நம்மால் தாராளமாக அசுத்தப் படுத்தப்படும் இடம் அது. கை கால்கள் கழுவுவோம் அங்கே. பத்துப் பாத்திரங்கள் அங்கே தேய்ப்போம். நாங்கள் சிறுவயதில், சாப்பிட்ட பிறகு எச்சில் தட்டுக்களை அங்கேதான் கழுவுவோம். குப்பைகளைக் கொண்டுபோய்க் கொட்டுவோம். துணி தோய்ப்போம். நான் சிறுவனாக இருந்த போது முற்றத்தில் குளிப்போம். குழந்தைகளைக் குளிப்பாட்டும் இடமும் அதுதான் பல வீடுகளில். சிறு குழந்தைகள் மல ஜலம் கழிப்பதும் சமயங்களில் முற்றத்தில் தான்.
அது முற்றம். அங்கே அழுக்கே முற்றும்.
அந்த அழுக்கு நிறைந்த முற்றத்தின் அழுக்குகளைத் தின்னும் நரி.
நாயினும் கீழோனே என்று சினக்கின்றாள் . நாய் என்று கூடத் தன் தந்தையை அவளால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. நாயினும் கடைப் பட்டோனே என்கிறாள் .
நாய் என்றால் அவ்வளவு மட்டமா? நன்றிக்கு நாம் நாயைத்தானே உதாரணம் காட்டுகின்றோம்? மனிதனுக்கு உற்ற தோழன் அல்லவோ நாய்.
(அந்தப் பதவியும் தற்போது செல் ஃபோனுக்குப் போய்விட்டது ! ) இருந்தும் ஏன் பல கவிஞர்களும் நாயைக் கீழான பிராணியாகவே கருதுகிறார்கள். தான் உண்டவற்றைக் கக்கி, தானே உண்டு, தன் குட்டிகளுக்கும் கொடுப்பதால் இருக்கலாமோ ? ஆண் நாயும் பெண் நாயும் பலர் பார்க்க பொது இடங்களில் இணைவதாலும் இருக்கலாமோ?
அப்படிப்பட்ட நாயினும் கடைபட்டோனே என்று ஏசுகின்றாள்.
நாயினும் கடைப்பட்டவனாகச் சொன்னாள் தன் தந்தையை. நாய் என்று இராவணனையும் சொல்கின்றாள்.
தன்னுடைய உயிரைப் போக்குவதாகும் சீதையின் மறுப்பு என்று சொல்லி அவளை ஒப்புக்கொள்ள வைக்க முயற்சிக்கின்றான் சனகன். “தன்னை மட்டும் மாய்ப்பது ஆகாது அது. தன் குலத்தையே அழிப்பது ஆகும் அவள் இராவணனை ஏற்றுக் கொள்ள மறுப்பது” என்கிறான் அவன். மாயா சனகன்.
இதற்கெல்லாம் அஞ்சுபவள் அல்லள் சீதை. இந்த மிரட்டல்களுக்கெல்லாம் அவள் மசிபவள் அல்லள். “நீ அழிந்து போ, உன் குலம் அழிந்து போகட்டும், ஏன் இந்த உலகமே அழிந்தாலும் அது பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் முறைமை குன்றி வாழ மாட்டேன்” என்று உறுதிபடச் சொல்லுகிறாள். ஒரு சிங்கத்திற்கு உடன்பட்ட, அவனை மணம் செய்து கொண்ட , அவனுடன் உறைந்து வாழ்கின்ற நான், கேவலம் ஒரு நாயை ஏறிட்டும் பார்ப்பேனோ? என்று தந்தையைச் சினந்து, வெறுத்து, இகழ்ந்து பேசுகின்றாள்.
நீயும், நின் கிளையும், மற்று இந் நெடு நில வரைப்பும் , நேரே
மாயினும், முறைமை குன்ற வாழ்வெனோ? வயிரத் திண் தோள்
ஆயிர நாமத்து ஆழி அரியினுக்கு அடிமை செய்வேன் –
நாயினை நோக்குவேனோ , நாண் துறந்து, ஆவி நச்சி ?
உயிர் வாழ ஆசைப்பட்டு, வெட்கம் கெட்டு, கற்பினை விட்டு நாய் போன்ற இவனுக்கு உடன் படுவேனோ நான். ஒரு நாளும் அது நடவாது. நான் இவனுக்கு உடன் படாதலால் உன் குலம் , நீ , மற்றும் இவ்வுலகமே எல்லாமும் அழியப் போகிறது என்றால் அவ்விதமே போகட்டும் என்று சீறுகின்றாள், சிறை இருந்த செல்வி.
“ஆவி நச்சி” என்பது கம்பனின் வரிகள். உயிர் மேல் ஆசை வைத்து என்பது பொருள். இவளுக்கா உயிர் மீது ஆசை. இவள் உயிர் அவ்வளவு இலகுவில் போய் விடாது. இவள் அக்கினிப் பிரவேசம் செய்தாலும், மீண்டு வந்து விடுவாள்.
“ஆவி நச்சி” என்று இவள் சொல்வது , தன்னுடைய ஆவியை அன்று. அவ்விதம் சொல்லப்பட்டது சனகனுடைய ஆவி. அப்படி உன்னுடைய உயிரைக் காக்கும் பணியில் உன்னுடைய “ஆவி நச்சி” என்னுடைய முறைமை நான் குன்ற மாட்டேன்.
“என் இராமனுடன் வாழ்வேன். அவனுடைய இன்பம் துன்பம் எல்லாவற்றிலும் தோள் கொடுப்பவளாக, அவனுக்குச் சரிநிகர் சமானமாக வாழ்வேன். “அவன் காரியம் யாவினும் கை கொடுத்து” , அவனுடைய தர்ம பத்தினியாக, அவனுடைய அன்பு, பாசம், காதல் என்று இவை அனைத்திற்கும் ஏக போக உரிமை அனுபவிப்பவளாக , அயோத்தியின் பட்ட மகிஷியாக வாழ்வேன். இப்படிப் பேறுகள் பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்வேன். ஒருக்கால் அப்படி எல்லாம் அமையாமற் போனால் ,இவை அனைத்தும் கை கூடி வராமல் போனால் , அவனுக்கு அடிமையாகவேனும் இருப்பேனே தவிர இந்த நாயை ஏறிட்டும் நோக்கேன்-
“ஆயிர நாமத்து ஆழி அரியினுக்கு அடிமை செய்வேன்.
நாயினை நோக்குவேனோ”
என்பது இவளின் சீற்றம்.
( இந்தச் சந்தர்ப்பத்தில் கும்பகருணன் இறந்து விட்டான் என்று கூறி. பயங்கர ஆரவாரம் எழுகிறது வானரப் படையினரிடமிருந்து. அது இராவணன் செவிகளை எட்டுகிறது. தம்பி இறந்த சோகம் தாளாமல் அவன் கதறுகின்றான். அது கண்டு சீதை மட்டில்லா மகிழ்ச்சி அடைகின்றாள்.
இந்த திடீர்த் திருப்பத்தால் , இராவணின் சோகம் கண்டு , மந்திரிமார்கள் வந்து இராவணனைத் தேற்றி அழைத்துக் கொண்டு போய் விடுகிறார்கள். மாயா சனகனைச் சிறையில் அடையுங்கள் என்று சொல்லிவிட்டு, மகோதரன் வேறொரு பக்கம் போய் விடுகின்றான். பிறகு சில நேரத்தில் திரிஜடை மூலம் மருத்தன் என்னும் அசுரனே சனகன் வேஷம் பூண்டு வந்தவன் என்பதை சீதை அறிந்து கொள்கிறாள் . மன நிம்மதி அடைகிறாள்.)
கம்பன் பல இடங்களில் சிறை இருந்த செல்வியின் பெருமை பற்றிச் சொல்லி இருந்தாலும் இந்தக் கட்டம், மாயா சனகப் படலம் அவற்றுள் மிகச் சிறப்பு வாய்ந்தது என்றே நான் கருதுகின்றேன்.
குமுறும் எரிமலையாக இவளின் மாற்றம்.
தைரியத்தின் சிகரமாம் இவள் தோற்றம்.
இது சிறையிருந்த செல்வியின் சீற்றம்.
பாத்திரத்துக்குக் கம்பன் தரும் ஏற்றம்.
- ‘சூப்பர் ஸ்டார்’ சுஜாதா
- திண்ணை வழங்கும் இலவச ஒருங்குறி எழுத்துருக்கள்
- காற்றினிலே வரும் கீதங்கள் -8 கறைப்படுத்தினார் !
- தாகூரின் கீதங்கள் – 18 எதை நோக்கிச் செல்கிறாய் ?
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 9
- அழியாத சின்னங்கள் !
- எழுத்தாளர் சுஜாதா நினைவாக…
- அரியும் நரியும்
- மழைக்குடை நாட்கள் கவிதைத்தொகுப்பு வெளியீடு
- பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் “செயலும் செயல்திறனும்”
- மாற்றமும் மடமையும் – வஹ்ஹாபி அவர்களுக்கு சில வரிகள்
- உலகப்பண்பாட்டிற்குத் தமிழ் பக்தி இலக்கியங்கள்/இயக்கங்களின் பங்களிப்பு
- “சங்க இலக்கிய வார விழா—தமிழ்நாடு முழுவதும் 100 ஊர்களில்”
- marginalisation of Maharashtrians in Mumbai
- ஜெயமோகன் ஆதரவு கடிதம் பற்றி
- “நாம்” என்னும் இலக்கிய சிற்றிதழ் துவக்கம்
- சுஜாதா என்னும் Phenomenon…
- இந்தக் கடிதத்தை நாற்பத்திரண்டு நாட்களாக எழுத எண்ணியிருந்தேன்.
- பன்முகப் படைப்பாளி திரு சுஜாதா அவர்களின் மறைவுக்கு அஞ்சலி:
- கற்பு என்னும் குறும் படத்தின் கதைச் சுருக்கம்
- கவிதை எழுதுவதற்கு லைசென்ஸ்
- நூல் மதிப்புரை: முனைவர் ஆ. மணவழகனின் ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வையை முன்வைத்து…
- ஒர் அறிக்கை, ஒர் சர்ச்சை குறித்து ஒரு சாமன்யனின் 2 பைசா கருத்துக்கள்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது ? (கட்டுரை: 18)
- மின்னும் புன்னகையோடு
- ப்ரியா விடை
- நிலமெனும் பஞ்சபூதம்
- கையையும் காலையும் கட்டிக்கொண்டு வேகமாய் ஓடுகிறவன்
- இந்த நாகரிகத்தின் வேர் படுகிறது
- கவிதை பிறக்கும்!
- புரட்சி
- கலைஞருக்கு வயதாகி விட்டதா?
- அபூர்வ மனிதர் சுஜாதா
- குழந்தைகளை அடிக்காதீர்கள்!!!
- தமிழில் இணைய உள்ளடக்க உருவாக்கம்