அரவ¨ணைக்கும் கைகளில் மரணிக்கும் பெண்கள்…..

This entry is part [part not set] of 32 in the series 20081225_Issue

வே.சபாநாயகம்



பொதுவாக, மொழிபெயர்ப்புகள் மற்றும் அந்நிய மண்ணின் நிகழ்வுகளையும்,
பாத்திரங்களையும் கொண்டு எழுதப்படும் நாவல்கள் – வாசகரை மருட்டும் அந்நியத்தன்மை
கொண்டவைகளாக அமைவது இயல்புதான். ஆனால் பிரான்சு நாட்டில் வாழும் புதுச்சேரிக்காரர் திரு.நாகரத்தினம்கிருஷ்ணா அவர்களின் இந்த நாவல் – ‘மாதாஹரி’ அந்தக் குறைபாடின்றி, வாசகனுக்கு நெருக்கமாய் நின்று, நிகழ்வுகளினூடே சுகமாகப் பயணம் செய்ய வைப்பதாய் இருக்கிறது.

கதையின் மையம் – பெண்கள் அவர்கள் எந்த நாடாயினும் – எப்போதும், எந்த மட்டத்திலிருந்தாலும் காலம்காலமாய் அல்லல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகிற வர்கள்தாம் என்பது. இருபதாம் நூற்றண்டின் மூன்று காலகட்டங்களில் மூன்று பெண்கள் – மார்த்தாஹரி, பவானி, ஹரிணி பிரான்சில் ஒரே மாதிரியான அல்லலுக்கும் வதைக்கும் ஆளாவதை மூன்று அடுக்குகளில் ஒரு துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்போடு நாவல் சொல்கிறது.

இருபதாம் நூற்றண்டின் துவக்கத்தில் ஹாலந்தில் பிறந்து பிரான்சுக்குப் போன
மாத்தாஹரி என்பவள் பார்ப்பவரை எல்லாம் வசப்படுத்தும் அற்புத அழகி. அதிகாரிகளும், இராணுவத்தினரும், அரசியல்வாதிகளும், கலைஞர்களும், எழுத்தாளர்களும் அவளது அழகுக்கு அடிமையாகிறார்கள். தானாய் வாய்க்கும் சந்தர்ப்பங்களினால் அவள் தன் உடலையே முன்னிறுத்தி தனக்கென ஒரு அதிகார மையத்தை உருவாக்கிக் கொள்கிறாள். பின்னால் அவள் ஒரு வேவுக்காரியாகத் தவறாகச் சந்தேகிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகிறாள். ஆனால் இறந்த பின்னரும் அவள் வழிபாட்டுக்குரிய ஒரு தேவதையென அவளது ரசிகர்களால் உருவாக்கப்பட்டு அவள் பெயரில் இயக்கங்களும் புனைவுகளும் பெருகி, அமானுஷ்யப் பிறவியாய் பூஜிக்கப்படுகிறாள்.

புதுச்சேரியில் ஒரு வழக்கறிஞராக இருந்த பவானி, அவள் காதலித்து மணந்த தேவசகாயத்தின் வற்புறுத்தலால் அவளுக்கு விருப்பமில்லாமலே பிரான்சுக்குச் சென்று குடியேறுகிறாள். அவள் தோற்றத்திலும் அழகிலும் அச்சு அசலாய் மார்த்தாஹரியைப் போல இருப்பதால் மார்த்தாஹரியின் பெயரால் இயங்கும் ‘மார்த்தஹரி சமயக்குழு’ அவளை
மார்த்தஹரியின் மறுபிறவியென்று கருதி அவளையும் வழிபாட்டுக்குரியவளாக ஆக்க முயல்கிறது. பவானியின் கணவன் தேவசகாயமும் மார்த்தாஹரியின் உபாசகனாக ஆக்கப்பட்டு¢, அவனும் பவானியை மார்த்தாஹரியென்றே நம்புவதுடன் அவளை மார்த்தாஹரியென்றே அழைக்கவும் செய்கிறான். இவர்களால் ஏற்படும் மன உளைச்சலாலும் தேவசகாயத்தின் கொடுமைகளாலும் பவானி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கிறாள். அதற்குக் காரணமானவன் என்பதால் தேவசகாயமும் சிறையில் அடைக்கப்படுக்கிறான்.

பவானியின் மகள் ஹரிணி தன் தாயின் மரணம் தற்கொலை அல்ல எனச் சந்தேகித்து பவானியின் நாட்குறிப்பில் கண்ட நபர்களை ஒவ்வொருவராகத் தொடர்பு கொண்டு உண்மையை அறிய முயல்கிறாள். ஆனால் வேறொரு உண்மையை – பவானி தன்னைப் பெற்றவள் அல்ல, வளர்த்தவள் என்பதையும் தான் தேவசகாயத்துக்கும் எலிசபெத் என்பவளுக்கும் பிறந்தவள் என்றும் அறிகிறாள். அவளுக்கு ஆதரவாய் வரும் அவளது காதலன் அகால மரணமுற மனஉளைச்சலுக்கு ஆளாகிறாள். வலைத்தளம் மூலம் இரண்டாம் வாழ்க்கை பற்றி அறி¢ய முயன்று, தான் மார்த்தாஹரியின் மகள் நோனாவின் மறுபிறவி என்று நம்புகிறாள். பின்னர் தன் தகப்பன் தேவசகாயத்தைச் சிறையில் சந்தித்துவிட்டு, காணாமல் போகிறாள்.

– இப்படி ஒரே நூற்றாண்டின் முன்று காலகட்டங்களில் வாழ்ந்த மூன்று பெண்களுடைய அவல வாழ்வும் ஒரேமாதியாக அமைந்துள்ள இந்த நாவல், பதிப்புரையில் திரு.கோ.ராஜாராம் சொல்வதுபோல் ‘அரவணைக்க நீளும் கைகளில் இறுக்கப்பட்டு மரணிக்கும் பெண்களின் குறியீடாக’ அமைந்திருக்கிறது எனலாம்.

நாவலின் தொடக்கமே புதுமையான அறிமுகத்துடன் வாசிப்பைத் தூண்டுகிறது. நாவல் பிறந்த கதையை ஒரு மாய யதார்த்த உக்தியோடு சொல்வதில் ஆரம்பிக்கிறார் ஆசிரியர். நடக்காத, நடக்க முடியாத ஒன்றைக் கற்பிதம் செய்து, இறந்துபோன கதாபாத்திரமே கதை சொல்லியுடன் உரையாடுவதும் நாவல் முழுதும் ஆங்காங்கே தோன்றி மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதும், கதையை வளர்க்க உதவுவதுமாய் ஒரு மயக்கத்தை வாசகர்க்கு உண்டாக்கி நாவலின் சுவையைக் கூட்டுகிறார். கதை நிகழ்வுகளும் ஒரு நேர்க்கோட்டுப்பாணியில் இல்லாமல் – ஒரு திறமையான திரைப்படத் தொகுப்பாளர் காட்சிகளை வெட்டி ஒட்டி சுவைகூட்டுவது போல திரு.கிருஷ்ணா அவர்கள் காட்சிகளை மாற்றி மாற்றிச் சொல்வதும் தமிழ் நாவல் தளத்தில் ஒரு புதிய ரசமான உக்தியாகும்.

இவரது முதல் நாவலைப் போலவே இதிலும் முழுதும் பெண்களையே – அவர்களது அவலங்களையே மையப்படுத்தினாலும் இது ஒரு பெண்ணிய நாவலாக மட்டுமின்றி, நமது பெண்களின் திருமண வாழ்வோடு ஒப்பிடச்செய்கிற பிரஞ்சுக் கலாச்சாரத்தின் வித்தியாசமான கூறுகளையும், பல நுட்பமான தகவல்களையும், அதன் இந்தியப் பாதிப்புகளையும் அனுபவரீதியாகப் பதிவு செய்துள்ள ஆவணமாகவும் திகழ்கிறது.

பாத்திரப் படைப்புகளும், அவை தொடர்பான புருவம் உயர்த்தும் நிகழ்வுகளும் ‘கல்கி’யின் ‘சோலைமலை இளவரசி’ நாவலை நினைவூட்டுகின்றன. அந்நாவலில் வருவது போலவே மார்த்தாஹரி, பவானி ஆகிய வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த பாத்திரங்களின் அனுபவங்களும் இணையாக நிகழ்வது சிலிர்ப்பை ஏற்படுத்துவதாய் உள்ளன.

நடையில் ‘சுஜதா’வின் பாதிப்போடு கூடிய ஒரு லாகவம் தெரிகிறது. வாசிக்க அலுப்புத் தராத சுகமான நடை. வருணனையில் கிருஷ்ணா சோபிக்கிறார். ஸ்தல விவரணங்கள் கலைத்தன்மையுடன் அழகாக வந்திருக்கின்றன. அத்தியாயம் 4ல் மார்த்தாஹரியின் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நிகழ்வை வர்ணிக்கும் இடம் உருக்கமாக இருப்பதுடன் ஆசிரியரின் அற்புதமான கலாரசனையின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது. சின்னச் சின்ன அத்தியாயங்கள் – இன்றைய அவசர உலகில் வாசகனின் ஆயாசத்தைத் தவிர்க்க உதவும் உக்தியாகும். தேவைக்கும் அதிகமான பிரஞ்சு வார்த்தைகள் ஆங்காங்கே வாசிப்பைக் கொஞ்சம் தடைப் படுத்தினாலும் அவற்றை முற்றிலுமாய் நீக்கி எழுதிவிடவும் முடியாதுதான்.

தன்னை மட்டுமின்றி, திருமதி. சுதாராமலிங்கம், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஆகிய வாழும் பாத்திரங்களையும் நாவலோடு இணைத்து எழுதி இருப்பதும், மாலதி மைத்ரி போன்ற சமகால கவிஞர்களின் கவிதை வரிக¨ளை தக்க இடங்களில் கையாண்டி ருப்பதும், பாரதியின் பாதிப்பில் – மழை பற்றிய வருணனையில் – எழுதப்பட்டிருக்கும் வரிகளும், ‘உண்மையையே பேசுகிறேன், உரத்துப் பேசுகிறேன்” என்கிற ஆசிரியரின் ஒப்புதல் வாக்கு மூலம் தேவைப் படாமலே அவரது நேர்மையான, பாசாங்கற்ற பதிவு மனைதக் காட்டுவதாக உள்ளன. இதனால் திரு.நாகரத்தினம்கிருஷ்ணாவின் அடுத்த நாவலை வாசகர் விரும்பித்தேடிப் படிப்பார்கள் என்று நிச்சயம் சொல்லலாம்.

– நூல்: மாதாஹரி
ஆசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா
வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், சென்னை.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்