அயலகத் தமிழ்க் கவிதைகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக ஆய்வரங்கு

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

ஹெச்.ஜி.ரசூல்



தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை சார்பில் ஒருநாள் கவிதை ஆய்வரங்கம் நடைபெற்றது.27 – 01 – 2011 அன்று மொழிப்புல அவையத்தில் நிகழ்வுற்ற இந்த ஆய்வரங்கம் அண்மைக்கால அயலகத் தமிழ்க் கவிதைகள் என்ற பொருளைக் கொண்டிருந்தது.

அயலகத் தமிழ்கல்வித்துறைத் தலைவர் பேரா. ஆ. கார்த்திகேயன் வரவேற்புரை நிகழ்த்தினார்.தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் ம். இராசேந்திரன் தலைமையுரை நிகழ்த்தினார்.புலப் பெயர்வு குறித்த கருத்தாக்கத்தின் பன்முக கருதுகோள்களையும் உரையாடலாக முன்வைத்தார். ஒரு படைப்பின் உருவாக்க்கத்தில் மனத்தின் செயல்பாடு, அகம் மொழிரீதியாக வெளிப்படும் நுட்பம் குறித்தும் சில பதிவுகளை வெளிப்படுத்தினார். தொடர்ந்து துவக்க உரையை கவிஞர் பழமலை நிகழ்த்தினார். தமிழ் கவிதைப்பரப்பில் இன வரைவியலையும் நிலப்பரப்பையும் சனங்களின் கதை மூலம் தமிழுக்கு படைத்தளித்த பழமலையின் பேச்சு அனுபவத்தை கவிதையாக்குதல் குறித்த பரப்பாக இருந்தது. வாழ்நிலை அது புலம்பெயர்ந்ததாக இருந்தாலும் கூட பழமைஞாபகங்களை தாண்டி புகலிடச் சூழலின் வலிகளை படைப்பாக மாற்றுவதில் இருக்கும் சவால்கள் குறித்து கவனப்படுத்தினார்.துவக்கவிழா நிகழ்வுக்கு ஆய்வரங்க அமைப்பாளர் முனைவர் சா. உதயசூரியன் நன்றி கூறினார்.

தமிழ்சூழலின் காத்திரமிக்க எழுத்தாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கின்ற து.இரவிக்குமார் முதல் அமர்வுக்கு தலைமைதாங்கினார்.சொந்த மண்ணைவிட்டு ஐரோபியச் சூழல்களில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்கள் நனவிலிமனக்கூறின் விளைவாக ஆதிக்க உயர்குடிக் கலாச்சார விழுமியங்களைபுகலிடத்திலும் தக்கவைத்துக் கொண்டிருக்கும் சாதியச் சூழலை விமர்சனத் தொனியோடு இனங்காட்டினார்.தொடர்ந்த அவரது ஆய்வுக் கட்டுரை சேரனின் கவிதைகளை விரிவாக ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. அந்த அமர்வில் கனடாவில் வாழும் இளங்கோவின் (டி.சே.தமிழன்)நாடற்றவனின் குறிப்புகள் கவிதைகளை ஹெச்.ஜி.ரசூல் இரண்டாவது ஆய்வுரையாக முன்வைத்தார். இளங்கோவின் கவிதைகளில் தென்படும் தொன்மக்கதையாடல்களின் ஊடாக படைத்துக் காட்டப்படும் மாற்றுப் புனைவுகளை அடையாளப்படுத்தினார். விகாரையிலிருந்து விலகிய புத்தர்,மூலைக்கடை பெஞ்சுத்தெருவில் உட்கார்ந்திருக்கும் யசோதரை, காலப்பெருவெளியில் சடலமான குவேனி ,ஆதியுலகின் நாககன்னி என நீளும் தொன்மங்களினூடாக இவ்வுரையாடல் மெலெழுந்து வந்தது.

முனைவர் செயராமன் கனடாவில் வாழும் மைதிலியின் இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள் கவிதை நூலின் படைப்புகளில் நிகழ்ந்த பெண்ணுடல் அரசியலையும் பாலின ஒடுக்குமுறைக்கு எதிரானகுரலையும் பதிவு செய்தார்.கடலின் நீலத்தை காகிதத்தில் எழுதவே அமர்ந்தேன்/காடுகளில்விஷம்தீண்டி/மரித்த குழந்தைகளின் /நிறமாகித் திரிந்தது கடலென ஈழத் தமிழ்க் குழந்தைகளின் பதுங்கு குழி மரணங்களை கவிதையாக்கிய தமிழ்நதியின் கவிதகள் குறித்து முனைவர் தெ.வெற்றிச் செல்வன் ஆய்வுரையை நிகழ்த்தினார்.மலேசியக் கவிஞர் இக்குவனத்தின் கவிதைமரபு குறித்து முனைவர் இரா.சம்பத்தும்பேசினார்.

இரண்டாம் அமர்வை மலேசிய பெண்கவி ராஜம்ராஜேந்திரன் நெறிப்படுத்தினார்.மலேசியச் சூழலில் புதுக்கவிதை மரபின் துவக்கம் நிகழ்ந்தவிதம் பற்றியும் மேலைஇலக்கியக் தாக்கமும், தமிழக புதுக்கவிதை மரபும் இணந்த நிலையில் உருவான கவிதை எழுத்தின் தொடர்ச்சியை விரிவாக எடுத்துரைத்தார். அப் பின்புலத்தில் இராமுவின் கவிதைகள் குறித்து விரிவாக பேசினார். தொடர்ந்து ஆய்வுரையை துறவிநண்டு மூலம் அறியப்பட்ட தமிழகத்தின் முக்கிய கவிகளிலொருவரும் கதையாளருமான தேன்மொழி ஆதியில் விடுபட்ட கனவு – அனாரின் கவிதைகள் குறித்து விவாதித்தார்.இறுதியாக வெளிவந்திருந்த அனாரின் உடல் பச்சை வானம் உள்ளிட்ட கவிதை நூல்களில் நிகழ்ந்துள்ள மொழி, அனுபவம், புனைவு குறித்த படைப்பாக்க நிலையை இநத ஆய்வு வெளிப்படுத்தியது.

முனைவர் நா.செண்பகலட்சுமி சிங்கப்பூர் கவி கனகலதாவின் கவிமொழி குறித்தும்,முனைவர் இரா.விசயராணி மலேசியக் கவி பிரான்சிஸ் என்னும் நவீன கவி குறித்தும் முனைவர் இரா.பெ.வெற்றிச் செல்வி காசிஆனந்தன் நறுக்குகளில் கவிதை முரண் குறித்தும் ஆய்வுரைகளை வழங்கினார்கள்.முனைவர் உ.பிரபாகரன் சிங்கப்பூர்கவி விசயபாரதியின் நிழல்மடி கவிதைகள் பற்றியும், முனைவர் ஆ.கார்த்திகேயன் கவிதாசன் கவிதைகள் பற்றியும் முனைவர் சா.உதயசூரியன் ஈழத்தமிழின் மஹாகவி குறித்த ஆய்வுப் பிரதிகளும் முன்வைக்கப்பட்டன்.

இறுதி அமர்வுக்கு ஹெச்.ஜி.ரசூல் நெறியாளராக செயல்பட்டார்.முனைவர் ந. ஞானதிரவியம் நகரம் என்னும் வரையறுக்கப்பட்ட வெளிசார் வாழ்வும் பாடுகளும் – கே.பாலமுருகனின் கவிதைகள் பற்றி ஆய்வை நிகழ்த்தினார். பிச்சினிக்காடு இளங்கோவின் இரவின் நரை குறித்து முனைவர் வ.இராசரத்தினம் ஆய்வுரை நிகழ்த்தினார்.தொடர்ந்து கவிஞர் வியாகுலன் ஈழத்து பெண்கவி பஹிமா ஜஹானின் ஆதித்துயர் தொகுப்பை முன்வைத்து பஹிமாஜகான் கட்டமைக்கும் கவிவெளி என்ற தலைப்பில் கவித்துவம் சார்ந்ததொரு ஆய்வுரையை வாசித்தார்.

இந்த ஆய்வரங்கில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் கவிகள்,சிங்கப்பூர் கவிகள்,மலேசியக் கவிகள், மற்றும் ஈழக் கவிகள் என்பதான பன்மை கவிதை எழுத்துவெளிசார்ந்து ஆய்வுரைகள் வாசிக்கப்பட்டன். காலக்குறைவின் காரணமாக சில ஆய்வுரைகள் முழுமையாக வாசிக்கப்பட முடியாமல் போனது. சில ஆய்வாளர்கள் ஆய்வுரைகளை பேச்சுவடிவில் வழங்கினர். அயலக தமிழ்க் கவிதைப் பற்றிய முதற்கட்ட புரிதலை வழங்கிய ஆய்வுக்கட்டுரைகள் விரைவில் நூல்வடிவில் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது. இன்னும் பேசப்பட வேண்டிய உலகத் தமிழ் நவீனக்கவிஞர்களை இனிவரும் ஆய்வரங்குகள் கவனத்தில் கொள்ளுமென நம்பலாம்

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்