அம்ரிதா

This entry is part [part not set] of 27 in the series 20091113_Issue

க.ராஜம்ரஞ்சனி


1
மீண்டும் ஒருமுறை தன்னைத் தானே நிலைக்கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள். அகன்ற நெற்றியில் சிவப்பு நிறம் குங்குமம். நெற்றி வகிட்டிலும் சிறிதளவு குங்குமம். அழகாய்தான் தெரிந்தாள். நாற்பது வயது ஆகிவிட்ட உடல் தன் அகவையை புறத்தோலின் மூலம் உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. அவளது கண்கள் கண்ணாடியில் தெரியும் குங்குமத்தின் மீதே இருந்தது. பார்த்தது போதும் என தோன்ற குளிக்க சென்றாள். நீல நிற சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டாள். நிலைக்கண்ணாடியின் முன் நின்றவள் எப்போதும் போல நெற்றியில் கறுப்பு நிற ஸ்டிக்கர் பொட்டை வைத்தாள். இப்போதும் கூட அழகாய்தான் தெரிந்தாள். துணிப்பையில் தூக்க முடிந்த அளவு மட்டும் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டாள். கையில் மாட்டிக் கொள்ளும் வகையில் இருந்தது அந்தத் துணிப்பை. மற்றவர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தாவண்ணம் இருப்பதற்கு இதுவே நல்லது என்றும் தோன்றியது. கையில் பிடித்துச் செல்லும் துணிப்பையை எடுத்துச் சென்றால் பார்ப்போருக்கு எளிதாக சந்தேகம் பிறந்து அதைத் தொடர்ந்து ‘எங்க கெளம்பிட்ட அம்ரிதா?’, ‘எங்கயோ கெளம்பிட்ட மாதிரி தெரிது..’ என ஏதாவதொன்றைக் கண்டிப்பாக எதிர்கொள்ள நேரிடும். இங்கே பார்ப்போர் என சொல்லபடுவது அண்டைவீட்டார் முதல் பேருந்து நிலையம் வரையிலும் சந்திக்கும் அறிமுகமானவர்கள். சந்திக்க விரும்பா தருணத்தில்தான் பலரை எதிர்பாராவிதமாய் சந்திக்கும் தருணங்கள் அமைந்துவிடுகின்றன. அம்ரிதாவை அறிந்தவர்கள் அவள் வேலை, வீடு தவிர எங்கேயும் செல்லாதவள் என்றும் அறிந்தவர்கள். வெளியே செல்ல வேண்டியிருந்தாலும் தன் தம்பி குடும்பத்தினருடன் செல்வாள் என்பதும் தெரிந்தவர்கள். ‘கடவுளே, யார் கண்ணிலும் நான் படக்கூடாது’ வேண்டிக்கொண்டாள். அலமாரியைத் திறந்தவள் அங்கிருந்த வங்கிக் கணக்குப் புத்தகத்தை எடுத்து முதல் பக்கத்தைப் புரட்டினாள். தன்னுடைய வங்கிக் கணக்கு என்பதைக் கணினியில் அச்சிடப்பட்டிருந்த தன் பெயரைக் கொண்டு சரி பார்த்துக் கொண்டாள். அதையும் பத்திரமாக தன் துணிப்பையினுள் சொருகினாள். பக்கத்து அறைக்குச் சென்றவளின் நடையில் துரிதம் காணப்பட்டது. தாய் தந்தையரின் படத்தின் முன் மண்டியிட்டு அமர்ந்தவளின் கண்களில் இருந்து நீர் சுரந்து கன்னங்களின் வழிந்தது. ‘நான் செய்றது தவறுனா என்னை மன்னிச்சிடுங்க. ஆனா நான் தவறு செய்யலப்பா, நான் தவறு செய்யலம்மா..’ ஏதேனும் பதில் கிடைக்குமா என்ற ஏக்கத்தினூடே அவளின் பார்வை அந்த படங்களில் நிலைகுத்தி நிற்க, மௌனமாகவே அவர்களின் பார்வையும் இவளிம் மீதே நின்றிருந்தன.

2
‘இந்த மாப்ள ரொம்ப நல்லவரும்மா.. இன்னைக்கு உன்ன பொண்ணு பாக்க வர்றாங்க..’ அப்பாவின் பேச்சு குதூகலமாய் ஒலித்தது. பெண் பார்க்கும் படலம் முடிந்து ஒரு வாரத்திற்குப் பின் அப்பாவின் குதூகலம் மறைந்திருந்தது. ‘நீ கவலபடாதம்மா.. உனக்கு ராஜா மாதிரி மாப்ள பாக்கறேன்’ என்றவரின் தேடல் பத்து வருடங்களுக்குப் பின் அவரின் மரணத்தின்போது தோல்வியடைந்தது. அந்தத் தேடலை அம்மா தொடர்ந்தார். ஏழு வருடங்களுக்குப் பின் அவரின் தேடலும் முற்றுப்பெறாமலே அவரின் மரணத்தோடு தடைப்பட்டது. முதல் மாப்பிள்ளை முன்வைத்த ‘கறுப்பு’ என்ற காரணத்தை மறைத்திருந்தார் அப்பா. ஆனால் தொடர்ந்து வந்த மாப்பிள்ளைகள் எல்லோரும் இதே காரணத்தைத் தவறாமல் சொன்னபோது சீதாவும் தெரிந்துகொண்டாள். காரணத்தை முன்வைத்தவர்கள் அனைவரும் இவளின் நிறம்தான் என்பது இங்குக் குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம்.
தாய் தந்தையரின் படத்தைத் தொட்டு வணங்கி கண்களில் ஒற்றிக்கொண்டவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள். தம்பியும் குடும்பத்தார் திரும்புவதற்குள் வீட்டிலிருந்து வெளியாகிட எண்ணியவளாய் எழுந்தாள்.
‘அக்கா நீங்களும் வாங்க.. நம்ம அத்தை பொண்ணு கல்யாணம். எல்லாரும் கேட்பாங்க..’
‘இல்ல முரளி.. எனக்கு ஒரே தலைவலியா இருக்கு. ஏன்னு தெரில. கொஞ்ச நேரம் மருந்து சாப்டு படுக்கனும். நீங்க எல்லாரும் போய்ட்டு வாங்க..’ மனதில் ஏற்பட்டிருந்த வலியைத் தலையின் மீது சுமத்தினாள். பழியைச் சுமந்த தலை மறுகணமே வலிக்க ஆரம்பித்தது. ‘சரிக்கா..’ அக்காவின் மனதின் வலியை அறிந்தவனாய் அதற்கு மேலும் ஏதும் சொல்ல இயலாதவனாய் மனைவி, பிள்ளைகளுடன் திருமணதிற்கு சென்றிருந்தான்.
கடந்த ஒரு வருடமாகவே எந்தவொரு நிகழ்வுகளிலும் அம்ரிதா கலந்து கொள்ளவில்லை. வேலை, உடல் நலமின்மை என ஏதாவதொரு காரணம் அவளுக்குக் கைக்கொடுத்தது. ‘உங்க அக்காவுக்கு எங்காச்சும் போறப்ப சீக்கு வந்துடுது’ ஒரு முறை தம்பி மனைவி கேலியாய் சொன்னது இப்போது ஞாபகம் வந்தது.

3
பிற்பகல் ஒரு மணி பயணச் சீட்டு. கைக்கடிகாரத்தில் இருந்த நிமிட முள் ஏழாம் எண்ணில் நின்றிருந்தது. ‘இன்னும் இருவதைஞ்சு நிமிஷம் இருக்கு..’ மெதுவாக முணுமுணுத்துக் கொண்டு அங்கே காணப்பட்ட பயணிகள் காத்திருக்கும் இருக்கைகளைக் கண்ணோட்டமிட்டாள். காலியாயிருந்த இருக்கை கண்ணில்பட அதில் அமர்ந்துகொண்டாள். பக்கத்து இருக்கையில் மற்றொரு குடும்பம். அந்தப் பெண் கறுப்பாயிருந்தாள். கணவனும் கறுப்புதான். பெண் பிள்ளை ஒன்றும் ஆண் பிள்ளை ஒன்றும் விளையாடிக் கொண்டிருக்க அவளது மடியில் இன்னொரு ஆண் குழந்தை இருந்தது. பிள்ளைகள் மூவரும் தாய்தந்தையரின் முகசாயலையும் நிறத்தையும் கொண்டிருந்தனர். விளையாடும் பிள்ளைகளின் மீது கவனமாயிருந்தான் அந்தப் பெண்ணின் கணவன். அவ்வப்போது கணவனும் மனைவியும் ஏதோ பேசி சிரித்துக் கொண்டனர். ‘கறுப்பான ஒரு பெண் மனைவியாகி, தாயாகி இருக்கிறாள்… கொடுத்து வைத்தவள்.. முன்பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்..’ என வார்த்தைகள் மனதில் அணிவகுக்க அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவளும் பதிலுக்குப் புன்னகைத்தாள். காத்திருந்த பேருந்து வர ஏறி அமர்ந்து கொண்டாள். ஐந்து மணி நேர பயணத்திற்குப் பின் அவள் நோக்கிய திசையை அடைந்திருந்தாள். கைப்பையினுள் எழுதி வைத்திருந்த துண்டு காகிதத்தை எடுத்துப் பத்திரப்படுத்தி கையில் திணித்துக் கொண்டாள். வாடகை வண்டியின் ஒட்டுனரிடம் காண்பித்தாள்.
‘இந்த அட்ரஸ் ரொம்ப தூரமா தம்பி ?’ காரினுள் அமர்ந்தவாறே கேட்டாள். இதற்கு முன் வந்தேயிராத ஒரு மண்ணில் கால் வைத்தவளின் கேள்வியாய் அது வெளிப்பட்டது.
‘இல்லக்கா.. முப்பது நிமிஷந்தான். அக்கா, இந்தாங்க ஸ்வீட் எடுத்துக்குங்க..’ காரை சமிக்ஞை விளக்கின் போது நிறுத்தியபோது சாக்லேட்டை பின் இருக்கையில் அமர்ந்திருந்தவளிடம் நீட்டினான்.
‘என்னய்யா விஷேசம் ? கையில் ஒரு சாக்லேட்டை எடுத்துக் கொண்டாள்.
‘எனக்கு இன்னிக்கு கொழந்த பொறந்துருக்கு.. பொண் கொழந்த..’
‘ரொம்ப சந்தோஷம்யா. மொத கொழந்தயா?’
‘ஆமாக்கா..’ காரைச் செலுத்தியவாறே பதிலளித்தான். ‘இதான்க்கா என்னோட வைப்..’ காரின் வானொலி விசைக்கருகே இருந்த சிறு இடத்தில் அவனும் அவன் மனைவியும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. இருவருமே கறுப்பு. ‘புண்ணியம் செய்தவள்.. மனைவியாகி தாயாகி.. கடவுளே எப்போதும் இவங்க சந்தோசமா இருக்கனும்…’ அம்ரிதாவின் மனம் பிரார்த்தித்துக் கொண்டது.
‘அக்கா, இதான் நீங்க தேடுன அட்ரெஸ்…’ காரிலிருந்து இறங்கிக் கொண்டாள்.

4
ஒருமுறை காகிதத்தில் உள்ள முகவரியையும் வீட்டின் முன் உள்ள முகவரியையும் ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்து கொண்டாள்.
‘நான் அம்ரிதா, போன வாரம் உங்களுக்குக் கால் பண்ணி பேசனேன்.. நீங்க என்ன வர சொன்னீங்கம்மா..’
‘ஓ… ஆமாம்மா.. உட்காரு..’ வயது முதிர்ந்த பெண்மணி. மாநிறம். சாதரண நூல் புடவை அணிந்து மங்களகரமாய் இருந்தார்.
‘உனக்கு இங்க வேல வேணும்னு கேட்டியேம்மா.. உனக்கு உண்மையிலேயே இந்த வேல பிடிக்குமா? இல்ல குடும்ப சூழ்நில காரணமா சம்பாதிக்கனுமா?’
‘உண்மையிலேயே எனக்கு இந்த வேல புடிக்கும்மா.. எனக்கு நீங்க சம்பளம் ஏதும் தரலானாலும் பரவால.. ஆனா நான் இங்க இருந்து என்னால முடிஞ்ச வேல செய்றேன். எனக்கு இங்க வேல குடுங்கம்மா’ கெஞ்சினாள் அம்ரிதா.
‘சரிம்மா.. நீ இங்க வேல செய்யலாம். நாங்க குடுக்கற சம்பளம் கொறவாதான் இருக்கும். ஆனா நீ அத எடுத்துக்கணும். சரியா?’
‘அதப்பத்தி பிரச்சனையில்லம்மா.. நான் இங்கயே இவங்களோடயே தங்கனும். எனக்கு அதான்மா ஆசை. முடியுமாம்மா?’
‘கண்டிப்பா முடியும். நீ இங்கயே தங்கிக்கம்மா. இவங்ககூடவே இரும்மா..’ அம்ரிதாவின் கெஞ்சல் அவரின் மனதை வருடியிருக்க வேண்டும்.
‘அம்மா… இன்னிக்கே என் வேலைய ஆரம்பிக்கவா?’
‘களைப்பாயிருக்குமே.. நாளைக்கு ஆரம்பிக்கலாம்..பரவாலம்மா.’
‘இல்லம்மா. எனக்குக் களைப்பா இல்ல. இன்னிக்கே ஆரம்பிக்கிறேன்’
‘சரிம்மா.. அப்படினா உன் விருப்பம்.’
‘மல்லிகா, இது அம்ரிதா. நம்மக்கூட இனிமே இவங்களும் இருப்பாங்க. இவங்க தங்க ரூம் காட்டுங்க.’ அம்ரிதாவின் வயதையொத்த பெண்மணியிடம் அறிமுகப்படுத்தினார்.
‘வாங்க’ என்றழைத்த மல்லிகாவைப் பின்தொடர்ந்தாள் அம்ரிதா.
‘மல்லிகா, ரொம்ப நாளா இங்க வேல செய்றீங்களா?’
‘ஆமாம். ஆறு வருஷமா வேலை செய்றேன்’
‘இங்கதான் தங்கறீங்களா?’
‘இல்ல அம்ரிதா.. என் வீடு பக்கத்துலதான் இருக்கு. வேலை செஞ்சுட்டு போயிடுவேன். வீட்டுகாரு கம்பெனில வேலை செய்றாரு. மூனு புள்ளைங்க படிக்கனும். அவரோட சம்பளம் மட்டும்னா கஷ்டம். அதான் கொறைஞ்ச சம்பளமா இருந்தாலும் இங்க வேலை செய்றேன்.’
மல்லிகா கறுப்பாகதான் இருந்தாள். அவள் மனைவியாகி தாயாகி இருந்தாள். ‘புண்ணியம் செய்தவர்.. கடவுளே எப்போதும் இவங்க நல்லா இருக்கனும்’ அவளின் மனம் வேண்டிக்கொண்டது. அறையில் தன் துணிப்பையை வைத்தவள் குளித்து முடித்து தன் வேலையைத் துவங்க எத்தனித்தாள்.
அவள் மனம் எல்லற்ற மகிழ்ச்சியை அடைந்தது; பேரானந்தத்தில் மிதந்தாள். அழுது கொண்டிருந்த பெண் குழந்தையை வாரி அணைத்துத் தூக்கிக் கொண்டாள். தன்னால் முடிந்த வரை முயன்று அழுகையை நிறுத்திய கணம் இன்னும் மனம் ஆனந்த நர்த்தனமாடியது. சுற்றியிருந்த பிஞ்சு குழந்தைகள் அவளை அன்பாய் நோக்குகையில் ஒருவித பரவசம் அவளுள் பரவியது. தாயின்றி தந்தையின்றி தெய்வக் குழந்தைகள் இனி தன்னைத் தாயாய் பார்க்கபோவதை அவள் மனம் எண்ணி எள்ளற்ற உவகையடைந்தது. ‘நானும் புண்ணியம் செய்தவள்..நானும் முன்ன பிறவில புண்ணியம் செஞ்சுருக்கணும்.. நானும் தாயாயிட்டேன்..’

க.ராஜம்ரஞ்சனி
மலேசியா
ktrajamranjini@yahoo.co.in

Series Navigation

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா