அம்மா வந்தாள்: மரபும் மனப்போராட்டமும்

This entry is part [part not set] of 24 in the series 20011215_Issue

பாவண்ணன்


ராபர்ட் ஃப்ராஸ்ட் என்னும் கவிஞரின் முக்கியமான ஒரு கவிதையின் தலைப்பு ‘வேலியைச் சரிசெய்தல் ‘ என்பதாகும். அதில் வரும் ‘நான் வேலியிடுவது என்னைச் சிறைப்படுத்தவா அல்லது பாதுகாக்கவா ? ‘ என்னும் வரி ஆழ்ந்த சிந்தனையை எழுப்பவல்லது. இவ்வரிகளில் நவீனமனிதனின் பிரச்சனை துல்லியமான ஒரு சித்திரமாகத் தீட்டப்பட்டுள்ளது. மனித இனம் காலம் காலமாக இத்தகு ஒரு பிரச்சனையைச் சந்தித்தபடி வந்துள்ளது. வேலியைச் சிறை என்று நினைத்து உதறியவனுக்கு வேலி எவ்வளவு பெரிய பாதுகாப்பு என்று உணரும் வகையில் சம்பவங்கள் நடந்துள்ளன. வேலிபே பெரிய பாதுகாப்பு என்று நினைத்தவனுக்கு, அது எவ்வளவு பெரிய கொடுஞ்சிறை என்று வருந்தித் துயரம் கொள்ளும் வகையிலும் சம்பவங்கள் நடந்துள்ளன. வேலியே இல்லாமல் இருப்பது சிறந்ததாக இருக்கலாம். ஆனால் அப்படி இருக்க முடிவதில்லை. அச்சம் தடுக்கிறது. அச்சத்தின் காரணமாக அந்த வேலி நடுவில் வாழ்வை அமைத்துக் கொள்கிறோம்.

வெட்டவெளியில் கைவீசி நடப்பது உற்சாகமாக இருக்கிறது. காற்று நம்மைத் தழுவிச் செல்லும்போது ஆனந்தமாக இருக்கிறது. நதியின் கரையில் பாதங்கள் நனையும்போது சிலிர்க்கிறது. எதிர்பாராத விதங்களில் மழைத்துளிகள் படும்போது உண்மையிலேயே குழந்தைகளாக மாறிவிடுகிறோம். ஆனாலும் நமக்கு வெட்டவெளியில் அலைவதோ தங்குவதோ இயலாததாக இருக்கிறது. நமக்கெனத் தனியே ஒரு வேலி தேவைப்படுகிறது. வேலிக்குள்ளிருந்தபடி வீசும் காற்றை உள்ளிழுக்கும் போது நிம்மதியாக இருக்கிறது. திண்ணை வரை ஏறிவரும் வெயிலைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. வேலிக்குள் இருக்கிற ஒவ்வொரு மரம் செடி கொடிகளையும் துல்லியமாக நினைவில் வைத்துக் கொள்கிறோம். நம் வீட்டுக்குப் பின்னால் ஓடும் நதித்தண்ணீரில் கால் நனைக்கும்போது கூடுதலான மனஅமைதி கிடைக்கிறது. வெயில், காற்று, மரம் , செடி, கொடி எதுவாக இருந்தாலும் வேலிக்கு வெளியே உணர்ந்து மனம் கொள்ளும் நெகிழ்ச்சியை விட வேலிக்குள்ளேயே உணர்ந்து மனம் கொள்ளும் நெகிழ்ச்சி அதிகமாகும். அதுவே நிம்மதியுணர்வைக் கொடுக்கும் வகையில் பழகி விட்டிருக்கிறது மனம். அதாவது எங்கெங்கும் நிறைந்திருக்கிற ஒன்றை நம் வேலிக்குள் கிட்டுகிற அளவே அதன் பரிமாணம் என்கிற எண்ணத்தில் அனுபவித்து மகிழ்கிறோம். நதியை விட ஒரு செம்பு நீர் உயர்ந்தது என்கிற எண்ணம் ஆழமாகப் பதிந்துவிட்டது. எங்கெங்கும் நிறைந்திருக்கிற ஒன்றைச் சுருக்கி, அடையாளப்படுத்தி, உயர்வுபடுத்தி, ஒடுங்குகிற முரண் முக்கியமானது.

மரபுகள் கூட ஒருவகையில் நமக்கு வேலிகளே. தொகுக்கப்பட்டு, கட்டாயப் படுத்தப்பட்டு, நடைமுறைக்கு வந்த பழக்கவழக்க வாழ்க்கை முறைகளைத்தான் மரபு என்று குறிப்பிடுகிறோம். தேர்வுகளுக்கு மாதிரி வினாத்தாள் கிடைத்து விடுவது போல இம்மரபு வழிகளில் பழகிய செயல்முறை நமக்கு முன்மாதிரியாக உடனடியாகக் கிடைத்து விடுவதால் பல கேள்விகளை எதிர்கொள்வது எளிமையாகி விடுகிறது. பழகிப் பழகி, மரபுகள் சுட்டிக் காட்டுகிற பழக்க வழக்கங்களே மனிதமரபு என்கிற மயக்கத்துக்கு ஆட்பட்டு விடுகிறோம். மனித மரபு, நாம் வரித்துக் கொண்ட மரபுகளை விட விரிவானது என்கிற நிதானத்தை இழந்து விடுகிறோம். மனித மரபை விட நாம் கட்டிக் காத்து வரும் மரபே உயர்வானது என்கிற எண்ணத்துக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். அதனால் நாம் வாழும் எதார்த்த மரபுச்சூழலில் விடை அறிய முடியாத கேள்வியொன்றை எதிர்கொள்ளும்போது தடுமாறுகிறோம். அதை மனிதமரபிலும் வரலாற்றிலும் வைத்துப் பார்ப்பதற்கு மாறாக, நமக்குப் பழகிய மரபின் பின்னணியில் மட்டும் பார்த்து உடனடியாக ஒரு குற்றப் பத்திரிகையை வாசித்து விடுகிறோம். குற்றம் சுமத்தி பிரச்சனைக்குரிய ஒன்றை வேலிக்கு மறுபக்கம் தள்ளினால்தாம் நமக்கு நிம்மதி ஏற்படுக்ிறது. மரபுக்கு நம்மால் எந்தக் களங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்கிற அச்சமும் அப்படி நேரும்போது அதைத் தொலைத்துக் கழுவி மரபைத் துாய்மை செய்ய வேண்டியது நம் கடமை என்றும் அப்பாவித்தனமாக நம்பி விடுகிறோம்.

‘அம்மா வந்தாள் ‘ நாவலில் மரபின் முன்னிலையில் இரண்டு கேள்விகள் எழுகின்றன. இரண்டையுமே எதிர்கொள்கிறவன் அப்பு. தாயாரான அலங்காரத்தம்மாளின் கூடா ஒழுக்கம் ஒரு கேள்வி. விதவையான இந்துவின் அன்பை ஏற்றுக் கொள்வது எப்படி என்பது இரண்டாவது கேள்வி. இரு கேள்விகளுமே பெண் சார்ந்தவை. எதிர்கொள்பவன் ஆண். வேதங்களின் உண்மையையும் அழகையும் பதினாறு ஆண்டுகள் தொடர்ச்சியாக விடாமல் படித்துத் தெரிந்து கொண்ட ஓர் ஆண்.

இரண்டு கேள்விகளாலும் உடனடியாக அவன் நிலைகுலைந்து விடுகிறான். எவ்வளவுதான் வேதம் படித்து உண்மையின் நுட்பம் புரிந்தவனாக இருந்தாலும் சராசரியான வாழ்க்கை மரபில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கக் கூடிய மற்றவர்களைக் காட்டிலும் மிக அதிக அளவு நிலைகுலைந்து விடுகிறான். எட்டு வயதில் அப்பா கொண்டு வந்து விட்டபோது இருந்த மனநிலையிலேயே அவன் பதினாறு ஆண்டுக் காலம் ஓட்டி விடுகிறானே தவிர, அந்த எட்டு வயது மனநிலை அவனிடம் மாறவே இல்லை. எட்டு வயதில் சக மாணவர்கள் காட்டாமணக்குச் செடி மறைவில் புகைபிடித்துக் கொண்டு உட்கார்ந்த போது உதட்டைக் கடித்து, விசித்து, விம்மி அழுது தீர்த்த அதே அப்புவைத்தான் பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு தாயாரின் உறவுச் சிக்கலை அறிந்து குமுறி அழுகிறவனாகவே பார்க்கிறோம்.

முக்கியமான இரண்டு கேள்விகளை மரபின் முன்வைத்து விடைகாண முயல்கிற தி.ஜானகிராமன் இக்கேள்விகளுடன் மற்றவர்கள் மோதல் கொள்ளும் விதத்தைத் தவிர்த்த காரணம் புரியவில்லை. யாருடைய மனமும் திறந்து காட்டப்படவில்லை. ‘ஒன்னையும் புரிஞ்சிக்க சிரமப்படக் கூடாது. பேசாமல் பார்த்துண்டே இருக்கணும். அதுக்காகத்தான் நம்மைப் படைச்சிருக்கார் ‘ என்று மகனிடம் ஒரேஒரு முறை வாய்திறந்து பேசுகிறார் அப்புவின் தந்தை. பிறகு வேறொரு இடத்தில் சிவசுவை மீசை மழித்த தன் தம்பி என்று எண்ணி மயங்கி அப்பு சொன்ன வார்த்தை ஒன்றை வைத்து வீட்டுக்குள் உரையாடல் நிகழும்போது ‘சந்தோஷ வெறியில் அந்தப் பின்னணியை உள்வாங்கினார் ‘ என்று அவரது எதிர்வினை குறிக்கப்படுகிறது. அவ்வளவுதான். அவர் மனக்கதவுகள் அப்புறம் திறப்பதே இல்லை. வீட்டில் இருக்கிற மருமகளும் மற்ற பிள்ளைகளும் அதைப் பற்றி வாயைத் திறப்பதே இல்லை. குறைந்தபட்சமாக, அப்படி ஒரு சூழல் எத்தகு நிலையில் உருவாயிற்று என்று அலங்காரத்தம்மாளே கூட மனத்தைத் திறப்பதில்லை. தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் சேலத்து மகளும் சித்தாபுரத்து இந்துவும் கூட ஒரு சிறிய சீறலோடு நிறுத்திக் கொள்கிறார்கள். எல்லாருமே சொல்லி வைத்தமாதிரி மனத்தைப் பூட்டிக் கொள்கிறார்கள். பேசி விவாதிக்கப்பட வேண்டிய கேள்விகளை முன்வைத்துவிட்டு எந்த விவாதமும் நிகழாமல் போவது இந்த நாவலில் துரதிருஷ்ட வசமானது.

மரபின் முன் கேள்விகளை வைத்து விவாதித்த பல நாவல்களை வாசித்த மனநிலையில் ஏஅம்மா வந்தாள்ஏ நிராசையையே கொடுக்கிறது. உடனடியாக நினைவுக்கு வருவது டால்ஸ்டாயின் ‘அன்னா கரினினா ‘, நத்தானியோல் ஹாத்தானின் ‘அவமானச் சின்னம் ‘, பைரப்பாவின் ‘வம்சவிருட்சம் ‘, யு.ஆர்.அனந்த்முர்த்தியின் ‘சம்ஸ்காரா ‘ ஆகியவை. இந்த நாவல்கள் ஒவ்வொன்றிலும் இப்பிரச்சனையைப் பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது, சம்பிரதாயம் என்ன சொல்கிறது, ஐதிகம் என்ன சொல்கிறது, என்றெல்லாம் விரிவாகத் தொடர்ந்து ஆராயப்பட்டு மனச்சாட்சி என்ன சொல்கிறது என்னும் இறுதி விடையை நோக்கி நகர்வதைக் காணலாம். ஆனால் அம்மா வந்தாள் நாவலில் கேள்விகள் முன்வைக்கப்பட்டதும் அவற்றின் கொந்தளிப்பு அடங்கும் முன்னால் கேள்விகள் எழக் காரணமாக இருந்த பாத்திரம் நாவல் சட்டகத்திலிருந்தே வெளியேறி விடுகிறது. போகும் முன்பு ‘நீ ரிஷியாயிட்டே, உன் காலில் விழுந்து எல்லாவற்றயும் பொசுக்கிண்டு விடலாம்ன்னு நெனச்சேன். நீயும் அம்மா பிள்ளையாவே இருக்கே ‘ என்று சொல்லிவிட்டுச் செல்கிறாள். ‘அம்மா பிள்ளையாவே இருக்கே ‘ என்கிற வார்த்தை முக்கியமாகப் படுகிறது. இருபத்திநாலு வயசில் வேதங்களை மனத்திலேற்றிச் சோதியாக ஒளிரும் ஒருவனைப் பார்த்து ஒன்றும் தெரியாத கைக்குழந்தையாகவே இருப்பதாகச் சொல்வதாக எடுத்துக் கொள்வதா அல்லது அம்மா செய்த அதே மரபுப் பிழையையே அவனும் செய்ய இருப்பதால் மன்னிக்கிற தகுதி அவனுக்குப் போய் விட்டது என்று சொல்வதாக எடுத்துக் கொள்வதா என்ற குழப்பம் எஞ்சும் வகையில் இருக்கிறது அந்த வார்த்தை. இத்தனைக்குப் பிறகும் இந்து தனக்கு வேண்டும் என்று நேர்மையாக உணரும் மனம் அவனுக்கு வரவில்லை.

மனம் என்பது மிக வேகமாக இயங்கக் கூடிய ஒரு எந்திரம் போன்றது. அது கொள்ளும் ஒவ்வொரு சந்தேகமும் அது எழுப்பும் ஒவ்வொரு கேள்வியும் மிக முக்கியமானவையாகும். சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளும் தெளிவுக்காகவும் கேள்விக்கான விடையை நோக்கியும் அது உடனே இயங்கத் தொடங்குகிறது. இவற்றைத்தாம் நாம் அறிவு என்று சொல்கிறோம். எல்லாச் சந்தேகங்களுக்குமான தெளிவுகளையும் எல்லாக் கேள்விகளுக்குமான விடைகளையும் கொண்டிருப்பது ஆன்ம அறிவு என்பது மரபின் நம்பிக்கை. நம் அறிவின் போதாமையால் விடைகாண முடியாத கேள்விகளுக்கும் விடைகளை ஏந்தியபடி ஆன்ம அறிவு பொறுமையுடன் காத்திருக்கிறது. ஆன்ம அறிவையும் நம் அறிவையும் இணைக்கும் கயிறு தவம் என்று சொல்வதுண்டு. தியானம் என்றும் சொல்வதுண்டு. தவத்தின் மூலமும் தியானத்தின் மூலமும் நமக்குக் கிட்டுகிற விடை என்பது அறிவிலும் அன்பிலும் தோய்ந்த விடை என்பதால், அது எப்போதும் மன்னிப்பை வழங்குகிறது. காரணம் நம் அறிவுக்கு வேலிகள் உண்டு. ஆன்ம அறிவுக்கு வேலிகள் இல்லை. வேலியற்று எல்லையற்று விரிந்திருக்கும் ஆன்ம அறிவு இரக்கத்தின் ஊற்றாகவும் அன்பின் விரிவாகவும் இருப்பதில் ஆச்சரியமில்லை. வேதங்கள் அனாதியானவை. காற்றிலே மிதந்தபடி இருப்பவை. காற்றில் மிதந்த வார்த்தைகளைத் தியானத்தின் ஆற்றலால் பற்றிய மானுடனின் ஆற்றலால் வரிகளானவை. வேதங்கள் பயில்கிறவனால் அந்தத் தியானத்தின் ஆற்றலை அடைய முடியும் என்று அலங்காரத்தம்மாள் நம்பியிருக்கலாம். அத்தகையவன் ஆன்ம அறிவுடன் ஒளிர முடியும் என்று அவள் நம்பியிருக்கலாம். அத்தகைய ஆன்ம அறிவை அவள் நெருப்பு என்றும் அந்த நெருப்பின் முன்னிலையில் தன் பிசகைச் சொல்லிப் பொசுக்கிக் கொள்ளலாம் என்று ஆசைப்பட்டிருக்கலாம். அந்த ஆன்ம அறிவு மட்டுமே மன்னிப்பை வழங்கும் என்று அவள் உறுதியுடன் நம்பியிருக்கலாம். மன்னிப்பை வழங்கத் தயாராக இல்லாமல் பார்ப்பதைக் கூடத் தவிர்த்துத் தவிர்த்துச் சின்னப் பிள்ளை மாதிரி ஓடக்கூடிய மகனைப் பார்த்து அவள் ஏமாற்றத்துக்கு ஆளாகியிருக்கலாம். அதனாலேயே தன் மனத்தை யாரிடமும் திறந்து காட்டாமல் தனது நம்பிக்கை மரபுக்கு உகந்த கருமம் தொலைக்கும் பூமியாகிய காசியை நோக்கி நகர்ந்து விட்டிருக்கலாம்.

ஒரு கேள்வியை நாம் எதிர்கொள்ளும்போது, அக்கேள்விக்கு விடை சொல்வதை நம் கடமை என்பதை நாம் உணர வேண்டும். அதை ஒரு கட்டளையாக எடுத்துக் கொள்ள வேண்டும். அச்சமயத்தில் நம் விடை எவ்வளவு அற்பமானதாலும் அதைச் சொல்ல வேண்டியது நமது கடமை. அது மிக முக்கியமானது. அதிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. விடையளிப்பதை ‘கர்மா ‘ என்றால் விடையளிப்பதிலிருந்து தப்பிப்பது ‘அகர்மா ‘ ஆகும். கர்மா நிலையில் மனப்போராட்டமும் சஞ்சலமும் இருப்பதால் அவற்றையும் ஒருவகையில் செயல் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். தன்னை நோக்கி வந்த கேள்விக்கு விடை தேடுவது அப்புவுக்குத் துன்பமாக இருக்கிறது. அவன் பதற்றத்தில் அவதிப்படுகிறான். ஒவ்வொரு கணத்தையும் துயரமாக மாற்றி விடுகிறது. வலுவான வைதிக நம்பிக்கைகளோ மரபின் பிடிப்போ இல்லாத ஒரு சாதாரணன் ‘இதெல்லாம் கடவுள் வைத்த சோதனை ‘ அல்லது ‘கடவுளின் லீலை ‘ என்று சொல்லி அரவணைத்துக் கொள்கிற சகஜ நிலையைக் கூட வேதம் படித்த அப்புவால் அடைய முடியவில்லை. காசிக்கு வண்டியேறுகிற அம்மாவிடம் ‘உன்னை விட்டு அப்பாவால் இருக்க முடியாதேம்மா ‘ என்று சொல்லத்தான் அவனுக்கு வாய்வருகிறதே தவிர உன்னை விட்டு என்னால் இருக்க முடியாதேம்மா என்று ஒரு வார்த்தை சொல்ல வரவில்லை. ‘இத்தனை ஆண்டுகள் உன்னைப் பிரிந்திருந்ததே போதும், போக வேண்டாம் அம்மா ‘ என்று ஒரு சாதாரண மனிதனாகச் சொல்லித் தடுக்க நாக்கு வரவில்லை. ஆன்ம அறிவின் தீண்டலால் அவள் பிசகைப் புறக்கணித்து அரவணைத்துக் கொள்ளவும் முடியவில்லை. ‘நீயும் நானும் இந்துவுமாகச் சேர்ந்து இந்தப் பள்ளியை நடத்திச் செல்லலாம் அம்மா ‘ என்று அம்மாவை வண்டியிலிருந்து இறக்கிக் கொள்ள மனமில்லாமல் அமைதியாக இருந்து விட்டு சூதாடிகள் போல நாங்கள் ஏமாற்றுகள் புரிந்திருக்கலாம். அவற்றை நீக்கி விடு ‘ என்று வருணனை நோக்கி மந்திரம் சொல்கிறான். மன்னித்துக் காப்பாற்ற வேண்டியவன் அப்பு. ஆனால் மன்னிக்கிற பொறுப்பை வருணன் மீது சுமத்திவிட்டு வேலிக்குள் வந்து நின்று விடுகிறான் அப்பு. விதவையான இந்துவை மணம் செய்ய இடம்தராத மரபின் முன்னால் இந்துவை எப்படி ஏற்றுக் கொள்வான் ? இருட்டிலும் கதவின் பின்னாலும் கட்டிப் பிடித்துக் கதகதப்பூட்டும் அவள் தழுவல் மட்டுமே அவனுக்குப் போதுமோ ? எட்டாக் கனியாக இந்துவும் ஒதுக்கப்பட்ட கனியாக அலங்காரத்தம்மாளும் வேலிக்குப் புறத்தே போனபிறகு, வேலிக்குள் இருந்து அப்பு சாதிக்கப் போவதென்ன ? இந்தக் கேள்விகளை நாம்தாம் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. புராண காலத்தில் அகலிகைக்குக் கிடைத்த மன்னிப்பு கூட அலங்காரத்தம்மாளுக்கு ஏன் கிடைக்கவில்லை ? மன்னிக்கத் தெரியாத மரபு மனிதர்களுக்கு எதற்காக வேண்டும் ? மனத்துக்குள்ளேயே விழுங்கிக் கொள்வதன் வழியாக, ஏதோ ஒருவகையில் அரவணைத்தபடி அந்தக் குடும்பமே பதினாறு ஆண்டுகள் இயங்கும் போது, வேதம் படித்த வித்து மட்டும் தடுமாறிப் போவது ஏன் ?

பெரும்பாலான செயல்களைத் தவறு என்றும் சரியென்றும் அணிபிரித்து அணுகுவது மரபின் பார்வையிலிருந்து சரியாக இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமான வாழ்வின் பார்வையில் எதுவுமே முழுக்க முழுக்கச் சரி என்று ஏற்கப்படுவதில்லை. முழுக்க முழுக்கத் தவறு என்று நிராகரிக்கப்படுவதுமில்லை. அதன் அமைப்பில் மேட்டுக்கும் இடரூண்டு. பள்ளத்துக்கும் இடமுண்டு. ரோஜாவுக்கும் இடமுண்டு. முள்ளுக்கும் இடரூண்டு. அனைத்துமே மதிப்புக்குரியவை. அனைத்தையும் தன்னகத்தே கொண்ட வாழ்வின் வீச்சும் பொருளும் மிக விரிந்தவை. இந்த வாழ்வின் பொருள்தான் ஒருவகையில் வேதங்களின் பொருளும் கூட. வேதங்களின் வரிகளுக்குப் பொருளை உணர்ந்த அப்புவால் வாழ்வின் நுட்பமான பொருளை உணர முடியாமல் போய்விட்டது.

‘யத் கின்கா ஜகத்யம் ஜகத் ‘ என்பது ஓர் உபநிடத வரி. இங்கே ‘ஜகத் ‘ என்பது தொடர்ந்து மாற்றத்துக்குள்ளாகிக் கொண்டே இருக்கிற உலகத்தைக் குறிக்கும். இந்த உலகத்தில் சுதந்தரமான இயக்க விதிகள் கொண்ட பல விஷயங்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கின்றன. பொழுது மாறுகிறது. ஒளியின் அளவு மாறுகிறது. இரவின் அளவு மாறுகிறது. மழையின் அளவு மாறுகிறது. காற்றின் அளவு மாறுகிறது. தண்ணீரின் வேகம் மாறுகிறது. எல்லாமே இருக்கின்றன. அதே சமயத்தில் எல்லாமும் மாறிக் கொண்டே இருக்கின்றன. இந்த உலகத்தில் மாறாத ஒரே விஷயம் ‘மாற்றம் ‘ என்கிற விதிதான். இந்த உலகின் கால விரிவை முன்வைத்துப் பார்க்கும் போது மனித உயிர் எவ்வளவு முக்கியமற்றவை என்பது விளங்கும். ஒரு பட்டுப்போன மரமும் ஒரு குட்டிச் சுவரும் நிற்கிற கால அளவு கூட மனித உயிர்கள் பல தருணங்களில் நிலைத்திருப்பதில்லை. அப்படிப்பட்ட சூழலில், ஏதோ ஒரு தவற்றை முன்வைத்து ஓர் உயிரை வதைப்பதாலும் அருவருத்து ஒதுக்குவதாலும் சாதிக்கப் போவதென்ன ? தன்னை நோக்கி வந்த கேள்வியை நேர்மையாக எதிர்கொண்டு மரபை விரிவாக்கிக் கொள்ளவும் மரபென்னும் நுால்வேலியின் பொருளை அல்லது பொருளின்மையை உணர்வதற்கும் உணர்த்துவதற்கும் மாறாக மரபின் பிடியிலேயே அப்பு சுருங்கி விடுவது மிகப்பெரிய சோகம்.

இந்த நாவல் எழுதப்பட்டு கால் நுாற்றாண்டு கரைந்துவிட்டது. ஆனாலும் இந்த நாவல் மரபின் முன்வைத்த கேள்விகள் மிகவும் முக்கியமான கேள்விகள். இன்றும் கூட. இவையே இந்த நாவலின் பலங்கள். மரபையொட்டி இக்கேள்விகள் விவாதங்களாக உருமாறவில்லை என்பதைப் பலவீனம் என்று சொல்லலாம். நாவலில் நிகழாத விவாதத்தை நம் சூழலிலும் இந்த நாவல் வெளிவந்த காலம் நிகழ்த்தவில்லை என்பதை நம் பலவீனம் என்றும் சொல்லலாம்.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்