தெலுங்கு மூலம் G.பிரம்மாநந்தம் தமிழாக்கம் கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com
அன்புள்ள மகளுக்கு,
நேற்று காலையில் நீ போன் செய்தாய் என்று உங்க அப்பா சொன்னார். பக்கத்து வீட்டில் ஏதோ விழா என்று அழைத்தால் போயிருந்தேன். உங்க அப்பா விஷயம் முழுவதையும் தெரிவித்தார்.
உனக்கு இதுபோல் கடிதம் எழுதவேண்டிவரும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. நீ ஏனோ அவசரப்படுகிறாய் என்று எனக்குத் தோன்றியதால் கடிதம் எழுதுகிறேன். என் மனதில் இருப்பதை உனக்கு போனில் சொல்ல முடியும். ஆனால் உணர்ச்சி வசப்பட்டு பேசும் போது நம் மனதில் இருப்பது முழுவதுமாக வெளியில் வர வாய்ப்பு இல்லை. அதோடு வார்த்தைகள் எல்லை மீறிவிட்டால் நான் என்ன நினைக்கிறேனோ, என் மனம் எவ்வளவு தவிக்கிறதோ உனக்குப் புரிய வைப்பது கஷ்டம். அதனால்தான் இருபது வருடங்களுக்கு பிறகு எனக்கு இந்த பேப்பரும் பேனாவும் தேவைப்பட்டது.
இந்தக் கடிதத்தை நான் ஒரு தாயாக எழுதவில்லை. நீயும் என்னைப் போல் ஒரு பெண் என்ற உணர்வுடன் எழுதுகிறேன். உன் விஷயமாக நானும் அப்பாவும் நிறைய பேசினோம். எனக்கு ஏனோ நீ செய்வது நியாயமாக படவில்லை. நானும் உங்க அப்பாவும் இந்த விஷயத்தில் ஒரே முடிவுக்கு வர முடியவில்லை.
உனக்குத் தெரியும், நானும் உங்க அப்பாவும் குடும்பத்திற்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்து உங்களை வளர்த்து ஆளாக்கினோம். உங்களுக்கு உயர்ந்த கல்வி மட்டுமே இல்லை. நல்ல நடத்தையும் பண்பையும் கற்றுக் கொடுத்தோம் என்று இதுநாள் வரையிலும் பெருமை பட்டுக் கொண்டிருந்தேன்.
ஆனால் இந்த நிமிடம் எனக்கு அப்படித் தோன்றவில்லை. என்னுடைய கனவுகளை, லட்சியங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நான் உருவாக்கியிருந்த அன்பு மாளிகை என் கண் முன்னாடியே இடிந்து போனால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால்தான் அந்த மாளிகையை காப்பாற்றிக் கொள்வதற்கு என்னால் ஆன சிறு முயற்சியை செய்கிறேன். இந்தக் கடிதத்தினால் உன்னிடம் மாற்றம் வந்தாலும் வராவிட்டாலும், குறைந்தபட்சம் யோசிக்கும்படியாக செய்ய முடிந்தால் என் முயற்சி வெற்றி பெற்று விட்டதாக நினைத்துக் கொள்வேன்.
உனக்கு நினைவு இருக்கிறதா? இஞ்சினியரிங் முடிந்த பிறகு மேற்படிப்புக்காக நீ அமெரிக்காவுக்கு போகிறேன் என்று சொன்ன போது உங்க அப்பா “பெண்பிள்ளையை தனியாக வெளி நாட்டுக்கு அனுப்புவதில் விருப்பமில்லை” என்று சொல்லிவிட்டார். பெண்களுக்கு படிப்பு ரொம்பவும் முக்கியம் என்று நான்தான் உங்க அப்பாவுடன் சண்டைபோட்டு ஜெயித்தேன். அதன் விளைவு உனக்கும் தெரியும். நீ எம்.எஸ். பட்டம் வாங்கிய அன்று ஒரு தாய் என்பதை விட ஒரு பெண்ணாக ரொம்ப சந்தோஷப்பட்டேன். நான் அடைய முடியாத கல்வியை என் மகள் சாதித்து விட்டாள் என்று பூரித்துப் போனேன். ஒரு ஆண்மகனுக்கு படிப்பு எவ்வளவு முக்கியமோ ஒரு பெண்ணுக்கும் அவ்வளவுதான் முக்கியம் என்பது என்னுடைய அபிப்பிராயம். படிப்பு மனிதனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். அதனால்தான் அன்று உன்னை சப்போர்ட் செய்தேன்.
அன்று மட்டுமே இல்லை. நீ விரும்பியது போல் உன் கிளாஸ்மேட் ராகுலை கல்யாணம் செய்து கொள்வதாக சொன்ன போதும் நான் உன்னை சப்போர்ட் செய்தேன். ஏன் என்றால் இந்த சமுதாயத்தில் பெண்களுக்கும் சில உரிமைகள் உண்டு என்பதை நம்புகிறவள் நான். ஆணாதிக்கியம் மிகுந்த இந்த சமுதாயத்தில் பெண்ணின் விருப்பு வெறுப்புகள், சுதந்திரம், உரிமை எல்லாமே ஆண் இனத்தால் தீர்மானிக்கப்பட்டவைதான் என்று எனக்குத் தொன்றும். அதிலும் நடுத்தரக் குடும்பங்களில் பெண்குழந்தை பிறந்ததுமே பெற்றோர்களுக்கு முதலில் வரும் எண்ணம் திருமணம். திருமணம் என்ற பந்தத்திற்குள் பெண்ணின் வாழ்க்கையை சிறை படுத்தி சுதந்திரம், உரிமை என்ற பூச்சுகளால் அலங்காரம் செய்கிறது இந்த சமுதாயம்.
அதனால்தான் எல்லோரையும் போல் அல்லாமல், நான் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அதேபோல் உன்னை வளர்த்தேன். உனக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று அப்பா அவசரப்பட்ட போதும் “இப்போ உடனே என்ன அவசரம்?” என்று தாமதப்படுதினேன். நீ சுயமாக உன் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். நீ விரும்பியது போலவே ராகுலுடன் உன் திருமணம் முடிந்ததற்கு நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
ஆனால் நடுவில் நடந்த சில நிகழ்ச்சிகள் என் மனதை துளைத்துக் கொணடிருக்கின்றன. ராகுல் விஷயத்தில் நீ கொஞ்சம் அவசரப் படுகிறாயோ என்று தோன்றுகிறது. கணவன் மனைவி என்று ஆன பிறகு எத்தனையோ பிரச்னைகள் வரத்தான் செய்யும். ஆனால் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் பெரிது படுத்தி வாழ்க்கையை நரகமாக மாற்றிக் கொள்வது சரியில்லை.
அவ்வளவு ஏன்? எனக்கும் உங்க அப்பாவுக்கும் கல்யாணமாகி முப்பது வருடங்கள் கழிந்த பிறகும் இன்னும் சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். எங்களுக்கு இடையில் நிறைய கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் சேர்ந்துதான் இருப்போம். ஏன் என்றால் இந்த வேற்றுமைகள் எல்லாம் தற்காலிகமானவை.
உங்கள் இருவரின் விஷயம் இருக்கட்டும். இன்னும் இரண்டு வயதுகூட நிரம்பாத சாகேத் பற்றி யோசித்துப் பார்த்தாயா? உங்களுடைய கோபதாபங்களுக்கு அவனை பலிக்கடாவாக ஆக்குறீங்க. இப்போ திடீரென்று நீ எம்.பி.ஏ. படிக்காவிட்டால் வந்த நஷ்டம்தான் என்ன? உன்னுடைய விருப்பங்கள் மட்டுமே இல்லை, உன்னுடைய குடும்பமும் உனக்கு முக்கியம். சாகேத்தை ராகுலிடம் விட்டுவிட்டு நீ வேறு இடத்திற்குப் போய் படிக்கிறேன் என்று சொல்வது, ராகுல் அதற்கு மறுப்பு தெரிவித்தது, இதற்காக நீங்கள் இருவரும் பிரிந்து போகும் அளவுக்கு சண்டை போட்டுக் கொள்வது… இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வருகிறது.
நீ சொன்னது போல் இது உன்னுடைய லட்சிய கனவாக இருக்கலாம். ஆனால் அந்தக் கல்லூரியில்தான் படித்தாகணும் என்று கட்டாயம் எதுவும் இல்லையே? நீ இப்போ மேலும் படித்து எதை சாதிக்கப் போகிறாய் என்று எனக்குப் புரியவில்லை. பெண்களுக்கு படிப்பு முக்கியம் என்று அந்த நாட்களில் சொன்னவள், இப்போ மேலும் படிக்கிறேன் என்று சொன்னால் தடுக்கப் பார்க்கிறாளே என்று நினைக்கிறாய் இல்லையா? வேண்டிய அளவுக்கு நீ படித்து விட்டாய். மேலும் படிப்பதற்கு நீ தேர்வு செய்த சமயம் சரியானது இல்லை.
எனக்குத் தெரியும். எம்.பி.ஏ. படிப்பிற்கு பெயர் பெற்ற அந்தக் கல்லூரியில் படிப்பது உன் லட்சியம். ஆனால் உனக்கு என்று சில பொறுப்புகள் இருக்கின்றன. சில சமயம் பொறுப்புகள் நம் விருப்பங்களை விழுங்கிவிடும். நாம்தான் தீர ஆராய்ந்து சில விஷயங்களில் முடிவு செய்ய வேண்டும்.
உன் லட்சியத்தை சாதிப்பதற்காக குடும்ப வாழ்க்கையைப் பணயம் வைக்கத் துணிந்துவிட்டாய் என்பதுதான் என் வேதனை. ஒருக்கால் அமெரிக்காவில் வேண்டிய பொருளாதார சுதந்திரம் இருப்பதால் நீ ரொம்ப சுலபமாக, தைரியமாக ராகுலிடமிருந்து பிரிந்து போகலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டிருப்பாய் என்பது என் ஊகம். பெண்களுக்கு எல்லா விதமான சுதந்திரமும் இருக்கத்தான் வேண்டும். முக்கியமாக பொருளாதார சுதந்திரம். ஆனால் இவையெல்லாம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர தடைகளாக இருக்கக் கூடாது.
“லட்சியத்தை சாதிக்கும் சுதந்திரம், உரிமை எனக்கு இருக்கக் கூடாதா? நான் என்ன செய்ய வேண்டுமோ, எதை சாதிக்க வேண்டுமோ என் கணவன்தான் முடிவு செய்ய வேண்டுமா?” என்று உங்க அப்பாவிடம் கேட்டாயாம். உங்க அப்பா உன் பக்கம்தான் பேசினார். எனக்குத் தெரியும். அவர் மகள் பக்கம்தான் பேசுவார் என்று. ஏன் என்றால் நீ அவருடைய மகள். அதே காரியத்தை நான் செய்தால் அவர் எனக்கு உறுதுணையாக இருக்க மாட்டார். என்னை சப்போர்ட் செய்யவும் மாட்டார். ஏன் என்றால் இது ஆணாதிக்கிய சமுதாயம். மனைவிக்கு பொருந்தும் கட்டுத்திட்டங்கள் மகளுக்கு பொருந்தாது. இருவரும் ஒரே பெண் இனம்தான். அதே சட்டங்கள், கட்டுபாடுகள். ஆனால் அவற்றை கடைபிடிக்கும் முறைதான் மாறுபடும். நமக்குத் தெரியாமலேயே இந்த சமுதாயம் நம்மை சுற்றி கண்ணுக்கு தெரியாத வேலியை உருவாக்கியிருக்கிறது.
சுவாசிக்கும் காற்று கூட, அதிகமாக இருந்தாலும், குறைந்து போனாலும் மனிதனுக்கு கஷ்டம்தான். சுதந்திரமும் அப்படித்தான. வாழ்க்கையை அழகாக செதுக்கிக் கொள்வதற்கு சுதந்திரம் உறுதுணையாக இருக்க வேண்டும். அவ்வளவுதானே தவிர சுதந்திரம் என்ற பெயரில் குடும்ப வாழ்க்கையை சிதைத்துக் கொள்ளாதே. உனக்கு பிடித்த வேலையை செய்வதில் உனக்கு சந்தோஷம் இருக்கலாம். ஆனால் அந்த வேலையைச் செய்வதால் ஏற்படும் பின் விளைவுகள், மற்றவர்கள் வாழ்க்கையில் அதன் பாதிப்பு இதையெல்லாம் யோசித்துக் கொள்வது முக்கியம். நீயும் ராகும் பிரிந்து போய் எதை சாதிக்கப் போகிறீர்கள்? உன் விருப்பம் நிறைவேறும். உன் பிடிவாதம் ஜெயிக்கும். அதற்குப் பிறகு? எல்லாமே சூனியம்! உன் லட்சிய சாதனைக்காக உன் வாழ்க்கையைப் பணயம் வைக்கிறாய்.
“நான் பழைய தலைமுறை சேர்ந்தவள் இல்லை. யார் மீதும் சார்ந்திருக்கவில்லை” என்று சொல்கிறாயா? அதுவும் ஓரளவுக்கு உன்மைதான். நடுத்தர வர்க்க குடும்பங்களில் பொருளாதார ரீதியான குறைபாடுகள் தான் பல பிரச்சனைகளுக்கு மூலகாரணம். உனக்கு அந்த பிரச்சனை இல்லை.
ஆழமாக யோசித்துப் பார்த்தால் நமக்குத் தெரியாமலேயே பல பிரச்சைனகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். சில விஷயங்களை பெறுவதற்காக நாம் சிலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். அப்படி விட்டுக் கொடுப்பதை தியாகம் என்றும் சொல்லலாம். உனக்குப் புரியும்படியாக சொல்ல வேண்டும் என்றால் சாக்ரிபைஸ். எத்தனையோ பேர் செய்த தியாகங்களின் விளைவுதான் நம் நாட்டுக்கு கிடைத்த சுதந்திரம். அதே போல் நீ உன் பிடிவாத்தை இன்று விட்டுக் கொடுத்தாய் என்றால் நாளை உன் மகனின் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். அம்மா அப்பாவின் அன்புக்கு நடுவில் அவன் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
உங்கள் எல்லோருடைய நன்மைக்காக நான் என் லட்சியத்தை எந்த அளவுக்கு விட்டுக் கொடுத்தேனோ உனக்குத் தெரியாது. உனக்கு மட்டுமே இல்லை. நம் குடும்பத்தில் யாருக்குமே தெரியாது. இத்தனை வருடங்களாக யாரிடமும் சொல்லாமல் என் அடிமனதில் புதைத்துவிட்ட நிகழ்ச்சி அது. இத்தனை வருடங்கள் கழித்து நான் உன்னிடம் இதை ஏன் சொல்கிறேன் என்றால், இந்தச் சின்ன நிகழ்ச்சி உன் எண்ணங்களில் கொஞ்மாவது மாற்றம் கொண்டு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்புதான்.
எங்க தாத்தாவின் ஊர் தலைஞாயிறு. சிறுவயதில் நான் பாட்டு கற்றுக் கொண்டேன். ரொம்ப அற்புதமாக வீணை வாசிப்பேன். எல்லோரும் என்னை பிறவி மேதை என்பார்கள். இசை என்றால் எனக்கு எவ்வளவு உயிர் என்றால் இருபத்தி நான்கு மணிநேரமும் அதே நினைப்புதான். ஒரு தடவை திருவைய்யாற்றில் தியாகராஜ ஆராதனை உற்சவத்தின் போது கச்சேரி செய்தேன். என்னுடைய வாசிப்பை கேட்டுவிட்டு பிரபல பாடகர் ஒருவர் என்னை சென்னை இசை கல்லூரியில் சேர்த்துவிடுவதாக சொல்லி சென்னைக்கு அழைத்துப் போனார். அங்கே என்னுடைய திறமையை கவனித்து மியூசிக் அகாடெமியில் கச்சேரிக்கு ஏற்பாடு செய்தார்கள். இதற்கிடையில் உங்க அப்பாவுடன் திருமணம் நிச்சயமாகிவிட்டது. எனக்கு உடனே திருமணம் செய்து கொள்வதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என்றாலும் அப்பாவிடம் அதை சொல்லும் துணிச்சல் இல்லாமல் போய்விட்டது.
ஏன் என்றால். எங்களுடையது ரொம்ப சாதாரணக் குடும்பம். எனக்கு பிறகு இரண்டு தங்கைகள். எனக்குத் திருமணம் முடிந்தால் தவிர தங்கைகளுக்குக் கல்யாணம் ஆகாது. இசைத்துறையில் எத்தனையோ சாதிக்க நினைத்தேன். ஆனால் திருமணம் அதற்கு தடையாக வந்துவிட்டது. இந்தத் திருமணம் முடியவில்லை என்றால் அப்பாவுக்கு பிரச்னைதான்.
அப்பாவிடம் நேரடியாக என் மறுப்பை சொல்லவில்லை என்றாலும், வீட்டோடு இருந்த அத்தையிடம் சொன்னேன். அத்தை என் சார்பில் யோசித்தாள். திருமணம் ஆன பிறகும் இசையை சாதகம் செய்ய முடியும் என்றும், மறுபடியும் இதுபோன்ற வரன் கிடைப்பது கஷ்டம் என்றும், என்னை சமாதானப் படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தாள்.
மாமியார் வீட்டுக்கு போன பிறகு தெரிந்தது அவர்களுக்கும் இசைக்கும் ரொம்ப தொலைவு என்று. எங்க அக்கா ரொம்ப நன்றாக வீணை வாசிப்பாள் என்று தங்கை மாமியாரிடம் பேச்சுவாக்கில் சொன்ன போது அதெல்லாம் இந்த வீட்டில் செல்லுபடியாகாது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டாள். என் லட்சிய சாதனைக்கு இன்னொரு தடை வந்து விட்டது என்று நினைத்துக் கொண்டேன். இதற்கு இடையில் முன்னாடியே ஒப்புக்கொண்ட மியூசிக் அகாடமி புரொகிராமுக்கு அழைப்பு வந்தது. மாமியார் சம்மதிக்கவில்லை. “பத்து பேர் முன்னாடி உட்கார்ந்து கொண்டு கச்சேரி செய்வதாவது?” என்று அப்பாவிடம் சொன்னவள், என்னை அனுப்பக்கூடாது என்று தீர்மானமாக சொல்லிவிட்டாள். “கல்யாணத்திற்கு முன்னாடியே ஒப்புக்கொண்டு விட்டேன். இந்த ஒரு தடவைக்கு மட்டும் போய் வருகிறேன்” என்று எத்தனையோ கெஞ்சினேன். உங்க அப்பாவால் தாயை எதிர்த்து பேசமுடியாது. மனைவியை வருத்தப்பட வைக்கவும் விருப்பம் இல்லை. அவருடைய நிலைமை தர்மசங்கடமாகிவிட்டது.
ஆகமொத்தம் மாமியாரின் வார்த்தைதான் ஜெயித்தது. நான் அந்த நிகழ்ச்சிக்கு போகவில்லை. வாழ்க்கையிடம் எனக்கு விரக்தி ஏற்பட்டது. இதற்கிடையே நீ என் வயிற்றில் உருவாகியிருந்தாய். சென்னை கச்சேரிக்கு போக முடியவில்லை என்ற தோல்வி என்னை மனதளவில் ரொம்ப பாதித்துவிட்டது. உடல்நலம் சரியாக இல்லை என்ற சாக்கில் பிறந்த வீட்டிற்கு வந்தேன். இசை இல்லாத வாழ்க்கை வியர்த்தம் என்று தோன்றியதால் தற்கொலைக்கு முயற்சி செய்தேன். ஆனால் அத்தை சமயத்தில் பார்த்துவிட்டதால் காப்பாற்றப்பட்டேன். விருப்பமில்லாத திருமணம் செய்ததால் நான் தற்கொலைக்கு முயற்சித்ததாக எல்லோரும் நினைத்துக் கொண்டார்கள். ஆனால் இசைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டி வந்ததால்நான் அப்படி செய்தேன் என்று யாருக்கும் தெரியாது. அப்பாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. மாப்பிள்ளையிடம் பேசி பார்க்கலாம் என்று யோசித்தார். ஆனால் மாப்பிள்ளையின் தவறு எதுவும் இருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை. நான் என் கணவரின் பேச்சைத்தான் கேட்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும். ஆனால் அத்தை என் பக்கம் இருந்தாள்.
கடைசியில் என்னிடம் வந்து சொன்னாள். “இந்தாடி பெண்ணே! நீ செய்தது உனக்கே நன்றாக இருக்கிறதா? பாடக்கூடாது என்று சொன்னதற்காக தற்கொலை செய்துகொண்டு யாரை ஜெயிக்கப் போகிறாய்? எனக்குத் தெரியும் இசை என்றால் உனக்கு உயிர் என்று. ஆனால் நாம் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதிலும் நீயும் நானும் பெண் ஜென்மங்கள். இந்த சமுதாயத்தில் நமக்கு சுதந்திரம் இல்லை. திருமணத்திற்கு முன் தந்தையிடம், திருமணமான பிறகு கணவனிடம்தான் நம்முடைய வாழ்க்கை. நீ செய்யப் போன இந்த காரியத்தால் மற்றவர்களின் வாழ்க்கையின் மீது ஏற்படும் பாதிப்பை பற்றி யோசித்தாயா? உன் உயிர் போயிருந்தால் உன் பெற்றோர்களால் அதைத் தாங்கிக் கொள்ளத்தான் முடியுமா? உன் கணவனின் தவறு இல்லாவிட்டாலும் அவனையும் இந்த உலகம் குற்றம் சாட்டும். நாளைக்கு உன் தங்கைகளை திருமணம் செய்து கொள்ள யாராவது முன் வருவார்களா? அவ்வளவு ஏன்? உன் வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பற்றி கொஞ்சமாவது யோசித்தாயா? உன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள உனக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் பிறக்கப் போகும் குழந்தையின் உயிரை எடுக்கும் அதிகாரம் உனக்கு இல்லை.
உனக்கு இசை என்றால் பிடிக்கும். ஆனால் உங்க மாமியாரின் வீட்டை எதிர்த்துக் கொண்டு உன்னால் எதை சாதிக்க முடியும்? அவர்களை எதிர்த்தால் புகுந்தவீட்டில் தினமும் சண்டைதான் மிஞ்சும். நீ இன்னும் சின்னவள். வாழ்க்கையைப் பற்றி உனக்கு முழுவதுமாக தெரியாது. என்னையே எடுத்துக்கொள். கல்யாணம் ஆன சில மாதங்களிலேயே கணவன் இறந்துபோய், குழந்தை குட்டி இல்லாமல் பிறந்தவீட்டிற்கு வந்து விட்டேன். எனக்கு என்ன பற்றுகோல் இருக்கிறது வாழ்வதற்கு? அப்படியும் என்னால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்து கொண்டுதான் இருக்கிறேன். நானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் இல்லையா? என்னைவிட உனக்கு வந்த கஷ்டம்தான் என்ன? கலை உலகில் உன்னால் சாதிக்க முடியாதவற்றை ஒரு மனுஷியாக சாதித்துப் பார். உன் லட்சியங்களை உன் குழந்தைகளுடன் பகிர்ந்துகொள். அவ்வளவுதானே தவிர தற்கொலை செய்து கொண்டாய் என்றால் வாழ்க்கையிடம் நீ தோற்றுப் போனாற்போல்தான்” என்று என்னை யோசிக்க வைத்தாள். நிதானமாக யோசித்துப் பார்த்த போது ஏமாற்றம் என்னை விட்டு விலகிவிட்டது. அத்தை சொன்னதில் உண்மை இருப்பதாக தோன்றியது.
அன்றே முடிவு செய்தேன், வாழ்க்கையின் மீது வெற்றி பெற வேண்டும் என்று. இசை பற்றி யோசிக்கவில்லை. என் விருப்பத்தை, லட்சியத்தை எனக்குள்ளேயே சமாதியாக்கிவிட்டேன். வாழ்க்கையில் புதிய லட்சியத்தை உருவாக்கிக் கொண்டேன். என் குழந்தைகளை நன்றாக முன்னுக்கு கொண்டு வரவேண்டும். அந்த சாதனையின் பலன்தான் உன்னை எம்.எஸ். படிக்கும் வரையில் படிக்க வைத்தேன். உன் தம்பியை எம்.பி.ஏ. படிக்க வைத்து இளம் வயதிலேயே ஒரு கம்பெனிக்கு வைஸ் பிரசிடெண்ட் ஆகும்படியாய் செதுக்கினேன். கலையுலகில் என்னால் எதையும் சாதிக்க முடியாவிட்டாலும், ஒரு பெண்ணாக, தாயாக எத்தனையோ சாதித்து விட்டேன் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது. இப்பொழுது சொல்லு. கலை உலகில் நான் தோற்றுப் போனேன் என்பாயா? தாயாக, ஒரு இல்லத்தரசியாக வெற்றி பெற்றேன் என்று சொல்வாயா?
சுதந்திரம், உரிமை போராட்டம் என்ற பெயரில் அன்று நான் பிரிந்து போயிருந்தால் இன்று இந்த சந்தோஷம், திருப்தி எனக்குக் கிடைத்திருக்குமா?
நீங்கள் எல்லோரும் வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு மறுபடியும் இசை சாதனையை தொடங்கியிருக்கிறேன். எந்த அளவுக்கு வெற்றி பெறுவேன் என்று தெரியாது.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் நிதானமாக யோசித்துப் பார்த்தால் மலை போன்ற பிரச்சனைகள் கூட மடுவாகத் தொன்றும். உன் முன்னால் மடுவாக இருக்கும் பிரச்சனையை பூதகண்ணாடி வழியாக பார்த்து உன் வாழ்க்கையோடு, உன்னைச் சுற்றி பிணைந்திருக்கும் வாழ்க்கைகளை நரகமாக்காதே. சகமனுஷியாக இதுதான் என் வேண்டுகோள்.
இந்த வாழ்க்கை உன்னுடையது. அதை எப்படி வேண்டுமானாலும் செலுத்தும் சுதந்திரம் உனக்கு இருக்கிறது. அந்த சுதந்திரத்தை நல்ல விதமாக பயன்படுத்துவாயோ, தேவையில்லாமல் சிக்கலாக்கிக் கொள்வாயோ உன் கையில்தான் இருக்கிறது.
அன்புடன்,
உன் அம்மா
பி.கு. இந்தக் கடிதத்தை தபாலில் அனுப்பினால் தாமதமாகக் கூடும் என்பதால் உன்னிடம் வாங்கிக் கொண்ட நம்பருக்கு ·பேக்ஸ் செய்கிறேன்.
முற்றும்
- கொருக்குப்பேட்டை: தனிநாடு கோரிக்கையின் தார்மிக நிலைப்பாடு (ஒரு கற்பனை ரிப்போர்ட்)
- யாரிடமும் சொல்லாத சோகம்
- ஜன்னல் பறவை:
- தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் – காதல் என்பது என்ன ? கவிதை -28 பாகம் -4
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -10
- ஆ·பிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு ! (Fossil Reactor & Geo-Reactor)(கட
- நிகண்டு = எழுத்தின் அரசியல்
- பார்வை: பல நேரங்களில் பல மனிதர்கள்/ பாரதி மணி
- பத்துப்பாட்டுணர்த்தும் மலர்ப்பண்பாடு
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -15
- நற்றமிழ் வளர்த்த நரசிம்மலு நாயுடு
- தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம்(சிங்கப்பூர்) வழங்கும் இம்மாதத்திற்கான பட்டிமன்றம்
- கம்பராமாயண முற்றோதல் நிறைவு விழா
- அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடத்திய சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப்போட்டி முடிவுகள்
- பாரிசு நகரில் தமிழ் இலக்கிய விழா 12 -ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்
- திரு. மு. சிவலிங்கம் அவர்களின் விழி வேள்வி (விகடன் பிரசுரம்) என்னும் நூல் வெளியீடு விழா
- வேத வனம் விருட்சம் 86
- வலி
- விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபtத்திரெண்டு
- அன்பாலே தேடிய என்…
- பெறுதல்
- முள்பாதை 30
- கிடை ஆடுகள்
- பொது நீராதாரத்தில் பாகிஸ்தானின் குயுக்தி
- A Travel to Grand Canyon (ஃக்ராண்ட் கன்யானுக்குள் ஒரு பயணம்)
- புறத் தோற்றம்
- கால்களின் அசமகுறைவு
- மலேசியா ஏ.தேவராஜன் கவிதைகள்
- யாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு
- முப்பது ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பைக் கடந்த நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள் ! (Voyager 1 & 2 Spaceships)
- நினைவுகளின் சுவட்டில் -(48)
- விநோதநாம வியாசம்
- இரண்டாவது முகம்
- களம் ஒன்று – கதை பத்து -முதல் கதை -உதட்டோடு முத்தமிட்டவன்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -18
- அம்மாவின் கடிதம்
- நண்டு