அ.முத்துலிங்கம் பரம்பரை – 7

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

சிவஸ்ரீ


திகட சக்கரத்தில் முத்துலிங்கத்தின் செல்லரம்மான் விடலை வயதில் என்ன செய்தார் தெரியுமா ?

//{ பத்துத் தேங்காயுடன் நிறுத்தியிருக்கலாம். ஆனால் ஆசை ஆரை விட்டது ? அடுத்த தேங்காய் கைதவறி விட்டது; ‘தொம் ‘ என்ற சத்தத்துடன் கீழே விழுந்தது.

‘ஆரடா ? ‘ என்று உள்ளே இருந்து ஒரு சத்தம். சோதினாதனும் மற்றவர்களும் ‘பொத், பொத் ‘ என்று குதித்து வேலி பாய்ந்து கண நேரத்தில் மறைந்து விட்டார்கள். செல்லத்தம்பி பாவம் வட்டுக்குள்ளே; குதிக்க முடியுமா அவ்வளவு உயரத்தில் இருந்து ?

….

இளநீரையெல்லாம் ஒரு கடகத்தில் போட்டு இவன் தலையில் ஏற்றி வைத்தார், உடையார். ஒரு குடையை எடுத்துக் கொண்டார். தலைக்கு மேல் அதை விரித்தபடி ‘சரி, நட விதானையார் வீட்டுக்கு ‘ என்றார்.

இப்ப சாடையாக மழை தூறத் தொடங்கி விட்டது. உடையார் பின்னால் குடை பிடித்த படி. அப்ப பார்த்து உடையாருக்கு ஒண்ணுக்கு நெருக்குகிறது. ‘கொஞ்சம் நில் ‘ என்று விட்டு குடையையும் பிடித்த படி வேலி ஓரத்தில் குந்தினார்.

செல்லத்தம்பி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் திரும்பிப் பார்க்கிறான், ஆரெண்டாலும் பெண்டுகள் பார்க்கினமோ என்ற பயம்.

‘என்னடா பார்க்கிறாய் ? ஓடப் போகிறியோ ? ‘

செல்லத்தம்பிக்கு அந்த எண்ணமே வரவில்லை. ஆனால் இப்ப முழித்து விட்டான். கடகத்தில் இருந்த தேங்காய் எல்லாவற்றையும் உடையார் தலைமேல் கொட்டி விட்டு எடுத்தான் ஓட்டம். நேரே தண்டவாளத்தில் ஏறி அதன் வழியாக ஒரேடியாக ஓடித் தப்பி விட்டான்.

உடையார் என்ன செய்வார் ? ஒண்ணுக்குப் போறதை பாதியிலே நிற்பாட்டுகிற வித்தையை இன்னும் அவர் கற்கவில்லை.; ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே இருந்தார்.

}//

அதைக் பாதியில் நிப்பாட்டக் கற்றுக் கொள்ள உடையாருக்கு வயிற்றுவலி வந்து அல்ட்ராஸெளண்ட் ஸ்கேன் செய்யப் போயிருக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் இரண்டே இரண்டு லிட்டர் தண்ணீர் மட்டும் குடித்து விட்டு லேபுக்கு வரச் சொல்வார்கள். வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், மிஞ்சிப் போனால் கண்ணை மூடிக் கொண்டு இரண்டு டம்ளர் குடிக்கும் வரை தான் இந்த வயிறு சும்மா இருக்கும். அதற்கு மேல் குடித்தால் அது ‘போதும் நிப்பாட்டு ‘ என்று சொல்வதற்கு சாம, தான, பேத, அத்தனை முறைகளைக் கையாளும் எந்த வித முன்னறிவிப்புமின்றி. ஆனாலும் அதையெல்லாம் தன்னைக்கட்டிக் கொண்டு ரெண்டு லிட்டரையும் குடித்து விட வேண்டும். இல்லாவிட்டால் ஸ்கேன் ஃபிலிம் தாள் உருப்படியாய் வராது. இது வரையான விதிமுறைகள் எல்லாம் சுலபம் தான். ஆனால் முக்கியமானது, இவ்வளவு தண்ணீரையும் குடித்து விட்டுப் பட்டினியோடு லேபுக்கு வரவேண்டும் என்பது அல்ல, ஒரு சொட்டு ஒண்ணுக்குக் கூடப் போய்விடக் கூடாது, அப்படியே சுமந்து செல்ல வேண்டும் வயிற்றில்.

இந்த சென்னை இப்படி சிங்கப்பூரை விட இவ்வளவு பெரிதாய் அகண்டு பரந்து கிடக்கும் என்று யார் கனவு கண்டார் ? காலை ஏழரை மணிக்குப் பூந்தமல்லியில் அத்தை வீட்டிலிருந்து லேபுக்குக் கிளம்பும் போது, என்ன இன்னும் அரைமணி நேரம் பல்லைக் கடித்து அடக்கிவிட்டால் ஸ்கேன் முடிந்ததும் வெளிய கொட்டிவிடலாம் என்ற தைரியம் இருந்தது. டாக்டர் சொல்லும் லேபுக்குத் தான் போக வெண்டுமென்பது நான் சொல்லித்தானா உங்களுக்குத் தெரிய வேண்டும் ? தி.நகரில் இருக்கும் லேபுக்கு அத்தனை பள்ளத்தாக்கு, பீடபூமிகள், குப்பைக் குன்றுகள், சிக்னல் ஸ்தம்பிப்புகள் எல்லாவற்றையும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தாண்டி வந்து ஒன்பதரைக்கு லேபுக்குள் நுழைந்த போது உள்ளங்கை, பாதமெல்லாம் சில்லிட்டுக் கண்ணீர் பொங்க ‘லேப் டெக்னீசியன் தெய்வத்திடம் ‘ நான் ஒண்ணுக்குப் போயே ஆகவேண்டுமென மன்றாடினேன். அவர் கருணை கூர்ந்து,

‘சரி போங்க, ஆனா அப்ப நாளைக்குத் தான் மறுபடி இது போல் வயிற்றை ரொப்பிக் கொண்டு வரவேண்டு ‘ மென்றார்.

‘ஆ! ‘ வென அலறினேன்.

அவருக்கு அது கேட்கவில்லை. ஏனெனில் என் நாபியிலிருந்து எந்த சத்தமும் படிதாண்டவில்லை.

என் அத்தனை உறுதியையும் திரட்டி, குடித்த இரண்டு லிட்டர் பிஸ்லேரியும் வட்டியும் முதலுமாய்க் பெருகிப் பிரவாகித்திருப்பதற்கு எப்பாடு பட்டாவது ஒரு அணை கட்டித் திறந்து விடாது வைத்துக் கொள்கிறேன், ஸ்கேனை எடுத்து விடுங்கள் என்றேன். ஸ்கேனோடு சில எக்ஸ்ரேக்களும் எழுதித் தந்திருந்தார் மருத்துவக் கடவுள். எக்ஸ்ரேக்களை எல்லாம் ‘லேப் டெக்னீசியனே ‘ எடுத்துவிடலாம். ஆனால் அந்த புறவொலிக் கதிர் ஸ்கேனை மட்டும் அதற்கெனப் படித்த டாக்டரம்மா தான் எடுக்க வேண்டும். அடுத்த குண்டு போடப்பட்டது: அவர் இன்னும் வரவில்லை!

அதுவரை நாங்கள் எக்ஸ்ரேக்கள் எடுக்கிறோம் என்று உப்பிய வயிற்றைக் குனிய நிமிர, குப்புறக் கவுத்துப் போடவென்று வைத்த சோதனைகளயும் பொறுத்து இந்த வயிறு அதற்கு ‘இன்னா செய்யும் என்னை ஒறுத்து ‘ நன்னயம் செய்து கொண்டிருந்தது வெடித்துக் கிடித்து விடாமல்.

ஒரு வழியாய்ப் பத்தேகாலுக்கு லேபுக்குள் பிரசன்னமாகியது என்னை ஸ்கேன் செய்து ரட்சிக்க வந்த தேவதை. இந்த ஸ்கேன் செய்யும் நுட்பத்தை அமெரிக்காவுக்குப் பறந்து போய்க் கற்றுக் கொண்டு வந்திருந்தது அந்த தேவதை. ஸ்கேன் அறைக்குள் போய்க் கதவைச் சாத்திக் கொண்டது. இத்தனையிலும் அன்று என் அதிர்ஷ்டம் நன்கு வேலை செய்து கொண்டிருந்தது. ஸ்கேன் எடுக்கப்பட வேண்டிய வரிசையில் நான் தான் முதல் ஆள், மருத்துவரின் தயவால். எனக்குப் பின்னால் இதே அவஸ்தையுடன் நின்றிருந்தவர்களைப் பார்த்து மனமிரங்கி வழிவிடவா இயலும் அந்நிலையில் ? கதவு திறக்கப் போகும் மோட்ச வேளைக்கு ஒரு வித மோனத்தில் காத்திருந்தோம்.

பத்தரை. திறக்கவில்லை. பத்து நாற்பது, ம்ஹும். ‘மேனர்ஸ் ‘ எல்லாம் மறக்கடிக்கப்பட்ட அந்த நொடியில் கதவை டொக் டொக்கி விட்டுத் தள்ளினேன். திறந்தது. அங்கு கண்ட காட்சி… இத்தனை நேரமாக இந்த வயிறு மடைதிறந்து விடாமல் தன்னை மீறிய எதோ ஒரு சக்தி பரிபாலித்து வந்ததே, அது எந்த சக்தியென்று அப்ப தான் தெரிந்தது.

ஒரு தேவலோகம் போலிருந்தது அறை. தேவதை என்றது தவறில்லை. அறை முழுக்க சாம்பிராணியும் ஊதுபத்தியும் புகை பொங்கி மணக்க, அலமாரியில் இருந்த சிறிய அடுக்கில் வீற்றிருந்த பிள்ளையார், சரஸ்வதி, லக்ஷ்மி, ராகவேந்திரரெல்லாம் மல்லிகைச் சரங்கள் சூடிச் சிரித்திருக்க, ஒரு குட்டி யாகக் குண்டம் போல் கற்பூரம் கனன்றிருக்க, பக்கத்திலிருந்த டேப் ரெக்கார்டரில் ‘மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே ‘ ஒலித்துக் கொண்டிருக்க, கண்மூடிக் கைக்கூப்பி எங்கள் வயிறுகளிருந்து சிறுநீர் வெளிப்பாய்ந்து விடாதவொரு மந்திரம் சொல்லிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தது தேவதை. பின், தேவதைகள் என்றைக்காவது தனக்காகப் பிரார்த்தித்துக் கொள்ளுமா ?

இருப்பினும் நாகரிகம் சிறிதும் மறந்து போன என் நாக்கு ‘எக்ஸ்யூஸ்மி மேடம், ஐம் கன்ட்ரோல்-லெஸ், ப்ளீஸ் ஹெல்ப் மீ ‘ என்று அரற்றியது. பூஜையிலிருந்து கண்திறந்து என்னை ஒரு கரடியாகப் பாவித்து நோக்கி, ‘கூப்பிடுகிறேன் ‘ என்று அருள்வாக்குத் தந்தது. பின்பு உள்ளே கூப்பிட்டுப் படுக்க வைத்து, வயிற்றில் குளிர்ந்த க்ரீம் தடவிய போதெல்லாம் முணுக் முணுக்கென வெளியேறப் பார்த்த ஒண்ணுக்கைப் பிடித்து வைக்கும் முயற்சியில் நெளிந்து கிடந்த என் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் கணினித் திரையில் கண்பதித்து ஒரு உருளையை மட்டும் வயிற்றில் குறுக்கும் நெடுக்கும் மறுக்குமாய் ஓட்டிக் கொண்டிருந்தது. இன்று முழுக்க இது முடியாதோவென நான் விக்கித்திருந்த வேளையில் வெகுநேரத்திற்குப் பின், தலையை ஆட்டிக் கொண்டே ‘நாட் க்ளியர் ‘ என்றது.

நான் பேச்சோய்ந்து செயலோய்ந்து பார்க்க, ‘வயிறு வழக்கத்துக்கு மேல் அளவுக்கதிகமாய் ரொம்பி நிற்கிறது. கொஞ்சம் ஒண்ணுக்குப் போய் விட்டு வா ‘ என்றது. முளைக்கயிற்றை அத்துக் கொண்ட குதிரையைப் போல் நான் வெளிப்பாய முனைய, தேவதை ‘நில் ‘ என்றது

‘கவனம்! கொஞ்சம் என்றால் கொஞ்சம் தான்! முழுக்கப் போகக் கூடாது. பாதி கூடப் போகக் கூடாது. கால் பங்கு மட்டும் போய் விட்டு வா! ‘ என்றது.

வாழ்க்கையில் இதுவரை யாருமே போட்டிராத இந்தக் கட்டளையை நிறைவேற்றும் விதத்தையும் யாரும் சொல்லித் தந்திருக்கவில்லை. கால் பங்கை அளந்து வெளியேற்றும் வழிமுறையும் தெரியவில்லை. எப்படி தான் முடியும் என்று மறுகி நிற்கும் போதே அடுத்த உத்தரவு :

‘கால் பங்குக்குக் கூடப் போய் விட்டால், அப்புறம் இன்று முடியாது, நாளை மறுபடி ஆரம்பிக்க வேண்டும் ‘

அவ்வளவு நேரம் அவர் சொன்ன அந்த லலிதாசகஸ்ர நாமத்தை விட மிகச் சக்தி வாய்ந்ததாய் இருந்தது அவர் கடைசியாய்ச் சொன்ன வார்த்தைகள். மீண்டும் நாளையா ? அதே மந்திரத்தைத் திருப்பித் திருப்பிச் சொன்னபடிப் போய் உட்கார்ந்த போது, போக வேண்டும் என்பதை விட நிறுத்த வேண்டும் என்பது மட்டுமே என் மூளையில் நங்கூரமிட்டிருந்தது. அது கொடுத்த உரத்தில் வெற்றிகரமாய் அந்த வித்தை கற்றுத் தேறி வந்து படுக்க, கணினித் திரை தெளிவாய்க் காட்டி விட்டது காட்சிகளை.

பின் ஸ்கேன் முடிவு எந்தக் கோளாறும் இல்லை என்று சொன்ன பிறகு மற்றொரு மருத்துவர், இதற்கு ஸ்கேன் எல்லாம் தேவையே இல்லையே, ரத்த டெஸ்டிலேயே தெரிகிறதே என்று சொன்ன போது கூட, எனக்கு ஸ்கேன் மீது எந்த வருத்தமுமில்லை. அது எனக்கு மிகப் பராக்கிரமமான ஒரு வித்தையைக் கற்றுத் தந்த வித்தகம் அல்லவா ?

உடையார் மட்டுமல்ல எல்லாருமே இந்த வித்தையைக் கற்று வைத்துக் கொள்வது இது போன்ற சமயங்களில் கைகொடுக்கும். அதற்கு ஒரே ஒரு முறை அப்படியொரு சோதனை தேவதையிடம் உங்கள் வயிற்றை எடுத்துக் கொண்டு போய் ஸ்கேன் எடுக்க விட்டால் போதும்.

இப்படி ஒண்ணுக்குப் போகிறதைப் பாதியில் நிப்பாட்டுகிற வித்தையைக் கூடக் கற்று வந்து விட்டேன். இந்தத் தொடரைப் பாதியில் நிப்பாட்டுகிற வித்தையைத் தான் இன்னும் கற்ற பாடில்லை. அதற்குக் காரணகர்த்தாவாயிருப்பது வழக்கம் போல் நானில்லை, தலைப்புக்குரியவர் தானே. சீர்காழியில் திருநிலைநாயகியின் ஞானப்பாலைக் பருகியவுடன் ஞானசம்பந்தர் தேவாரத் திருமுறைகளைக் கொட்டியது போல், முத்துலிங்கத்தின் கதைகளைப் பருகியவுடன் நாலு வருஷமாய் நிப்பாட்டி வைத்திருந்த ‘கட்டுரை எழுதுதல் ‘ இப்படிக் கொட்டுகிறது. இல்லாவிட்டால், பத்துப் பன்னிரண்டு வரிகளில், வரிக்கு ரெண்டு வார்த்தை போட்டு ரொப்பி சிக் சிக்கென கவிதை எழுதுவதை விட்டு விட்டு இதை யார் தொடப் போறா ? பள்ளித் தேர்வுத் தாளிலேயே ‘நான் விரும்பும் தலைவர் ‘, ‘நான் விரும்பும் ஊர் ‘ கட்டுரைகளை எல்லாம் ‘சாய்ஸ் ‘ல விட்டு விட்டு ‘தாமரைத் தடாகம் ‘, ‘ஐந்தருவி ‘ கவிதைகளைத் தான் நான் எழுதுவேன் என்று என் தோழி சுஜாவுக்குத் தெரியும். அதனால் தான் இதைப் படித்து விட்டு இப்பவெல்லாம் ‘நான் விரும்பும் எழுத்தாளர் ‘ கூட எழுதுறாயே என்று கேட்கிறாள்.

நானும் இதை ஆரம்பித்த வாரத்திலிருந்து ஒவ்வொரு வாரமுமே முற்றும் போட்டு விட்டு, அலுவலக ப்ரொஜெக்டில் கவனம் செலுத்தத் தான் முயற்சிக்கிறேன். ஆனால் இன்று வரை போட்டுக் கொண்டிருப்பது இதைத் தான் ….

தொடரும்…. (அடுத்த வாரம்)

– சிவஸ்ரீ (sreeeiii@poetic.com)

Series Navigation

சிவஸ்ரீ

சிவஸ்ரீ