அப்ப… பிரச்சனை… ? பெண்மனசு

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

சந்திரவதனா செல்வகுமாரன்


இண்டைக்கு எப்பிடியாவது இந்தப் பிரச்சனையைப் பற்றி இவரோடை கதைச்சிடோணும். நேற்றே கதைச்சிருப்பன். ஆனால் நான் வேலையாலை வந்த நேரம் அவர் ஆரோடையோ தொலைபேசியிலை கதைச்சுக் கொண்டிருந்தார்.

கதைச்சு முடிஞ்சு வரட்டும் கதைப்பம் எண்டு நினைச்சுக் கொண்டு நான் என்ரை வேலையளைச் செய்து கொண்டிருந்தன்.

கதைச்சு முடிச்சிடோணும் எண்ட நினைப்பு மனசுக்கை இருந்ததாலையோ என்னவோ என்ரை வேலையள் சரியா ஓட மறுத்துக் கொண்டு நின்றன. தேநீரைப் போட்டுக் குடுத்திட்டு ஏதோ ஒரு ஒட்டாத் தன்மையோடை கணினிக்குள் புகுந்து, குசினுக்குள் அடுக்கி….

ம்…கும். அவர் இன்னும் கதைச்சு முடியேல்லை. நீட்டிலை கதைச்சுக் கொண்டே இருந்தார். சரியாக் காது குடுத்துப் பார்த்தன். ஒவ்வொரு விசயத்தையும் இரண்டு மூண்டு தரமா அளந்து கொண்டிருந்தார். இதெல்லாம் தேவையோ எண்டு நினைக்கிற விசயங்களையும் கதைச்சுக் கொண்டிருந்தார். பெண்களைக் கண்களா மதிக்கிறா மாதிரியும் இடையிடையிலை கதைச்சு, எதிர் முனையிலை இருக்கிறவனிட்டை தன்னைப் பற்றிய இமேஜ்யை உயர்த்த முயற்சித்தார்.

அவற்றை கதை என்ரை காதிலை விழுறதையும் என்னாலை தவிர்க்க முடியேல்லை. நேரமும் பத்து மணியாகீட்டுது. பத்துமணி எண்டத்தான் நான் வேலையாலை வந்து இரண்டு மணித்தியாலங்கள் கரைஞ்சிட்டுது எண்டதும் உறைச்சுது.

சா… யன்னலுக்கு வெளியிலை ஒரே கும்மிருட்டு. வேலையிடத்திலை என்ரை தோழியர் ‘கோப்பி குடிக்கப் போவம் வா ‘ எண்டு கேட்டவை. நான் ‘எனக்கு இண்டைக்குப் பஞ்சியா இருக்கெண்டு ‘ பொய் சொல்லிப் போட்டு வந்திட்டன். லேற்றாப் போனால் இந்த மனுசன் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் எண்டு சொன்னால் அதுகள் ‘ஏன் உன்ரை மனுசன் உன்னை வீட்டிலை தனிய விட்டிட்டு எத்தினை தரம் எங்கையோ எல்லாம் சுத்திப் போட்டு வந்தவன் ‘ எண்டு சொல்லிப் பேசுங்கள்.

பேசாமல் அதுகளோடை போய் நாலு கதை கதைச்சு மனம் விட்டுச் சிரிச்சிட்டு வந்திருக்கலாம்.

இன்னும் மனுசன் தொலைபேசியிலை அளக்குது. மூன்று மணித்தியாலமா நானும் உம்மாண்டி மாதிரி முட்டு வீட்டுக்குள்ளை தட்டுப் பட்டுக் கொண்டு திரியிறன். இந்தப் பிரச்சனையை இண்டைக்கும் கதைச்சு முடிக்கேலாது போல கிடக்கு.

சரி சரி ஒரு மாதிரி மனுசன் தொலைபேசியை வைச்சிட்டுது. ஆனால் நேரந்தான் பதினொரு மணியாச்சு. இப்பப் போய் இந்தப் பிரச்சனையைக் கதைக்கேலாது. அவ்வளவு அவசரமா கதைச்சு முடிக்கிற விசயமுமில்லை இது. அதோடை இப்ப போய் நான் ஏதாவது கதைக்க மனுசன் படுக்கிற நேரம் பிரச்சனையான கதையளைக் கதைக்காதை எண்டு சினக்க.. வேண்டாம். நாளைக்குக் கதைப்பம் எண்டு விட்டிட்டன்.

அதுதான் இண்டைக்காவது எப்பிடியாவது கதைச்சிடோணும் எண்ட நினைப்போடே பிள்ளையாரே…! கடவுளே…! இண்டைக்கு ஒருத்தரும் ரெலிபோன் பண்ணியிருக்கக் கூடாது எண்டு நினைச்சுக் கொண்டு கதவைத் திறந்தன். நல்ல காலம் ஒரு கதைச் சத்தமும் கேட்கேல்லை.

அந்தப் பெரிய சந்தோசம் ஒரு சின்ன செக்கனுக்குள்ளை ஓடிட்டுது. தொலைக்காட்சியிலை காற்பந்தாட்டம் நடக்குது. மெதுவா எட்டிப் பார்த்தன். மனுசனுக்கு என்ரை பக்கம் திரும்பக் கூட மனமில்லை. கண்களை தொலைக்காட்சிக்குள்ளை தொலைச்சுப் போட்டு சோபாக்குள்ளை சுருண்டு கிடக்குது.

சரி வழக்கம் போலை தேநீரைப் போட்டுக் குடுத்திட்டு தொலைக்காட்சியைப் பார்த்தன். விளையாட்டுத் தொடங்கி ஆகப் பத்து நிமிசங்கள்தான். சா… விளையாட்டு முறைப்படி முடியிறதெண்டாலே 80நிமிசங்கள் இன்னும் வேணும். இதுக்குள்ளை எத்தினை அளாப்பல். குழப்பல். இதுக்குள்ளை இடைவேளை. இதுகளோடை தேநீரையே கை நீட்டி வாங்க மறந்து தொலைக்காட்சியோடை இருக்கிற மனுசன். இண்டைக்கும் கதைக்கிறதெங்கை!

வெளியிலை பார்த்தன். கும்மிருட்டு. என்ரை அறை லைற்றை போட்ட படி விட்டிட்டு அப்பிடியே படுத்தன். ஆ… என்ன சுகம். கதகதப்பான போர்வை. அறை நிறைய வெளிச்சம். இதமான தலையணை. கண்களைத் திறந்த படி ஏகாந்தம்.

அப்ப… பிரச்சனை… ? அது என்ன எண்டுதானே கேக்கிறிங்கள். அது தன்ரை பாட்டிலை இருக்குது.

8.12.2005

—-

chandraselvakumaran@gmail.com

Series Navigation

சந்திரவதனா செல்வகுமாரன்

சந்திரவதனா செல்வகுமாரன்