அப்சல் மரண தண்டனை – ஓர் அலசல்

This entry is part [part not set] of 35 in the series 20061012_Issue

பாலா


தீவிரவாதத்திற்கு துணை போனதாக அ•ப்சலுக்கு மரண தண்டனை வழங்கியது சரியா தவறா என்று தனிப்பட்ட அளவில் கருத்து எதுவும் கூற வரவில்லை. இதன் பின்னணி பற்றி ஓரளவு தெரியும் என்பது தவிர, முழுமையாக படித்துத் தெளியாததும் இதற்கு ஒரு காரணம். சட்டம் தன் பணியை செய்து ஒரு தண்டனை வழங்கியுள்ளது, அவ்வளவே !

இந்த மரண தண்டனை குறித்து, பொதுவாக பல கருத்துக்கள் நிலவுகின்றன.

1. இஸ்லாமியர் (தண்டனைக்கு) ஆதரவாகப் பேசினால், அவர் கட்டாயத்தின் பேரில் சொல்கிறார் என்று அவர் நேர்மையை சந்தேகிப்பது ! சட்டம் தன் கடமையை செய்தது என்ற வகையில், வாய் மூடி இருந்தால், அவர் பாகிஸ்தானிய ஆதரவாளர், தேசப்பற்று இல்லாதவர் என்று குற்றம் சாட்டுவது !

2. இஸ்லாமியர் அல்லாதோர், ஆதரவாகப் பேசினால், அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் / இந்துத்வா என்று முத்திரை குத்துவது !

3. மிதவாதிகளையும், பேசாமல் இருப்பவர்களையும் கூட, “பொதுப்புத்தி” உடையவர்கள் என்று அறிவுஜீவிகள் நிராகரிப்பது ! சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் என்று ஜனநாயகத்தில் நினைப்பது / சொல்வது, நிச்சயம் “பொதுப்புத்தி” கிடையாது !

4. தண்டனைக்கு எதிரான அருந்ததி ராய் போன்றவர்களை, சமூகம் உய்வு பெற போராடும் “மாற்றுச் சிந்தனையாளர்கள்” என்று ஓவராகச் சிலாகிப்பது ! இந்த அருந்ததி ராய் போன்றவர்கள் high profile மரண தண்டனைக் குற்றவாளிகளுக்கு மட்டும் ஆதரவாக களத்தில் குதிப்பவர்கள்.

சாதாரணக் குற்றவாளிகளை சீந்த மாட்டார்கள். ஏன் என்று எல்லோருக்கும் எளிதில் புரியும் !

என்று (எல்லா ஊடகங்களையும் சேர்த்து) நிறையவே கூறலாம்.

நமது ஊடகங்கள், எப்போதும் போல பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கி அடிக்கும் லூட்டியின் விளைவாக, (ஜனநாயக உரிமை என்ற பெயரில்) இப்போது அரங்கேறும் அனைத்து கூத்துகளையும் தேசிய அளவிலான அவமானம் என்று தான் கூற வேண்டும்.

அ•ப்சலின் தண்டனைக்கு எதிராக, காஷ்மீரத்துப் பெண்டிர், “Brother Afsal, We are proud of you” என்று பேனர் கட்டி ஊர்வலம் நடத்துவது மற்றும் “பாராளுமன்றத்தைத் தாக்கியது தேசத் துரோகத்தின் உச்சம்” என்று கூக்குரலிடுவது என்று இரு தீவிர நிலைப்பாடுகளையும், அவற்றின் நடுவே பலவிதமான நிலைப்பாடுகளையும் நாம் பார்க்கிறோம்.

அ•ப்சல், ஜனநாயகத்தின் கோயிலான பாராளுமன்றத்தையே சிதறடிக்க திட்டம் தீட்டியது தேசத் துரோகம், அதனால் அவருக்கு மரண தண்டனை சரியானது என்ற வகையில் வாதிடுவது என் நோக்கமல்ல ! மந்திரிகளையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் காக்க வேண்டி (அவர்களில் பாதிக்கு மேல் காப்பாற்ற லாயக்கற்றவராக இருப்பினும்!) போரிட்டு உயிர் துறந்த பாதுகாப்புப் படைவீரர்களின் தியாகம், இது குறித்து பேசும் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்று. மேலும், திட்டம் தீட்டி சாதாரண பொதுமக்களை குண்டு வைத்துச் சிதறடிப்பது, ‘தேசத் துரோகம்’ என்ற வரையறைக்குள் வருமா, வராதா ??? அதற்கு மரண தண்டனை வழங்கலாமா, கூடாதா ??? என்ற கேள்விகள் எழுகின்றன.

என்னளவில், தீவிரவாதத்தினால், அப்பாவி பொதுமக்களும், (in the line of duty) பாதுகாவலர்களும் உயிரிழப்பது, பாராளுமன்றத் தாக்குதலை விடவும் மிகப்பெரிய விஷயமாகத் தோன்றுகிறது.

அடுத்து, அ•ப்சல் செய்த குற்றத்தின் தீவிரத்தை தள்ளி வைத்து விட்டு, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவிப்பதை “பொதுப்புத்தி” என்று நிராகரிப்பது பற்றிப் பார்ப்போம். ஒரு குற்றத்திற்கு என்ன தண்டனை என்பது, அது நிகழ்ந்த சூழல், விசாரணையின் வாயிலாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டவை, அது போன்ற குற்றங்களைத் தடுக்க deterrent ஆக தீர்ப்பு இருக்க வேண்டிய அவசியம், என்று பல விஷயங்களைச் சார்ந்தது. Each case is unique, No two cases are similar என்பதையும் நினைவில் கொள்வதும் அவசியம்.

மரண தண்டனை எதிர்ப்பாளர்கள், ஒரு நாகரீகமான சமூகத்தில், அரசாங்கமே, தண்டனை என்ற பெயரில் ஒரு ‘கொலையை’ச் செய்வதை அநாகரீகமான செயலாகவும், மனித மேம்போக்குச் சிந்தனைக்கு ஒவ்வாத ஒன்றாகவும் பார்க்கிறார்கள் ! இதிலும், முரண் உள்ளது !!! இப்படி, பொத்தாம் பொதுவாக, ‘நாகரீக’ சமுதாயம் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு, திட்டம் தீட்டி, குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாதம், எதிர்க்கத் திராணியில்லா இளம் சிறுமியை வன்புணர்ந்துக் கொல்லும் வக்ரம் போன்றவைகளில் ஈடுபடும் கயவர்கள், “நாகரீக” சமுதாயத்திலிருந்து களையப்பட வேண்டியவர்களே என்ற பதிலை கூற இயலும். மரண தண்டனையை எதிர்ப்பவர்களின் “பொதுப்புத்தி” என்று அவர்கள் கூறும் காரணங்களையும் எளிதாக நிராகரிக்க இயலும் !!!

போரில் ஈடுபடுவதும், மிருகங்களை மதத்தின் பெயரால் பலியிடுவதும் கூட நாகரீகமான சமுதாயங்கள் செய்யக் கூடாதது தான் ! தீவிரமான குற்றங்களால், தனிப்பட்ட அளவில் பெருமளவு பாதிக்கப்பட்ட / பாதிக்கப்படும் வாய்ப்புள்ள ஜீவன்களுக்கும், சாதாரண பொதுமக்களுக்கும், அரசும், சட்டமும், சமூகமும் நம்பிக்கையூட்டும் வண்ணம் செயலாற்றுவது மிக அவசியம் ! சமூகத்திற்கு அது கடமையும் கூட ! இதையே மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்.

அடுத்து, அ•ப்சலின் குடும்பத்தினரை குடியரசுத் தலைவர் சந்தித்தது சரியான ஒன்றா ? குடியரசுத் தலைவர் தங்களைச் சந்திக்க வேண்டும் என்று மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒவ்வொரு குற்றவாளியின் குடும்பமும் எதிர்பார்த்தால் என்ன செய்வது ? இப்போது சந்தித்தது, ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடாதா ? மேலும், குடியரசுத் தலைவர் நேரடியாக மன்னிப்பை வழங்குவதில்லை, காபினெட் வழங்கிய மன்னிப்பை ஊர்ஜிதம் செய்கிறார், அவ்வளவே ! இந்த விஷயம் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

(போலி)மதச்சார்பின்மையை போற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் (இவர்களை காப்பாற்றத் தான் ராணுவ வீரர்கள் பலர் உயிர்த் தியாகம் செய்தார்கள்!) தற்போது வாய் மூடி மௌனிகளாக இருப்பது வேதனையான ஒரு விஷயம். இவர்களின் வேஷம் அடிக்கடி இப்படி கலைவதும் நல்லது தான், என்ன, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

புரிந்து கொண்டால் சரி !

என்றென்றும் அன்புடன் பாலா balaji_ammu@yahoo.com

Series Navigation

பாலா

பாலா