அபூர்வ மனிதர் சுஜாதா

This entry is part [part not set] of 35 in the series 20080227_Issue

பாவண்ணன்


தூங்கியெழுந்ததிலிருந்து தூங்கப்போவதுவரை தன் எல்லா நடவடிக்கைகளிலும் இயல்பான உற்சாகம் இழையோட வாழ்கிற மனிதர்கள் ஒரு சிலரையாவது நாம் பார்த்திருக்கலாம். அதே சமயத்தில், ஒரு புத்தகத்துக்கு அட்டை போடுவதிலிருந்து ஓர் எந்திரத்தை வடிவமைப்பதுவரை, எந்தச் செயலை எடுத்துக்கொண்டாலும் கச்சிதமாகவும் சரியான முறையிலும் செய்து முடிக்கிற திறமையாளர்கள் ஒரு சிலரையும் நாம் பார்த்திருக்கலாம். உற்சாகம் மிகுந்த மனிதர்கள் அனைவரும் திறமையாளர்களாக இருப்பதில்லை. திறமையாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் வாழ்வதுமில்லை. உற்சாகமும் திறமையும் ஒருங்கே பொருந்திய அபூர்வமான மனிதர்கள் மிகவும் குறைவு. இந்தச் சிறிய பட்டியலில் அடங்கக்கூடிய அபூர்வமான மனிதர் சுஜாதா என்கிற எஸ்.ரங்கராஜன்.
சுஜாதா மிகச்சிறந்த பொறியாளர். இந்தியா முழுதும் இன்று பயன்படுத்தப்பட்டுவரும் மின்வாக்குக்கருவியை வடிவமைத்த தொடக்கக்காலப் பொறியாளர்களில் ஒருவர். சங்க இலக்கியங்களiலும் பக்தி இலக்கியங்களiலும் ஆழ்ந்த பயிற்சி உள்ளவர். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம் வெகுஜன இதழ்ப்பரப்பில் தொடர்ச்சியாகவும் உத்வேகத்தோடும் இயங்கியவர். எல்லாக் கட்டங்களிலும் தனக்குரிய வாசகர்களை நிறைவான எண்ணிக்கையில் கொண்டவர். வெற்றிகரமான திரைக்கதை அமைப்பாளர். தொழிலையும் எழுத்துமுயற்சிகளையும் இணைத்துக் குழப்பிக்கொள்ளாதவர். தொழிலால் உருவாகும் களைப்பை எழுத்தில் ஈடுபட்டுக் கரைத்து உற்சாகத்தைத் திரட்டிக்கொள்வதும் எழுத்தால் உருவாகும் களைப்பை தொழிலில் ஈடுபட்டுக் கரைத்து புத்துணர்வைப் பெற்றுக்கொள்வதும் அவருக்கு சாத்தியமாக இருந்தது.
எந்த ஜனரஞ்சக எழுத்தாளருக்கும் இல்லாத ஒரு முக்கியமான பண்பு சுஜாதாவுக்கு இருந்தது. மற்ற எழுத்தாளர்கள் தம் படைப்பின் சுவையில் திளைப்பவர்களாக தம் வாசகர்களை உருமாற்றி வைப்பவர்களாக இயங்கிய வேளையில் சுஜாதா மட்டுமே தன் வாசகர்களை ஏதேனும் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனையைநோக்கி எப்போதும் தள்ளிக்கொண்டிருப்பவராக இயங்கினார். எழுத்தில் திளைப்பவர்களையல்ல, எழுத்தின்வழியாக தன் இயக்கத்தை வடிவமைத்துக்கொள்கிறவர்களாக வாசகர்களை மாற்றினார். புதிய புதிய விஷயங்களைநோக்கி, அறிவியல் உண்மைகளைநோக்கி, நாட்டுப்புறப்பாடல்களைநோக்கி, குழந்தைகளைநோக்கி, கணிப்பொறிகளைநோக்கி, நாடகங்களைநோக்கி, கதைக்களஞ்சியங்களைநோக்கி, சங்க இலக்கியங்களைநோக்கி, பிரபந்தங்களைநோக்கி என வாசகர்களை ஓய்வற்றவர்களாக மாற்றிய பெருமை சுஜாதாவுக்குமட்டுமே உண்டு. சுஜாதாவின் ஈடுபாடுகளை வியந்து பின்பற்றும் வாசகன் ஏதோ ஒரு கணத்தில் அவரால் தூண்டப்பட்டு தானும் ஓய்வற்ற உற்சாகத்தின் இன்பத்தை நுகர்கிறவனாக, தொழில்நுட்பத்தின் ரகசியத்தை அறிந்துகொள்ளும் ஆர்வமுடையவனாக மாறிவிடுகிறான். தன்னையறிவதால் தனக்குள் நிகழும் மாற்றத்தால் ஒரு வாசகன் பெறுகிற மகிழ்ச்சியே ஓர் எழுத்தாளருக்குரிய வாசகப்பரப்பைத் தீர்மானிக்கக்கூடிய சக்தியென எடுத்துக்கொண்டால் சுஜாதா உருவாக்கிய வாசகப்பரப்பு தமிழ் ஜனரஞ்சக எழுத்துலகில் வேறு எவராலும் உருவாக்கப்பட முடியாத ஒன்று.
தொழில்நுட்பத்தோடு செயலாற்றும் ஒரு களமாக மட்டுமே எழுத்துமுயற்சியை வரையறுத்துக்கொள்ளும் பார்வை சுஜாதாவுக்கு இருந்தது. ஒருவகையில் இதுவே சுஜாதாவின் பலம். மற்றொருவகையில் இதுவே பலவீனமும் கூட. அப்பார்வை புறவயமாக உலகநடப்புகள் எல்லாவற்றையும் பார்ப்பதற்கான குணத்தை அவருக்கு வழங்கியது. தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கவும் வாசகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் இப்பார்வை அவருக்கு மிகவும் துணையாக இருந்தது. அதே சமயத்தில் ஆழந்து நுட்பமாக வெளிப்படுத்தப்படவேண்டிய சில செய்திகளைக்கூட அவர் போதிய நுட்பமின்றி மேலோட்டமாக வெளிப்படுத்தவேண்டிய பழக்கத்துக்கு ஆளானார் அவர். இது இப்பார்வையின் துணைவிளைவு. அகஎழுச்சியிலும் சொற்களiன் ஊடாக வெளிப்படக்கூடிய படைப்பாளியின் பார்வையிலும் அவருக்கு அவ்வளவாக நம்பிக்கையில்லை.
இன்று அவர் நம்மிடையே இல்லை. அரைநூற்றாண்டு காலமாக அவர் எழுதிய இருநூறுக்கும்மேற்பட்ட சிறுகதைகளும் பல தொடர்கதைகளும் நாடகங்களும் அறிவியல் நூல்களும் அறிமுக நூல்களும் மட்டுமே உள்ளன. தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் அவருடைய இடம் உறுதியான ஒன்று. வகைமைகளiல் அவர் காட்டிய தீராத ஆர்வம் மிகவும் முக்கியமானது. தீவிரமான முயற்சியின் பலன் என்று எவ்விதமான தோற்றமும் தராமலேயே ஒரு பாத்திரத்தின் தன்மை அல்லது ஓர் இடச்சூழல் என எதையுமே மிகக்குறைந்த சொற்களில் வடித்துக்காட்டுவதில் அவருக்கிருந்த திறமை இறுதிவரைக்கும் குன்றாததாகவே இருந்தது. அவருடைய மொத்த சிறுகதைகளிலிருந்து கிட்டத்தட்ட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட மிகச்சிறந்த சிறுகதைகளைத் திரட்டியெடுக்கமுடியும். அவருடைய தொடக்கக்கால முயற்சிகளில் கனவுத் தொழிற்சாலை, காகிதச்சங்கிலிகள் ஆகிய படைப்புகளும் பிற்கால முயற்சிகளில் பதவிக்காக, ரத்தம் ஒரே நிறம் ஆகிய படைப்புகளும் முக்கியமானவை.
அறிவியல் செய்திகளை படைப்பூக்கம் மிகுந்த மொழியில் அவர் தொடர்ந்து தமிழ்ப்பரப்பில் முன்வைத்துவந்ததை வாசகர்களின் நல்லூழ் என்றே சொல்லவேண்டும். கணிப்பொறியை அறிமுகப்படுத்தும் வகையில் எண்பதுகளiல் தொடக்கத்தில் வெளிவந்த நூல் ( அன்னம் வெளiயீடு) ஓர் இலக்கியப் பிரதிக்கு இணையான வாசிப்புத்தன்மையைக் கொண்டது. 1, 0 என்ற இரு எண்களிடையே இயங்கும் உறவையும், அவை இணைந்தும் விலகியும் உருவாகும் எண்ணற்ற சாத்தியங்களையும் நகைச்சுவை உணர்வோடும் சுவாரசியமான எடுத்துக்காட்டுகளோடும் ஈர்ப்புமிகுந்த மொழியில் அவர் வெளிப்படுத்தியதை மறக்கமுடியாது.
மனம், மனத்தின் செயல்பாடு, காதல் உணர்வுகள் என தரைமீது உள்ள எல்லாவற்றையுமே அவரால் அறிவியலின் கண்கொண்டுமட்டுமே பார்க்கமுடிந்தது. இதனால் நெகிழ்ச்சியான காதல் உணர்வைக்கூட அவர் ஹார்மோன்களின் விளையாட்டு என்றும் நியுரான்களின் உந்துதல் என்றும் சொல்லி மெல்லிய நகைச்சுவையோடு கடந்துவிடுவதே அவருடைய இயல்பாக இருந்தது. இத்தனைக்கும் காதல் உணர்வைப் புரிந்துகொள்ள முடியாதவர் அல்லர் அவர். சொற்களின் இடையிலான மௌனத்தின் வழியாக, ஆண்டாள், நம்மாழ்வார், பெரியாழ்வார் பாடல்களில் வெளிப்படும் மானுட உணர்வுகளையும் ஏக்கங்களையும் நுட்பமாக ஒரு பேராசிரியரைப்போல எடுத்துச் சொல்லத் தெரிந்தவர்தான். தன்னுடைய எழுத்து என வரும்போதுமட்டும் ஏதோ காரணத்தில் இத்தகு உணர்வுகளுக்கு அவர் இடமளித்தில்லை.
அவரை நான் நான்கு முறைகள் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அந்தந்த காலத்தில் வெளiவந்த நூல்களைப்பற்றியும் புதிதாக எழுத வந்திருக்கும் எழுத்தாளர்களைப்பற்றியும் ஆர்வத்துடன் கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தார். சந்தித்த இரண்டாவது நிமிடத்திலேயே இலக்கியத்தைப்பற்றிப் பேசத் தொடங்கிவிடுவார். இலக்கியத்தைத் தவிர வேறெந்த சிந்தனையும் அவர் மனத்தில் இருந்ததில்லை. வயது வேறுபாட்டை ஒரு பொருட்டாகவே அவர் நினைத்ததில்லை. வாசலிலிருந்து என் தோள்மீது கைவைத்தபடி உள்ளறைக்குள் அவர் அழைத்துச் சென்ற கணத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது. உரைநடைப்படைப்புகளைவிட கவிதைகளைப்பற்றிப் பேசுவதில் அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. அவர் பேச்சினிடையே குறுக்கிட்டு நாம் முன்வைக்கிற பதில்களைப் பொருட்படுத்திக் கேட்பார். ஒருநாளும் எந்தப் பேச்சையும் உதறியது கிடையாது.
அவரைச் சந்திக்கச் சென்ற ஒருநாள் கடுமையான கால்வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தேன். இதனால் நேர்ந்த மனச்சோர்வு வேறு. என்னோடு பேசத் தொடங்கிய கணத்திலேயே அவர் என் சோர்வைப் படித்துவிட்டார். “ஒரு வேளைக்கு ஒரு மாத்திரைதானே? இதில் என்ன சிரமம்” என்று சொல்லிக்கொண்டே தன் மேசை இழுப்பறையைத் திறந்து ஒரு பிளாஸ்டிக் பெட்டியைத் திறந்து காட்டினார். வெவ்வேறு வடிவங்களiல் வெவ்வேறு நிறங்களiல் மாத்திரைகள் குவியலாக் கிடந்தன. “ஒரு வேளைக்கு எட்டு எடுக்கணும். ஒரு நாளைக்கு இருபத்திநாலு. சராசரியா ஒரு மணிநேரத்துக்கு ஒன்னு தெரியுமா? இதுக்கெல்லாம் அலுத்துகிட்டா எப்படி?” என்று சிரித்தார். ஓர் ஊசிவழியாக மருந்தை உட்செலுத்திக்கொள்வதுபோல சோர்வற்று இயங்கத் தேவையான சக்தியை தனக்குத்தானே ஏற்றிக்கொள்ளும் ஆற்றல் அவரிடம் செயல்படுவதை அன்று அறிந்தேன். “எப்பவும் உற்சாகமா இருக்கணும் பாவண்ணன். சார்ஜ் எறங்கவே கூடாது” சொல்லிக்கொண்டிருக்கும்போது அவர் உதடுகளில் நெளிந்த புன்னகை ஒரு சித்திரம் போல மனத்தில் பதிந்திருக்கிறது. அவர் எடுத்துரைத்த உண்மை பல நேரங்களில் ஓர் ஒளிச்சுடராக நின்று எனக்கு வழிகாட்டியிருக்கிறது. இப்போதும் அவரை நினைத்துக்கொள்ளும் தருணத்தில் அவருடைய சோர்வற்ற மனமும் ஓய்வற்ற உழைப்பும்தான் நினைவுக்கு வருகின்றன.

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்