அ.லெ.ராஜராஜன்
பேசினாய் பேசினாய் பேசினாய்
பேசிக்கொண்டேயிருந்தாய்.
பேசவில்லையெனில் பேட்டியெடுத்தாய்.
கடைசியில் நடுங்கும் கரங்கொண்டு
என் கரம் பற்றி கேட்டாய்
‘எப்படி வேண்டும் ‘
‘எது ‘
‘மென்மையாகவா, இல்லை முரடாகவா ‘.
ஓ
கவிதைகள் படித்து
கெட்டுப்போன கூட்டத்தில்
நீயும் ஒருவனா.
நீயென்ன பலகாரக்கடை சிப்பந்தியா
பரிமாறுமுன்னே பக்குவம் கேட்பதற்கு.
சொல்கிறேன் கேட்டுக்கொள்
எப்போதும் மென்மையாய் இருந்து
போரடித்துவிடாதே.
எப்போதும் முரடாய் இருந்து
பயமுறுத்திவிடாதே.
மற்றொருமுறை அபிப்பிராயம் கேட்டு
என் பெண்மையை
அசிங்கப்படுத்திவிடாதே.
மாறாய்
என் கரம் பற்றும்போதே
என் நாடித்துடிப்பு கண்டு தெரிந்துகொள்
எனக்கு எப்படிவேண்டுமென்று
உன் மார்மோதும் என் மூச்சுக்காற்றின்
உஷ்ணம் அளந்து அறிந்துகொள்
எனக்கு எப்படிவேண்டுமென்று.
என் கரம் உன் தோள்பற்றும்
அழுத்தம் பார்த்து புரிந்துகொள்
எனக்கு எப்படிவேண்டுமென்று.
வீணையடி நீயெனக்கு என்றாய்
இல்லை
நான் ஒன்றும் வீணையில்லை,
நீ சும்மா மீட்டிவிட்டு போவதற்கு
நான் மனுஷி,
ரத்தமும் சதையுமான மனுஷி.
புரிந்துகொள்
என் ப்ரிய கணவா.
- ஆசிாியரும் மாணவனும்
- G8 உச்சிமாநாடு விளக்கம் (கேள்வி பதில்கள்)
- காஷ்மீர் பிரச்னை
- இந்த வாரம் இப்படி, சூலை 22, 2001(நடிகர் திலகம் மறைவு, முஷாரஃப் கூத்து, இந்து யாத்திரிகர்களும், இந்து கிராமத்தவர்களும் கொலை)
- அன்பே…
- ஹைக்கு கவிதைகள்
- நிரந்தர நிழல்கள்
- சேவியர் கவிதைகள்
- ‘போதும் எழுந்து வா ‘
- நன்றி !மீண்டும் வருக !
- மின்னணுக் கல்வி அறிவு (மி.கல்வி அறிவு)/(e-literacy)
- பாசிப்பருப்பு சாம்பார்