அன்புள்ள அப்பாவுக்கு

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


பாரீஸ், 10-12-2000

அன்புள்ள அப்பாவுக்கு,

இங்கு நான், உங்கள் மருமகப்பிள்ளை இருவரும் நலம். அது போல் உங்கள் நலனையும், அம்மா, அண்ணன், அண்ணி, குழந்தை செளம்யா அனைவரின் நலனையும் அறிய ஆவல். உங்களிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்தேன். கடந்த இரண்டுமாதங்களாக உங்களிடமிருந்து பதில் இல்லை. இப்போதெல்லாம் முன்பு போல் நீங்கள் அடிக்கடி கடிதம் போடுவதில்லையே ஏன் ? என் மீது என்ன கோபம் ? அவசியம் அடிக்கடி கடிதம் எழுதவும்.

உங்களுக்குச் சர்க்கரை குறைந்திருக்கிறதா ? நான் இங்கிருந்து வாங்கி அனுப்பியிருந்த கருவியில் உங்கள் சர்க்கரை அளவைப் பார்த்து அளவுடன் வைத்திருக்கவும். மாத்திரைகளை வேளாவேளைக்குத் தவறாமல் எடுத்துக் கொள்ளவும்.

அம்மாவுக்கு அடிக்கடி தலைச்சுற்றல் என்று சொன்னாங்களே இப்போது எப்படி இருக்கின்றது ? அவங்களுக்கும் ஒருவேளை சர்க்கரை இருக்குமோ ?

அண்ணி மறுபடியும் உண்டாகி இருப்பதாகப் போனகடிதத்தில் எழுதியிருந்தீர்கள். சந்தோஷமாயிருந்தது.நான் விசாரிச்சேன்னு சொல்லவும். எனக்கு இந்த முறை ஒரு குட்டிப்பையன் வேணும். இதை அழுத்தம் திருத்தமா அண்ணியிடம்சொல்லணும்.

அண்ணன் ஆபீஸ் பிரச்சினைகள் முடிந்துவிட்டதா ? ஐம்பதினாயிரம் ரூபாய் பணம் கட்டினால் சீஃப் கேஷியர் பிரமோஷன் கிடைக்கும் என்று எழுதியிருந்தீர்கள். நானும் இங்கே பக்கத்து அப்பார்ட்மெண்ட்டிலிருக்கும் ஒர் ஆப்ரிக்கப் பெண்ணிடம் ஐநூறு யூரோ கடன் வாங்கி அனுப்பியிருந்தேன். மீதித் தொகையைப் புரட்டிப் பிரச்சினையை முடித்தீர்களா ?

எனக்கு என்ன எழுதறதுன்னு புரியலை. இவரது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. நான் முன்பு எழுதியிருந்தது போலவே எப்போதும் அந்தப் பிரெஞ்சுப் பெண்ணோடுதான் இருக்கிறார். எப்போதாவது திடார் திடாரென வீட்டுக்கு வருவார் தனியாக அல்ல, அந்தக் குதிரையோடுதான். வீட்டில் நுழைந்தவுடன் சோபாவில் ஹாய்யாக உட்கார்ந்துகொண்டு, ‘கொமான் சவா ? ‘(எப்படி இருக்கிறாய்) ? என்கிறாள். ‘ஷெரி! துய் ஆ உய்ன் சிகாரெத் ? ‘(டியர்! உன்னிடம் சிகரெட் இருக்கின்றதா ?) என்று அவரிடம் கேட்க, அவரும் கொடுக்க அதைப் பற்றவைத்து குபுகுபுவென்று புகை விடுவது சகிக்கலை. கையோடு கொண்டுவரும் பீர் பாட்டிலைத் திறந்து கொண்டு இருவரும் உட்கார்ந்து விடுகிறார்கள்.

எப்போதாவது ஒருமுறை வீட்டிற்கு வந்தாலும் சந்தோஷம் இருக்கின்றதா ? ச சுஃபி! ஃபே பா லெ சினேமா! ( ‘போதும்! சினிமா காட்டாதே!! ‘) என்று அவர் சத்தம் போட்டுவிட்டு விஸ்கி பாட்டிலைத் திறந்து கொண்டு உட்கார்ந்து விடுகிறார். அவள் சிரிக்கிறாள். என்னை வைத்துக்கொண்டே அவர்கள் நடக்கின்ற விதம், எழுதவே கூசுகிறது.

எனக்குப் பயமாக இருக்கிறது. பயம் அவர்கிட்ட இல்லை. எங்கிட்டதான். நான் படித்த கல்வி, அறிந்த தைரியம் எதுவுமே என்னிடத்தில் இல்லை. ‘எல்லாம் விதிப்படி ‘ ங்கிற மனசு கூட இப்பல்லாம போயிட்டுது.

ஞாபகமிருக்கா அப்பா ? எதிர்வீட்டுக் கொரட்டில ஒரு ரிக்ஷாக்கார குடும்பம் இருந்ததே! அவன் பேருகூட ‘வரதன் ‘னு ஞாபகம். ஒவ்வொரு முறையும் குடித்துவிட்டு மனைவியை அடிக்கும்போதெல்லாம் மறுநாளே எம்.ஜிஆர். படத்துக்கு அவளை அழைத்துப் போவான். அது மாதிரி ‘மறுநாட்கள் ‘ எனக்கு அமைஞ்சாக்கூட போதும்னு மனசு சொல்லுது.

பக்கத்திலிருக்கும் ஆப்ரிக்கப் பெண்தான் எனக்கு எல்லா உதவியும் செய்கிறாள். அசிஸ்தாந்த் சோசியாலிடம் அழைத்துச் சென்றவள் அவள்தான். அரசாங்கம் எல்லா உதவியும் செய்கிறது.

இங்கு வருவதற்கு முதல்நாட்கூட அம்மா, ‘உனக்கு பிடிக்கும்னு, வத்தகுழம்பு வச்சேன், கூடவே சுட்ட அப்பளமும் இருக்குன்னு சொல்லி, நான் தலைசீவிக் கொண்டிருக்கும்போதே ஊட்டிவிட்டாங்க. இங்கே யாராவது, ‘சாப்பிட்டாயா ? ‘ன்னு கேட்டாக்கூட இதமாயிருக்கும்.

எனக்கு இங்கு பிரெஞ்சு பாஷை இன்னும் பிடிபடவில்லை. நான் படித்த பட்டப்படிப்பிற்கு இங்கு மதிப்பில்லை. இரண்டுவாரங்களாக ஒரு வயதான தம்பதிகளின் வீட்டு வேலைக்குச் சென்று வருகிறேன். இருந்தும் இரவில் தனிமையில் இருக்கும்பொழுது என்னால் அழுகையைக் கட்டுபடுத்த முடியவில்லை. அழும்போதுகூட யாராவது பக்கத்தில் இருந்தாற்தானே ஆறுதல். நிறைய சேர்ந்தாற்போல கொஞ்ச நாளைக்கு தொடர்ந்து அழவேணும். அது முடியுமா அப்பா ? நான் இந்தியாவுக்கு வந்து விடட்டுமா ? எனக்கு உடனே கடிதம் போடவும்.

இப்படிக்கு,

கலா


புதுவை, 1-1-2001

செளபாக்கியவதி கலாவுக்கு,

அப்பா, அம்மா ஆசீர்வதித்து எழுதிக் கொண்டது. இங்கு நாங்கள் இருவரும் நலம். அதுபோல உன் அண்ணன் அண்ணி, குழந்தை செளம்யா ஆகியோரும் நலம்.

செளம்யாவுக்கு எப்போதும் உன் ஞாபகம்தான். அண்ணனுக்கு சீஃப் கேஷியர் உத்தியோகம் கிடைத்துவிட்டது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறான்.

எனக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்தானிருக்கிறது. அம்மாவிற்கு இப்போதெல்லாம் தலைச்சுற்றல் பரவாயில்லை. போனவாரம் கூட ராமதாஸ் டாக்டரிடம் காட்டினோம். புதிதாக சோனி கலர் டி.வி. ஒன்று சமீபத்தில் வாங்கினோம். அவளுக்கு அதில் சந்தோஷம். எல்லா மெகா சீரியல்களையும் பார்ப்பதற்கு உட்கார்ந்து விடுகிறாள்.

நீ எங்களைப் பற்றியெல்லாம் கவலைப் பட வேண்டாம். நீ சந்தோஷமாயிருந்தாற்தான் எங்களுக்கு நிம்மதி. உன் கடிதத்தைப் பார்த்ததிலிருந்து அம்மா ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை. அவளும் புலம்ப ஆரம்பித்துவிட்டாள். எல்லோரும் உன் நினைவாகவே இருக்கிறோம். தைரியமாக இரு. அவசரப் படவேண்டாம். எல்லாவற்றிற்கும் மேலே வேதபுரீஸ்வரர் இருக்கிறார். எங்கள் வேண்டுதல் வீணாகாது. அந்த ஊரிலும் ஏதோ சிவன் கோவில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். நேரம் கிடைக்கும்போது போய் வா. உன் பிரார்த்த்னைக்குப் பலன் கிடைக்கும். ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாயிடும். எங்களுக்குக் கூடிய சீக்கிரம் ஒரு பேரனோ பேர்த்தியோ வேண்டும். அம்மா சொல்லச் சொன்னாள். ஆண்கள் என்றால் அப்படி இப்படித்தான் இருப்பார்கள். நீதான் அட்ஜஸ்ட்பண்ணிப் போக வேண்டும்.

உன் ஜாதகத்தை ஜோசியரிடம் காட்டினேன். சனிதிசை நடப்பதாகச் சொன்னார். இன்னும் இரண்டு ஆண்டுகள் நீ சிரமப்பட வேண்டியிருக்கும். அதன் பிறகு யோகதிசையாம். நான் திருநள்ளாறுக்குச் சென்று சனிபகவானுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வருகிறேன். கவலைப்படாதே! நீ இந்தியாவுக்கு வந்துவிடுவது நல்லதல்ல. நீதான் சற்றுப் பொறுமையோடிருந்து அவரைத் திருத்த வேண்டும். எல்லாம் நல்லபடியாக முடியும்.

உன் தோழி கல்பனா ஸ்டேட்ஸ்லிருந்து வந்திருந்தாள். போன வருடம் வாங்கியிருந்த மனையில் வீடு கட்ட ஆரம்பித்து விட்டாள். இருபது லட்சத்துக்கு எஸ்டிமேட் போட்டிருக்கிறார்கள். பத்து லட்சத்திலேயே நாம் பிரமாதமாகக் கட்டிவிடலாம். நம் வீட்டு எதிரிலேயே 60க்கு 40ல் ஒரு நல்ல மனை விலைக்கு வருகின்றது. ஏதாவது ஏற்பாடு செய்து பணம் அனுப்பு. அங்கெல்லாம் பவுண் இப்போது என்ன விலை ? மலிவாக இருந்தால் வாங்கி வை. இந்தியாவுக்கு வரும்போது கொண்டு வந்தால், பாரின் கரன்சியை விட பவுணுக்குக் கூடுதலாக இந்திய ரூபாய் கிடைக்கும்.

அண்ணனுக்கு ரேமண்ட்வெல் வாட்ச் ஒன்று வேண்டுமாம். யாரிடமாவது மறக்காமல் கொடுத்தனுப்பவும்.. நான் இன்னும் அந்த பழைய அட்லாஸ் சைக்கிளில்தான் வெளியே போகவரயிருக்கிறேன். மூவாயிரம் ரூபாயிருந்தால் ஒரு நல்ல சைக்கிள் வாங்கலாம். செளம்யாவுக்கு கிண்டர் சாக்லேட்டும், எனக்கு ஒரு கில்லட் ஷேவிங் செட்டும் ஏற்பாடு செய்யவும்.

இப்படிக்கு

அப்பா

***

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா