அன்புடன் இதயம் – 21 – பிரிகின்றேன் கண்மணி

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

புகாரி


எப்போதும் இல்லாத அளவில் இப்போதெல்லாம் வெளிநாட்டுப் பயணங்கள்.
வளைகுடா இழுக்கிறது. அமெரிக்கா அழைக்கிறது. சிலருக்கு ஆசை
துரத்துகிறது; பலருக்கோ ஏழ்மை விரட்டுகிறது. இம்மாதிரிப் பயணங்களால்
வாழ்வில் பிரிவுத்துயர் பெருகிப் பெருகி திட்டமிட்ட விபத்துகளில் அதுவும்
ஒன்றாகிவிடுகிறது. இக்கவிதை அம்மாதிரி ஒரு பிரிவின் துயரை இங்கே
விவரிக்கிறது.

பனிமலரே புது நிலவே
பருவமழைத் தேன் துளியே
தனிமரமாய் நீ நின்று
தவிப்புடனே எனை நோக்க
கனிவான உன் முகத்தைக்
கண்ணீரில் மூழ்கவிட்டு
வெண்ணீரில் விழும் புழுவாய்
வெளிநாடு புறப்பட்டேன்

இனியென்ன ஆறுதலோ
என்னிடமோ வார்த்தையில்லை
அணிச்சப்பூ நீயல்ல
அதைவிடவும் ஓர்படிமேல்
இனிக்கவென்றே வாழ்க்கையென
எனைத்தேடி வந்தவளே
திணித்தேனே உன்நெஞ்சில்
திரள்திரளாய் துயரத்தை

மணிக்கணக்காய் உரையாடி
மடிமீது துயில்கொண்டு
இனிப்பாகத் துடுப்பசைத்து
இதயத்தில் படகுவிட்டோம்
தனிப்பறவைச் சிறகசைத்தால்
தங்கவெளி தான்வருமோ
கனியமுதே உன்னோடு
கண்டேனே சொர்க்கவெளி

துணையல்ல நீயெனக்குத்
துயிலவைக்கும் தாய்மடிதான்
மனைவியென நீ வந்த
மறுகணமே நான் பிறந்தேன்
அணைத்து மெல்லத் தலைகோதி
ஆறுதலாய்ப் பார்ப்பாயே
உனைப்பிரிந்த நொடியேயென்
உயிரெந்தன் வசத்திலில்லை

மனைவியுனைப் பிரிந்துவந்த
மனமெந்தன் மனமில்லை
நினைவெங்கும் நீயிருக்க
நினைப்பேனோ உனைப்பிரிய
எனைவென்ற இல்லாமையை
இல்லாமல் ஒளித்துவிடத்
துணையுன்னைப் பிரிவதற்குத்
தூண்டியது நீயுந்தானே

இணைந்துவிட்ட உயிர்கள்நாம்
இதுநமக்கு உடற்பிரிவே
உனைச்சேர சிறகசைத்து
ஓராண்டு முடிவினிலே
எனைவெல்லும் எல்லாமும்
என்முன்னே மண்டியிட
அணையுடைக்கும் வெள்ளமென
அன்பேயுன் மடிவீழ்வேன்

*
அன்புடன் புகாரி
buhari2000@hotmail.com

Series Navigation

புகாரி

புகாரி