சரண்
அந்த அரசுக்கல்லூரியில் முதல் நாள் வகுப்புகள் அவளுக்கு இன்றுதான் ஆரம்பம். கல்லூரி வளாகத்தில் நுழைந்தபோது அங்கே பெரும்பாலான மாணவிகள் சுரிதாரில்தான் இருந்தார்கள். தாவணி அணிந்து சென்றவர்களில் தான் மட்டும்தான் பளிச்சென்று இருக்கிறோம் என்பதை அவளும் உணர்ந்தாள்.
“இந்த மாதிரி பொண்ணுங்க மாடர்ன் டிரெஸ்சை இறுக்கமா போட்டு வந்தா ஏதேதோ எண்ணங்கள் வரும். ஆனா புத்தம்புது பாவாடை தாவணியை கண்ணியமா உடுத்திட்டு வந்து நமக்கு தப்பான நினைப்பு வராம பிரமிச்சுப்போக வெச்சுட்டாளே…”என்று அந்த மாணவன் சத்தமாகவே சொன்னான்.
நாகரிகமான இந்த கமெண்ட் தேன்மொழிக்கும் பிடித்திருந்தது.
“என் பொண்ணு மூணு வருஷம் கல்லூரியில் படிச்சு முடிச்சதும் கலெக்டராகுறதுக்கும் தொடர்ந்து படிக்கவெப்பேன். அவளுக்கு இருக்குற திறமைக்கு அவ விருப்பப்பட்டா பிற்காலத்துல குடியரசுத்தலைவரா கூட ஆகலாம்.நீ வா கண்ணு…உங்கம்மா கிடக்குறா…கல்யாணம், புள்ளைங்க, குடும்பம்…பொண்ணுன்னா இது மூணும்தான்னு நினைக்குற சராசரிதானே அவ…”என்று மனதுக்குள் இருந்த பாசத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்திய தேன்மொழியின் தந்தையே இன்று முதல்நாள் வகுப்பு என்பதால் கல்லூரியில் தேன்மொழியைக் கொண்டு வந்து விட்டுச்சென்றார்.
“வகுப்புக முடிந்ததும் நம்ம கடை காயின்பாக்ஸ் போனுக்கு தகவல் சொல்லு. நானே வந்து அழைச்சுட்டுப் போறேன்…இன்னைக்கு ஒருநாள் மட்டும்.” என்றுதான் மகளிடம் சொல்லிவிட்டுச் சென்றிருந்தார். ஆனால் வகுப்புகள் தொடங்கிய பத்தாவது நிமிடமே வணிகவியல்துறை அட்டெண்டருடன் மாரிமுத்து வந்து நின்றான். அவன் வெளுத்துப்போன முகத்துடன் வகுப்பறை வாசலிலேயே தயங்கி நிற்க, அட்டெண்டர் உள்ளே நுழைந்து பேராசிரியரின் காதில் ஏதோ கிசுகிசுத்தார்.
“தேன்மொழி யாரும்மா?…”சற்று முன் இருந்த கம்பீரம் பேராசிரியரின் குரலில் இருந்து விடைபெற்றுச் சென்றிருந்தது.
லேசான தயக்கத்துடன் தேன்மொழி எழுந்து நின்றாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்று புதிதாய் உடுத்திய பாவாடை தாவணி இவளுக்கு அசவுகர்யமாய் தெரிந்தது.
“இந்தப் பையன் யாருன்னு தெரியுமாம்மா?”
“எங்க கடையில வேலை செய்யுற பையன் சார்.”
“நீ வீட்டுக்கு கிளம்பும்மா…உங்க அப்பாவுக்கு திடீர்னு நெஞ்சுவலியாம்…”என்று மட்டும்தான் அவர் சொன்னார்.
அப்பாவுக்கு நெஞ்சுவலிதான்…நெஞ்சுவலி மட்டுமேதான் என்று நம்பிக்கொண்டு கிளம்பும் அளவுக்கு தேன்மொழியை சுப்பையன் வளர்க்கவில்லை.
பேராசிரியரின் பரிதாபப்பார்வையே தேன்மொழியின் யூகத்துக்கு எல்லாம் இடமில்லாத வகையில் விஷயத்தைப் புரியவைத்துவிட்டது.
தான் கொண்டுவந்த பையை எடுத்துக்கொண்டு மவுனமாக வெளியேறினாள்.மாரிமுத்துவின் கன்னங்களில் கண்ணீர் உருண்டோடி காய்ந்து நின்ற கோடு நன்கு தெரிந்தது.தேன்மொழியின் முகத்தைப் பார்த்ததும் அவன் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர்.
யாரோ ஒருவருடைய இருசக்கர வாகனத்தையோ அவன் இரவல் வாங்கியிருந்தான். அதில் அமரும்போது,”அப்பாவுக்கு என்னாச்சு…”என்றான்.
“முதலாளிக்கு நெஞ்சுவலி…”என்ற அவன் வேறு எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டினான்.
“அதத்தான் புரொபசரே சொன்னாரே.”என்ற தேன்மொழிக்கு மாரிமுத்துவிடமிருந்து பதில் இல்லை.இப்போது அவன் பேச மாட்டான் என்பதை தேன்மொழி உணர்ந்து கொண்டாள்.
திருவாரூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் நாகை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருந்தது அந்த அரசுக்கல்லூரி.
மாரிமுத்து, புறவழிச்சாலையிலோ அல்லது மரணப்பாலம் வழியாகவோ கடைத்தெருவுக்குள் செல்லாமல் மூன்றடி அகலமுள்ள சிறு பாலம் வழியாக ஓடம்போக்கி ஆற்றைக் கடந்து திருவாரூருக்குள் நுழைந்தான்.
அவன் மருத்துவமனை எதற்கும் செல்லாமல் ஐயனார்கோயில் தெருவுக்குள் சென்றபோதுதான் தேன்மொழிக்கு விபரீதம் புரிந்தது.
இவர்கள் வீட்டின் அருகே சிறு கும்பலாக மக்கள் கூடியிருந்ததைத் தொலைவிலேயே தேன்மொழி கண்டுகொண்டாள்.வீட்டை நெருங்கும்போதே பெண்களின் ஒப்பாரி சத்தம் அந்தப் பகுதியையே குலுங்க வைத்துக்கொண்டிருந்தது.
வெளியில் நின்ற மக்கள் அனைவரின் பரிதாபப்பார்வையும் இப்போது தேன்மொழியின் மீது.
வண்டியில் இருந்த அவள்,”மாரிமுத்து…இப்பவாச்சும் உண்மையான தகவலை சொல்லக்கூடாதா…”என்றாள்.
“முதலாளி உங்களைக் காலேஜூல இறக்கி விட்டுட்டு திரும்பும்போது பைபாஸ் ரோட்டுல பெட்ரோல் போட்டுட்டு ‘பங்க்’கை விட்டு வெளியே வந்திருப்பார் போலிருக்கு…நாகப்பட்டணத்துல இருக்குற எண்ணை கம்பெனிக்கு ஏதோ இரும்பு சாமான் ஏத்திட்டுப் போன லாரியில நீட்டிகிட்டு இருந்த இரும்பு பைப்புல இடிச்சு கீழே விழுந்திருக்காரு.ஸ்பாட்டுலேயே…”என்று மாரிமுத்து பேச்சை நிறுத்திக்கொண்டான்.
இப்போது கண்கள் கலங்க தேன்மொழி வீட்டுக்குள் நுழைந்தாள்.
சுவரோரமாக சுப்பையனின் புகைப்படம். முல்லைப்பூச்சரம் அதில் இருக்க, அதன் முன்னால் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அருகில் இரண்டு வாழைப்பழங்கள் புகைந்து கொண்டிருக்கும் பத்திகளுக்கு ஸ்டாண்டாக மாறியிருந்தன.
உள்ளூரில் இருந்த சில உறவுக்காரப் பெண்கள் வந்து தேன்மொழி மீது சாய்ந்து கொண்டு அழுதார்கள்.
‘உயிருள்ள பிணங்கள் செத்துப்போன பிணத்தைச் சுற்றி மர்ந்து அழுகின்றன…’என்று ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தது தேன்மொழியின் நினைவில் வந்து நின்றது.
கையில் இருந்த புத்தம்புது பேக்கைப் பார்த்தாள்.
‘ஸ்கூலுக்குப் போனப்பதான் ஐம்பது கிலோ புத்தகத்தைத் தூக்க வசதியா அந்தப் பையை வெச்சிருந்த. இனிமே அது உனக்கு வேணாண்டா கண்ணு.’என்ற சுப்பையன், இவளையும் அழைத்துச் சென்று நேற்றுதான் வாங்கித் தந்தார். இன்று பேக் இருக்கிறது. அவர் இல்லை.
தேன்மொழி அதைக் கொண்டு சென்று தந்தையின் புகைப்படத்தின் அருகில் வைத்துவிட்டு அம்மா பக்கத்தில் அமர்ந்தாள்.
இவள் மீது சாய்ந்து அழுத வேதவள்ளி, சட்டென்று மயங்கிச் சரிந்தாள். தண்ணீரை முகத்தில் அடித்து எழுப்பலாம் என்று வந்தவளைத் தடுத்த தேன்மொழி, அம்மாவை மடியில் படுக்க வைத்துக்கொண்டாள்.
இந்த நேரத்திலாவது அம்மாவின் அழுகை சற்று ஓய்ந்து அமைதியாக இருக்கட்டுமே என்ற எண்ணம். இப்போது மற்ற பெண்களின் அழுகை சத்தம் சற்று குறைந்திருந்தது.
ஒருத்தி,”ஏய்…தேனு…வாய்விட்டுக்கதறி அழுடி. சோகத்தை நெஞ்சுக்குள்ளேயே அடக்கி வெச்சிருந்தா உன் மனசு தாங்காதுடி…”என்று இவளை உலுக்கினாள்.
எதுக்காவது அம்மா அடிச்சா கூட,’தேன்மொழி…நீ அழக்கூடாது…அழறதால காரியம் ஆகப்போறது இல்லை.எந்தப் பிரச்சனை…சோகம் வந்தாலும் துணிச்சலான மனசோட இருந்தாதான் சமாளிக்க முடியும்னு சொல்லிக்கொடுத்தீங்கிளே…இப்ப நீங்க இல்லைன்னு தெரிஞ்ச பிறகும் உங்களோட அறிவுரைதானேப்பா என் மனசுல நிக்குது.என்னால எப்படி வாய்விட்டு அழ முடியும்?…’என்று தேன்மொழி மனதுக்குள் அழுதாள்.
“தேன்மொழி…சாவு வீட்டுல இப்படியா அலங்காரத்தோட இருக்குறது?…பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க?…ரூமுக்குள்ள போய் பழைய துணியை உடுத்திட்டு வா…”என்று ஒருத்தி காதோரமாக கிசுகிசுத்தாள்.
அடுத்த நொடியே தேன்மொழியின் பார்வை வீச்சைத் தாங்க முடியாமல்,”இந்தக் காலத்து பொண்ணுங்களுக்கு நல்லது, கெட்டது எதையுமே சொல்ல முடியலை…க்கும்…”என்று முணுமுணுத்தபடி நகர்ந்தாள்.
“பிறந்தநாள் அன்னைக்கே கல்லூரிக்கு முதன்முதலா போற பாக்கியம் எத்தனைபேருக்கு கிடைக்கும்…உனக்கு என்ன வேணும்னு சொல்லு.” என்று கல்லூரியில் முதல் நாள் வகுப்பு தொடங்கும் நாள் அறிவிக்கப்பட்டவுடன் சுப்பையன் தன் மகளிடம் கேட்டார்.
“பாவாடை தாவணியில தலைநிறைய மல்லிகைப்பூ வெச்சு பிரகாசமான குத்துவிளக்கு மாதிரி அலங்காரத்துல பார்க்கணும்னு சொல்வீங்கிளே…”என்று தயக்கத்துடன் தேன்மொழி சொன்னாள்.
மஞ்சள் வண்ண ஜாக்கெட், பாவாடை, அரக்கு நிற தாவணி ஆகியவை மூன்றே நாட்களில் தயாரானது.
இன்று காலையில் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து முடித்ததும் பிரகாரத்திலேயே அம்மா அப்பா காலடியில் விழுந்து அவர்களின் வாழ்த்துக்களை வாங்கினாள்.
“சகல செல்வ வளமும் பெற்று நூறு வருஷம் வாழணும்மா…”என்று வாழ்த்திய அப்பா,’அவரது ஆயுளையும் தனக்கே கொடுத்துவிட்டுப் போய்விட்டாரோ…பெரும்பாலான நாட்கள் சுரிதாரிலும் இரவு உடையிலுமே இருந்துட்டேன். நீங்க கடைசியா வாங்கிக்கொடுத்த உடையுடனேயே உங்களை வழியனுப்பனும்னு நினைக்குறேன்…மத்தவங்களுக்கு என்ன புரியும்…’என்ற எண்ணங்கள் தேன்மொழியின் மனதில் அலைமோதிக்கொண்டிருந்தன.
தேன்மொழியின் மடியில் படுத்திருந்த வேதவள்ளிக்கு லேசாக நினைவு திரும்பியதும் எழுந்து அமர்ந்தாள்.மகளின் முகம் பார்த்ததும் மீண்டும் அவளுடைய அழுகை.
“பொதுவாகவே நான் சொல்றதைக் கேட்காம உன்னோட பேச்சுக்குதானே அவர் மதிப்பு கொடுப்பாரு…பஸ்ஸ்டாண்டுல கடை வெச்சிருக்கீங்க…நம்ம பொண்ணை அங்க அழைச்சுட்டுப் போகாதீங்க…கண்ட பயலும் ஒரு மாதிரியா பார்ப்பானுங்கன்னு சொன்னாலும் கேட்க மாட்டாரே.
எனக்கு உடம்பு சரியில்லாம போனா கடையைப் பார்த்துக்க ஒரு வாரிசு வேணாம்…நீ சும்மா இருடின்னு என் வாயை மூடுவாரே…இப்ப ஒரேடியா அவரு கண்ணை மூடிட்டு போயிட்டாரே…தேனு…நான் கூப்பிட்டா வரமாட்டாரு…உங்கப்பாவுக்கு உன் மேலதான பாசம் அதிகம். நீயே கூப்பிட்டேன்…”என்று அழும் வேதவள்ளியைப் பார்த்து சுற்றி இருந்தவர்கள் மீண்டும் அழுதார்கள்.
பிறகு நேரம் ஆக ஆக அழுகுரல் குறைந்து வந்திருந்தவர்களின் பேச்சுக்குரல் அதிகரித்தது.
சுப்பையனின் உடல் வந்தபிறகு அடுத்த சுற்று அழுகை ஆரம்பமாகும். அதுவரை பக்கத்து வீட்டு சண்டை முதல் பாகிஸ்தான் போர் வரை பேசியே மாய்வார்கள். அதுசரி…தங்கள் வேலைகளைப் போட்டுவிட்டு வந்து கடமையே என்று உட்கார்ந்திருப்பவர்கள் அதிகம்.இவர்களை என்ன குற்றம் சொல்ல முடியும்?
சுமார் நான்கு மணிக்குதான் சுப்பையனின் உடல் வரும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரு சிலரின் பேச்சு, சுப்பையன் பஸ்ஸ்டாண்ட் நுழைவாயிலில் வைத்திருந்த கடை மீது திரும்பியது.
“கடன் வாங்கி வீட்டைக் கட்டி முடிச்சு ரெண்டு வருஷம் கூட ஆகலை. பஸ்ஸ்டாண்டுல அவன் வெச்சிருந்த கடையைக் கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலையிலயும் மாட்டிகிட்டான்.ஏண்டா…இவ்வளவு கடன் வாங்குற…நாளைக்கே பொண்ணுக்கு கல்யாணச் செலவு வந்தா என்னடா பண்ணுவேன்னு கேட்டேன்.
‘அவளை இப்பதான் மாமா கல்லூரியில சேர்த்துருக்கேன்.மூணு வருஷப் படிப்புக்கு அரசுக்கல்லூரியில ஒண்ணும் பெரிய செலவாகாது. அடுத்து அவ ஆசைப்படி கலெக்டராயிட்டான்னா எனக்கு என்ன கவலை. அவ்வளவு ஏன்?…இப்பவே நான் கவலைப்படலை…கடையில கடவுள் புண்ணியத்துலயும் வாடிக்கையாளர் ஆதரவுலயும் தினமும் பத்தாயிரம் ரூபாய்க்கு குறையாம வியாபாரம் ஆகுது. அப்புறம் என்ன…’என்று நாலு நாளைக்கு முன்னால ரொம்பவும் துணிச்சலாப் பேசிய சுப்பையன் இப்போ இல்லை.என்ன வாழ்க்கை இது?” என்று ஒருவர் உண்மையான வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தார்.
“பஸ்ஸ்டாண்டுல ஆம்பளங்க கடை நடத்தவே தடுமாற வேண்டியிருக்கு…இனிமே ஒத்த பொம்பளைப் புள்ள என்ன செய்யும்?…கடையை பொருளோட வித்துட்டா வீட்டுக்கடனையும் அடைச்சுட்டு நிம்மதியா இருக்கலாம்.
இன்சூரன்ஸ் பணமெல்லாம் வந்தா அப்படியே டெப்பாசிட் செஞ்சு வட்டியை வாங்கித்தின்னுட்டு அந்தப் புள்ளை கலெக்டருக்குப் படிச்சுடலாம்.நல்லவேளை…ஒரே ஒரு பொம்பளைப்புள்ளையோட போச்சு. அடுத்து ஒண்ணு ரெண்டு இருந்தா தேன்மொழி, மாவட்ட கலெக்டர் என்ன…பில் கலெக்டராக்கூட ஆக முடியாது.
ஐ நூறுக்கும் ஆயிரத்துக்கும் ஏதாவது எஸ்.டி.டி பூத், ஜெராக்ஸ் கடைன்னு கிடந்து கஷ்டப்படவேண்டியதுதான்.
ஆம்பளை இல்லாம தடுமாறுற வீடுன்னு இனிமே கடையைக் கூட அடிமட்ட விலைக்குதான் கேட்பாங்க…”என்று ஒருவர் பேசுவதைக் கேட்கும்போது தேன்மொழிக்கு கோபம் வந்தது. ஆனாலும் அதுதானே உண்மை என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள்.பெண்களின் ஒப்பாரி சத்தம் இல்லாததால் அந்தப் பெரியவர்கள் பேசியவை அனைத்தும் தேன்மொழிக்கு தெளிவாக கேட்டன.
ஒரு ஆம்பளைப் புள்ள இருந்துருந்தா செத்ததுக்கு அப்புறம் கொள்ளியும் போட்டிருக்கும். பேர் சொல்லும்படியாவும் இருந்துருக்கும். என்று யாராவது சொன்னால் சுப்பையன் அவர்களைக் கடித்து குதறாத குறையாகப் பேசி விரட்டி விடுவார்.
‘ஏன்…என் பொண்ணு கொள்ளி வெச்சா என் உடம்பு எரியாதா…உங்க வாயை மூடுறதுக்காக இல்லடா…பல எளிய மக்களுக்கு சேவை செய்யணும்னு நினைச்சு அவ ஆசைப்படியே கலெக்டராக்குறதுன்னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன். உங்க வேலையை நீங்க பாருங்க…’என்று ஒருமுறை இவள் கடையில் இருக்கும்போதே ஒருவரிடம் கோபப்பட்டதை நினைத்துப்பார்த்ததும்,”உங்க ஆசையை நிறைவேத்துவம்ப்பா…”என்று தேன்மொழியின் உதடுகள் தன்னிச்சையாக முணுமுணுத்தன.
நாலேகால் மணிக்கு சுப்பையனின் உடலைப் பிரேதப் பரிசோதனை முடிந்து எடுத்து வந்தார்கள்.
சுப்பையனின் காலடியில் கிடந்து வேதவள்ளி கதறிக்கொண்டிருந்தாள்.
“இந்த நல்ல மனுஷன் செத்ததும் ஊரே அழுது புலம்புது. அவரு பெத்த பொண்ணோட கண்ணுலேர்ந்து ஒரு சொட்டு கண்ணீர் வருதான்னு பாரு…” என்று ஒப்பாரிகளுக்கு நடுவேயும் சில வசவுகள்.
தேன்மொழியைப் பற்றி கண்ணியமாக கமெண்ட் அடித்தவன் கையிலும் ஒரு மாலை. சுப்பையனின் உடலில் அதைப் போட்டு விட்டு அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டுப் போனான். அவனைத் தொடர்ந்து நிறைய கல்லூரி மாணவர்கள், மாணவிகள்.
பத்து நிமிட பந்தத்தில் எதுவும் தெரியாவிட்டாலும் எதையும் எதிர்பார்க்காமல் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கும் தோழமை உள்ளங்கள்.
சாவுக்குப் போகாவிட்டால் நம் வீட்டுச் சாவுக்கு அங்கிருந்து யாரும் வராமல் போய்விடுவார்களே என்ற அச்சத்தில் வந்து நிற்பவர்களை விட இவர்கள் எவ்வளவோ பரவாயில்லை என்ற எண்ணம் தேன்மொழியின் மனதில் இருந்தது.
“சுப்பையனின் தம்பி மகன் பொள்ளாச்சியில் இருந்து வரணுமே…வேற யார் கொள்ளி போடுறது…”என்ற சலசலப்பு கூட்டத்தில் தோன்றியது.
அப்போது நான்கு வயது முதல் பதிமூன்று வயது வரை உள்ள குழந்தைகள் சுமார் நாற்பது பேர் கண்ணீருடன் வந்து சுப்பையனின் உடலைப்பார்த்து அழுதார்கள்.அவர்கள் பின்னால் எழுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் தியாகேசன்.
தேன்மொழிக்கு பளீரென தந்தையிடமிருந்தே அறை வாங்கியது போன்ற உணர்வு.
‘கடவுளே…இவர்களை எப்படி மறந்தேன்…அப்பா, உங்க ஆசைப்படி கலெக்டராகணும்னு நினைச்சேன். ஆனா இவ்வளவு நாளா பெரியவர் தியாகேசன் நடத்துற ஆதரவற்ற குழந்தைகள் இல்லமான அன்பாலயத்தைப் பராமரிக்க பெருமளவு உதவி செய்தது நீங்கதானே…அவங்களைத் தொடர்ந்து பராமரிக்கிறது தானே என்னோட முதல் வேலையா இருக்கணும்…கடையை நானே தொடர்ந்து நடத்துனா இது சாத்தியம்தான்.
தபால் மூலமா பட்டப்படிப்பை முடிச்சுட்டு பிறகு யு.பி.எஸ்.சி தேர்வுக்கு முயற்சி செய்தா சாதிக்க முடியாதா என்ன?…’
சில நிமிடங்களுக்குள் எதிர்காலம் குறித்து முடிவெடுத்த தேன்மொழி, கொள்ளி யார் வைப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தவர்களிடம் போய் நின்றாள்.
அவளுடைய மன உறுதியை அவளின் முகத்திலேயே கண்டுகொண்டார்கள்.சுப்பையனின் இறுதிச்சடங்கை தேன்மொழி செய்யத் தயாரானபோது யாருக்கும் எதிர்க்கத் தோன்றவில்லை.
******
- திரைகடல் ஓடியும் கலையைக் கற்போர் (ஹாங்காங்கில் பரதநாட்டிய அரங்கேற்றம்)
- பறவைகளின் வீடு
- திரு ஜயபாரதன் கட்டுரைகள்
- தமிழ்ச்செல்வனுக்கு …
- மியம்மார் ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம்.
- தமிழ் இணையப் பயிலரங்கம்
- Appeal for Donations For Temple’s permanent construction
- புதுவகை நோய்: இமி-முற்றியது
- நினைவில் உறைந்த வரலாறு முஹம்மது யூனூஸின் “எனது பர்மா குறிப்புகள்”
- எப்போதும் கவிதை என்னை எழுதியதேயில்லை கே.ஆர்.மணியின் “மெட்ரோ பட்டாம்பூச்சி” கவிதைகள்
- வீரசோழியம் இலங்கை நூலா? தமிழ்நாட்டு நூலா?
- கவிஞர் ஃபஹீமா ஜஹானின் இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘அபராதி’ எனும் குற்றமிழைத்தவன்
- வடமராட்சி – அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள்
- கே.பாலமுருகனின் ‘அதிகாலை பொழுதும் ஆப்பே – தவுக்கே – மணியம் பேருந்துகளும்’ – சிறுகதை விமர்சனம்
- நூடில்ஸ்
- அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய என்ரிக்கோ ஃபெர்மி.
- முள்பாதை 15
- இயற்கைதானே
- இயற்கைதானே
- கவிஞானி ரூமியின் கவிதைகள் கி. பி. 1207-1273) கவிதை -3 பாகம் -1 திக்குத் தெரியாத மனக் குழப்பம் !
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -6
- இன்று
- வேத வனம் விருட்சம் 70
- வாழ்வின் (அ) சுவாரஸ்யங்கள்
- துறை(ரை)களின் சூதாட்டமும் கவிழும் பொருளாதார / வெளியுறவு கொள்கைகளும்
- மொழிவது சுகம்: புர்க்காவும் முகமும்
- சூரியனும் சந்திரனும்
- அன்பாலயம்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -2
- மறுகூட்டல்
- ராகவன் உயிர் துறந்தான்