சித்ரா ரமேஷ்
Tamil in an international arena – அனைத்துலக அரங்கில் தமிழ் என்ற மாநாடு
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் கலாச்சார அரங்கில் செப்டெம்பெர் 11,12
தேதிகளில் நடைபெற்றது. பல்வேறு துறைகளில் திறன் பெற்ற நிபுணர்கள் தமிழர்கள் எதிர் நோக்கும் சவால்களையும், தமிழ் மொழியின் அடிப்படையான கலாச்சாரம், கலைகள், குறிப்பாக சிங்கப்பூர் தமிழரின் தரம், ஆற்றல், எல்லை இவற்றைத் திறனாய்வு செய்வார்கள் என்று குறிப்பிடப் பட்டது. நூலாசிரியர் சி. பொன்னுதுரை, நாடகக் கலைஞர் பேராசிரியர் ராமானுஜம், கவிஞர் மு மேத்தா, கர்னாடக இசை மேதை சுதா ரகுனாதன், கணினி தொழில் நுட்ப வல்லுனர் முத்து நெடுமாறன், உலக நாயகன் கமலஹாசன் போன்றோர் உரைகளும் கலந்துரையாடலும் இடம் பெற்றது. தொடர்ச்சியாக இரண்டு நாள் நடைப் பெற்ற மாநாட்டில் கூட்டம் சேர்வதற்காக சேர்க்கப்பட்ட கவர்ச்சி கமல்ஹாசன் என்று பரவலாக பேசப் பட்டாலும் ‘உலகில் தமிழ் பேசும் மக்களிடையே தமிழ் திரைப்படங்களின் தாக்கம் ‘ என்ற தலைப்பில் கமலஹாசன் பேசியது மற்ற எந்த அறிஞர்களின் உரையை விட எந்த விதத்திலும் தரம் தாழ்ந்து விடவில்லை.
முதல் நிகழ்ச்சியில் ‘மேலெழும்பும் தொழில் நுட்பத்தில் தமிழ்-புத்தாக்கங்களையும்ம் சவால்களையும் பற்றிப் பேசிய முத்து நெடுமாறன் முதலில் கணினியின் மொழி ஆங்கிலமாக இருந்ததால் தமிழை கணினியால் உணர முடியவில்லை.தமிழை ஒரு படமாகவோ,எண்களாகவோ அறிய முற்பட்டு சேகரித்துக் கொண்டது. பின்னர் இப்போது தமிழை தமிழாகவே தொழில் நுட்பம் மூலம் எப்படி உணரச் செய்தனர் என்பதைப் பற்றி விளக்கினார். Micro soft word என்ற ஒரே ஒரு ஆங்கில வார்த்தையை மட்டுமே உபயோகித்து தமிழிலேயே இயல்பாக பேசியது கைத்தட்டலை வாங்கித்தந்தது. தமிழை தமிழாகவே கணினி உணர்ந்த மாதிரி இன்னும் பில்கேட்ஸ் உணரவில்லையா ? இந்த நுண்மென் சொற்கள் (micro soft word) உபயோகித்து நான் தட்டச்சு செய்யும் போதெல்லாம் வரிக்கு வரி பச்சையும் சிவப்புமாக கோடுகளாக விழுந்து எனக்கு தவறுகளை சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நுண்மென் சொற்கள் ஷேக்ஸ்பியரையே சரியான ஆங்கிலம் இல்லை என்று திருத்த முற்படும் போது நம் தமிழ் வார்த்தைகள் அர்த்தமற்றுதான் போகும். கைத்தொலைப்பேசியில் தமிழில் குறுந்தகவல் அனுப்புவது எப்படி என்று விளக்கி விரைவில் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி கிடைத்துவிடும் என்றார்.
பழைய கூத்து வடிவ நாடக யுத்திகள் எப்படி நவீன நாடகங்களில் கையாளப்பட்டு வருகிறது என்பதைப் பற்றி திரு ராமானுஜம் பேசியது எத்தனை பேரைப் போய் சேர்ந்தது என்பது புரியவில்லை. திரைச்சீலை, கயிறு போன்றவை எப்படி எதற்கு குறியீடுகளாய் பயன்படுத்தப் படுகின்றன என்பதை காட்சிகள் மூலம் விளக்கியது கண்டிப்பாக அனைவருக்கும் புரிந்திருக்கும். கயிறை சாட்டைக்கு குறியீடாய் பயன்படுத்தலாம் என்பதைக் காட்டியபோது ‘நான் ஆணையிட்டால் ‘
‘பட்டத்து ராணி ‘ போன்ற பாடல்களை போட்டுக் காட்டியிருந்தால் தூங்கிக் கொண்டிருந்த சிலர் விழித்திருப்பார்கள்!
அடுத்ததாக எஸ்.பொ தனக்கே உரிய நையாண்டித்தனத்தோடு ‘குசினி இலக்கியம் ‘ என்று தமிழ் நாட்டு இலக்கியத்தைக் கிண்டல் செய்தார். ஈழத் தமிழர்களையும் ஈழ எழுத்தாளர்களையும் நாம் ஈர மனதோடு பர்ப்பதும் அங்கீகரிப்பதும்
எஸ்.பொவுக்குத் தெரியாதா ? இருந்தாலும் வருடத்தில் ஆறு மாதம் கோடம்பாக்கத்தில் வாழ்வதால் கோடம்பாக்க இலக்கிய விற்பன்னர்களோடு அடிக்கடி பழகியதால் என்ற இடைசெருகல்..தமிழ் இலக்கியம் கோடம்பாக்க வட்டாரத்தோடு முடிவடைந்து விடுகிறதா ? வெகுஜன ரசனைக்கு உகந்ததாய் ஒரு இலக்கியம் அமைந்து விட்டால் அது அறிவுஜீவிகள் மத்தியில் இலக்கிய அந்தஸ்த்தை இழந்து விடுகிறது என்று சொல்லப்படும் மாயையான வார்த்தைகள்! உலக இலக்கியத் தரத்தோடு ஒப்பிடக் கூடிய வகையில் சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை ‘ தி.ஜானகிராமனின்
‘அம்மா வந்தாள் ‘ நாவலும் அமைந்திருக்கின்றன என்று பெருந்தன்மையோடு ஒப்புக் கொண்டார். அடுப்படிக் காரியங்களை முடித்து விட்டு கணவன் வரும் வரை பெண்கள்
படிப்பதற்காக எழுதப்பட்டவை தமிழ்க் கதைகள் என்ற வகையில் ‘குசினிக் கதைகள் ‘
என்று ஒப்பிட்டது பெண்களுக்கு நல்ல இலக்கியம் தெரியாது என்ற தொனியா ?
இல்லை நீங்கள் சொன்ன நல்ல கதைகள் ‘குசினி இலக்கியமாக ‘ இடம் பெறவில்லையா ? பெண்கள் என்றாலே மெகாசீரியல் அழுகையும், ‘கனவுகள் விற்கும்
கதைகளும் தானா ?உங்கள் எழுத்தை ஹெரால்ட் ராபின்ஸ் கதைகளோடும் டிஹெச் லாரன்ஸ் கதைகளோடும் (இது கொஞ்சம் பாராட்டு மாதிரி!!)
ஒப்பிடலாமா ?
சுதா ரகுனாதன் தமிழில் நல்ல கர்னாடக இசை மெட்டுகளோடு நிறையப் பாடல்கள் இருப்பதாக சங்ககாலம், சங்கம் மருவியகாலம் என்று கால முறைப்படி பெரிய கட்டுரையையே வாசித்தார். நடுநடுவே பாடிக் காட்டியது சின்ன சொர்க்கத்தைக் காட்டியது. இப்படி தமிழ்ப் பாடல்களாகவே இரண்டு மணி நேரமும்
பாடியிருக்கலாம். இத்தனை தமிழ்ப் பாடல்கள் இருந்தும் ஒரு முழு நேர தமிழ்ப் பாடல் கச்சேரி செய்ய முடியாதா ? பாலும் தெளிதேனும் பாட்டை ஆரம்பத்தில் பாடியது போல் ஏன் கச்சேரிகளில் பாடுவதில்லை ? ‘மஹாகணபதிம் ‘ என்று ஹம்ஸத்தவனியில் பாடியே பழகியாச்சு! கச்சேரியில் கடைசியில் துக்கடாவாக பாரதிப் பாடலையும் காவடிசிந்துவையும் கேட்டு பழகியவர்களுக்கு மீனாக்ஷியை ‘அங்கயற்கண்ணி ‘ ஆக்கும் முயற்சியில் இனிமேல் ஈடுபடப் போவதாக அவர் ஒரு சத்தியப் பிரமாணம் செய்தார்.
ராகம், தானம், பல்லவி, கீர்த்தனைகள் எல்லாவற்றையும் தமிழிலேயே முடிந்தவரை பாடப் போவதாக அறிவித்தார். இருந்தாலும் இசையின் இனிமைக்கு முன்னால் மொழி ஒரு தடையே இல்லை.
மு மேத்தாவை ‘கண்ணீர் பூக்கள் ‘ கவிஞராகவே தமிழ் கூறும் நல்லுலகம் நினைவு வைத்திருக்கிறது. இருவத்தியைந்தாவது முறையாக ‘கண்ணீர் பூக்கள் ‘ பதிப்பிக்கபட்டபோதே அவர் அடையாளம் புரிந்திருக்கும். ஆனால் அவர் இன்னும் ‘வா வா கண்ணா வா ‘ மூலம் தன்னை அடையாளம் காட்ட ஏன் முயற்சிக்கிறார் என்பதுதான் புரியாத புதிர்! கவியரங்கத்தில் மீண்டும் தன்னை ஒரு அற்புதக் கவிஞராக
நிரூபித்தார்.
இறுதியாக விழா நாயகனாக உலக நாயகன் கமலஹாசன்!கூட்டம் அலை மோதியது. நிஜமாகவே வயதை தொலைத்து விட்டுத்தான் வந்திருந்தார். அவரை அறிமுகப் படுத்த வந்தார் மதன் ‘ஹாய் மதன் ‘ என்ற அடைமொழியோடு! முதலில் ஒரு மணி நேரம் பேசியது போக ஒண்ணரை மணி நேரம் கேள்வி பதில் நேரம்! அரை மணி நேரம் கமல் படத் தொகுப்பு மருத நாயகம் உட்பட! அவரை அறிமுகப்படுத்த வந்த மதன் கமலை இன்னும் ஏன் காதல் இளவரசனாக வைத்திருகிறீர்கள் ? காதல் மன்னன் ஓய்வு பெற்ற பிறகு இளவரசன் ஏன் மன்னனாக அறிவிக்கப் படவில்லை ? என்று தமிழ் சினிமாவின் தலையாயப் பிரச்சனைகளில் ஒன்றான காதல் மன்னன் பட்டத்தைப் பற்றி பேசினார். கமலும் விடாமல் இளவரசனாக விடலைத் தனத்தோடு இருப்பதுதான் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டதால் நல்லவேளை இங்கு யாரும் அவர் காதல் இளவரசன் பட்டத்தை காதல் மன்னன் ஆக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. எஸ் எஸ் வாசன் சினிமாவில் கதை சொல்லும் விதம் ஒரு பன்னிரண்டு வயதுக் குழந்தைக்குக் கூட புரியும் வகையில் அமைந்திருக்க வேண்டும் என்று சொன்னதை நினைவுப் படுத்தி அன்றிலிருந்து ஐம்பது வருடங்கள் தாண்டி வந்தும் இன்னும் கொஞ்சம் முன்னேறி பத்து வருடத்திற்கு ஒரு வயது ஏறி (மைனஸ் ஒரு வயது) பதினாறு வயதுக் குழந்தைக்குக் கதை சொல்லும் பாணியில் தமிழ் சினிமாக் கதைகள் சொல்லப் பட்டு வருகின்றன என்றார். எஸ் எஸ் வாசன் சொன்ன பன்னிரண்டு வயதுக்கும் இப்பொது நீங்கள் சொல்லும் பதினாறு வயதுக்கும் ஐம்பது வருட இடைவெளியில் அந்த ‘பதினாறு வயது ‘ எப்படியெல்லாம் முன்னேறியிருக்கிறது
என்பதையும் கொஞ்சம் நினைவுப் படுத்திப் பார்த்திருக்கலாம். வழக்கம் போலத் திரைப் படத் தயாரிப்பில் ஏற்படும் கஷ்டங்கள், விசிடி பிரச்சனை, ரசிகர்களை மறுபடியும் தியேட்டருக்கு வரவழைப்பது எப்படி போன்ற பொதுப்படையான விஷயங்களையும் பேசினார். கேள்விபதில் நேரத்தில் முழு மனதோடு பதில் சொன்னது
அவரை மக்கள் நாயகனாக ஆக்கிவிட்டது. கேள்வி கேட்டவர்கள் பதிலை விட நீளமான கேள்விகள் கேட்டதும் உணர்ச்சிவசப் பட்டு கமலைப் புகழ்வதுமாக
படுத்திவிட்டார்கள். நல்ல நடிகர்கள் நட்சத்திரமாக ஆனால் ஆதிக்கம் அதிகமாகி மக்கள் நாம் எது செய்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற கொள்கை கமலஹாசனுக்கு பொய்யாகிப் போனதுதான்! ஆனால் அதை அவர் ஏற்றுக் கொள்ளாததுதான் ஆச்சரியத்தைத் தருகிறது. தீவிர சிவாஜி ரசிகர்கள் 80களில் வந்த சிவாஜி படத்தையெல்லாம் சிவாஜிக்காகக் கூடப் பார்க்கவில்லை. எம் ஜி ஆருக்கு இந்த நிலைமை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டபோது அவர் அரசியலில் முழுமூச்சாக இறங்கி படங்களில் நடிப்பதை நிறுத்துவிட்டார். ரஜனி அடுத்த படம் நடிப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டேயிருக்கிறார். நட்சத்திரங்களுக்காக திரைப் படம் பார்ப்பது என்ற கலாச்சாரம் இப்போது இல்லை. அது வெகுவாக இருந்த காலத்திலும் நட்சத்திரத் திரைப்படங்கள் பல தோல்வி கண்டிருக்கின்றன. திரைப்படம் என்பது குறிப்பிட்ட சிலர் மட்டும் வெற்றி பெறுவார்கள் என்ற இலக்கண வரையறைகளை மீறியதுதான்! நிகழ்ச்சி முடிவடையும் போது மருத நாயகம் படத் தொகுப்பு காண்பிக்கப் பட்டது உலகத்திலேயே முதல் முறையாக! மருதநாயகத்தைப்
பிடிப்பதற்கே பிரிட்டிஷ் அரசாங்கம் எத்தனையோ பவுண்டுகள் செலவழித்தார்கள் என்று
அரசு ஆவணங்கள் சொல்கின்றன. அதை நூறு வருடங்கள் கழித்துப் படமாக்குவதற்கு
எத்தனை செலவாகும் என்று கமல் கேட்டபோது சிங்கப்பூருக்குப் பக்கத்தில்தான்
புரூனை இருக்கிறது. அந்த சுல்தானைப் பார்த்து விட்டுப் போனால் மருத நாயகத்திற்கு உதவலாம். இல்லை அமெரிக்கா பக்கம் போனால் அங்கே சிலிகான் வேலியில் பில்கேட்ஸ் இருக்கிறார். அவர் வேண்டுமானால் மருத நாயகம் எடுப்பதற்கு
உதவி செய்யலாம். இந்தியாவில் இருக்கும் வயதான ஓய்வுதியம் பெற்று வாழ்நாள் சம்பாத்தியம் அனைத்தையும் பெனிபிஃட் ஃபண்டில் போட்டு வரும் வட்டியில் மருந்து
வாங்கும் சாதாரண மத்தியத் தர மக்களுக்கு எதற்கு மருத நாயகம் கனவு ?
மருத நாயகம் காட்சிகள் டார்ஸான் பாதி சூப்பர் மேன் பாதி வகையில் மயிர் கூச்செறியும் காட்சிகள் இருந்தாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாய் நம்ம ஊர் செளகார்பேட்டை சேட்டு மாதிரி செக்கச் செவேலென்று தளதளவென்றிருக்கும்
கமல் தோன்றுவது ? அது சரி. மருதநாயகமாக நடிக்க வேறு யார் இருக்கிறார்கள் ?
நிகழ்ச்சி முடிந்து வெளியில் வரும் போது எதுக்குங்க எல்லாரும் அடிக்கடி கைத்தட்டி சத்தம் போட்டாங்கன்னு ஒரு நண்பர் கேட்டார். சிங்கப்பூர் ரசிகர்களுக்கு தமிழ் நாட்டு ரசிகர்களோட உணர்ச்சிமயமான ஒட்டுதலும், ரசிகத் தன்மையின் உன்னதங்களும் புரியாதுதான்!
சித்ரா ரமேஷ்
சிங்கப்பூர்
kjramesh@pacific.net.sg
- திண்ணையும் மரத்தடியும் இணைந்து நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி
- ஆட்டோகிராஃப் 18-ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருள் என்னவோ ?
- வைகறை இலக்கிய வாசல்-18-09-04
- கடிதம் செப்டம்பர் 16,2004
- கடிதம் செப்டம்பர் 16,2004
- கர்நாடக சங்கீத நிகழ்ச்சி -செப் 25,2004
- கருணாநிதிக்கு ஒரு வார்த்தை…
- சமைந்தவர்கள்(பிறைநதிபுரத்தானுக்கான பதில் அல்ல இது. சமைந்தவர் அத்தனைபேரின் பார்வைக்கும்…)
- வாக்கிற்காக ஒரு வாக்
- கடிதம் செப்டம்பர் 16,2004
- கடிதம் செப்டம்பர் 16,2004
- கவுரியின் எதிர்காலம் ?
- சொன்னார்கள்
- தேடுகிறேன் தோழி
- கவிக்கட்டு 25-காதலின் மறுவடிவம்
- அந்தத் தருணங்களில்…!
- எங்கள் பாரதி ஒரு தென்றல்.
- பசுமைப் புரட்சி….
- மெய்மையின் மயக்கம்-17
- கடிதம் செப்டம்பர் 16,2004
- தமிழ் தெய்வீகம் இஇணைய தளங்கள்
- கடிதம் செப்டம்பர் 16,2004
- அவசியம் படியுங்கள்:வேல்முருகன் போன்ற அன்பர்களுக்கு உதவ வேண்டும்
- இரவுத்தினவுகள்
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 37
- சுந்தர ராமசாமியுடன் ஒரு கலந்துரையாடல் – செப்டம்பர் 19,2004
- ஆய்வுக் கட்டுரை: முகப்பேறு ஆய்வு
- வாழ்வதற்காக சாகத்துணிந்த மீனவர்களும் சேது சமுத்திரமும்
- பெரியபுராணம் – 9
- பூகம்பம்
- பாரதி (பா)ரதத்தின் சாரதி
- அந்தத் தருணங்களில்…!
- சித்தனாய் நானிருந்தால்.. ?
- அக்கினி விதைகள்
- தோப்பு
- கழுதைகளுக்குத் தெரியுமா….
- நாட்குறிப்பு
- உயர் இரத்த அழுத்தம் – ஓர் அமைதிக் கூற்றுவன்
- பூச்சிகளைத் தின்னும் செடிகள்
- சரித்திரப் பதிவுகள் – 2 : U – படகுகள்
- வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்
- ஓர் இனிய மாலைப் பொழுது இயக்குனர் சேரனுடன்…
- சமூக விரோதியாகிய கார்
- பெ அய்யனாரின் ‘அலை புரளும் வாழ்க்கை ‘- நூல் அறிமுகம்
- அனைத்துலக அரங்கில் தமிழ்